Published:Updated:

திருப்பள்ளியெழுச்சி பாட கோயில் வாசலில் திரண்ட ஆய்ச்சியர்; கதவு திறக்க வேண்டும் கோதை! திருப்பாவை 16!

ஆண்டாள்
ஆண்டாள்

எல்லோரையும் கூட்டிச் சேர்ப்பது பெரிய வேலை. அதுவும் தெய்வ காரியம் என்றால் மிகவும் சிரமம்தான். ஆண்டாள் அதை மிகவும் விருப்பத்தோடு செய்தாள்.

நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய

கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்

வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

ஆண்டாள்
ஆண்டாள்

எல்லோரையும் கூட்டிச் சேர்ப்பது பெரிய வேலை. அதுவும் தெய்வ காரியம் என்றால் மிகவும் சிரமம்தான். ஆண்டாள் அதை மிகவும் விருப்பத்தோடு செய்தாள். தோழிகளின் இயல்பறிந்து அவர்களை அவர்கள் வீட்டு வாசலுக்கே சென்று அழைத்து தம்மோடு சேர்த்துக்கொண்டாள். ஒருவேளை ஆண்டாள் அதைச் செய்யாதிருந்திருந்தால் ஒரு சில தோழிகள் இந்தத் திருக்கோஷ்டியில் சேராதிருந்திருக்கலாம்.

ஆண்டாள், ராமாநுஜரை 'அண்ணா' என்று அழைத்தாள். அதற்குக் காரணம் இருவருக்கும் பொதுவான குணம் ஒன்று இருந்தது. அது பெரும்பாலானவர்களை இறைவழியில் நடத்த வேண்டும் என்னும் குணம். பல துன்பங்களுக்குப் பின்னால் பெற்ற உபதேசத்தைக் கூரைமேல் ஏறிக் கூவி எல்லோரையும் மோட்ச சாதனம் அடைய வழிசெய்தவர் அல்லவா ராமாநுஜர். அவருக்கு முன்மாதிரி ஆண்டாள்தான்.

ஆண்டாள்
ஆண்டாள்

ஆயர்குலச் சிறுமிகள் எல்லாம் நீராடி ஆண்டாளோடு இணைந்து அந்தக் கண்ணனின் திருநாமத்தை ஜபம் செய்தபடியே அவன் கோயிலை நோக்கி நடந்தனர். கோயில் நடை இன்னும் திறக்கவில்லை. போன பாசுரத்தில் கோயிலின் மணிக்கதவைத் திறக்கும் சாவியை உடையவர்கள் கோயிலைத் திறக்கச் செல்கிறார்கள் என்று பாடினாள். ஆனால், அவர்கள் தங்கள் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு இப்போதுதான் கோயிலை அடைந்திருக்கிறார்கள் போலும். ஆனால், கோதையும் அவள் தோழியரும் கோயிலில் பணிபுரியும் ஆசார்யர்கள் வந்து சேர்ந்ததுமே ஆலயத்துக்கு வந்துவிட்டார்கள். இன்னும் ஆலயத்தில் மணிக்கதவம் திறக்கவில்லை. கோதை வாயில்காப்பானோடு பேசுகிறாள்.

கண்ணன் நந்தகோபனின் மாளிகையில் வாசம் செய்தவன். நந்தகோபன் ஆயர்குல நாயகன். அவனிடமிருந்துதான் ஆயர்குலத்தைக் காக்கும் பொறுப்பை கண்ணன் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். எனவே, கண்ணன் வாசம் செய்யும் அனைத்துக் கோயில்களும் நந்தகோபனின் மாளிகையே. சிறப்பினையுடைய நாயகனான நந்தகோபனின் கோயிலைக் காக்கும் காப்போனையும் கோயிலினுள் நுழைந்தால் இருக்கும் தோரண வாயிலின் கீழ் நின்று காக்கும் காப்போனையும் வாசலைத் திறக்குமாறு கோதை வேண்டுகிறாள். நந்தகோபனை முதலில் சொன்னது அவன் ஆயர்குலத் தலைவன் என்பதை அந்தக் கோயில் காப்போனுக்கு நினைவூட்ட. ஏன் நினைவூட்ட வேண்டும்... நாங்கள் ஆயர் சிறுமியர் வந்திருக்கிறோம் என்றும் எம் குலத் தலைவனை நாங்கள் தரிசனம் செய்ய உரிமை உடையவர்கள் நாங்கள் என்பதை எடுத்துரைக்கவும் நந்தகோபனைச் சொல்லி மணிக்கதவம் திறக்கக் கோருகிறாள்.

பெருமாள்
பெருமாள்

"வாயில் காப்போனே, அந்தக் கேசவன் கோயிலின் மணிகள் பொருந்திய அழகான கதவைத் திறந்தருள்வாய். ஆயர்குலச் சிறுமிகளான எங்களுக்கு அவன் புகழைப் பாடும் திறத்தையும் அதற்கான வாய்ப்பையும் தருவதாக, அந்த மாயவன் மணிவண்ணன் முன்னமே எங்களுக்கு வாக்குத் தந்திருக்கிறான். எப்போதும் என் பக்தர்கள் என்னை வந்து சந்திக்கலாம் என்பதை அவன் பல யுகங்களுக்கு முன்னேயே சொல்லியிருக்கிறான். அதை எண்ணிக்கொண்டுதான் நாங்கள் எங்களைத் தூய்மை செய்துகொண்டு வந்தோம். எதற்குத் தெரியுமா... அவனைத் துயில் எழுப்ப...

சேவைகளில் உயர்ந்தது சுப்ரபாத சேவை. அதிகாலையில் அனைத்து மங்களப் பொருள்களையும் கையில்கொண்டு தேவர்களும் முனிவர்களும் வேதியர்களும் அவன் சந்நிதிக்கு முன்பாக வந்து அவன் திருமுக தரிசனம் பெறக் காத்திருப்பர். அவர்களோடு சேர்ந்து நாங்களும் அவன் தந்த பறையைக் கொண்டு அவனைப் போற்றிப் பாடக் காத்திருக்கிறோம். எனவே, எங்களை நீ தடுக்காதே... நேசத்தோடு அந்த சந்நிதியின் நிலைக் கதவைத் திறந்தருளி எங்களுக்கு வழிகாட்டுவாய்" என்று பாடுகிறாள் கோதை.

பெருமாள்
பெருமாள்

பகவானைப் பாடும் பாகவதர்களை அவன் சந்நிதானத்தை அடைய விடாதபடி தடுத்த ஜய விஜயர்களின் நிலைமையை அறியாதவர்களும் இருப்பார்களா என்ன... ஆனால், கோதை அதைச் சொல்லி அதிகாரமாய் கேட்காமல் அன்போடு விண்ணப்பம் செய்கிறாள். பகவத் கைங்கர்யம் செய்கிறவர்களுக்குத் தரப்பட வேண்டிய மரியாதை இது என்பதை அவள் அறிவாள்.

மாற்றாரை மாற்றழிக்க வல்லானைப் பாடத் தோழியை அழைக்கும் கோதை... திருப்பாவை 15
அடுத்த கட்டுரைக்கு