Published:Updated:

அசுவினி நட்சத்திர நன்னாளில் திருமூலருக்கு ஆராதனை செய்வது ஏன்?

திருமூலர்
திருமூலர்

இன்றும் ஒவ்வொரு மாத அசுவினி நட்சத்திர நாளன்றும், திருமூலருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

யோக நிலையிலிருந்து, ஆண்டிற்கொரு முறை யோகம் களைந்து, 3,000 தமிழ் `திருமந்திரப் பாடல்கள்'அருளிய திருமூலருக்கு இன்றும் ஆராதனை செய்யப்படுகிறது.

திருமூலர்
திருமூலர்

சிவபெருமானின் ஆணைக் கேற்ப, திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ கோமுத்தீசுரர் திருத்தலத்திற்கு வருகை தந்த திருமூலரை அகத்தியர், போகர், முதலான சித்தர்கள் எதிர்கொண்டழைத்தனர். ஒப்பிலாமுலையம்மை உடனாய கோமுத்தீசுரரை வணங்கிய பின்னர், போதி அம்பலத்தின் வாயு மூலையில், படர் அரசமரம் ஒன்றின் கீழே, கீழ்த்திசை நோக்கி, பதுமாசனக் கோலத்தில், யோகநிலையில் அமர்ந்தார் திருமூலர்.

ஆண்டிற்கொரு முறை, யோகம் களைந்து, தமிழ் மந்திரப் பாடல் ஒன்றை அருளினார். இவ்வாறு 3000 ஆண்டுகள் யோகநிலையிலிருந்து, 3000 `திருமந்திரப் பாடல்களை' அருளிச் செய்தார். இப்பாடல்கள் அவருடைய சீடர்களால் சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டன. பின்னர், ஓர் ஐப்பசி மாத அசுவினி நட்சத்திர நன்னாளில், அவ்விடத்தில் இருந்த படியே, திருமூலர் ஜீவசமாதி அடைந்தார். அவர் திருமந்திர நூலில் 'சமாதிக் கிரியை' எப்படிச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளவாறே, அவரது திருவுடல் வைக்கப் பெற்று, சித்தர்களால் ஆராதிக்கப்பட்டது என்பர்.

திருமூலர்    3000 ஆண்டுகள்- 3000 பாடல்கள்
திருமூலர் 3000 ஆண்டுகள்- 3000 பாடல்கள்

மாசிலாமணீசர் ஆலயத்தின் உட்சுற்றில் திருமூலர் சமாதி அடைந்த இடத்தில் திருக்கோயில் எழுப்பப்பட்டு அதில் திருமூலரின் அழகிய கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்றும் ஒவ்வொரு மாத அசுவினி நட்சத்திர நாளன்றும், திருமூலருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இரவு பூஜையில் திருமூலரும், அவரது குருவான நந்தி தேவரும் மூலவரான மாசிலாமணீசரை வலம் வரும் நிகழ்வு வேறெங்கும் காண இயலா அரிய ஒன்றாகும்.

ஆண்டுதோறும், ஐப்பசி மாத அசுவினி விழாவும், மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. அன்றைய தினம், ஆதீனப் பள்ளிகளின் தமிழாசிரியர்களால், `திருமந்திரம் முற்றோதல்' மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆகியன ஆதீனத் திருவாணையின் படி செய்விக்கப்பெறுகின்றன. மேலும், தைமாதத்து `ரதசப்தமி' மகோத்ஸவத்தில், இரண்டாம் திருநாளாக, `திருமூல நாயனாரின் ஐதீகத் திருவிழா' பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அன்றைய தினம், திருமூலரின் ஐம்பொன் உற்சவத் திருமேனி, திருவீதிவுலா எழுந்தருளச் செய்யப் பெறும்.

திருவாவடுதுறை ஆதினம்
திருவாவடுதுறை ஆதினம்

திருமூலரின் ஓலைச் சுவடிகள் திருவாவடுதுறை ஆதினத்து `சரசுவதி மகால்' நூல் நிலையத்தில் பாதுகாக்கப் பெற்றுள்ளன. நூல் முழுமைக்கும், ஆதின மகா வித்துவான் தண்டபாணித் தேசிகரால், `பஞ்சாக்கர தீப உரை' எனும் பெயரால், விரிவுரை எழுதப் பெற்று, ஆதின வெளீயீடுகளாகக் கிடைக்கப் பெறுகின்றன. திருமந்திரம் தொடர்பான 85 - க்கும் மேற்பட்ட நூல்கள் திருமடத்தால் வெளிவரச்செய்யப்பட்டுள்ளன.

மேலும் , மகர குருபூஜை நிகழ்வில், திருமந்திர நூலின் ஒரு பகுதி வெளியீடும், திருமந்திரத்தில் சிறக்கும் அறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் விருதும் வழங்கப்படுகிறது. இவ்வாறாக திருமூலர் இறவா வரம் பெற்றவராய் வலம் வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு