
அமிர்தகடேஸ்வரர்
திருக்கடவூர் சென்று அமிர்தமாகவே விளங்கும் அமிர்த கடேஸ்வரரை வணங்கினால், அமிர்தத்துக்கு ஒப்ப, நீண்ட ஆயுளையும் வலிமையையும் செழுமையையும் தருவார் அந்த இறைவன். அதனால்தான், மார்க்கண்டேயரும் அமிர்த கடேஸ்வரரை வணங்கி வழிபட்டுச் சாகாவரம் பெற்றார்.

இங்கே அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மையுடன் காலசம்ஹார மூர்த்தியையும் தரிசித்து வழிபட்டால், ஆயுள் பலம் கூடும். கோயிலின் மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் தெற்குநோக்கி அருள்கிறார் காலசம்ஹார மூர்த்தி.
சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய சபை. வெள்ளிப்பிரபை. வலத் திருக் காலை ஊன்றி, இடப் பாதம் தூக்கிக் காலனை உதைத்த கோலத்தில் காட்சி தருகிறார் காலசம்ஹார மூர்த்தி. அவரின் திருவடி யின் கீழ், வலப் பக்கத்தில் கூப்பிய கைகளுடன் மார்க்கண்டேயர் நிற்கிறார்.
இறையனாருக்கு இடப் பக்கத்தில் அருள் மிகு பாலாம்பாள் அருள்பாலிக்கிறாள். அவளின் இரு புறமும், கலை மகளும் திருமகளும் தோழியராக நிற்கிறார்கள். என்றும் பதினாறாக இருக்க மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்ததால், அம்பிகையும் பாலாம்பா ளாகக் காட்சி தருகிறாளாம். திருக்கடவூரில், அம்பாளின் உதவியுடன் தம்முடைய வீரச் செயலை ஐயன் நிகழ்த்தியதாக ஐதீகம்.
காலசம்ஹார மூர்த்திக்கு தீபாராதனை நடைபெறும்போது, ஸ்வாமியின் பீடத்தை மூடினாற் போலவுள்ள வெள்ளித் தகட்டை நகர்த்திக் காட்டுவார்கள். அங்கே தலைசாய்ந்து கிடக்கும் காலனைக் காணலாம். இவர் சந்நிதியில் மிருத்யுஞ்சய யந்த்ரம் உண்டு.
அன்பர்கள் தங்களின் ஜன்ம நட்சத்திர தினத்தில் திருக்கடவூர் சென்று காலசம்ஹாரரை வணங்கி, `காலகண்டம் காலமூர்த்திம் கலாக்னிம் காலநாசனம் நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்யு கரிஷ்யதி...’ என்று மிருத்யுஞ்ஜய தோத்திரம் கூறி வழிபட்டு வந்தால், ஆயுள் பலம் கூடும்; யம பயம் நீங்கும். உள்ளத்தில் ஆனந்தமும் அமைதியும் குடிகொள்ளும்.
- கே. ராஜி, கோபிச்செட்டிபாளையம்