ஜோதிடம்
Published:Updated:

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி அன்னமய்யா
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி அன்னமய்யா

எப்போது பகவத் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டதோ அப்போதே ஒருவன் இந்த உலகில் தாமரை இலைமீது தண்ணீர் போல வாழப் பழகிக்கொள்வான். ஹரிநாமம் சொல்லிப்பழகியவனுக்கு வீடென்ன, காடென்ன...

திருமலை... ஒருமுறை தரிசனம் செய் தாலே மீண்டும் மீண்டும் செல்லும் ஆவல் உண்டாக்கும் புண்ணியத் தலம். அதிலும் அங்கு தங்கியிருந்து பழகி விட்டால், பிறகு பிரிய மனம் வருமா?!

அன்னமய்யா தன் பெற்றோரைக் காணும்வரை ஊரும் உறவும் மறந்து திருமலையப்பனின் திருவடிகளை மட்டுமே நினைத்து வாழ்ந்து வந்தார். மீண்டும் அவர்களை எல்லாம் கண்ட தும் ஒரு கணம் மகிழ்ச்சி; மறுகணம் துக்கம். அதுவும் பெற்றோர், ``வீட்டுக்குப் போகலாம் வா'' என்று அழைத்ததும் அன்னமய்யா சோர்ந்துபோனார்.

வீடுபேற்றை எண்ணி வீட்டை விட்டு வந்தவருக்கு... `இனி வீடென்றால் திருமலையும் வைகுந்தமும்தான்' என்று எண்ணியிருந்தவருக்குப் பெற்றோரின் அன்பான அழைப்பு, துக்கத்தைத் தந்தது. மீண்டும் வேங்கடவனின் சந்நிதிக்கே சென்று வழிகாட்டுமாறு வேண்டிக்கொண்டார். அன்னமய்யா இப்படிக் கேட்டதும் வேங்கடவன் ஒளிரும் புன்னகை ஒன்றை வீசினார். அன்னமய்யாவுக்கு விளங்கிவிட்டது.

எப்போது பகவத் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டதோ அப்போதே ஒருவன் இந்த உலகில் தாமரை இலைமீது தண்ணீர் போல வாழப் பழகிக்கொள்வான். ஹரிநாமம் சொல்லிப்பழகியவனுக்கு வீடென்ன, காடென்ன... தன்னால் எங்கும் திருமலையப்பனைத் துதித்துக் கொண்டு வாழமுடியும் என்பதைத்தான் அந்தப் புன்னகை மூலம் வேங்கடவன் உபதேசிக்கிறார் என்று அன்னமய்யா புரிந்துகொண்டார். பெற்றோருடன் புறப்பட்டு ஊர்வந்து சேர்ந்தார்.

மீண்டும் அன்னமய்யா திருமலைக்குச் சென்றுவிடக் கூடாதே என்று அவர் பெற்றோர் கவலையுற்றனர். அன்னமய்யாவின் மாமன் மகள்களான திருமலம்மா, அக்கலம்மா ஆகிய இருவரையும் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தனர். அன்னமய்யா, இதுவும் அந்த வேங்கடவனின் விளையாடல்தான் என்பதைப் புரிந்துகொண்டார்.

அன்னமய்யா, தான் மேலும் கல்வி பயில வேண்டும் என்னும் தன் ஆர்வத்தை வெளியிட்டார். அப்போது அகோபில மடத்தை நிறுவிய சடகோப முனி என்பவரிடத்தில் அவரைப் பாடம் கற்க அனுப்பினர். பக்தியோடு அன்னமய்யாவுக்கு வேதாந்தப் பாடமும் ஆனது.

அன்னமய்யாவுக்கு வால்மீகி ராமாயணம் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டது. அதைத் தெலுங்கில் நல்ல எளிய இசையுடன் கூடிய இனிமையான பாடல்களாகப் புனைந்தார். அந்தப் பாடல்களைக் கேட்டவர்கள் பக்தியிலும் இசை இன்பத்திலும் மூழ்கினார்கள். அன்னமய்யாவின் புகழ் தெலுங்குதேசம் எங்கும் பரவத் தொடங்கியது. சாளுக்கிய மன்னர் நரசிம்மராயர்வரையிலும் அன்னமய்யாவின் திறமை எட்டியது. நரசிம்ம ராயர் அன்னமய்யாவைத் தன் அரண்மனைக்கு அமைச்சராக வரும்படி அழைப்பு விடுத்தார்.

திருமலை திருப்பதி
sriramTALLAPRAGADA

பெற்றோரும் உற்றோரும் இந்த அழைப்பைக் கேட்டு மகிழ்ந்தனர். அன்னமய்யா அந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். `முதலில் இல்லறம், இப்போது பதவி, பட்டம், பொருள்... நான் இந்த மாயா நெருப்பில் இறங்கி என் பக்தியை நிரூபிக்கவேண்டும் என்று அந்த வேங்கடவன் விரும்புகிறானா... அப்படி இறங்கினால் தன்னால் மீள முடியுமா' என்று அன்னமய்யா தயங்கினார்.

வேங்கடவனை நினைத்து தியானத்தில் அமர்ந்தார். அடுத்தகணம் வேங்கடவன் அதே ஒளிரும் புன்னகையோடு அவர் மனக் கண்ணில் தோன்ற, அன்னமய்யா தெளிவடைந் தார். இறைச்சித்தத்தை ஏற்கத் துணிந்தார். நரசிம்ம ராயர் அரண்மனைக்குச் சென்று அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

நரசிம்மராயர் அன்னமய்யாவைக் கண்ட உடனேயே அவர் தெய்வப் பிறவி என்பதை அறிந்துகொண்டார். அன்னமய்யாவுக்கு உரிய மரியாதைகள் செய்தார். அன்னமய்யா எந்த வகையிலும் கொஞ்சமும் கர்வம் கொள்ளாது, அனைத்தும் அந்த வேங்கடவனின் திருவுள்ளமே என்று தாழ்மையோடு பணிசெய்தார்.

அன்னமய்யா தினமும் ஆலயத்தில் பாடுவதைக் கேட்டு நரசிம்மராயர் மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அவரைத் தன் அரண்மனையிலும் பாடவைக்க வேண்டும் என்று விரும்பினார். தன் விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். மன்னனின் விருப்பத்தில் அன்னமய்யாவுக்குப் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு ஒரு பாடலைப் பாடினார். அன்று அரண்மனையில் இருந்த அனைவரும் அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தனர். அரசனோ அந்த இசையில் கிறங்கிப்போனார்.

திருமலை திருப்பதி
jayanthi photography

அவர் மனம் அன்னமய்யாவின் பாடலிலேயே சிக்கிக் கடந்தது. சிந்திக்க ஆரம்பித்தார். `இந்த உலகத்தில் வாழ்வாங்கு வாழ்வது எப்படி? இன்று வாழ்ந்தவர் நாளை மரணித்துப் போய்விடுவார்கள். உலகம் அவர்களை வெகு சீக்கிரம் மறந்துவிடும். திதி கொடுப்பவர்கள் கூட நான்காம் தலைமுறையை நினைவு வைத்துக்கொள்ளப்போவதில்லை. அப்படி என்றால் காலத்தில் நிலைத்திருக்க என்ன வழி? தன் பெயர் நிலைக்கும் வண்ணம் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும். காலத்தால் அழியாத ஒன்றில் தன் பெயர் பொறிக்கப்பட வேண்டுமே...' என்றெல்லாம் யோசித்தார்.

அன்னமய்யாவைப் பார்க்கும்போதும் அவர் பாடல்களைக் கேட்கும்போதும் அவை எக்காலமும் நிலைத்து நிற்கப்போகும் கவிகள் என்பதை உணர்ந்தார். எப்படியேனும் அந்தப் பாடல்களில் தன் பெயர் இடம்பெற்றுவிட்டால் காலத்தில் நிலைகொண்டுவிடலாம் என்று ஆசைப்பட்டார். ஆனாலும் அந்த ஆசையை அவரிடம் சொல்ல பயந்தார்.

ஒருநாள் அரண்மனை கூடியது. மக்களும் மந்திரிகளும் குழுமியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் கேட்டால் அன்னமய்யா எப்படியும் மறுக்கமாட்டார் என்று நினைத்தார். தன்னைப் பற்றிப் புகழ்ந்து ஒரு பாடல் பாடுமாறு அன்னமய்யாவிடம் விண்ணப்பம் வைத்தார்.

அப்போதுதான் அன்னமய்யா, `வேங்கட வன் தனக்கு வைத்திருக்கும் சோதனை இதுதான்' என்று உணர்ந்துகொண்டார்.

வேங்கடவனைத் தவிர வேறொருவரைப் பாடுவேனோ... நாராயணனைப் புகழும் வாயால் நரன் ஒருவனைப் புகழ்ந்தால், அது அபசாரம் அல்லவா... அன்னமய்யா மன்னனின் வேண்டுகோளை மறுத்தார்.

``அந்த ஹரியைப் பாடும்வாயால் மானுட ரைப் பாடமாட்டேன்'' என்றார்.

இதைக் கேட்ட அரசனுக்கு வெட்கம் உண்டானது. ஆசை மறுக்கப்பட்டதைவிடத் தன் விருப்பம் சபையோர் முன்னிலையில் புறந்தள்ளப்பட்டது அவமானமாக இருந்தது.

மன்னன் தன் குரலை உயர்த்தினார். ``அன்னமய்யா... ஒரே ஒரு பாடல் பாடும். அதன்பின் தொந்தரவு செய்யமாட்டேன்'' என்று சொன்னார்.

``ஒரு பாடல் அல்ல ஓராயிரம் பாடல்கள் பாட நான் தயார். ஆனால் உம்மைப் பற்றியல்ல. அந்த உத்தமன் நிவாசனைப் பற்றி. இனி என்னை இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்த வேண்டாம்'' என்று அன்னமய்யா சொல்லவும் மன்னருக்குக் கோபம் வந்தது.

ஏற்கெனவே அன்னமய்யாமீது பொறாமை யில் இருந்த சிலர் மன்னரின் கோபத்துக்கு தூபம் போட்டனர். மன்னர் மீண்டும், ``அன்னமய்யா ஒரு பாடல் பாடுகிறீரா இல்லை காலமெல்லாம் சிறைக்குச் செல்கிறீரா'' என்றார் ஆவேசத்துடன்.

``சிறையா? ஹரிநாமம் அறிந்தவனுக்குச் சிறையும் ஒன்றுதான் அரண்மனையும் ஒன்றுதான். அற்பனைப் பாடி அரண்மனையில் வாழ்வதைவிட அந்த அற்புதனைப் பாடியபடி சிறையில் இருப்பேன்'' என்று அன்னமய்யா சொல்ல மன்னரின் கோபம் எல்லை கடந்தது. அன்னமய்யாவைச் சிறையில் அடைத்தார். தான் சொல்லும் வரையிலும் அன்னம் வழங்க வேண்டாம் என்றும் கட்டளையிட்டார்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

``ஹரியின் நாம ஜபத்தைவிட ருசியான அன்னம் இந்த உலகில் இருக்கிறதா'' என்று கேட்டுவிட்டு அன்னமய்யா வீரர்களோடு சிறை நோக்கி நகர்ந்தார்.

``மன்னா! அவரைச் சிரச்சேதம் செய்யச் சொல்லியிருக்க வேண்டும். பாருங்கள்... கொஞ்சமும் அச்சமின்றிச் சிறை நோக்கிச் செல்கிறார்'' என்றனர் சிலர்.

``ஒரு ஹரிதாசரைக் கொல்லும் அளவுக்கு நான் பாவியில்லை. அதேவேளை அவர் வாயால் நான் பாடப்பட்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் என் விருப்பம். சிறை அவர் வைராக்கியத்தைத் தளர்த்தி என் விருப்பத்தை நிறைவேற்றித்தரும்'' என்று சொன்னார் மன்னர்.

சிறையில் அன்னமய்யாவின் கைகளில் விலங்கு பூட்டப்பட்டது. எல்லாம் வேங்கடவ னின் திருவுள்ளம் என்று எண்ணியவராக கைகூப்பி, ``ஓம் நமோ வேங்கடேசாய நம:'' என்று துதித்தார் அன்னமய்யா.

மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

- தரிசனம் தொடரும்...