
விண்ணளந்த பெருமாள்
பிறவிக் கடன்களை மட்டுமன்றி பொருளாதாரம் சார்ந்த கடன் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் தெய்வமாய் பெருமாள் அருள் பாலிக்கும் தலங்களில் ஒன்று கொடுவாய். திருப்பூர் - தாராபுரம் வழியில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இவ்வூர்.

இங்கேதான் சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான விண்ணளந்த பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பிற்காலச் சோழர்கள் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தில் பல படையெடுப்புகளால் சிதிலமுற்றது இந்த ஆலயம். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சிபுரிந்த வீர நஞ்சராயர் இக்கோயிலை மீட்டெடுத்துக் கட்டி முடித்தார் என்கிறது வரலாறு.
மூலவர் விண்ணளந்த பெருமாள், தம்முடைய நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் திகழ, நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். ஸ்வாமியின் இருபுறமும் தேவி - பூதேவி அருள்பாலிக்கிறார்கள்.
தொழிலில் நஷ்டம் அடைந்தோர், பொருள் இழந்து கடனால் வாடும் அன்பர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு வேண்டிக்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். அங்ஙனம் பலன் பெற்ற அன்பர்கள், குடும்பத்துடன் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து மகிழ்கிறார்கள். சனிக்கிழமைகளில் இந்தப் பெருமாளை தரிசித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடந்தேறும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோயிலில் தனிச் சந்நிதியில் அருளும் மகாலட்சுமி தாயாரும் சிறந்த வரப் பிரசாதி என்கிறார்கள் பக்தர்கள்.
கோயிலின் மகா மண்டபமும் தசாவதார விமானமும் அழகிய சிற்பங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. மேலும் இங்கே வராஹர், ஹயக்ரீவர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், ஜெயவீர ஆஞ்சநேயர், பெரிய கருடன் ஆகியோரின் சந்நிதிகளையும் தரிசிக்கலாம். சுவாதி மற்றும் பிரதோஷ தினங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட் டால், பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதியரின் பிரச்னைகளைக் களைந்து, அவர்கள் மீண்டும் ஒற்றுமையாக வாழ அருள்புரிகிறார்.
தன வரவு அதிகரிக்க...
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வ வழிபாடு அவசியமாகும். வருடம் ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால், வறுமை நம் குடும்பத்தை அண்டாது. மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும்.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் 1, 9, 12, 108 என்ற எண்ணிக்கையில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது, தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.
கோமாதாவின் வழிபாடு செல்வ கடாட்சம் தருவதாகும். காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தினமும் தரிசிப்பவன் துன்பங்கள் நீங்கி சுபத்தைப் பெறுகிறான். தினமும் கோபூஜை செய்பவன் மகாவிஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவான். பசுக்களுக்குத் தினமும் உணவு தருபவனுக்கு இறைவன் அவன் விரும்பிய வரங்களை அளிப்பான் என்கின்றன ஞானநூல்கள்.
நாள்தோறும் பசுவை பூஜிப்பது சிறப்பு. இல்லையெனில், வெள்ளிக் கிழமை மட்டுமாவது பசுவை பூஜிக்க வேண்டும். இதனால் சகலசெளபாக்கியங்களும் கிடைக்கும். கன்று ஈன்ற பசுக்களுக்கு தொடர்ந்து புல், பிண்ணாக்கு, தானியம் போன்றவற்றை அளித்து காலையில் வணங்கிவந்தால் கொடுத்த கடன் பிரச்னையின்றி கிடைக்கும்.