Published:Updated:

வாமன ஷேத்திரம் திருக்குறுங்குடி!

திருக்குறுங்குடி
பிரீமியம் ஸ்டோரி
திருக்குறுங்குடி

திருக்குறுங்குடி

வாமன ஷேத்திரம் திருக்குறுங்குடி!

திருக்குறுங்குடி

Published:Updated:
திருக்குறுங்குடி
பிரீமியம் ஸ்டோரி
திருக்குறுங்குடி

வாமன க்ஷேத்திரம் எனப் போற்றப்படும் தலம், பக்தர்களின் குறைகளை நீக்கி வாழ்வை வளமாக்கும் புண்ணியப் பதி திருக்குறுங்குடி. வைணவ திவ்யதேசங்களில் ஒன்று.

வாமனராக வந்த பெருமாள் நின்று அருள்புரிந்த தலம் இது. எம்பெருமான் வராக அவதாரம் எடுத்தபோது, தேவியின் விருப்பத்துக்கு ஏற்ப, அச்சம் தரும் வராக உருவத்தை மாற்றிக் குறுகி நின்ற தலம் இது. ஆகவே குறுங்குடி ஆனது என்பர்.

திருக்குலத்தைச் சேர்ந்த நம்பாடுவானுக்கு அழகிய நம்பிராயர் பெருமாள் தரிசனம் தர ஏதுவாகக் கொடிமரம் விலகி வழிவிட்டதும் இங்குதான். இன்றும் இந்தக் கோயிலில் கொடிமரம் விலகியே உள்ளதைக் காணலாம்.

கார்த்திகை மாத - சுக்ல பட்ச ஏகாதசி திதியில் கைசிக ஏகாதசியின் மகத்துவத்தினை உணர்த்தும் வகையில் நம்பாடுவானுக்கு அருள் செய்தார் அழகிய நம்பிராயர்­.

பெருமாள் வராக அவதாரம் எடுத்த போது, பூமிபிராட்டியைத் தன் மடியில் அமர்த்தி, அவருக்குக் கைசிக மகாத்மியத்தின் பெருமையை அருளியது இங்குதான். அதன் மகிமையைக் கேட்ட பிராட்டியார், கலி யுகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்து, பாசுரங்கள் பாடிப் பெருமாளை அடைந்தார் என்கிறது தலவரலாறு.

திருக்குறுங்குடியில் உருவாகிய கைசிக புராணம் மிகவும் விசேஷமானது. இந்தப் புராணம் பாடுபவர்களை, தென்னக திவ்ய தேசங்களில் பிரம்ம ரத மரியாதை செய்து சிறப்பிப்பார்களாம்.

திருக்குறுங்குடியில் கைசிக உற்சவத்துக் காக ஏற்படுத்தப்பட்ட அழகான மண்டபத் தில் அழகிய நம்பி எழுந்தருளுவதை இன்றும் காணலாம். இந்த இடத்தில் எம்பெருமான் முன்பு `நம்பாடுவான் மகாத்மியம்' நாடகமாக நடத்தப்படுகிறது.

திருக்குறுங்குடியில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, வைணவ நம்பி, மலைமேல் அருளும் திருமலைநம்பி ஆகிய ஆறு பெருமாள்களை தரிசிக்கலாம்.

நம்மாழ்வாரின் பெற்றோர் புத்திரப் பேறு இன்றி வருந்தியபோது, திருக்குறுங்குடி நம்பியை வேண்டி நின்றனர். பெருமாளே அவர்களுக்கு மகனாக அவதாரம் எடுத்தார் என்று கூறப்படுகிறது. திருக்குறுங்குடி தலத்தில் நம்மாழ்வார்க்குத் தனி விக்கிரகம் கிடையாது.

மலைநாட்டில் உள்ள தலங்களைப் போன்று இந்தத் தலத்திலும் ஆண்கள் சட்டை, பனியன் அணிந்து கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.

திருக்குறுங்குடி கோயில் யானை
திருக்குறுங்குடி கோயில் யானை
திருக்குறுங்குடி
திருக்குறுங்குடி
திருக்குறுங்குடி சிவன் சந்நிதி
திருக்குறுங்குடி சிவன் சந்நிதி


திருக்குறுங்குடி மூலவருக்கு நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, பரிபூரணன், வடுக நம்பி ஆகிய திருப்பெயர்களும் உண்டு. மூலவரின் திருமேனி சுதையால் செய்யப்பட்டுள்ளது. இரு பிராட்டியருடனும், மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி ஆகியோருடனும் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். தாயார்களுடன் பெருமாள் இருப்பதால், இங்கு தாயார்களுக்குத் தனி ஆராதனைகள் கிடையாது.

இங்குள்ள உற்சவர் அழகிய நம்பி, வைணவ நம்பி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் நீளா தேவி, குறுங்குடிவல்லித் தாயார் சமேதராக சேவை சாதிக்கிறார்.

இங்கு திருப்பாற்கடல் தீர்த்தம், பஞ்ச துறை தீர்த்தம், சிந்து நதி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இங்குள்ள விமானம் பஞ்சகேதக விமானம். இங்கு பெரியாழ்வார், திருமழிசை யாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.

திருக்குறுங்குடியிலிருந்து 9 கி.மீ. தூரத்தில் நம்பி ஆற்றங்கரை அருகே மலைமேல் நம்பி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையன்று உறியடி விழா விசேஷமாக நடைபெறும்.

நம்பி கோயில் மண்டபத்திற்குள் ஏராளமான அழகிய சிற்பங்கள் காணப் படுகின்றன. இவை உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணாபுரம் சிற்பங்களை நினைவுபடுத்து கின்றன. ஆலயக் கோபுரத்தின் உள்பக்கத்தில் உள்ள மரச்சிற்பங்கள், திருப்புடைமருதூரை நினைவுபடுத்துகின்றன.

இங்கு பாயும் நம்பியாறு `மாயவன் பரப்பு' என்ற இடத்தில் 5 சுனைகளில் தோன்றுகிறது. பின்னர் கடையார் பள்ளம், தாய்பாதம் வழியாக நம்பி கோயிலில் வந்து சேருகிறது. அப்போது பல வகை மூலிகை களைத் தன் வசம் சேர்த்துக்கொண்டு, நோய் தீர்க்கும் புனித தீர்த்தமாய் வந்து விழுகிறது.

நம்பிமலை கோயிலின் அருகே சிறு அருவியாக விழுந்து நதியாக ஓடுகிறது. இந்த இடத்தில்தான் கோயிலுக்கு வேண்டிய தீர்த்தத் தண்ணீர் எடுக்கிறார்கள்.

இந்தப் பெருமாள் கோயிலின் உள்ளே மகேந்திரகிரி நாதர் எனும் சிவன் கோயிலும் உள்ளது. இங்கு சிவனுக்குத் திருக்கல்யாண உற்சவம், திருவாதிரை, சிவராத்திரி போன்ற திருவிழாக்கள் விசேஷமாக நடைபெறும்.

குறுங்குடி நம்பி
குறுங்குடி நம்பி
குறுங்குடி கொடிமரம்
குறுங்குடி கொடிமரம்


இந்த ஆலயத்தில் உள்ள பைரவர் மூர்த்தம் விசேஷமானது. இவரின் மூச்சுக் காற்று பட்டு கோயில் முன்புள்ள தீபம் அசையும் என்பது வியப்பானது.

பெருமாளுக்குப் பூஜை முடிந்தவுடன், `சிவனுக்குப் பூஜை நடந்து முடிந்துவிட்டதா?' என்று கேள்வி கேட்பார்களாம். அதற்குப் பட்டர்கள் “குறையொன்றும் இல்லை” என்று பதிலளிப்பார்கள். இந்த நிகழ்ச்சி தற்போதும் இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது.

ராமாநுஜர் பல திருத்தலங்களில் வழிபாட்டு நெறிமுறைகளைச் சீர்படுத்தினார் என்பதை அறிவோம். அவ்வகையில் அவர் திருவனந்தபுரத்தை நோக்கிப் பயணித்த காலத்தில், பகவான் திருவிளையாடல் செய்தார். ஓரிடத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமாநுஜரை அப்படியே தூக்கி வந்து திருக்குறுங்குடி தலத்திற்கு அருகிலுள்ள திருப்பரி வட்டப் பாறை என்ற இடத்தில் படுக்கவைத்தார்.

விழித்துப் பார்த்த ராமாநுஜர், `இது பகவானின் லீலை' என்றும், மலை நாட்டில் உள்ள வழிபாட்டு முறையை மாற்றியமைக்க பெருமாள் விரும்பவில்லை என்றும் உணர்ந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டாராம்.

ராமாநுஜரின் பெருமையை மற்றவர் களுக்கு உணர்த்தும் வகையில் நிகழ்ந்த அருள் சம்பவம் ஒன்றும் உண்டு. பெருமாளே ராமாநுஜரின் அணுக்கர் வடுக நம்பியின் கோலத்தில் வந்து அவருக்குப் பணிபுரிந்தாராம். திருமண் பெட்டியைத் தூக்கி வந்தவர், கொடி மரம் அருகே வந்ததும் மறைந்துவிட்டாராம். வடுகநம்பியாக வந்தது பகவான்தான் என்று அறிந்த ராமாநுஜர், நெகிழ்ந்து வணங்கியதாகத் தகவல் உண்டு.

திருநறையூர் எனும் தலத்திலுள்ள திருநறையூர் நம்பி, திருமங்கையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து உபதேசமும் அருளியதாக ஐதிகம். ஆனால் திருக்குறுங்குடி யில் நம்பியே, ராமாநுஜரிடம் உபதேசம் பெற்றதாகச் சொல்வர். வைணவத்துக்கு ராமாநுஜர் செய்த கைங்கர்யங்களை எண்ணி, பெருமாளே இங்கு ராமாநுஜருக்குச் சீடராக இருக்க விரும்பினாராம்!

திருக்குறுங்குடி சிற்பங்கள்
திருக்குறுங்குடி சிற்பங்கள்
திருக்குறுங்குடி சிற்பங்கள்
திருக்குறுங்குடி சிற்பங்கள்


திருக்குறுங்குடி செல்பவர்கள், அவ்வூரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருப்பாற்கடல் ஆற்றின் (நம்பி ஆறு) நடுவில் அமைந்துள்ள திருப்பரி வட்டப் பாறையையும், அந்தப் பாறையின்மீது அமைந்துள்ள ராமாநுஜரின் சந்நிதியையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.

திருவரங்கம் ஆலயத்திற்குப் பல நற்பணி களைச் செய்த திருமங்கையாழ்வார், மூப்பின் காரணமாக உடலில் நலிவு ஏற்பட, திருவரங்க நாதரிடம் தனக்கு வீடுபேற்றினைத் தந்தருளுமாறு வேண்டினார்.

அப்போது அரங்கன், தமது தெற்கு வீடான திருக்குறுங்குடி தலத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். அதன்படி திருக்குறுங்குடி தலத்துக்குச் சென்ற ஆழ்வாருக்கு, அங்கு பரமபத வாழ்வைத் தந்ததாக ஐதிகம்.

திருக்குறுங்குடி தலத்திற்குக் கிழக்கே வயல்வெளியில் அமைந்துள்ள `திருவரசு' என்ற இடத்தில் திருமங்கையாழ்வார் மோட்சம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் 50-வது பட்டம் தற்போது கோயிலைப் பரிபாலனம் செய்துவருகிறார்கள். திருநெல் வேலியிலிருந்து சுமார் 41 கி.மீ தொலைவில் உள்ளது திருக்குறுங்குடி. அம்பாசமுத்திரம், வள்ளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த ஊர் வழியே செல்லும்.

அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் திருக்குறுங்குடியை தரிசித்து வரவேண்டும். அங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமாளின் திருவருளால் நம் வாழ்வில் நல்லபல திருப்பங்கள் நிகழும்; எதிர்காலம் சிறக்கும்.