Published:Updated:

ஸ்ரீஐயப்பனின் தம்பியான சித்தூர் தென்கரை மகா ராஜேஸ்வரர் வழிபாடும் வரலாறும்!

சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர்

பந்தள நாட்டு அரண்மனையில் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக சுவாமி ஐயப்பன் நாட்டை விட்டு வெளியேறி சபரிமலைக்கு சென்று ஜோதியாக அமர்ந்து விடுகிறார்.

ஸ்ரீஐயப்பனின் தம்பியான சித்தூர் தென்கரை மகா ராஜேஸ்வரர் வழிபாடும் வரலாறும்!

பந்தள நாட்டு அரண்மனையில் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக சுவாமி ஐயப்பன் நாட்டை விட்டு வெளியேறி சபரிமலைக்கு சென்று ஜோதியாக அமர்ந்து விடுகிறார்.

Published:Updated:
சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் நம்பியாற்றின் கரையின் மேல் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் தென்கரை மகாராஜேஸ்வரர் வழிபாடும் வரலாறும் வித்தியாசமானது.

மாடன் சுவாமிகளில் மிகவும் பிரசித்தி பெற்றவராக இருப்பவர் தளவாய் மாடசுவாமி. இவர் மாட்டுத் தலையுடன் அருள் புரிவார் என்பது விசேஷம். சிவபெருமானிடம் சாஸ்தாவிற்கு துணையாக நிற்க வரம் வாங்கி, தென்கரை மகாராஜா சாஸ்தாவிற்கு மட்டுமே நான் மந்திரியாக இருப்பேன் என இக்கோயிலின் இராஜாங்க மந்திரியாக இருப்பவர் தளவாய் மாடசுவாமி.

தென்கரை மகாராஜேஸ்வரர் கோயில்
தென்கரை மகாராஜேஸ்வரர் கோயில்

கலியுக வரதனாம் ஸ்ரீஐயப்பனின் தம்பி தான் இந்த தென்கரை மகாராஜா சாஸ்தா. பாற்கடலைக் கடையும்போது கிடைத்த அமிழ்தத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் தேவர்களுக்கு கிடைக்க மோகினி அவதாரம் அவதரித்தார் திருமால். அந்த மோகினி-ஈசனின் அம்சமாகப் பிறந்த குழந்தையே ஸ்ரீஐயப்பன். குழந்தையாக அவதரித்த ஐயப்பன் பந்தள நாட்டு மகாராஜா ராஜசேகரன் கையில் கிடைக்கும்படி பம்பா நதிக் கரையில் விடப்படுகிறார். ராஜசேகரன் தன் சொந்த குழந்தையைப் போல் ஐயப்பனை வளர்க்கிறார். ஸ்ரீஐயப்பனுக்கு 13 வயது நடக்கும்போது அந்நாட்டு மகாராணி கர்ப்பமுறுகிறாள். அந்த மகாராணிக்கு பிறக்கும் குழந்தையே ராஜராஜன் எனும் தென்கரை மகாராஜா சாஸ்தா.

தென்கரை மகாராஜா கோயில்
தென்கரை மகாராஜா கோயில்

பந்தள நாட்டு அரண்மனையில் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக சுவாமி ஐயப்பன் நாட்டை விட்டு வெளியேறி சபரிமலைக்கு சென்று ஜோதியாக அமர்ந்து விடுகிறார். தன் அண்ணன் மீது அபரிமிதமான பாசம் வைத்திருந்த ராஜராஜன் “என் அண்ணன் இல்லாத இம்மண்ணில் நான் ஆள்வதென்ன, வாழக் கூட மாட்டேன்” எனக் கூறி, தான் வளர்த்த குதிரையை கூட்டிக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்.

ஸ்ரீஐயப்பன்
ஸ்ரீஐயப்பன்

மலையாள தேசம், நாஞ்சில் நாட்டைக் கடந்து பாண்டிய நாடான நெல்லைச் சீமையில் நுழைந்து ராதாபுரம் வட்டத்தில் சித்தூர் என்னும் குக்கிராமத்தில் ஓடும் நம்பியாற்றின் தென்கரையில் மணல் திட்டையில் அமர்ந்து விடுகிறார். தனது அரச வாழ்க்கை மற்றும் அணிகலன்களையும் துறந்து இருந்தாலும், அரச உடையிலேயே அந்த மணல் திட்டையில் அமர்ந்திருப்பதாலே அவர் தென்கரை மகாராஜா என்று அழைக்கப்படுகிறார்.

தென்கரை மகாராஜா, இந்த அழகான பெயர் தேவாதி தேவர்களோ, பெற்ற தாய் தந்தையோ வைக்கவில்லை. மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் தான் இராஜ ராஜனுக்கு தென்கரை மகாராஜா என பெயர் சூட்டினாராம். நம்பியாற்றின் தென்கரையில் ராஜராஜன் அமர்ந்திருக்கும் வேளையில் ஒரு பெண் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். மாடுகள் இப்பகுதியில் இருந்து அப்பகுதிக்கு செல்லும்போது நம்பி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அதில் ஒரு கன்றுக்குட்டி மட்டும் தென்கரையிலேயே மாட்டிக் கொள்கிறது. அப்போது அந்தப் பெண் மாட்டு மந்தையுடன் கன்றுக்குட்டியை சேர்ப்பதற்காக மணல் திட்டையில் அமர்ந்திருக்கும் தென்கரை மகாராஜாவை வேண்டுகிறார். அவர் தன் சகோதரரான சுவாமி ஐயப்பனை நினைத்து வலக்கரத்தை ஆற்றில் நீட்டுகிறார்.

மகாராஜா சாஸ்தா கோயில்
மகாராஜா சாஸ்தா கோயில்

அப்போது கன்றுக்குட்டி செல்ல ஏதுவாக ஆற்றில் ஒரு வழி உருவாகி வெள்ள நீர் பிரிகிறது. கன்றுக்குட்டி கூட்டத்துடன் இணைகிறது. இந்த அதிசயத்தை கண்ட அப்பெண் “தென்கரையில் அமர்ந்திருக்கும் மகாராஜாவே” என கைக்கூப்பி வணங்குகிறார். நம்பியாற்றின் தென்கரையில் தன் அண்ணன் ஐயப்பனை நினைத்து தியான கோலத்தில் அமர்ந்திருக்கும் தென்கரை மகாராஜேஸ்வரருக்கு ஸ்வாமி ஐயப்பன் காட்சியளித்து ‘என்னுடைய அம்சமாக இருக்கும் உன்னை வழிபடும் ஒவ்வொரு மக்களுக்கும் எனது அருளும் ஆசியும் உண்டு” என வரம் கொடுக்கிறார்.

இந்த சாஸ்தாவின் கையில் வேலாயுதம் இருப்பதும், இக்கோயிலில் தேர் இழுப்பதும் வேறு எந்த சாஸ்தா கோயில்களிலும் நடக்காத அதிசயம் என்பர். இந்த வேலுக்கும் தேருக்கும் காரணம் சித்தூரில் பாயும் நம்பியாறு. இந்த நம்பியாறு ஆனது மகேந்திரகிரி மலையில் உருவாகி சிறுமளஞ்சி, ஏர்வாடி, திருக்குறுங்குடி கடந்து சித்தூரில் பாய்ந்து ஓடி ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே கடலில் கலக்கிறது.

ஒருமுறை திருச்செந்தூர் கோயில் கொடி மரத்திற்காக வெட்டப்படும் மரம் நம்பியாற்றில் அடித்து செல்லப்பட்டு சித்தூரில் உள்ள ஆலமர வேரில் மாட்டிக் கொள்கிறது. எல்லோரும் போராடியும் அம்மரத்தை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வியடைகிறது. தெய்வக் குற்றம் ஆகிவிடக் கூடாது என பயப்படும் கோயில் நிர்வாகிகள் பிரசன்னம் பார்க்க, அதில் தன் இருப்பை உலகிற்கு உணர்த்த மகாராஜா சாஸ்தா விளையாடிய திருவிளையாடலே இது என்று வந்தது. அதன்படி சாஸ்தாவிற்கு கோயில் எழுப்பி திருவிழா நடத்துகிறோம் என திருச்செந்தூர் கோயில் நிர்வாகிகள் வேண்டியவுடன் அக்கொடிமரம் அங்கிருந்து மீட்கப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு கோயிலும் எழுந்தது.

சாஸ்தா தேர்
சாஸ்தா தேர்

இக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் ‘வன்னிக்குத்து’ எனும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்‌. அதன்படி, சுவாமி அருள் பெற்று ஆடிவரும் ஒருவர் சுவாமி நேர்த்திக்கடனுக்காக இருக்கும் ஆட்டுக்குட்டியை தளவாய் மாடன் சந்நிதியில் வைத்து வேல் கம்பால் வயிற்றுப் பகுதியில் குத்தி, அதனை தூக்கிப்பிடித்து நீண்ட தூரம் கோயில் பகுதியை சுற்றி வந்து குத்தப்பட்ட ஆட்டுக்குட்டி மீது விபூதியும் மஞ்சளும் வைத்தால் ஆட்டுக்குட்டி நடந்து போகுமாம்!

- ஸ்ரீகணேஷ்