விழாக்கள் / விசேஷங்கள்
திருத்தலங்கள்
தொடர்கள்
சக்தி ஜோதிடம்
Published:Updated:

பஞ்சம் போக்கும் ஈசன்!

ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர்

நல்லதை ஒருவராக அனுபவிக்கக்கூடாது. பலரும் சேர்ந்து அனுபவிக்கவேண்டும் என்பார்கள் பெரியோர்கள். அப்படி, நல்லவை எல்லோருக்கும் கிடைக்கும்படியாக ஈசன் அருளும் தலம்தான் திருக்குண்டையூர்.

ங்கலங்கள் அருளும் மங்களாம்பிகை யோடு, ரிஷபபுரீஸ்வரராக நம் நாதன் கோயில் கொண்டிருக்கும் இந்த ஊர், நாகை மாவட்டம் திருக்குவளை அருகே, சுமார் அரை கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இந்த இறைவனை பஞ்சம் போக்கும் ஈசன் என்று சிறப்பிக்கிறார்கள், பக்தர்கள். மேலும், இந்தத் திருக்கோயிலில், மதுரை மீனாட்சி உடனாகிய சொக்கநாதரும் குடிகொண் டிருப்பது விசேஷம்!

சந்திரா நதிக்கு வடபுறம், வெள்ளையாற்றுக்கு தென்புறம், சீராவட்டாற்றுக்கு மேற்குப்புறம்... என மூன்று பக்கமும் நதிகளால் சூழப் பெற்ற தீபகற்பத்தின் நடுவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

அப்பர் பெருமானின் க்ஷேத்திரக்கோவையிலும், சுந்தரர் தேவாரத்திலும், மலைக்கொழுந்து நாவலர் இயற்றிய திருத்தொண்டர் சதகத்திலும், குண்டையூர் தலத்தின் பெருமைகள் கூறப் பட்டுள்ளன.

மதுரை மீனாட்சியும், சொக்கநாதரும் இந்தத் தலத்தில் சந்நிதி கொண்டதற்கான காரணம் என்னவாம்?

“இந்த ஊரில் குண்டையூர்க் கிழார் எனும் சிவனடியார் ஒருவர் வசித்தார். வசதியான விவசாயக் குடும்பம் அவருடையது. மதுரை மீனாட்சியும் சொக்கநாதருமே அவரின் குலதெய்வங்கள். மாதம்தோறும் மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மையையும் சொக்கரையும் வழிபட்டுவருவது, குண்டையூர்க் கிழாரின் வழக்கம்.

ஒரு முறை மதுரைக்குச் செல்லும் வழியில், ‘இருள்நீக்கி’ எனும் இடத்தில் பெரும் காற்றுடனும், இடி- மின்னலுடனும் பெருமழை பெய்தது. பயணத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதையும் மீறி பயணத்தைத் தொடர்ந்தார் கிழார். அப்போது ஓர் அந்தணரின் வடிவில் வந்த ஈசன், “மேற்கொண்டு பயணம் செய்ய இயலாது. ஊருக்குத் திரும்புங்கள்'' என்றார்.

பஞ்சம் போக்கும் ஈசன்!

“என் உயிரே போகும் நிலை வந்தாலும் சரி, எம்பெருமானை தரிசிக்கா மல் ஊர் திரும்பமாட்டேன்” என்று உறுதியாகக் கூறி விட்டு, பயணத்தைத் தொடர முற்பட்டார் கிழார். அவரின் அதீத பக்தியை மெச்சிய ஈசன், இயற்கையின் சீற்றத்தை நிறுத்தி, அந்த இடத்தைச் சூழந்திருந்த இருளை நீக்கியதுடன், அந்த அடியாருக்குத் திருக்காட்சியும் தந்தார்.(திருவாரூர் அருகேயுள்ள இருள்நீக்கி என்ற அந்த ஊர், காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி யாக அருள் வழங்கிய ஸ்ரீஜயேந்திரர் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது).

சிவ தரிசனம் கண்டு மகிழ்ந்த கிழாரிடம், “ என்ன வரம் வேண்டும் கேள்” என்று இறைவன் கேட்க, “நின் திருவடி நிழலன்றி வேறொன்றும் வேண்டுமோ'' என்று பதிலளித்தார் கிழார்.

அதனால் மகிழ்ந்த இறைவன் “இவ்வுலகில் இன்னும் சில காலம் வாழ்ந்தபின்னர், எம் திருவடியை அடையலாம்” என்று அருள்பாலித் தார். குண்டையூர்க் கிழாரோ, “ஐயனே! தினமும் உம்மை தரிசிக்காது நான் எப்படி உயிர் வாழ்வேன்” என்று இறைஞ்சினார்.

உடனே சிவனார் “நீர் வசிக்கும் குண்டையூர் ஆலயத்தில், உமக்காக நாம் எழுந்தருள்வோம். ஆலயத்துள் இரண்டு காட்டாத்தி மரங்கள் இருக்கும். அவற்றில் ஒன்று பூக்கும்; காய்க்காது. மற்றொன்று பூத்தும் காய்த்தும் இருக்கும். அங்கு உமையவளுடன் நாம் நித்தியவாசம் செய்வோம். அங்கேயே நீவீர் தினமும் எமது தரிசனம் பெற லாம்” என்று அருளினார். அதன்படியே இங்கு சொக்கரும் மீனாளும் சந்நிதிகொண்டனர். அம்மையின் அருகிலுள்ள காட்டாத்தி மரம் பூக்கும்; காய்க்கும். அப்பனின் அருகேயுள்ள மரம் பூக்கும்; ஆனால் காய்க்காது. இம்மரங்கள் இரண்டும் மிகவும் பழைமையானவையாகக் கருதப்படுகின்றன. இந்தத் தலத்தில், வன்னி மரமும் தலவிருட்சமாக உள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவதற்குமுன், குண்டையூர்க் கோயிலில் `மாசிமக நெல் மகோற்சவ' திருவிழா நடந்தாக வேண்டும். விளைபொருளான நெல்லுக்கு இப்படியோர் விழா நிகழ்வது இங்கு மட்டும்தான்!

எப்படி உருவானது இந்த விழா?!

சுந்தரர், பரவை நாச்சியாருடன் திருவாரூரில் தங்கி இறைத்தொண்டாற்றி வந்தார். அவர் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்ட குண்டை யூர்க் கிழார், வயலில் அறுவடை முடிந்ததும் சுந்தரரின் அன்னதான சேவைக்கு, நெல்லும் தானிய வகைகளையும் அனுப்புவது வழக்கம்.குண்டையூர்க் கிழாரின் பக்தியையும் சுந்தரர் மீது அவர் கொண்டிருந்த அன்பின் ஆழத்தையும் உலகறியச் செய்ய திருவுளங்கொண்டார் ஈசன். இறையின் திருவிளையாடலால் வானம் பொய்த்தது. கடும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், சுந்தரரின் சேவைக்கு நெல் அனுப்ப முடியாத சூழல் உருவானது.

பஞ்சம் போக்கும் ஈசன்!

இந்தக் கவலையினால் கிழார், தாமும் உண்ணாமல் உறங்காமல் மனம் தளர்ந்து, உடல்மெலிந்து வருந்தினார். அவரின் கனவில் தோன்றிய ஈசன், “ஆரூரனுக்கான நெல்லை வேண்டும் அளவுக்குத் தந்தோம்'' என்று அருளினார். அதன்பொருட்டு குபேரனை ஏவினார். குண்டையூரில் வான்முட்டும் அளவுக்கு நெல்மலை ஓங்கி எழுந்தது. விடிந்ததும் நெல்மலையைக் கண்ட குண்டையூர்க் கிழார், இறையின் அருளை எண்ணி நெகிழ்ந்தார். ஆனால், அவ்வளவு நெல்லையும் திருவாரூருக்குக் கொண்டு செல்வது எப்படி என்று திகைத்த கிழார், அதுபற்றி சுந்தரரிடம் செய்தி தெரிவிக்க எண்ணினார்.

அதேநேரத்தில், திருவாரூர் தியாகராஜப் பெருமான், சுந்தரரை குண்டையூருக்குச் செல்லுமாறு ஆணையிட்டார். அவரும் இந்தத் தலத்துக்கு வந்து, நெல் மலையைக் கண்டு வியந்தார். இறையருள் இல்லாமல் இந்த நெல்மலையைத் திருவாரூருக்குக் கொண்டுசெல்ல முடியாது என்று தீர்மானித்தார். ஆகவே, இவ்வூரின் தென்புற எல்லையில் உள்ள `கோளிலி' எனப்படும் திருக்குவளைக் கோயிலின் இறைவனைத் தொழுது,

`நீள நினைந்து அடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்

வாள் அன கண் மடவாள்அவள் வாடி வருந்தாமே

கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்

ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே'

என்று பதிகம் பாடி வேண்டினார். அப்போது, “இன்றிரவு எம் பூதகணங்கள், திருவாரூர் பரவை நாச்சியார் இல்லத்திலும் நகர் முழுவதிலும் நெல் நிறையும்படி நெல்மலையைக் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்'' என்று அசரீரி ஒலித்தது. அவ்வண்ணமே நெல்மலை திரூவாரூர் போய்ச் சேர்ந்தது. ஆரூர் மக்கள் மகிழ்ந்தனர்.

இன்றும் இந்தச் சம்பவம் தொடர்புடைய ஐதிக விழா வருடம்தோறும் மாசி மாதத்தில், திருக்குண்டையூர், திருக்குவளை, திருவாரூர் ஆகிய மூன்று ஆலயங்களை இணைத்து, நெல் மகோற்சவ திருவிழா எனும் பெயரில் நடைபெற்று வருகிறது.

கோயிலின் அர்ச்சகர் அகதீஸ்வர குருக்களிடம் இந்தத் தலத்தின் மகிமை குறித்துப் பேசினோம்.

பஞ்சம் போக்கும் ஈசன்!

“இத்தலத்து ஈசனை நந்தி வழிபட்டு அருள்பெற்றார். கருவறைக்குச் செல்லும் முன், வலது புறத்தில் நான்கு கரங்களில் கனிகளையும் துதிக்கையில் மோதகமும் கொண்ட வலம்புரி விநாயகர் வீற்றிருக்கிறார். வரப்பிரசாதியானவர் இவர். அதேபோல் உள் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, கோஷ்ட விநாயகர், தென்முகக் கடவுள், லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்தின் நாயகியாம் மங்களாம்பிகை, தன்னை வணங்குவோருக்கு சகல மங்கலங்களையும் வாரி வழங்கி வருகிறாள். பிறவிக் குருடராகிய அந்தணர் ஒருவர் தினமும் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி, ரிஷபபுரீஸ்வரரை மனக்கண்ணால் தரிசித்து வழிபட்டு வந்தார். அதன் பலனாக பார்வை பெற்றார். எனவே, அந்தத் தீர்த்தத்தை கண்கொடுத்த பொற்றாமரைக் குளம் என்று சிறப்பிக்கிறார்கள்.

கோயிலுக்குத் தெற்கே, நாற்புறமும் பூதகணச் சிற்பங்களுடன் கூடிய மாசிமக நெல் மகோற்சவ நெல் மேடை அமைந்துள்ளது. இந்த மேடையில்தான் ஆண்டுதோறும் விவசாயிகள் நெல்லைக் காணிக்கையாக வழங்குவார்கள். காணிக்கை நெல்லை, பூதகணங்களாக வேடமிட்ட நால்வர் திருவாரூருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். மாதாந்திர விழாவாக சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், மங்களாம்பிகைக்கு பௌர்ணமி பூஜை மற்றும் பைரவருக்கு அஷ்டமி பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்தத் தலத்து ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்; மனக்கவலைகள் தீரும். வீட்டில் உணவுப் பற்றாக்குறையே இருக்காது. மங்கலங்கள் பெருகும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி வருவாய் உயரும். இந்தத் தலத்துக்குச் சென்று வழிபடும் அன்பர்கள் அனைவரும், குண்டையூர்க்கிழாரைப் போன்றே இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாவார்கள். இப்புவியில் பொன்னும் பொருளும் அடைந்து நிறைவாழ்வு பெறுவார்கள். இத்தலத்தின் தீர்த்தத்தில் நீராடி, இவ்வாலயத்தை வலம் வந்து வணங்கினால், மதுரைப் பொற்றாமரைக்குளத்தில் நீராடிய பலனையும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்ட புண்ணியத்தையும் அடையலாம். கண் குறைபாடுகள் அகலும். சகல நன்மைகளும் கைகூடும்'' என்றார் பரவசத்தோடு.

தஞ்சை மண்டலம் அல்லது திருவாரூர்ப் பகுதிக்குச் செல்லும் அன்பர்கள், அப்படியே இந்தத் திருக்குண்டையூர் தலத்துக்கும் சென்று ரிஷபபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்விலும் பஞ்சம் நீங்கி, சகல சுபிட்சங்களும் பல்கிப் பெருகும்!

எப்படிச் செல்வது?

திருவாரூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 28 கி.மீ தொலைவிலும் திருக்குவளை உள்ளது. இவ்வூரிலிருந்து அரை கி.மீ. தொலைவில் திருக்குண்டையூர் ஆலயம் அமைந்துள்ளது. ஆட்டோ வசதியுண்டு.

தொடர்புக்கு : அகதீஸ்வர குருக்கள் (81100 91116)