சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

மக்களை காக்கும் மஞ்சினி சாஸ்தா

மஞ்சினி சாஸ்தா
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சினி சாஸ்தா

மஞ்சினி சாஸ்தா

அந்த ஊருக்குள் நுழையும்போதே, சாலை ஓரத்தில் பிரமாண்ட மான யானை மற்றும் குதிரைச் சிலைகள் தென்படுகின்றன. அந்தச் சிலைகளே ஊருக்கு அடையாளமாகவும் விளங்குகின்றன. அந்த இடத்துக்கு நேர் எதிரில், கேரள பாணியில் கட்டப்பட்டுள்ள சிறிய ஆலயம். அதில் பூரணா, புஷ்கலா சமேதராகக் காட்சிதருகிறார், அருள்மிகு மஞ்சினி சாஸ்தா!

மஞ்சினி சாஸ்தா
மஞ்சினி சாஸ்தா


`மஞ்சினி’ என்றால் அழகு, கம்பீரம், வீரம், பராக்கிரமம் அனைத்திலும் சிறப்பாக விளங்குபவர் என்று பொருளாம். தன்னிடம் வைக்கப்படும் வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றிப் பக்தர்களை மகிழ்விக்கும் இந்த சாஸ்தா கோயில் கொண்டிருக்கும் ஊர், திருக்கோடிக்காவல்! தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்திருக்கிறது இவ்வூர்.

சாஸ்தா பரமசிவனாரின் காவல் அம்சம் என்பார்கள். `சாஸ்தா’ என்றால் ஆளுபவன் என்று பொருள். ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா என்று மகா சாஸ்தா வின் அவதாரங்களைக் குறிப்பிடுகின்றன ஞானநூல்கள்.

இவர்களில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் அவதாரம் தர்மசாஸ்தா அவதாரம். அங்ஙனம் அதர்மமாகிய மகிஷியை அழித்து, சபரிமலையில் கோயில் கொண்டவரே சுவாமி ஐயப்பன். `சாஸ்தாவையே தவறு செய்வோரைத் தண்டிக்கும் சாத்தன் என்றும், ஊர் எல்லையைக் காக்கும் ஐயனார் என்றும் வழிபடுகிறோம்.

சாஸ்தாவுக்கு ஆலயம் அமைப்பவர்கள், சாஸ்தாவின் ஆலயத்தை நாடி வழிபடும் அன்பர்களின் முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் செழிப்பான வாழ்வை அடைவார்கள்; நிறைவின் ஐயனின் திருப்பதத்தை அடைந்து இன்புறுவர் என்கின்றன புராண நூல்கள். இப்படியான அற்புத வரங்களைத் தரும் ஆலயமாகத் திகழ்கிறது, மஞ்சினி சாஸ்தாவின் திருக்கோயில்.

விதிவசத்தால் ஒருமுறை அசுரர் கை ஓங்கியது. தேவர்கள் பதவி இழந்து மறைந்து வாழ்ந்தனர். அசுரக் குலம் மூவுலகையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், தங்களின் கீர்த்தியை மீட்டெடுக்க அருளவேண்டும் எனும் விண்ணப்பத்துடன் கயிலையில் தவத்தைத் தொடங்கினான் இந்திரன்.

முன்னதாக, இக்கட்டான சூழலில் தன் மனைவி இந்திராணிக்கு அசுரர்களால் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று எண்ணிய இந்திரன், அவளை ரட்சிக்கும்படி சாஸ்தா வைப் பணிந்து வேண்டிக் கொண்டான். இந்திராணியும் தீவிரமான சிவபக்தை. இந்திரன் கயிலைக்குத் தவமிருக்கச் சென்று விட, இந்திராணி சிவபூஜை செய்தபடியும், காவிரிக்கரைத் தலங்களைத் தரிசித்தபடியும் வாழ்ந்து வந்தாள்.

இந்நிலையில் இந்திராணியைத் தேடிப் பிடித்து, தன் தமையன் சூரபத்மனுக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்று விரும்பினாள் அந்த அசுரனின் சகோதரியான அஜமுகி. ஒருநாள் அவள் தன் அணுக்கி துர்முகியுடன் ஆகாய மார்க்கமாகப் பயணித்துக் கொண் டிருந்தபோது, பூமியில் இந்திராணி சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். உடனே பூமிக்கு இறங்கினாள். இந்திராணியின் கரங்களை வலுவாகப் பற்றி இழுத்தாள். இந்திராணி கதறினாள்.

மதுரை வீரன்
மதுரை வீரன்
மஞ்சினி சாஸ்தா கோயில்
மஞ்சினி சாஸ்தா கோயில்
சாஸ்தா கோயில்
சாஸ்தா கோயில்
விநாயகர்
விநாயகர்
யானை குதிரை வாகனங்கள்
யானை குதிரை வாகனங்கள்
மஞ்சினி சாஸ்தா
மஞ்சினி சாஸ்தா


`பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்

ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம்,

செண்டார் கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம்,

மெய்யர் மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம் ஓலம்!’

என்று இந்திராணி அபயம் கேட்டு ஓலமிட்டதாகக் கந்தபுராணம் சொல்கிறது. இந்திராணியின் அபயக்குரலைக் கேட்டு அங்கு தோன்றினார் தர்மசாஸ்தா. அரக்கியின் செயலால் மிகுந்த சினம் கொண்டவர், அவளின் கரங்களைத் தன் வாளால் வெட்டி வீசினார். இந்திராணி ரட்சிக்கப்பட்டாள்!

இந்தப் புராண நிகழ்வு நடந்த இடம்தான் இன்றைய திருக்கோடிக் காவல் என்கிறது புராணம். வெட்டுப்பட்ட அஜமுகியின் கரங்கள் விழுந்த இடத்துக்கு ‘கரகண்டம்’ என்ற பெயர் உண்டானது. அதுவே, பின்னாள்களில் `கரைகண்டம்’ என்று மருவியதாம்.

இந்திரன் இங்கு வந்து இந்திராணியுடன் தர்மசாஸ்தாவைப் போற்றி வழிபட்டான். பலவாறு துதித்து வணங்கினான். அவர் களுக்கு அருள்பாலித்த சாஸ்தா, இந்தத் தலத்திலேயே தங்கினார்; அருள்மிகு மஞ்சினி சாஸ்தாவாகக் கோயில் கொண்டார் என்கிறது புராணம்.

சந்தனமும் திருநீரும் தரித்துக் கம்பீரமான தோற்றத்துடன், காவல் ஆயுதங்களை ஏந்தியவராக சாத்தனாகவும் ஐயனாராகவும் அருளும் சாஸ்தா, குதிரை வாகனத்துடன் கூடியவராகச் சித்திரிக் கப்படுகிறார். சிற்சில இடங்களில் யானை வாகனமும் உண்டு. அவ்வகையில் மஞ்சினி சாஸ்தா ஆலயத்தில் யானை மற்றும் குதிரை வாகனங்கள் பெரும் சிலைகளாக நிற்கின்றன. இவற்றுடன் வேட்டை நாயும் இருப்பது வழக்கம். கருப்பன், வீரன் முதலான 32 ஏவல் சிறுதெய்வங்கள் இவருக்குரிய பரிவாரங்கள்.

மஞ்சினி சாஸ்தா கோயில் கொண்டிருக்கும் திருக்கோடிக்காவல் எனும் இந்தத் தலம் சிவனருளும் நிறைந்தது. இவ்வூர் யமவாதனை இல்லாத இடம் என்பது புராணங்கள் சொல்லும் சிறப்பம்சம். இங்கு சிவபெருமான் மட்டுமே அதிகாரம் மிக்கவர். ஏனைய சுற்று தெய்வங்களும், காவல் தேவதைகளும் சிவபெருமானுக்குக் கட்டுப் பட்டவர்கள்.

எனவே இவ்வூரில் காவல் தெய்வங்களும் எல்லைப் புறங்களைத் தவிர்த்து, ஊரின் மையத்திலேயே எழுந்தருளி உள்ளார்கள் என்கிறார்கள் பக்தர்கள். மட்டுமன்றி மறக் கருணையை வெளிப் படுத்தும் உக்கிரத்துடன் அருளும் காவல்தெய்வங்கள் இங்கே சாந்த நிலையில் அருள்பாலிப்பதும் விசேஷ அம்ச மாகும். அவ்வகையில் இவ்வூர் சிவாலயத்தில் சனி பகவான் பாலரூபியாகவும் யமதருமன் கரம் கூப்பிய நிலையும் சாந்தமாக அருள்பாலிக்கிறார்கள்.

ஆக, இந்தத் தலத்தில் உயிர்ப்பலி தரும் வழக்கமும் இல்லை. சாஸ்தாவுக்கு எலுமிச்சை மட்டுமே பலியாக அர்ப்பணிக்கப்படுகிறது. இங்குள்ள சாஸ்தாவின் மேற்குநோக்கிய நிலை அபூர்வ அம்சம் என்கிறார்கள். இவருக்கு அருகிலேயே செண்டு அலங்கார ராகிய மற்றோர் ஐயனும் உள்ளார். இவரைச் `சேங்கமலத்தார்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழைமைமிக்க கோயில் இது என்கிறார்கள் பக்தர்கள். இந்த வட்டாரத்தில் வசிக்கும் பல குடும்பங்களுக்கு இந்த சாஸ்தாவே குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்குகிறார்.

வருடந்தோறும் கோடைத் திருவிழாவும்; சம்வத்ஸர அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றன. தற்போது மஞ்சினி சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மண்மணக்கும் இந்தத் தை மாதத்தில் வாய்ப்புக் கிடைத்தால், நீங்களும் குடும்பத் துடன் மகிமைமிக்க இந்தத் தலத்துக்குச் சென்று மஞ்சினி சாஸ்தாவை வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் உங்கள் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்; எப்போதும் இல்லத்தில் மங்கலம் நிறைந்திருக்கும்.

சாவித்ரி கௌரி விரதம்

தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர்.

விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். குளத்தங்கரை அல்லது ஆற்றங்கரையில் இருந்து தூய்மையான மண்ணை எடுத்து வரலாம். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும்.

ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்... ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

- எம்.சங்கரி, கருங்குளம்

காவிச் சாந்து...
கரும்புக் காணிக்கை!


‘பண்டைத் தமிழகத்தில் பொங்கலின் 3-ஆம் நாளன்று ‘கன்னிப் பொங்கல்’ கொண்டாடினர். அன்று கன்னியர்கள் காலையில் சூரியனையும் மாலையில் அம்மனையும் சிறப்பாக வழிபட்டனர்’ என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ‘போகாலி பிஹு’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அறுவடை முடிந்த வயல்களில் கொட்டகைகள் போட்டு, முதல் நாள் இரவு இளைஞர்கள் விருந்து உண்பர். மறு நாள் காலை யில் கொட்டகைக்குத் தீ வைப்பதுடன் அறுவடைத் திருநாள் ஆரம்பமாகிறது.

பொங்கல் திருநாளை பஞ்சாபிலும், ஹரியானாவிலும் ‘லோகிரி’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அன்று இனிப்பு அரிசி, சோளப் பொரி ஆகியவற்றைத் தீயிலிட்டு கிராமியப் பாடல் களைப் பாடி மகிழ்வர். காவி மற்றும் அரிசி கலந்த சாந்தினை சகோதரர்களின் நெற்றியில் இடுவதுடன், தீமையிலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்திப்பர்.

உத்தரப் பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருவோருக்கு கரும்புத் துண்டுகள் மற்றும் வெற்றிலை பாக்கை ஒரு தட்டில் வைத் துக் கொடுத்து ஆசீர்வதிப்பார்களாம்.

- கி.மாலதி, சென்னை-45