திருநாங்கூரில் மங்களாசாசனம் செய்யப்பட்ட 11 திவ்ய தேசப் பெருமாள்கள் மற்றும் திருமங்கையாழ்வார் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த கருட சேவை திருவிழா நாளை பக்தர்களின்றி நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூர் திருத்தலத்தைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த திவ்ய தேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கியமாகக் கருதப்படும் மூன்று சுலோகங்களும் இத்திவ்ய தேசங்களில்தான் உபதேசிக்கப்பட்டன.
முதலாவதான 'ஒம் நமோ நாராயணா' இரண்டாவதான
'ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிரபத்தயே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ '
மூன்றாவதாக கீதையிலே
'ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோமோட்ச யிஷ்யாமி மாசுச' ஆகிய சுலோகங்களை அருளிய தலங்கள் இவை. இந்தத் திவ்ய தேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்திருக்கிறது என்பதுதான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆண்டு தோறும் தை மாதத்தில் நடைபெறும் கருடசேவை உற்சவம் வெகு விமர்சியாக நடைபெறும். அப்போது 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும் பாசுரங்கள் பாடி மகா தீபாரதனை நடைபெறும். பின்பு 11 பெருமாள்களும் அணிவகுத்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் வீதி உலா நடைபெறும். இந்த விழாவினைக் காண வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கருடசேவை உற்சவம் நாளை 2-ம் தேதி புதன்கிழமை இரவு நடைபெறுகிறது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் இன்றி கருடசேவை உற்சவம் நடத்துவது என்று அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 11 பெருமாள்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டாமல்போவது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.