Published:Updated:

திருமலை திருப்பதி-2

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருப்பம் தரும் திருப்பதி

திருமலை திருப்பதி-2

திருப்பம் தரும் திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு

பொன்னுலகில் போகமெல்லாம் புணர்க்கும் வெற்பு

விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு

வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பே

- வேதாந்த தேசிகர்

வேதங்களைப் போலவே புராணங்களையும் ரிஷிகள்தான் எழுதினார்கள். அவற்றில் முக்கியமான பதினெட்டை வியாச மாமுனி தொகுத்தளித்தார். காசி முதல் ராமேஸ்வரம் வரை இந்த தேசமெங்கும் இருக்கிற புனித ஸ்தலங்களின் மகிமைகள், இந்தப் புராணங்களில் பல இடங்களில் விவரிக்கப்படுகின்றன.

ஆனாலும் ஒரேயொரு புண்ணிய க்ஷேத்திரம் மட்டுமே இந்தப் பதினெட்டு புராணங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. அதுதான் திருமலை எனப்படும் திருவேங்கடம்.

திருமலை திருப்பதி-2

ந்தப் பூலோகத்தில் அநேகக் கோயில்கள் உண்டு. அவற்றில் மனிதர்களால், ரிஷிகளால், தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல்வேறு மூர்த்திகளும் உண்டு. ஆனால் சில மூர்த்திகள் மட்டும் ஸ்வயம் வியக்தமாக (சுயம்புவாக)த் தோன்றியவை. மற்ற எல்லா தலங்களையும்விட இந்த ஸ்வயம்வியக்த க்ஷேத்திரங்களில் சாந்நித்தியம் அதிகமாக இருக்கும். அப்படி, பகவான் தன் கருணையினால் விக்ரக ரூபமாக சுயம்புவாகத் தோன்றிய தலம் திருமலை திருப்பதி.

பகவான் திருமலையில் எழுந்தருளத் திருவுளம் கொண்ட நிகழ்வை பிரம்ம புராணம் மிக அற்புதமாக விவரிக்கிறது.

ஶ்ரீமந்நாராயணனுக்குக் கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் திருவுளம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நாரத மகரிஷியிடம், “நாரதரே! முந்தைய யுகங்களிலாவது தர்மங்களும், வேதங்களும், யாகங்களும் நிறைந்திருந்தன. அதனால் மக்கள் சுபிட்சமாக வாழ வழியிருந்தது. இடையூறாக அசுரர்கள் வந்தபோது, நான் அவதாரம் செய்து அவர்களை நிக்ரகம் செய்தேன்.

ஆனால் கலியுகமோ தர்மங்கள் குறையும் காலம். அதனால் அதர்மம் பரவி எளிய மக்கள் துன்புறுவார்கள். என் மக்கள் துன்புற்றால் என் மனம் தாங்காது. எனவே அவர்களுக்கு அருள்பாலிக்க அர்ச்சாவ தாரமாக பூவுலகில் நிலைகொள்ள விரும்புகிறேன். அதற்கான இடத் தைக் காட்டுவாயாக” என்று கூறினாராம்.

நாரதமகரிஷி அதைக் கேட்டுக் கண்ணீர் வடித்தார். “சுவாமி, ஒரு தாய் தன் பிள்ளைகள்மீது கொண்ட அன்பைப் போல இருக்கிறது உங்கள் அன்பு. அவர்கள் அருகிலேயே இருந்து நீங்கள் அவர்களைக் காக்க விரும்புகிறீர்கள். நீங்கள் எழுந்தருள உகந்த இடம் திருமலை எனப்படும் ஏழுமலையே” என்றாராம்.

அதைக் கேட்ட மகாவிஷ்ணு, தன் பரிவாரங்களுடன் வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு சுவாமி புஷ்கரணி எனப்படும் கோணேரித் தீர்த்தக் கரைக்கு வந்து சேர்தார்.

பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்வதென்றால் ஆதிசேஷனே முன் நிற்பார். `பெருமாள் செல்லும்போது அவருக்குக் குடையாகவும், அமர்ந்திருக்கும்போது சிங்காசனமாகவும், நிற்கும்போது அவன் மரவடியாகவும், நீள்கடலுள்... ஒளிரும் மணியை உடையதாலே விளக்காகவும், திருப்பரிவட்டமாகவும், மென்மையான பஞ்சணையாகவும் விளங்குபவர் ஆதிசேஷன்’ என்கிறது ஆறாம் திருமொழிப் பாடல்.

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும் புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம், திருமாற் கரவு - ஆறாந்திருமொழி

பகவானின் திருவடி தீட்சை பலருக்கும் வாய்த்துவிடுவதில்லை. கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் பிறந்ததும் வசுதேவர் அவரை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு நடக்கிறார். அதுகாரும் சும்மா இருந்த யமுனை பொங்குகிறாள். வசுதேவர் கழுத்துவரைக்கும் வெள்ளம் பெருகிவிட்டது. இதை எல்லாம் குடையாக வரும் ஆதிசேஷன் பார்த்துக்கொண்டுதான் வருகிறார்.

யமுனையின் இந்த ஆவேசம் எதற்கு என்னும் கேள்வி அவருக்குள்ளும் இருந்தது. ஆனால் குழந்தையாக இருந்த பரமாத்மா யமுனையின் ஆவலைப் புரிந்துகொண்டார். கூடையிலிருந்து தன் பிஞ்சுப் பாதம் வெளியே படுமாறு காலை அசைத்தார். யமுனையின் அலை பாதத்தில் மோதியது. யாரும் தீண்டயியலாத அந்த அற்புதத் திருவடிகளைத் தீண்டிய சிலிர்ப்பில் யமுனை தன் ஆவேசம் அடங்கி வழிவிட்டாள். வசுதேவர் கடந்துபோனார்.

கண்ணன் வளர்ந்தபோது அட்டகாசம் செய்த காளிங்கனை அடக்கி அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் புரிந்தார். அதையும் ஆதிசேஷன் கண்டார். பாகவதர்கள் திரண்டுவந்து காலமெல்லாம் கண்ணனின் திருவடிகளுக்குப் பாதபூஜை செய்தபடி இருக்கிறார்கள். திருவடி மகிமைகளைப் பேசியபடி இருக்கிறார்கள்!

திருமலை திருப்பதி-2

ஆதிசேஷனும்... யுகம் யுகமாக பகவானைச் சுமந்திருந்தாலும் பூவுலகில் அவரின் திருவடியைத் தாங்கும் பாக்கியம் வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, திருமலையாக வந்து அமர்ந்தார். பெருமாளும் அவரின் ஆசையை நிறைவேற்ற அதன் சிகரத்தில் அர்ச்சாவதாரமாக நின்று அருள்பாலிக்கிறார். ஆழ்வார் சொல்லும் மரவடி என்பது திருமலையைத்தான் என்றால் அது மிகையில்லை. அதனால்தான் ஏழுமலைகளில் ஒன்றுக்கு சேஷாசலம் என்று பெயர் வந்தது.

திருமலையில் பெருமாள் அர்ச்சாவதாரமாக எழுந்தருள்வதற்கு முன்பாகவே, இந்த மலையில் பல லீலைகளை நிகழ்த்தி தன் சாந்நித்தியத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் என்கிறது பிரம்ம புராணம். திருமலையில் ஒரு மலை ரிஷபாத்ரி. அங்கு அவர் புரிந்த லீலை முக்கியமானது.

ஏழுமலைகளில் ஒன்று ரிஷபாசலம். ரிஷபம் என்றால் காளை. காளை முகம் கொண்ட அசுரன் வாழ்ந்த மலை. திருமலையில்தான் பெருமாள் வந்து நிலைகொள்ளப்போகிறார் என்பதை அறிந்துகொண்ட ரிஷிகள் பலரும் அங்கு வந்து தவமியற்றத் தொடங்கினர்.

ரிஷபாசுரனுக்கு அது மிகவும் எரிச்சலைத் தந்தது. ரிஷிகளைத் துன்புறுத்தி அவர்களின் தவத்தைக் கலைத்தான். வேள்விகளை நிறுத்தினான். ஒரு கட்டத்தில் அவன் அராஜகம் எல்லை மீறிப்போனது. முனிவர்கள் பெருமாளை நினைத்து தியானித்தனர். `பெருமாளே நீர் அவதாரம் செய்யும் காலத்துக்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. அப்படியிருக்க, இவன் தொல்லையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவது யார்?’ என்று வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலைக் கேட்ட பெருமான் வேடுவ ராஜனைப் போல ரூபம் கொண்டு திருமலையில் தோன்றினார். அங்கே சுற்றிக்கொண்டிருந்த ரிஷபாசுரன் வேடனைக் கண்டதும் கோபம் அடைந்தான். தன் எல்லையில் வில்லோடு சுற்றுவதானால் யுத்தத்துக்கு வருமாறு அழைத்தான். பெருமாள் அவனோடு திருவிளையாடல் செய்ய முடிவெடுத்து, யுத்தத்தைத் தொடங்கினார். அவன் மீது அம்புகளைப் போட்டார். ரிஷபாசுரனும் சளைக்காமல் யுத்தம் செய்தான்.

யுத்தத்தின் நிறைவில் அவன் நிலை என்னவானது தெரியுமா?

- தரிசிப்போம்...

திருமலை திருப்பதி-2

வாழ்வில் பேரமைதியை ஏற்படுத்திய அந்த ஒரு நொடி!

ங்கள் குலதெய்வம் திருப்பதி ஏழுமலையான். தாத்தா காலம் வரையிலும் ஆண்டுதோறும் திருப்பதி செல்வதும், சென்று வந்தபின்பு சமாராதனை செய்வதும் வழக்கம். ஊரையே கூட்டி சாப்பாடு போடுவார். எங்கள் ஊரில் அப்படி ஒரு வழக்கம் இருந்தது.

தாத்தாவுக்குப் பின் அப்பா ஓரிரு ஆண்டுகள் அதைச் செய்தார். பின் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக சமராதனையையும் பிறகு திருப்பதிக்குச் செல்வதையுமே விட்டுவிட்டார். போய்வர ஆகும் செலவில் ஒரு கடனை அடைத்துவிடலாம் என்று சொல்லுவார். கடைசியில் பெருமாளைப் பல ஆண்டுகளாகப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் போய்ச் சேர்ந்தார்.

அப்பா என்னிடம் குடும்பப் பொறுப்பை விட்டுச் செல்லும்போது, கடனும் பிரச்னைகளும் அதிகம் இருந்தன. பேசாமல் குடும்பத்தை விட்டுவிட்டு ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றியது. தாய் மற்றும் சகோதரிகளின் முகம் பார்த்துப் பேசாமல் இருந்தேன்.

ஒரு நாள் இரவு ஒரு கனவு. மஞ்சள் உடையணிந்த ஒருவர் கையில் நாமமிட்ட சொம்போடு வாசலில் வந்து நின்று `கோவிந்தா கோவிந்தா’ என்கிறார். நான் வெறுப்புடன்.. `ஏதாவது இருந்தால் நீ கொடுத்து விட்டுப் போ’ என்று வீட்டினுள் இருந்தே சொல்கிறேன். அதைக் கேட்ட அவர், `வீட்டுக்குள்ளேயே இருந்தால் எப்படித் தருவது? எழுந்து என் அருகே வா... தருகிறேன்!’ என்றார்.

அந்தக் குரலில் இருந்த மாற்றம் என்னை என்னவோ செய்தது. எழுந்து வெளியே ஓடிவருகிறேன்... அந்த நபரைக் காணவில்லை. கனவு கலைந்தது. விழித்து எழுந்து அமர்ந்து தண்ணீர் குடித்தபோது அம்மா என்ன விஷயம் என்று கேட்டார். நான் சொன்னேன்.

அதற்கு அம்மா, “உன் கனவில் வந்தது அந்த வேங்கடவன்தான். நீ அவரிடம் சென்றால் உன் குறைகளைத் தீர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்” என்றார். அப்போதுதான் பல காலம் திருப்பதி செல்லாமல் இருப்பது நினைவுக்கு வந்தது. இருந்த கொஞ்ச பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு சனிக்கிழமை திருப்பதியில் இருக்குமாறு சென்றேன். பயணத்தால் கடினமான உடல் சோர்வு எனக்கு. ஆனாலும் கருவறை அருகே சென்றபோது மனம் லேசானது.

பாதாதிகேசமாக பகவானைச் சேவித்தேன். என் மேனியெங்கும் சிலிர்ப்பு; உள்ளுக்குள் பரவசம் பொங்கியது. என்னையுமறியாமல் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

`பெருமாளே! அழைத்தாய்... வந்துவிட்டேன். இனி உன் இஷ்டம்...’ என்று சொல்லி வணங்கினேன். சிலதுளி கணங்களே... அதற்குள் நகரச் சொல்லிவிட்டார்கள். நானும் நகர்ந்து வந்துவிட்டேன்.

ஆனால் அந்த ஒருநொடி என் வாழ்க்கையை மாற்றியது. அதன்பின் நான் தொட்டதெல்லாம் துலங்கியது. தொழில் பெருகியது. இன்று என் கடன்கள், கடமைகள் எல்லாம் முடிந்துவிட்டன. திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும் என்பது வெறும் வாசகம் அல்ல; அது லட்சோபலட்சம் மக்கள் வாழ்வில் நிகழ்ந்த நிதர்சனம்.


- கே.ராம மூர்த்தி, சென்னை-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism