ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

அகத்தியர் கண்ட ஜோதி தரிசனம்!சொரிமுத்து ஐயன் கோயில்

பொன்சொரிமுத்து ஐயன்
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்சொரிமுத்து ஐயன்

ஐயப்பனின் ஆறுபடை வீடுகள் - பொன்சொரிமுத்து ஐயன் கோயில்

`உலகில் எனக்கு எத்தனையோ ஆலயங்கள் உண்டு என்றாலும் அவற்றில் சபரிகிரி ஆலயமே என் பிரதான தலைமை இடமாகும்' " என்பது பகவான் சாஸ்தாவின் சத்திய வாக்கு. அகிலமெங்கும் சாஸ்தாவுக்கு ஆலயங்கள் உண்டு. அவற்றில் ஆறு க்ஷேத்ரங்கள் தனித்துவம் பெற்றவை. ஆம், முருகப்பெருமானுக்கு உள்ளதைப் போன்றே அவரின் சகோதரனான ஐயனுக்கும் அறுபடை வீடுகள் உண்டு.

பொன்சொரிமுத்து ஐயன்
பொன்சொரிமுத்து ஐயன்


அறுபடை வீடுகளும் ஆறு ஆதாரச் சக்கரங்களைக் குறிக்கும் என்று தத்துவரீதியாக விளக்குவார்கள் பெரியோர்கள். யோக நிலையில் மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல்நோக்கி பயணப்படும்போது, ஒவ்வொரு சக்கரமாகக் கடந்து செல்லும். சூட்சும சரீரத்தின் இந்தச் சக்கரங்களைப் போன்று, பரமபுருஷனான பகவானின் சரீரத்தில் ஆறு சக்ரங்கள் உள்ளன. அவையே ஆதாரத் தலங்களாகும். ஆன்ம சாதனையில், அகத்தே யோகியர் அடையும் உணர்வைப் புறத்தே உள்ள ஆலயத்தில் அடையும் பொருட்டு, அந்தந்த ஆதாரத்துக்கான திருக்கோயில் உருவானது. அவ்வகையில் ஒரு யோகப் பயணமாக ஆன்மப் பயணமாக பக்தர்கள் தரிசிக்கும் விதம் இந்தத் தலங்கள் விளங்குகின்றன.

அவற்றில் சொரிமுத்து ஐயனார் கோயில் மூலாதாரத் தலமாகத் திகழ்கிறது. மற்றவை: அச்சன்கோவில்-சுவாதிஷ்டானம்; ஆரியங்காவு-மணிப்பூரகம்; குளத்துப்புழை- அநாகதம்; எருமேலி-விசுக்தி; சபரிமலை-ஆக்ஞா. இந்த ஆறையும் கடந்து சகஸ்ராரமாக காந்தமலையில் (ஜோதி தரிசனத்துடன்) இந்த ஆன்மப் பயணம் நிறைவுறும் என்பார்கள் பெரியோர்கள்.

இந்தத் தலங்களில் இந்த இதழில் நாம் தரிசிக்கப்போவது அருள்மிகு பொன் சொரிமுத்து ஐயன் கோயில்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்திலிருந்து காரையார் அணைக்குச் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

அருள்மிகு பொன் சொரிமுத்து ஐயன்
அருள்மிகு பொன் சொரிமுத்து ஐயன்

வனப்பகுதி என்பதால் காலை 8 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி. தமிழகத்திலேயே இருந்தாலும் பலருக்கும் இந்த ஆலயத்தின் குறித்த தகவல்கள் பெரியளவில் தெரிந்திருக்காது என்றே சொல்லலாம்.

இங்கே, புலிகள் சூழ் வனத்திடையே, தாமிரபரணியின் கரையில், சிறு பாறைக் குன்றில் பகவானின் இந்த முதல் ஆலயம் அமைந்திருக்கிறது.

முன்பொரு காலத்தில் கயிலை மலையில் சிவ-பார்வதியர் திருக்கல்யாணம் நிகழ்ந்தது. அதைக் காண முப்போது முக்கோடி தேவர்கள், ரிஷிகள் என அனைவரும் அங்கே கூடிவிட்டனர். இதனால் தென்பகுதி, ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் வலு குன்றிவிட்டது. இதனைச் சமன் செய்ய அகத்தியரைத் தென்னகம் செல்லும்படி பணித்தார் சிவபெருமான்.

`அப்போது மணக்கோலத்தை நான் காண முடியாதே' என அகத்தியர் வருந்தினார். `நீ இருக்கும் இடத்திலேயே எம் திருக்கல்யாணக் கோலத்தைக் காணலாம்' என்று அருள்பாலித்தார் ஈசன். அத்துடன் தனக்கு அம்பிகை அணிவித்த தாமரை மலர் மாலை ஒன்றையும் அவருக்கு அளித்தார் பரமன். அந்த மாலை ஒரு மங்கையாக மாறியது!

”இனி இவன் உன் மகள். நீயும் லோபாமுத்திரையும் இவளை அழைத்துக்கொண்டு தென்னாடு புறப்படுங்கள். உரிய இடம் வந்ததும் உனக்கு அம்பிகையின் தரிசனம் கிட்டும். அப்போது இவள் ஜீவ நதியாக மாறுவாள்'' என்று அருளினார் பரமன்.

குறுமுனிவரும் தென்னகம் புறப்பட்டார். அவர் பொதிகை அடைந்ததும் உலகம் சமநிலை கொண்டது. சிவனாரின் கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன், பூரணத்துவத்தை அடையும்பொருட்டு அகத்தியர் தவத்தில் ஆழ்ந்தார். அதன் பலனால் அம்பிகையின் தரிசனம் கிடைத்தது. அப்போதே, அவருடன் வந்த பெண்ணும் நதியாக மாறி, தரணிச் செழிக்க தாமிரபரணியாகப் பாய்ந்தோடினாள்.

அகத்தியர் அங்கேயே தவ வாழ்வைத் தொடர்ந்தார்.நாள்கள் நகர்ந்தன. ஆடி அமாவாசை திதிநாள் வந்தது. அகத்தியர் யோகத்தில் ஆழ்ந்திருந்தபோது, மிகப் பிரகாசமான ஜோதி ஒன்று அவருக்குப் புலப்பட்டது. அதற்கான காரணத்தை அறிய இயலவில்லை. எனினும் அவருக்குப் பரவச நிலையைக் கொடுத்தது. முனிவர் ஞானதிருஷ்டியால் நோக்கியபோது உண்மை புலப்பட்டது. ஆம், சகல பரிவார கணங்கள் புடைசூழ, பூர்ணா-புஷ்கலா சகிதம், ஆதிபூதநாத ஸ்வரூபத்துடன் அவருக்குக் காட்சியளித்தார் மகா சாஸ்தா.

ஐயனின் அற்புதக் கோலம் கண்டு அகத்தியர் சிலிர்த்துப்போனார். மெய்யெல்லாம் திருநீறு பூசிய அந்த முனிவர் விழிகளில் அருள்நீர் பெருகிட மெய்ம்மறந்து ஐயனை வணங்கித் தொழுதார். அவருக்கு வரங்களை வழங்கினார் ஐயன்.

" அகத்தியரே! என் பேரன்புக்குப் பாத்திரமாகிவிட்ட நீ என் ஆத்ம பக்தனாக விளங்குவீர். புலவனாய், முனிவனாய், சித்தனாய், யோகியாய், ஏன்... தெய்வமாகப் போற்றப்படும் நிலையையும் அடைவாய்'' என்று அருள்பாலித்தார்.

அகத்தியரும் ஐயனைத் தொழுது வேறொரு வேண்டுதலும் வைத்தார்.

``எமக்குத் தங்களின் தரிசனம் கிடைத்த ஆடி அமாவாசை ஆகிய இந்தப் புனித நாளில், இங்கு வந்து நீராடித் தங்களை வழிபடுபவர்களுக்குச் சகல ஐஸ்வர்யங்களையும் அருள வேண்டும்" என்று வேண்டினார். அப்படியே வரம் தந்தார் ஐயன்.

ராஜாதி ராஜனாக அருள்பாலித்த ஐயனை முப்பதுமுக்கோடி தேவர்களும் மலர் சொரிந்து வாழ்த்தினார்கள். அந்த மலர்கள், அந்தப் பகுதியிலும் ஐயனின் மீதும் பொன் மழையென விழுந்தன. இதையொட்டி, அங்கு கோயில்கொண்ட ஐயனுக்குப் பொன் சொரியும் முத்தையன் எனும் திருப்பெயர் ஏற்பட்டது.

முற்காலத்தில் இப்பகுதியில் வற்கடம் எனப்படும் பஞ்சம் ஏற்பட்டது. அதாவது, சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக மழையே பொழியாத கடும் பஞ்சம். அப்போது, அகத்திய முனிவர் ``ஆடி அமாவாசையன்று சொரி முத்து ஐயன் சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும், வறட்சி நீங்கும்'' என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி ஐயனுக்கு அபிஷேகம் செய்ய, பெருமழை பொழிந்து வறட்டி நீங்கியது என்று ஆலய வரலாறு விவரிக்கிறது. இன்றைக்கும் இந்த ஐயனின் ஆலயத்தில் மழை வேண்டி வருண ஜபம் விசேஷமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

முத்தைய்யன்
முத்தைய்யன்

ஆதி குருவான அகத்தியர் வழிபட்ட தலம் ஆதலால், சாஸ்தா க்ஷேத்திரங்களில் இது மூலாதார க்ஷேத்திரமாகச் சிறப்புப் பெற்றது. பிரதானமான வளைவைக் கடந்து உள்ளே வந்தால் மூன்று முக்கிய சந்நிதிகளே உள்ளன. சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார் மஹாலிங்க ஸ்வாமி. இவர் சந்நிதிக்கும் சங்கிலிபூதத்தார் சந்நிதிக்கும் நடுவே ஐயனின் சந்நிதி. பூர்ணா புஷ்கலா சமேதராக மஹாசாஸ்தா முக்தார்யன் என்ற திருப்பெயரில் பகவான் தரிசனம் தருகிறார். மக்கள், முத்தைய்யன் என்றும் பொன் சொரிமுத்து ஐயன் என்றும் அழைத்து வழிபட்டு மகிழ்கிறார்கள்.

காலக்ரமத்தில், பல பரிவார பூதங்களும் கணங்களும் ஐயனுடன் இங்கு குடி கொண்டார்கள். ஆலயத்தில் வலப்புறம் முழுமையும் தளவாய் மாடன், கரடி மாடன், பிரம்மராட்சி அம்மன், பேச்சி அம்மன், சுடலை மாட சுவாமி என பல்வேறு பரிவார தெய்வங்கள் சந்நிதி கொண்டு, எளிய மக்களின் பூஜைகளையும் படையல்களையும் ஏற்று அருள்பாலிக்கிறார்கள்.

நம் பாரதபூமியின் பட்டம் கட்டிய கடைசி அரசராக விளங்கிய சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள், ஒவ்வோர் ஆடி அமாவாசை அன்றும் பகவானின் சந்நிதிக்குத் தன் ராஜ உடையில் வந்து வணங்கி, தர்பாரில் வீற்றிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பண்டைய காலத்தில் கேரளப்பகுதியைச் சேர்ந்ததாகவே இருந்த இத்தலம், மார்த்தாண்ட வர்மா காலத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தாரின் வசம் ஒப்படைக்கப்பட்டது. பெரும் சிற்பச் சிறப்புகளோ, கோபுரங்களோ இல்லாமல் எளிய ஆலயமாகவே இது இருந்தாலும், பகவானின் பூர்ண சைதன்யம் நிலைபெற்றிருக்கும் ஆலயமாகத் திகழ்கிறது.

மணி விழுங்கி மரம்!

மணி விழுங்கி மரம்!
மணி விழுங்கி மரம்!
பிரார்த்தனை
பிரார்த்தனை
முத்துப்பட்டன்
முத்துப்பட்டன்


கோயில் வளாகத்தில் ஓர் இலுப்பை மரம் இருக்கிறது. இந்த மரத்தில் பிரார்த்தனைக்காக பக்தர்கள் மணி கட்டுகிறார்கள். அவர்களின் பிரார்த்தனை நிறைவேறிவிட்டால், மரம் மணிகளை விழுங்குவது போன்று, மணிகள் மரத்தில் பதிந்து விடுகின்றன. எனவே இதை மணி விழுங்கி மரம் என்பார்கள்.

கருணைக் கடல் சொரிமுத்து ஐயன்!

பொன் சொரிமுத்து ஐயன் ஏழைப்பங்காளன். பக்தர் குறை தீர்க்கும் பரமன். வாடி நிற்கும் அடியாருக்கெல்லாம் வரம் வாரி வழங்கும் வள்ளல். தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனையும் தன் பிள்ளை போல் பார்த்து அனுக்ரஹிக்கும் கருணைக்கடல். அவரைப் போற்றும் பாடல் இது.

எங்கும் நிறைந்த சிவனங்கம் புணர்ந்த மால்

ஈன்றெடுத்த அழகு பெருமான் - இக்கலியுகத்தில்

கருணாகரன் - இவர்க்கு நிகர் இவ்வுலகத்தில் ஏது ?

துங்க ரண சிங்கனும் செங்கனக சங்கிலி தோளனும்

காளி தளவாய் துஷ்டரை விரட்டு மரியோட்டு

கட்டாரியன் முன்னோட்டு பட்டராயன்

சங்கம் சுருட்டி முருகன் சரகுருட்டியும், சூழ்ந்திலங்கு

பக்தாந்தரங்கனென்றும் துன்பம் கடத்தி அருளின்பம்

கொடுத்துபரி தொண்டர் ஆட்கொண்டிருப்பார்

பொங்கு புகழ் பொன்னாட்டு சிங்க நகர் தென்னாட்டு

புவிராஜ குல நேசனென்றும் பொன் சொரியும் முத்துப்

பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே!

செருப்பு காணிக்கை!

சாஸ்தாவின் பக்தராக வாழ்ந்து மறைந்த முத்துப்பட்டன் என்ற பட்டவராயனும் இங்கே அருள்பாலிக்கிறார். இவரே இந்த ஐயன் கோயிலுக்குக் காவல்காரர். `இன்றும் இரவு நேரங்களில், இவர் செருப்பு அணிந்துகொண்டு கையில் வல்லயம் ஏந்தியபடி வனத்துக்குள் வலம் வந்து காவல் காக்கிறார்' என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள். இவருக்குப் பிரார்த்தித்துக் கொண்டு இவரின் சந்நிதியில் செருப்புகளைக் கட்டும் பிரார்த்தனையும் இருக்கிறது.