திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

பிள்ளை வரம் தரும் பிரார்த்தனை!

பொல்லா பிள்ளையார்
பிரீமியம் ஸ்டோரி
News
பொல்லா பிள்ளையார்

பொல்லா பிள்ளையார்

`வண்டு பண் முரலும் சோலைத் திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி உறை செல்வர் தாமே!’ என்று திருஞானசம்பந்தர் போற்றிப் பரவிய தலம் திருநெல்வேலி.

அம்மை காந்திமதியோடு ஐயன் நெல்லையப்பர் அருளோச்சும் க்ஷேத்திரம் இது. பதினான்கு ஏக்கர் நிலப் பரப்பில், இரட்டைக் கோயில் அமைப்பில் இருக்கிறது காந்திமதியம்மன் - நெல்லையப்பர் திருக்கோயில். இரண்டு சந்நிதிகளையும் இணைக்கும் நீளமான மண்டபம், சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

நெல்லையப்பர் திருக்கோயில்
நெல்லையப்பர் திருக்கோயில்


‘நிறைகொண்ட சிந்தையன்’ என்றும் ‘நெல்வேலி கொண்ட நெடுமாறன்’ என்றும் சுந்தரரால் குறிக்கப் படும் நின்றசீர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னனால், கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்யப்பட்டு, இந்தக் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே கூட, இந்தக் கோயில் பிரபலமாக விளங்கியதை, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களால் அறியலாம்.

காந்திமதி அம்மையே சமைத்து எடுத்து வந்து இறைவனுக்கு உணவு பரிமாறும் தலம் இது. சிவபெருமானின் பஞ்ச தாண்டவ சபைகளுள் தாமிர சபையும் ஒன்று. இந்தச் சபையில், இறையனார் முனி தாண்டவம் என்று அழைக்கப் பெறுகிற காளிகா தாண்டவத்தை ஆடினார். சாந்த பாவத்தோடு ஆடப்பெறும் இந்த நடனம் படைப்புக்கானது. இதை ஆடி படைப்பைத் தொடங்கி, பின்னரே பிற தாண்டவங்களைச் சிவப் பரம்பொருள் ஆடினாராம்!

நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்


கட்டுமான அமைப்பாலும் சிறப்புற்றுத் திகழும் ஆலயம் இது. சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், இசைத்தூண்கள், தாமிர சபை என நீளும் இக்கோயிலின் சிறப்பம்ச வரிசையில் குறிப்பிடத் தக்கது பிள்ளைத் தொண்டுகள்.

நெல்லையப்பர் கோயில் பிள்ளைத் தொண்டு பிரசித்தி மிக்கது. சுவாமி கோயில் பிராகாரத் தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்கள் இருக்கிறார்கள். இங்கே ஒரு பொல்லா பிள்ளையாரும் உள்ளார். இந்த இடத்தில், மொத்தம் ஒன்பது தொண்டுகள் உள்ளன. தொண்டு என்பது குறுகலான குட்டையான வழியாகும். சதுர வடிவில் அமைந்துள்ள இந்தத் தொண்டுகளுக்குள் நுழைந்து, பின்னர் பிள்ளையாரை வழிபட்டு வந்தால், நிச்சயம் பிள்ளைப் பேறு கிடைக்குமாம்.

பிள்ளைத் தொண்டு
பிள்ளைத் தொண்டு


புத்திரப்பேறு வேண்டி, கிடைக்கப் பெற்ற வர்களும் பிள்ளைத் தொண்டு செய்வார்கள். குழந்தையை இங்கு கொண்டு வந்து, தொண்டுக்குள் கொடுத்து வாங்குவார்கள். குழந்தைக்கு நீண்ட ஆயுளும், நன்மைகளும் கிடைக்கும். பொல்லாப் பிள்ளையாரே, பிள்ளைத் தொண்டு பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.