Published:Updated:

'கோபம் வேண்டாமே தேவி!'

திருமீயச்சூர்
பிரீமியம் ஸ்டோரி
திருமீயச்சூர்

திருமீயச்சூர்

'கோபம் வேண்டாமே தேவி!'

திருமீயச்சூர்

Published:Updated:
திருமீயச்சூர்
பிரீமியம் ஸ்டோரி
திருமீயச்சூர்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், பேரளம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஊர் திருமீயச்சூர். இங்கு ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமேகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த ஆலய அன்னை ஸ்ரீலலிதாம்பிகை கொலுசு அணிந்திருப்பாள்.

பிரம்மா, சரஸ்வதி, மகாவிஷ்ணு, மகா லட்சுமி, அருணன், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம். மட்டுமன்றி, தட்சிண கங்கையாம் காவிரியும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பூஜித்து பேறு பெற்ற தலம் இது.

மேலும் கருடன், அருணன், வாலி, சுக்ரீவன், யமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்த தலம் என்று சொல்லப்படுகிறது.

சூரியன் சாபவிமோசனம் வேண்டி இந்தத் தலத்துக்கு வந்து, இறைவனை கஜவாகனாரூடர் கோலத்தில் தியானித்து வழிபட்டு புத்திரப் பேறு பெற்ற தலம்.

இத்தல புராணத்தின் படி, சூரியன் தன் சாபம் நீங்குமாறு சிவபெருமானை எண்ணித் தவம் செய்து வந்தார். தவத்தின் இடையே பொறுமை இல்லாமல் என் சாபம் எப்போது நீங்கும் என்று இறைவனிடம் வந்து கேட்க, அம்பிகை கோபம் கொண்டு சூரியனைச் சபித்தாராம்.

சூரியன் இருண்டால் உலக உயிர்கள் வாடுமே எனக் கருதிய சிவனார், அம்பாளை சமாதானம் செய்து அருள்பாலித்தாராம். இந்தத் திருக்காட்சியை விளக்கும் வண்ணம் - கோயில் விமானத்தின் கீழ் தெற்கில் திகழும் க்ஷேத்திரபுராணீஸ்வரர் சிற்பம் இக்கோயிலின் சிறப்பம்சம்.

ஈஸ்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற கோலம் காண்பவர் மனதைக் கவரும். இந்த சிற்பத்தை ஒரு புறம் இருந்து பார்த்தால் அம்பிகை கோபத்தோடும் மற்றொரு புறம் இருந்து பார்த்தால் அன்னை புன்முறுவல் பூத்திருப்பதுபோலவும் காட்சி தருவது சிறப்பிலும் சிறப்பு!

- சக்திதர், சென்னை- 91