Published:Updated:

சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகிட தினம் ஒரு திருமந்திரம்!

திரு மந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
திரு மந்திரம்

மா.கி.இரமணன்

சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகிட தினம் ஒரு திருமந்திரம்!

மா.கி.இரமணன்

Published:Updated:
திரு மந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
திரு மந்திரம்

சகல தோஷங்களும் நீங்கி
சந்தோஷம் பெருகிட
தினம் ஒரு திருமந்திரம்!

நினைத்தது நிறைவேற தீப வழிபாடு!
இல்லங்களில் தினமும் காலையும் மாலையும் தீபங்கள் ஏற்றிவைத்து இல்லத்தில் ஒளி ஏற்றிவைப்பதுடன், திருமந்திரப் பாடல்களைப் பாடி உள்ளத்திலும் இறையொளியைப் பெருக்கி, பரம்பொருளை மனதார தியானித்து வழிபட்டால், பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும்; நாம் நினைத்தது நிறைவேறும்.

தினம் ஒரு திருமந்திரம்!
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடலாக ‘தமிழ் மூவாயிரம்’ ஆக திருமந்திரம் பாடினார். பத்தாம் திருமுறையாக இது போற்றப்படுகிறது. திருமந்திரத்தில் 9 தந்திரங்களைப் பாடியுள்ளார் திருமூலர்.
வழிபாட்டு துதிகளாக மட்டுமன்றி, வாழ்வை வெல்ல வழிகாட்டும் துதிகளா கவும் திகழ்கின்றன, திருமந்திரப் பாடல்கள். அவற்றில் சில பாடல்கள் இங்கே உங்களுக்காக. இந்தப் பாடல்களைத் தினமும் பாடி வழிபடுவதால், சகல நலன்களும் கைகூடும்.

தொகுப்பு: திருமந்திரத் திலகம்
டாக்டர் மா.கி.இரமணன்


காக்கும் மந்திரம்!

வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல்தாரமும் ஆமே
- திருமந்திரம் 1178


கருத்து: சீவர்களின் பிராணவாயு, மனம் இரண்டாலும் - தவத்தாலும், தியானத்தாலும் எளிதில் அறிய முடியாதவள். பேயையும், பூத கணங்களையும் ஏவலர்களாகப் பெற்றவள். பெண் தெய்வம்; ஆய்வு, அறிவால் அறிய இயலாத சக்தி. சிவனுக்குத் தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் திகழ்பவள்; நம்மை ரட்சிக்கும் சக்தியை வணங்குவோம்.

இன்பம் நிலைக்கும்!

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே, வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே
- திருமந்திரம் 1818


கருத்து: ஞான விளக்கினை ஏற்றி, எல்லையின்றி நிற்கும் பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள்.
பரம்பொருள் பிரகாசத்தின் முன்னர், மாயா, மல இருள் ஆகிய வேதனைகள் மாறிவிடும். பேரொளியை வெளிப்படுத்தும் ஒளி உடையவர்கள், சிவ ஒளியும் ஆத்ம ஒளியும் கலந்து விளங்குவார்கள்.


மழலை வரம் கிட்டும்!

இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்ததுசூளை விளைந்தது தானே.
- திருமந்திரம் 468


கருத்து: தாயும் தந்தையும் இசைவு டன் புதிய உயிரை உருவாக்குகின்ற னர். இன்பத்தில் உருவான துன்ப மண்குடத்தில் ஆன்மா உருவாகி, ஒன்பது ஓட்டைகளுடன் மனிதனாக உருவாகிறது. பச்சைமண் சூளையில் வைத்து செங்கல் ஆக தீ மூட்டுவர். அதுபோல் தாயின் வயிற்றுச் சூளை யின் சூட்டில் 300 நாள் இருந்து மனிதனாகப் பிறக்கிறது.

பிணிகள் நீங்கும்!

இருமலும் சோகையும்
ஈளையும், வெப்பும்
தருமம் செய்யாதவர்
தம்பாலது ஆகும்
உருமிடி, நாகம்,
உரோணி, கழலை
தருமம் செய்வார்
பக்கல் தாழகிலாவே
- திருமந்திரம் 263


கருத்து: தருமம் செய்து புண்ணியம் சேர்த்து வைக்காதவர் பாவிகள். பாவம் செய்தவருக்குப் பலவித நோய்கள் இப்பிறப்பில் தொடரும். இருமல், ரத்தசோகை, கோழை, காய்ச்சல் ஆகிய நோய்களை இந்தப் பிறப்பில் பெற்றவர், தருமம் செய்யாதவர்கள் ஆவர். தருமம் செய்பவரை இடி- மின்னல், பாம்புக் கடி, தொண்டை நோய், வயிற்றுக் கட்டி ஆகியவை நெருங்காது.

கல்வி தரும் மந்திரம்!

ஏடுஅங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த்
தோத்திரம் சொல்லுமே
- திருமந்திரம் 1067


கருத்து: கரங்களில் சுவடிகளுடன் திகழும் சரஸ்வதிதேவி முக்கண் களை உடையவள். படிகம் போன்ற
வெள்ளை நிறத்தவள். வெண்தாமரை யில் வீற்றிருப்பாள். நாத இசை வடிவாய்த் திகழ்பவள். திருமுறை பாடுபவள். அந்த அன்னையின் திருப்பாதங்களை தலையில் சூடி தோத்திரம் சொல்லி வணங்குவோம்.

அன்னம் செழிக்கும்!

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே
- திருமந்திரம் 252

கருத்து: தினமும் உண்பதற்கு முன்னே இறைவனுக்கு ஒரு பச்சிலை சமர்ப்பித்து பூசித்தல் யாவருக்கும் நல்லது. பசுவுக்கு ஒரு வாயளவு புல் கொடுத்தல் யாவருக்கும் நல்லது. உண்ணுமுன் ஒரு கைப்பிடி அளவு பிறருக்கு வழங்குதல் யாவருக்கும் நல்லதாகும். பிறர் மனம் நோகாதவாறு இன்சொல் பேசுதல் யாவருக்கும் நல்லதாகும்.

துன்பங்கள் நீங்கும்!

இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து
இன்பத்துளே நினைக்கின்றது இதுமறந்து
துன்பத்துளே சிலர் சோறொரு கூறைஎன்று
துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே
- திருமந்திரம் 2089

கருத்து: பெற்றோரின் சேர்க்கை இன்பத்திலே மனிதன் பிறக்கிறான். அதனால் எப்போதும் இன்பத்தையே எண்ணி ஏங்கி வளர்கின்றான். ஆனால் நிலைத்த பேரின்பம் எது என்பதை மறந்து, சிற்றின்பத்திலேயே உழல்கிறான். ஆக, துணியும், சோறுமே சுகம் என்று துன்ப வாழ்வில் சிக்கி, ஆசாபாசங்களான துக்கங்களிலேயே மயங்கிக் கிடக்கிறது மனிதகுலம்.

மழை வளம் பெருகும்!

ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச்சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே
- திருமந்திரம் 1345

கருத்து: ஒளி வீசுகின்ற பராசக்தி மனத்தில் எழுந்து அருளினால், மனதில் மகிழும்படியான உண்மைப் பொருள் விளங்கும். தெளிவு ஏற்படும். மழையும், செல்வங்களும் வந்து சேரும். எல்லா வளங்களையும் வழங்கும் அன்னை பராசக்தியை அறிந்துகொள்வார் குறையின்றி வாழ்வார்.

மண் வளம் சிறக்கும்!

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ண அறியாமல் நழுவுகின்றாரே
- திருமந்திரம் 1828

கருத்து: சிவ பூசை மற்றும் தர்மங்கள் செய்வதால் புண்ணியம் சேர்க்க வேண்டும். அப்படியான புண்ணிய வான்கள் இருக்கும் இடத்தில் நீர் அதிகம் இருக்கும்; பூக்கள் அதிகம்
மலரும். அதனால் செய்யும் பூசை களைக் கண்டு சிவனார் அருள் புரிவார். இதை அறியாது, பாவிகள் எம் சிவனை அறிய முடியாமல் ஒதுங்கிப்போய் விடுகின்றனர்.

விதியை வெல்லலாம்!

வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்
வென்றிடல் ஆகும்
வினைப்பெரும் பாசத்தை
வென்றிடல் ஆகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய் உணர்வோர்க்கே
- திருமந்திரம் 1232

கருத்து: வெல்ல முடியாத விதியை யும் பராசக்தியின் அருளால் வெல்ல இயலும். அன்னையின் அருளால், விதியைச் சார்ந்து வரும் வினைப் பெரும் பாசத்தையும் ஐம்புலன்களின் ஆசையையும் வென்றிடலாம். சக்தியை உண்மையாக உணர்ந்து வழிபடுவோர், சகல கர்ம பலன் களையும் வென்றுவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism