Published:Updated:

அரச போகம் அருள்வாள் அபிராமி!

அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
அபிராமி

- எஸ்.புவனா கண்ணன், ஓவியம்: சிவசுப்ரமணியன்

அரச போகம் அருள்வாள் அபிராமி!

- எஸ்.புவனா கண்ணன், ஓவியம்: சிவசுப்ரமணியன்

Published:Updated:
அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
அபிராமி

விநாயகருக்கான அறுபடை வீடுகளில் ஒன்றான ஊர்; அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று; மிகப் பழைமையான வில்வம், அம்பாளுக்குப் பிரியமான சாதிமல்லிகை ஆகிய இரண்டு ஸ்தல விருட்சங்களைக் கொண்ட க்ஷேத்திரம். முதன் முதலில் சங்காபிஷேகம் ஏற்பட்ட தலம்.

எல்லாவற்றுக்கும் மேலாக மரணபயம் நீக்கி ஆயுள் பலம் அருளும் திருத்தலம். மார்க்கண்டேயருக்கும் அபிராமிபட்டருக்கும் வர இருந்த துன்பங்களைப் போக்கிய தலம் - திருக்கடவூர்.

இத்தகு மகிமைகளைக் கோண்ட இந்தத் தலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் மார்ச்-27 அன்று திருக்குடமுழுக்குக் காணவுள்ளது. அற்புதமான இந்தத் தருணத்தில் திருக்கடவூரின் சிறப்புகளையும் புராண மகிமைகளையும் அறிந்து மகிழ்வோம்!

திருக்கடவூர் அபிராமி
திருக்கடவூர் அபிராமி

அமிர்தலிங்கேஸ்வரர், அமுதகடோற்பவர், அமுத கடேசர், அமிர் தேஸ்வரர் ஆகிய திருப்பெயர்களை ஏற்று ஈசன் அருள்பாலிக்கும் அற்புதத் தலம் திருக்கடவூர் (திருக்கடையூர்). மயிலாடு துறையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் பயணம் செய்தால் நேரடியாக திருக்கடவூரை அடையலாம்.

தேவாரத் தலங்களுள், காவிரி தென்கரைத் தலம். ‘திருக்கடவூரில் காலனை சிவபெருமான் அழித்தது போல, ராவணா... உன்னை நான் அழிப்பேன்’ என்று ராமர் கூறிய குறிப்பொன்று வால்மீகி ராமாயணத்தில் காணப்படுகிறது.

ஆதாரச் சக்கரங்கள் ஆறினை அடிப்படையாகக்கொண்டு இந்தத் தலங்களை ஆறு மந்த்ர சக்தி பீடங்களாக ஸ்தாபித்துள்ளார்கள் பண்டைய சோழ மன்னர்கள். அவற்றில் சகஸ்ரார தலமாகத் திகழ்வது திருக்கடையூர்.

பாற்கடலில் அமிர்தம் பெற்ற தேவர்கள் அதைப் பகிர்ந்துண்ண புண்ணியமானதொரு இடத்தைத் தேடிய போது, அவர்களுக்குச் சிவனார் காட்டித் தந்த தலம்தான் திருக்கடவூர்.

பாற்கடலில் கிடைத்த அமுதத்தை, அசுரர் கையில் சிக்கிவிடாமல் எடுத்துக்கொண்டார்கள் தேவர்கள். அதை ஒரு குடத்தில் இட்டார்கள்.நீராடச் செல்லும்போது, அசுரர்கள் எடுத்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிலத்தடியில் புதைத்து வைத்தார்கள். நீராடிவிட்டு வந்து பார்த்தால் குடத்தை எடுக்க முடியவில்லை. பாதாளம் வரை குடம் ஊடுருவி நிற்க... அமுதக் குடம் (குடம்- கடம்) சுயம்புலிங்கமாக காட்சி தந்தது. அமிர்தக் கடத்திலிருந்து எழுந்தருளிய ஈசனார், அமிர்தகடேஸ்வரர் என்று திருநாமம் பூண்டார்!

அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்று திருக்கடவூர். பாலகனின் அன்புக்கும் பக்திக்கும் கட்டுப்பட்டு, காலனையே சம்ஹாரம் செய்த காலசம்ஹார மூர்த்தியாகச் சிவப் பரம்பொருள் எழுந்தருளி இருக்கும் ஊர் இது.

மிருகண்டுவுக்கும் மருதவதிக்கும் திருமணமாகி நீண்ட காலத்துக்குப் பிள்ளை இல்லை. பிள்ளை வரம் வேண்டி மிருகண்டு தவம் செய்தார். மருதவதி தொடர்ந்து உபவாசம் இருந்தாள். அமிர்தகடேஸ்வரர் கண்ணெதிரில் காட்சி அளித்தார். ‘நூறு வயதுவரை வாழக் கூடிய மந்த புத்திக்காரன் வேண்டுமா? பதினாறு வயது வரை வாழும் புத்திசாலி வேண்டுமா?’ முனிவருக்கு உணர்ச்சிப் பெருக்கில் தலை-கால் புரியவில்லை. ‘பதினாறு வயது புத்திசாலி வேண்டும்’ என்று கேட்டுப் பெற்ற மகன், மிருகண்டுவின் மகன் ஆனதால், மார்க்கண்டேயன்.

திருக்கடவூர்
திருக்கடவூர்

மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயது நிறைவடையும் நாள் வந்தது. யாருக்கும் அஞ்சாத எமன், பாசக்கயிற்றோடு வந்தான். மார்க்கண்டேயன் மீது பாசத்தை வீச, அவனோ சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். அப்போது மார்க்கண்டேயன் பாடியதுதான் சந்த்ரசேகராஷ்டகம் என்னும் துதி. காஞ்சி மகா ஸ்வாமிகளுக்கு மிகவும் பிடித்தமானது.

எமனின் பாசம், சிவலிங்கத்தைச் சுற்றியது. லிங்கத்தைப் பிளந்து வெளிவந்தார் சிவப் பரம்பொருள். ‘மார்க்கண்டேயனை விட மாட்டேன்!’ என்று எமன் இழுக்க, இடப் பாதம் தூக்கி ஆடும் இறைவனோ, இடப் பாதம் தூக்கினார். காலனை உதைத்தார். எல்லோருக்கும் மரணம் தரும் காலதேவன், செத்து விழுந்தான். மார்க்கண்டேயனுக்கு சிரஞ்ஜீவியாய் வாழும் வரம் கிடைத்தது.

மேற்கு நோக்கி அருள்கிறார் மூலவர் அமிர்தகடேஸ்வரர். லிங்கத் திருமேனியில் பிளவு தென்படுகிறது; பாசக்கயிறு கட்டிய தழும்பும் தெரிகிறது. மார்க்கண்டேயர் லிங்கத்தைக் கட்டிக் கொண்டதால் ஏற்பட்ட அடையாளங்களையும் காணலாம் என்கிறார்கள்.

அமிர்தமாகவே விளங்கும் அமிர்தகடேஸ்வரரை வணங்கினால், அமிர்தத்துக்கு ஒப்ப, நீண்ட ஆயுளையும் வலிமையையும் செழுமை யையும் தருவார். அதனால்தான், மார்க்கண்டேயரும் அமிர்த கடேஸ்வரரை வணங்கி வழிபட்டுச் சாகாவரம் பெற்றார்.

அமிர்தகடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானதாகும். கார்த்திகை மாதம் திங்கட் கிழமைகளில் சங்காபிஷேகம் நடைபெறும். மாலை நேரம் குறித்த வேளையில், 1,006 இடம் புரி மற்றும் வலம்புரி சங்குகளை வரிசையாக, சங்கு மண்டபத்தில் வைப்பர். எல்லாவற்றுக்கும் நடுவில், பீடத்தில், வெள்ளிக் காப்பிட்ட பெரிய வலம்புரி வைக்கப்படும்.

அதற்குள் தங்கக் காப்பிட்ட இன்னொரு வலம்புரியை வைப்பர் (வெள்ளி, தங்கக் காப்பிட்ட வலம்புரிச் சங்குகளையும் சேர்த்தால் மொத்தம் 1,008 வரும்). அவற்றுள் மார்க்கண்டேய தீர்த்த நீர் சேர்க்கப்படும். வெள்ளி மற்றும் தங்கக்காப்பு வலம்புரிகளைப் பிராகாரத்தில் வலமாகக் கொண்டு வந்து, பின்னர் மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்வார்கள். பிற சங்குகளும் மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படும். சங்கு தீர்த்த நீரால் இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு வலம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செய்தார். பிரகதீச மன்னர், சங்காபிஷேகம் செய்து தனது பாவப் பிணி அகலப் பெற்றார்.

கோயிலின் மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் கால சம்ஹாரர் சந்நிதி. பஞ்சலோக விக்கிரகமாக விளங்கும் காலசம்ஹார மூர்த்தி, இடப் பாதம் தூக்கிக் காலனை உதைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பக்கத்திலேயே, வெள்ளிப் பேழையில் மரகத லிங்கம்.

காலசம்ஹாரரின் திருவடியின் கீழ், வலப் பக்கத்தில் கூப்பிய கைகளுடன் மார்க்கண்டேயர் நிற்கிறார். இறையனாருக்கு இடப் பக்கத்தில் இறைவி. இறைவியின் இரு புறமும், கலைமகளும் திருமகளும் தோழியராக நிற்கிறார்கள். இந்த இறைவியின் திருப்பெயர் அருள்மிகு வாலாம்பாள் அல்லது பாலாம்பாள். என்றும் பதினாறாக இருக்க மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்ததால், அம்பிகையும் பாலாம்பாளாகக் காட்சி தருவதாக ஐதீகம்.

காலசம்ஹார மூர்த்திக்கு தீபாராதனை நடைபெறும்போது, அர்ச்சகர், ஸ்வாமியின் பீடத்தை மூடினாற் போலவுள்ள வெள்ளித் தகட்டை நகர்த்துவார். உதைபெற்ற எமன், உயிரிழந்து தலைசாய்த்துக் கிடக்கிறான். பூதகணம் ஒன்று கயிறு கட்டியிழுத்து, எமனை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.

சிவத்தலங்களில், சிவலிங்கத் திருமேனிக்குக் குடை பிடித்தாற்போல, பாம்பு படம் பிடித்திருக்கும் இதற்கு நாக வாரி என்று பெயர். ஆனால், திருக்கடவூரில், அமிர்தகடேஸ்வரருக்கு நாக வாரி கிடையாது. கால சம்ஹாரரும் நாகாபரணம் அணியவில்லை.

காலசம்ஹார சமயத்தில், ஈசனுடைய சம்ஹார தாண்ட வத்தினால், பூமியின் சமநிலை சரிந்தது. அந்த நேரத்தில் ஆதிசேஷன், ஈசனின் காலடியில் முட்டுக் கொடுத்தான். ஈசனின் சமநிலையால், பூமியின் சமநிலையும் சரியானது. எனவேதான், காலசம்ஹார மூர்த்தியின் காலடியில் பாம்பு கிடக்கிறது. சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், ஆறாம் நாள் காலசம்ஹாரம் நடைபெறும்.

காலகண்டம் காலமூர்த்திம் கலாக்னிம் காலநாசனம்

நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்யு கரிஷ்யதி

வாமதேவம் மஹாதேவம் லோகனாதம் ஜகத்குரும்

நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்யு கரிஷ்யதி

என்று மார்க்கண்டேயர் துதித்த மிருத்யுஞ்சய தோத்திரத்தைக் கூறி காலசம்ஹாரர் சந்நிதியில் வழிபடுவதால் மரணபயம் நீங்கும்; நோயில்லா வாழ்வும் நீண்ட ஆயுளும் ஸித்திக்கும்.

காலசம்ஹாரரின் வலப்புறமாக ஆனால், பின்பக்கமாக மிருத்யுஞ்சய யந்த்ரம் உள்ளது. இதே சந்நிதியில் அகஸ்தியரால் வழிபடப்பட்ட அகஸ்திய லிங்கமும் உண்டு. பாபவிமோசனர் என்று திருநாமம். பக்தர்களின் பாவத்துக்கு விமோசனம் தருபவர்!

இங்கு வேறொரு ஈஸ்வரனும் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். வில்வவனேஸ்வரர் என்று திருப்பெயர். இவரையே ஆதிமூர்த்தி என்கிறார்கள். பிரம்மா, ஞானத்தைப் பற்றிய உபதேசம் பெற விரும்பி னார். ஞானதேவரான சிவப் பரம்பொருளை வழிபட்டார்.

சிவனோ, பிரம்மாவின் கையில் சில வில்வ விதைகளைக் கொடுத்து, விதைத்த ஒரு முகூர்த்தத்துக்குள்ளாக எங்கே இவை முளைக் கின்றனவோ, அங்கே வழிபட்டால் ஞானம் கிட்டும் என்று வாக்குக் கொடுத்தார். வில்வ விதைகளை ஆங்காங்கே விதைத்துப் பார்த்தார் பிரம்மா. திருக்கடவூரில் விதைகளை விதைக்க, ஒரு முகூர்த்தத்துக்குள் அவை முளைத்தன.

அவ்வாறு உருவான வில்வ வனத்தில் தங்கி, சிவபெருமானை பிரம்மா வழிபட்டார். பிரம்மாவால் வழிபடப்பட்ட ஆதிமூர்த்தியே, வில்வ வனநாதர் என்னும் வில்வ வனேஸ்வரர். இவரின் சந்நிதி உள் பிராகாரத்தின் ஈசான்ய பகுதியில், மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியின் முன்மண்டபம், தியான மண்டபமாகத் திகழ்கிறது. இங்கு அமர்ந்து தியானம் செய்தால், ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.

வில்வம்தான் இங்கு மிகப் பழைமையான தல மரம். தலத்துக்கும் வில்வாரண்யம் எனும் பெயர் உண்டு. இந்த வில்வ மரம், இறைவனது ஸ்வரூபமாகவே வணங்கப்படுகிறது.

வில்வவனேஸ்வரர் சந்நிதியின் அர்த்த மண்டபத்தில், சுரங்கப் பாதை ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தச் சுரங்கம் வழியாகத்தான், இறைவனை வழிபடுவதற்காக, மார்க்கண்டேயர் கங்கையைக் கொண்டு வந்தாராம்!

மார்க்கண்டேயருக்காக கங்கை வந்தபோது கூடவே வந்தது பிஞ்சிலம் என்னும் சாதிமல்லிகை. இரண்டாவது தல விருட்சம். அம்பாளுக்கு மிகவும் ப்ரீதியானது. வருடம் முழுவதும் பூக்கக் கூடியது.

திருக்கடவூர் கோயிலில் ஆயுள்ஹோமம், உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், அஷ்டம தசாபுக்தி பரிகாரம் போன்றவற்றைச் செய்வது விசேஷம் என்பார்கள்.

தல விநாயகருக்கு கள்ளவாரணப் பிள்ளையார் என்று பெயர். தம்மை வழிபடாமல் செயல்பட்ட தேவர்களுக்குப் புத்திபுகட்டும் விதம் பாற்கடலில் கிடைத்த அமுதக்குடத்தை ஒளித்துவைத்தாராம் இவர். ஆகவே, கள்ளவாரணர் என்று திருப்பெயர். தேவர்கள் தவறு உணர்ந்து இவரை வணங்கியதும் அமுதக்குடம் மீண்டும் கிடைத்தது.

கூறு திருவருணை கூப்பா முதுகுன்றம்

வீறு கடவூர் விண்முட்டும் - தேறு தமிழ்

மாமதுரை காசி மருவு திருநாறையூர்

வேழமுகத்து ஆறு படைவீடு

- என்பது பழந்தமிழ்ப்பாடல். ஆக, பிள்ளையாரின் அறுபடைகளில் ஒன்று திருக்கடவூர். மற்ற தலங்கள்: திருஅண்ணாமலை, விருத்தாசலம், மதுரை, காசி, திருநாறையூர்!

கோயிலின் ஞானவாவியின் கரையிலும் ஒரு பிள்ளையார் உண்டு. அவர் பெயர் அமிர்த விநாயகர்.

அறுபத்து மூவரில் காரிநாயனார் இங்கு பிறந்து வாழ்ந்தவர். கடவூரில் பிறந்த இன்னொருவர் குங்கிலியக் கலயர்.

அபிராமி
அபிராமி

வருவாள் அருள்வாள் அபிராமி!

திருக்கடவூரில் அன்னை அபிராமியாக அருள் வழங்குகிறாள். அபி-மேலான; ராமி- ரம்யமானவள். அம்பிகையின் சந்நிதி, தனிக் கோயிலாகவே உள்ளது. அம்பாளுக்குத் தனியான கொடிமரம் உண்டு.

அம்பிகை கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். வலக் கீழ்க்கரத்தில் அபயம். இடக் கீழ்க் கரத்தில் வரஹஸ்தம். இடது மேல்கரத்தில் தாமரை மலர். வலது மேல்கரத்தில் ஜபமாலை.

அம்பிகையின் திருக்காதுகளில் ஒளிரும் சக்கரத் தாடங்கங்கள் அடியார்தம் கவனத்தை ஈர்க்கின்றன. ‘தவ ஜனனி தாடங்க மஹிமா’ என்று ஆதிசங்கரர் அம்பாளைப் போற்றுவார். இங்கே அபிராமியம்மை தன் தாடங்கத்தைக் கழற்றிப் போட்டுத்தானே, தன் பக்தனுக் காக நிலவை வரவழைத்தாள்!

அது நிறைந்த தை அமாவாசை நாள். அம்பிகை மீதான தியானத்தில் ஈடுபட்டிருந்த சுப்ரமணிய ஐயர், சரபோஜி மன்னரிடத்தில், அமாவாசை என்று சொல்வதற்கு பதிலாக பௌர்ணமி என்று மாற்றிச் சொல்லி விட்டார். அம்பிகையின் பரிபூரண நிலவு முகத்தை மானசீக மாக தரிசித்துக் கொண்டிருந்த அவருக்கு, புற உலகின் அமாவாசையா புலப்படவில்லை!

மன்னவன் சினந்தார். பெளர்ணமி நிலவு தோன்றாவிடில் சுப்ரமணியத்துக்கு மரண தண்டனை என்றான். சுப்ரமணியமோ அன் னையையே சரணடைந்தார். அந்தாதி பாடி துதித்தார். தன் பக்தன் சொன்ன சொல்லை நிரூபிப்பதற்காக அம்பிகை தாடங்கத்தைக் கழற்றி விண்ணில் வீசினாள். அடுத்த கணம், அங்கே பட்டொளி பொழிந்தது பௌர்ணமி நிலவு! சுப்ரமணியன் அபிராமிப் பட்டர் என்று சிறப்பு பெற்றார். மகாவிஷ்ணுவின் ஆபரணங்களில் இருந்து தோன்றியவள் திருக்கடவூர் அபிராமி என்கின்றன ஞானநூல்கள்.

தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறுவதற்குமுன் சிவனாரை வழிபட எண்ணினார் மகாவிஷ்ணு. சிவபெருமானை பூஜிக்க வேண்டுமானால் அம்பிகையும் உடன் இருக்க வேண்டுமே! மஹா விஷ்ணு தாம் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி வைத்துத் தியானிக்கத் தொடங்க, அந்த ஆபரணங்களில் இருந்து தோன்றியவள்தான் அன்னை அபிராமி.

அம்பாளுக்கு எல்லா மாதத்துப் பௌர்ணமி சிறப்பு. தவிர, ஆடிப் பூரம், தை அமாவாசை, நவராத்திரி போன்றவையும் சிறப்பான நாள்களாகும். இந்நாள்களில் கீழ்க்காணும் பாடலைப் பாடி அம்பிகையைத் தியானித்து வழிபடுவது விசேஷம்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலைஆரம் - பிறைமுடித்த

ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

இந்தப் பாடலை பாராயணம் செய்து வந்தால், ஓர் அரசருக்கு நிகரான அத்தனை செல்வங்களையும் அம்பிகை அருள்வாள்; சகல இன்னல்களையும் போக்கி இன்ப வாழ்வை வரமாகத் தருவாள் அபிராமியம்மை என்கிறார் அபிராமிபட்டர்!