Published:Updated:

`உலகளந்த உம்பர் கோமானே..!' கோவிந்தனை எழுப்பும் கோதை - திருப்பாவை - 17

ஆண்டாள்
ஆண்டாள்

ஶ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகவும், தோழியர்களை கோபிகைகளாகவும் பாவித்து, பரந்தாமனின் பேரருள் பெறுவதற்காகப் பாவை நோன்பு மேற்கொண்டாள் கோதை.

ஶ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகவும் தோழியர்களை கோபிகைகளாகவும் பாவித்து, பரந்தாமனின் பேரருள் பெறுவதற்காக பாவை நோன்பு மேற்கொண்ட கோதை, தோழியர் எல்லோரையும் ஒரு வழியாக எழுப்பிக்கொண்டு, நந்தகோபனின் மாளிகையை அடைந்தாள்.

ஆலயத்தில் இறைவனை தரிசிக்கச் செல்வதற்கு முன்பு துவாரபாலகர்களின் அனுமதி பெற வேண்டும் என்ற நியதியின்படி நந்தகோபனின் மாளிகைக் காவலர்களின் அனுமதி பெற்று மாளிகைக்குள் சென்றாள் அந்த மாளிகை மிகவும் விசாலமான மாளிகை. பல கட்டுகளைக் கொண்ட அந்த மாளிகையில்தான் கண்ணன் தன் அண்ணன் பலராமனுடன் சயனித்திருக்கிறான்.

அவனிடம் செல்வதற்கு முன்பு கோதை மேலும் இருவரின் அனுமதியைப் பெறவேண்டி இருக்கிறது. நந்தகோபனும் யசோதையுமே அவர்கள். அடுத்தடுத்த கட்டுகளில் சயனித்திருக்கும் அவர்களை எழுப்பியபடி கோதை கண்ணனின் அறைக்குச் செல்கிறாள்.

நந்தகோபன், யசோதை, கண்ணன், பலராமன் என்று ஒவ்வொருவராக அவள் எழுப்பிச் செல்லும் அழகே அழகு..!

ஆண்டாள்
ஆண்டாள்

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்,

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்,

அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த

உம்பர் கோ மானே! உறங்கா தெழுந்திராய்,

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

திருமாலின் திருஅவதாரமான கண்ணன் இருக்கும் இடத்தில் அனைத்து செல்வங்களும் நிறைந்திருப்பது உறுதி. எதற்கும் குறைவே இல்லாத கோகுலத்தின் தலைவரான நந்தகோபருக்கு தர்மம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? கோகுலத்தில் கொள்வார் இருந்தால்தானே கொடுப்பாரும் இருக்க நேரிடும். கொள்வார் இல்லாத கோகுலத்தில் நந்தகோபருக்கு தர்மம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோதும், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு உணவும் உடையும், தண்ணீரும் கொடுத்து உபசரிப்பதையே கோதை, `அறம்செய்யும் நந்தகோபாலா' என்று புகழ்ந்து, மேலும் முன்னே சென்று கண்ணனைக் காண அனுமதி கேட்டாள். அதுமட்டுமா? அனைத்து செல்வங்களுக்கும் மேலான பிள்ளைச் செல்வமாகக் கண்ணனையே பெற்றிருந்த காரணத்தால் நந்தகோபரை எம்பெருமான் என்று அழைக்கிறாள்.

பெருமாள்
பெருமாள்

தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறாள். நீங்கள் தானம் கொடுப்பதில் சிறந்தவர்தான். ஆனால், தானம் கொடுப்பவர்க்கும், தானம் பெறுபவர்க்கும் அளவற்ற புண்ணியத்தைத் தரக்கூடிய தானம் ஒன்று உண்டு. அதுதான், எங்களுக்கெல்லாம் அருள் செய்ய நீர் வழங்க வேண்டிய தானம் நாராயணமூர்த்தி தானம்தான். அந்த நாராயணமூர்த்திதான் தங்களிடம் கிருஷ்ணனாகத் தோன்றி இருக்கிறார். அவருடைய அருளையே நாங்கள் வேண்டி விரும்பி வந்திருக்கிறோம். தட்டாமல் அவரை எங்களுடன் வர அனுமதிக்க வேண்டும் என்று ஆண்டாள் வேண்டுகிறாள். புகழ்ச்சிக்கு மயங்காதார் யார்? மேலும் கோதை உயர்வான ஒரு நோக்கத்தின் காரணமாக அதுவும் பொதுநலம் சார்ந்த நோக்கத்தின் காரணமாக அல்லவா கண்ணனைக் காண விரும்புகிறாள். அவருக்கு அனுமதி தந்திட மனம் இருந்தாலும், அவரால் மட்டும் அது முடியாதே. கண்ணன் யசோதையின் செல்லப் பிள்ளை என்பதால், அவளுடைய அனுமதி அல்லவா பிரதானம்? எனவே, அடுத்த கட்டில் இருக்கும் யசோதையின் அறைக்குச் செல்லும்படிக் கூறினார். யசோதையின் அறைக்குச் சென்ற கோதை, `இந்த யசோதை லேசுப்பட்டவள் இல்லை. சாட்சாத் திருமாலின் அவதாரமான கண்ணனையே பிள்ளையாகப் பெற்றவள் ஆயிற்றே. அவளை வசப்படுத்தி அவளுடைய அனுமதியுடன் கண்ணனின் அறைக்குச் செல்ல நினைத்த கோதை, யசோதையைப் பலவாறாகப் புகழ்கிறாள்.

நெஞ்சத்தில் வஞ்சகம் இல்லாத வஞ்சிப் பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே! எங்களுக்கு தெய்வம் போன்று விளங்குபவளே! பிறந்த குலத்துக்குப் பெருமை சேர்ப்பவளே! நாங்கள் கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருக்கிறோம். அவனை யமுனைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம். தனக்கொரு தாய் இல்லையே என்ற பகவானின் மனக்குறையைப் போக்கும் வண்ணம் அவனுக்குத் தாயான நீ இரக்க சுபாவம் மிக்கவள். கோபிகைப் பெண்களுக்கு சிறு துன்பம் என்றாலும் பெரிதும் துடித்துப் போய்விடும் நீ, எங்களிடத்தும் இரக்கம் கொண்டு கண்ணனை எங்களுடன் அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறாள். யசோதையும் கோதையிடம் பரிவு கொண்டவளாக, அடுத்திருக்கும் கட்டுக்குச் செல்ல அனுமதிக்கிறாள்.

அந்தக் கட்டில் ஓர் அறையில் கிருஷ்ணனும் மற்றோர் அறையில் பலராமனும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். கோதை முதலில் கிருஷ்ணனை எழுப்புகிறாள்.

ஆண்டாள்
ஆண்டாள்
திருப்பள்ளியெழுச்சி பாட கோயில் வாசலில் திரண்ட ஆய்ச்சியர்; கதவு திறக்க வேண்டும் கோதை! திருப்பாவை 16!

ஆகாயத்தை உன் திருவடிகளால் ஊடுருவும்படி அறுத்து, இந்தப் பிரபஞ்சம் முழுதையும் உன் இரு திருவடிகளால் அளந்தவனே! தேவர்களுக்கெல்லாம் அரசனாக தேவாதிராஜனாக இருப்பவனே! உன்னுடைய அருள் வேண்டி நாங்கள் வந்துள்ளோம். எழுந்து எங்களுடன் யமுனைக்கு வர வேண்டும் என்று கூறி எழுப்புகிறாள். ஆனால், அந்த மாமாயக் கண்ணன் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. அப்போதுதான் கோதைக்கு பலராமனைப் பற்றிய நினைப்பு வருகிறது. திரேதாயுகத்தில் ராமசந்திர மூர்த்தியை கண்ணிமை போல் காப்பாற்றிய லட்சுமணன் அல்லவா, கிருஷ்ணரின் அண்ணன் பலராமனாகப் பிறந்திருக்கிறான். முன் ஜன்மக் கடன் மனிதனாக அவதரித்த தனக்கும் உண்டு என்பதைப்போல் முந்தைய யுகத்தில் தனக்குச் சேவை செய்த லட்சுமணனையே இப்பிறவியில் பலராமனாகப் பிறக்கச் செய்து, எப்போதும் அவனை விட்டுப் பிரியாமல், அவனுக்கு சேவை செய்து வரும் கிருஷ்ணன், பலராமன் இல்லாமல் வரமாட்டான் என்பதைச் சற்றுத் தாமதமாகப் புரிந்துகொண்ட கோதை, பலராமன் சயனித்திருக்கும் அறைக்குச் சென்ற கோதை, செம்பொன்னால் ஆன வீரக் கழல்களை அணிந்த பலராமனே! நீயும், உன் சொற்படி நடக்கும் உன் தம்பியும் உறக்கம் கலைந்து எழுந்து எங்களுடன் வர வேண்டும் என்று அழைக்கிறாள்.

அடுத்த கட்டுரைக்கு