Published:Updated:

அருள்புரிவாய் வேங்கடவா!

திருவேங்கடவன்
பிரீமியம் ஸ்டோரி
திருவேங்கடவன்

சகல சுபிட்சங்களும் அருளும் புண்ணிய பாசுரம் தொகுப்பு: பி.என்.பரசுராமன்

அருள்புரிவாய் வேங்கடவா!

சகல சுபிட்சங்களும் அருளும் புண்ணிய பாசுரம் தொகுப்பு: பி.என்.பரசுராமன்

Published:Updated:
திருவேங்கடவன்
பிரீமியம் ஸ்டோரி
திருவேங்கடவன்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருப்பதி திருவேங்கடவன். அந்த ஏழுமலை நாயகனை ஆன்றோர்கள் பலரும் பல்வேறு துதிப்பாடல்களால் போற்றியுள்ளனர். அவற்றில் 10 ஆழ்வார்களின் 202 பாசுரங்களும் அடங்கும்.

ஏழுமலையானின் பரிபூரண திருவருளைப் பெற்றுத் தரும் வல்லமை பெற்ற திவ்யபிரபந்த பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் அருளிய (பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து ஒன்பதாம் திருமொழி) பாடல்கள், அடுத்தடுத்த பக்கங்களில் உங்களுக்காக. திருப்பதி செல்லும் அன்பர்கள் இந்தப் பாசுரத்தைப் பாடி வழிபட, பாவங்கள் பொசுங்கும்; பிரார்த்தனைகள் பலிக்கும். வீட்டில் அனுதினமும் இந்தப் பாடல்களைப் பாடி வழிபடுவதால், சகல சுபிட்சங்களும் பெருகும்.

அருள்புரிவாய் வேங்கடவா!

தாயே தந்தை என்றும்

தாரமே கிளை மக்கள் என்றும்

நோயே பட்டொழிந்தேன் நுன்னைக்

காண்பது ஓர் ஆசையினால்

வேய் ஏய் பூம்பொழில்சூழ்

விரைஆர் திருவேங்கடவா

நாயேன் வந்து அடைந்தேன்

நல்கி ஆள் என்னைக் கொண்டருளே

கருத்து: மூங்கில் புதர்களும், பூஞ் சோலைகளும் நிறைந்த திருமலையில் எழுந்தருளும் வேங்கடவா. சரீர சம்பந்தத் தால் ஏற்பட்ட உறவினரான பெற்றோரும் மனைவி-மக்களுமே கதியென இருந்து விட்டேன். இப்போது நீயே நிலையான உறவினன் என்பதை அறிந்து உன்னைச் சரணடைகிறேன்... ஏற்றருள்வாய்!

மானேய் கண் மடவார் மயக்கில்

பட்டு மாநிலத்து

நானே நானாவித நரகம்

புகும் பாவம் செய்தேன்

தேனேய் பூம்பொழில்சூழ்

திருவேங்கட மாமலை என்

ஆனாய் வந்தடைந்தேன்

அடியேனை ஆட்கொண்டருளே

கருத்து: வண்டுகளை ஈர்க்கும் - தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடன் திகழும் திருவேங்கட மலையில் அருளும் இறைவா... இன்பம், அழகு என இதுவரையிலும் நரகம் புகும் அளவுக்கு எவ்வளவோ பாவங்கள் புரிந்தேன். அதை நினைத்து வருந்தி உம்மைச் சரணடைகிறேன். அடியேனை ஆட்கொண்டு அருளவேண்டும்.

கொன்றேன் பல் உயிரை குறிக்கோள்

ஒன்று இலாமையினால்

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்

குன்று ஏய் மேகம் அதிர்

குளிர் மாமலை வேங்கடவா

அன்றே வந்து அடைந்தேன்

அடியேனை ஆட்கொண்டருளே

கருத்து: மேகங்களால் குளிர்ந்து திகழும் திருவேங்கட மலையில் உறையும் வேங்கடவா, குறிக்கோள் எதுவுமின்றி பல உயிர்களைக் கொன்றிருக்கிறேன். எவருக்கும் இனிய வார்த்தை கூறியதில்லை. இது குற்றம் என்றுணர்ந்து உம்மைச் சரணடைகிறேன். மனம் கனிந்து எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குலம்-தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்

நலம்தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்

நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா

அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

கருத்து: பெரிய மேகங்கள் படிந்து திகழும் திருவேங்கட மலையில் எழுந்தருளும் எம்பெருமானே, பல குலங்களில் பிறந்து இறந்து இளைத்தவனும், நல்லன எதையும் செய்யாதவனும், குற்றங்களுக்கு ஆளானவனு மான அடியேன், தேவரீரைச் சரணடை கிறேன்; ஆட்கொண்டு அருளுங்கள்.

எப் பாவம் பலவும் இவையே செய்து

இளைத்தொழிந்தேன்

துப்பா நின் அடியே தொடர்ந்து

ஏத்தவும் கிற்கின்றிலேன்-

செப்பு ஆர் திண் வரை சூழ்

திருவேங்கட மாமலை என்

அப்பா வந்து அடைந்தேன்

அடியேனை ஆட் கொண்டருளே

கருத்து: செப்பைப் போன்ற மலைகள் பலவும் அரணாகத் திகழும் திருமலையில் அருளும் பெருமாளே, பல பாவங்களைச் செய்து துன்புறும் காரணத்தால் உங்கள் திருவடிகளைச் சரணடையும் சக்தி இல்லா தவனாக உள்ளேன். இருந்தும் உம்மை நாடி வந்துள்ளேன். ஏற்று அருளவேண்டும்.

மண் ஆய்நீர் எரிகால் மஞ்சு

உலாவும் ஆகாசமும் ஆம்

புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பித்

தளர்ந்து எய்த்தொழிந்தேன்

விண் ஆர் நீள் சிகர

விரைஆர் திருவேங்கடவா

அண்ணா வந்து அடைந்தேன்

அடியேனை ஆட் கொண்டருளே

கருத்து: விண்ணை முட்டும் உயர்ந்த சிகரங்களைக் கொண்ட திருவேங்கட மலை யில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே! அடியேன், பஞ்சபூதங் களால் ஆன சரீரத்தில் அகப்பட்டு பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். இப்போது உமது திருவருளை நாடி உம்மைச் சரணடைந்தேன். எளியேனை ஏற்று ஆட்கொண்டு அருளவேண்டும்.

தெரியேன் பாலகனாய் பல

தீமைகள் செய்துமிட்டேன்

பெரியேன் ஆயினபின் பிறர்க்கே

உழைத்து ஏழை ஆனேன்

கரி சேர் பூம்பொழில் சூழ்

கன மாமலை வேங்கடவா

அரியே வந்து அடைந்தேன்

அடியேனை ஆட்கொண்டருளே

கருத்து: யானைகள் நிறைந்த, பூஞ் சோலைகளால் சூழப்பட்ட திருவேங்கடமலை இறைவனே! இளைய பருவத்தினனாய் அறிவின்றி பல பாவங்களைச் செய்தேன். வயதில் முதிர்ந்தும் ஞானத்தில் தெளிவின்றி, பயனற்ற விஷயங்களில் ஈடுபட்டும் உழைத்தும் ஏழையானேன். அரியே உம்மைச் சரணடை கிறேன் ஆட்கொண்டு அருள்க.

நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்

ஏற்றேன் இப்பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான்

கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா

ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே

கருத்து: தேன் ஒழுகும் சோலைகளை உடைய திருவேங்கடகிரியில் எழுந்தருளும் பெருமாளே! பல பிறவிகள் எடுத்து உழலும் விதம் பாவம் செய்திருக்கிறேன். இந்தப் பிறவியில் தவறுணர்ந்து, உம்மைச் சரண் அடைகிறேன். அடியேனை அன்புடன் ஏற்று ஆட்கொண்டு அருள்பாலிக்க வேண்டும்.

பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே

செய்து பாவி ஆனேன்

மற்றேல் ஒன்று அறியேன்-மாயனே எங்கள் மாதவனே

கல் தேன் பாய்ந்து ஒழுகும்

கமலச்சுனை வேங்கடவா

அற்றேன் வந்து அடைந்தேன்

அடியேனை ஆட் கொண்டருளே

கருத்து: கல்தேன் பாய்ந்தொழுகும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கும் என் இறைவா, ஆச்சர்யமான குணங்களை உடையவரான எம்பெருமானே, எந்த ஆதாரமும் இல்லாமல் பல பாபங்களைச் செய்து பாவியானேன். இப்போது வேறு பற்று இல்லாமல் உம்மைச் சரணடைகிறேன், அடியேனுக்கு அருள் புரிய வேண்டும்.

கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய

எம் கார் வண்ணனை

விண்ணோர்-தாம் பரவும்

பொழில் வேங்கட வேதியனை

திண் ஆர் மாடங்கள் சூழ்

திருமங்கையர்-கோன் கலியன்

பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு

இல்லை பாவங்களே

கருத்து: சகல உலகங்களுக்கும் கண் - உயிர் போன்றவரும், கரிய திருமேனியை உடைய வரும், நித்ய சூரிகளால் போற்றப் படுபவரும், வேதங்களால் அறியப் படுபவரு மான திருவேங்கடவனைப் போற்றி, திருமங்கையாழ்வார் அருளிய இந்தப் பாசுரங்களைப் பாடி ஆராதிப்பவர்கள், சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism