Published:Updated:

சாபம் தீர்க்கும் கண்ணனின் கடைக்கண் பார்வையை வேண்டி நிற்கும் கோதை..! திருப்பாவை 22

கண்ணன்
கண்ணன்

கண்ணனின் கண்கள், காண்பதற்கு கிண்கிணி மணியின் வாய்போலவும் அதன் மலர்ச்சி தாமரை பூப்போலவும் தோன்றுகின்றன. தாமரையிலும் செந்தாமரையைப் போன்று தோன்றுகின்றன. அந்த தாமரைக் கண்களைக் கண்டால், அது சூரியனைப் போன்ற ஒளிவீசுவதாக இருக்கிறது. ஆனால், அந்த ஒளி சந்திரனின் குளுமையோடிருக்கிறது.

அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல்

நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்

பரந்துவிரிந்த இந்த உலகத்தில், வீரர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் கண்ணனுக்கு ஈடாக மாட்டார்கள். கண்ணனை எதிர்த்தவர்கள், அவனுடைய வீரத்துக்கு இலக்காயினர். இதைக் கண்ட பிற மன்னர்கள், கண்ணனுடனான பகையை மறந்து அவனிடம் நட்பு பாராட்டி, அவன் சிம்மாசனத்துக்குக் கீழ் வந்து சேவகம் செய்யக் காத்திருந்தார்கள். அப்படி மன்னர்கள் ஒரு சங்கமாகக் கூடி நிற்பதுபோல இப்போது கண்ணனின் கடைக்கண் பார்வையை நாடி, அவன் சந்நிதிக்கு வெளியே தன் தோழிகளோடு காத்திருக்கிறாள் கோதை.

தடைகளைத் தாண்டிய கோதையின் பக்திநெறி

ஆண்டாள், தன் தோழிகள் ஒவ்வொருவரையும் தானே போய் எழுப்பினாள். அவர்கள் குணம் அறிந்து அவர்களை அணுகி, அவர்களை பக்தி நெறியில் நடத்தினாள். அவரவர் விரதம் இருந்து வழிபட்டால், அவரவர்களுக்குத்தானே நல்லது என்று விட்டுவிடாமல், வைராக்கியமாய் அவர்களைக் கூட்டிச் சேர்த்தாள். அவர்களும் தப்பமுடியாத ஒரு அன்பினால் வசப்பட்டு நோன்பு நோற்கப் புறப்பட்டனர். கோயில் காவலன், கண்ணனின் ஏகாந்த துயில் கெட்டுவிடக்கூடாதென்று வழிமறித்தான். ஆண்டாள் அவனிடம், மணிக்கதவம் தாள் திறவாய் என்று வேண்டிக்கொண்டாள்.

ஆண்டாள்
ஆண்டாள்

பின்னர், கண்ணனுடன் துயின்றிருக்கும் நப்பின்னைப் பிராட்டியின் கருணையைக் கோரினாள். நப்பின்னை ஒரு கணமும் கண்ணனைப் பிரிய இயலாது இணைந்திருந்தாள். அப்படிப்பட்ட பாசத்துக்கு இடையூறாகத் தங்களின் பக்தி வந்ததே என்று ஆண்டாள் அறிந்தபோதும் கண்ணனின் தரிசனம் ஒன்றே இந்த உலக வாழ்வில் பெறத்தக்க பெரும்செல்வம் என்பதை அறிந்து நப்பின்னைப் பிராட்டியிடம் வேண்டிக்கொண்டாள். அவளும் மனமுவந்து ஆண்டாள் சுப்ரபாத சேவை செய்ய ஆல வட்டம், கண்ணாடி முதலிய மங்களப் பொருள்களை அருளினாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்ணனின் எழில் தரிசனம்

ஆனால், இந்த உலகில் பெறத்தக்க இந்தக் கருணைகளைத் தாண்டிப் பெறவேண்டிய பெருங்கருணை அந்தக் கண்ணனுடையது. அதை வேண்டித்தான் கோதை இப்போது அவள் தோழிகளோடு அவன் சந்நிதியில் காத்திருக்கிறாள். கண்ணனின் எழில் கோலத்தை ஒருமுறை கண்டவர்கள், அந்த எழிலில் தம்மை மறப்பர். அப்படிப்பட்ட எழிலை வர்ணிக்கும்போது, பல உவமைகள் தோன்றுகின்றன. எது சரி என்று உறுதிசெய்ய இயலவில்லை.

கோதை ஆண்டாள்
கோதை ஆண்டாள்
பகைவர்களுக்கு நெருப்பாக விளங்கும் விமலனைத் துயில் எழுப்பும் ஆண்டாள்... திருப்பாவை - 20

காரணம், இந்த உலகில் சிறந்த பல பொருள்கள் அதற்கு இணையாகத் தோன்றுகின்றன. கண்ணனின் கண்கள் காண்பதற்கு கிண்கிணி மணியின் வாய்போலத் தோன்றுகிறது. ஆனால் அதன் மலர்ச்சி, தாமரை பூப்போல தெரிகிறது. தாமரையிலும் செந்தாமரையைப் போன்று தோன்றுகிறது. அந்த தாமரைக் கண்களைக் கண்டால், அது சூரியனைப் போன்ற ஒளிவீசுவதாக இருக்கிறது. ஆனால் அந்த ஒளி, சந்திரனின் குளுமையோடிருக்கிறது.

அப்படியானால் அவன் விழிகள் சூரியனா... சந்திரனா? இவை இரண்டும் ஒன்றாக உதித்தனவா... நோன்பின் பலன் அவன் தரிசனம் மாத்திரமே. அதைத் தவிர அவளின் துயர் தீர்ப்பவை வேறெதுவுமில்லை. அவளின் தோழிகள் ஆண்டாளையே நம்பியிருக்கிறார்கள். அவள்தான் இதுகாறும் வழிநடத்தினாள். இன்னும் நடத்துவாள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆண்டாள், அவர்களுக்காக கண்ணனை வேண்டிக்கொண்டாள்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்
ஆயர்குலப் பெருமைகளைப் பாடி பெருமாளை கோதை ஆராதிப்பதேன்? - திருப்பாவை 21

``கண்ணா, உன் செம்மையான விழிகளால் எங்களை நோக்குவாயாக. அவ்வாறு நீ எங்களை நோக்கினால், ஒரு நொடியில் நாங்கள் எங்கள் பாவங்கள் அழியப்பெறுவோம். எப்படி உன் பகைவர்கள் உன் மேல் கொண்ட பகை அழியப் பெற்று, உன் சிம்மாசனத்தின் கீழ் சேவகம் செய்யக் காத்திருக்கிறார்களோ அப்படி, நாங்களும் உன் தரிசனத்தால் பாவங்கள் நீங்கப்பெற்று, உன் பாதம் பணிந்து பக்திசெய்வோம்" என்று வேண்டிக்கொண்டாள் ஆண்டாள்.

அடுத்த கட்டுரைக்கு