Election bannerElection banner
Published:Updated:

`குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா' என்று கோதை கண்ணனைப் போற்றுவது ஏன்? - திருப்பாவை 28

கண்ணன்
கண்ணன்

நாடி வருபவன் பாவியாக இருந்தாலும் மகாகோபியாக இருந்தாலும் அவன் சந்நிதானத்தில் வந்து நிற்கும்போது அவன் குறைகள் ஒன்றையும் பொருட்படுத்தாது அருள்கிறவன். இந்த மட்டில் வந்து சரணாகதி பண்ணுகிறவனாக இந்த ஜீவாத்மா இருக்கிறானே என்று வாத்சல்யத்தோடு அவன் நம்மைக் காண்கிறவனாக இருக்கிறான்.

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்

அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்

குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு

உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத

பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே

இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

கண்ணன்
கண்ணன்

ஜீவாத்மா குறைகள் உடையன. ஆனால், பரமாத்மாவோ பரிபூரணர். அவரில் குறைகளே இல்லை. சகல கல்யாண குணங்களும் அவருடையன. அப்படிப்பட்ட இறைவனைக் குறையொன்றும் இல்லாத கோவிந்தா என்று போற்றுகிறாள் கோதை. குறையொன்றும் இல்லாத கோவிந்தா என்பதற்கு ஆசார்யர்கள் பலரும் பலவிதமாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். மகாபெரியவரும் இந்த வாக்கியத்துக்கு விரிவான விளக்கங்களைத் தந்திருக்கிறார். சிந்திக்கும்தோறும் அந்தக் கோவிந்தனின் மகிமைகள் பலவற்றை நமக்குச் சொல்லும் வாக்கியமாக இந்த வாக்கியம் அமைந்துவிட்டது.

மனித மனம் எப்போதும், தான் என்னும் பெருமை பாராட்டுவதிலேயே மகிழ்ந்திருக்கிறது. பிறப்பு, செல்வம், பண்பு, வீரம் என ஏதோ ஒரு குணம் குறித்த குறை நம்முள் இருந்து நம்மை ஆட்டிவைக்கிறது. கோவிந்தனைச் சரணடைகிறபோது குறையுள்ளவர்களாகவேதான் நாம் சரணடைகிறோம். அப்படியிருக்க அவன் நம் குறைகளைப் பாராட்டி அவற்றைப் பொருட்படுத்துவதே இல்லை.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

நண்பன் ஒருவரை அறிமுகம் செய்யும்போது அந்தரங்கமாக, ``ஜாக்கிரதை அவர் முன்கோபி” என்றோ, ``பணவிஷயத்தில் எச்சரிக்கை” என்றோ சொல்லி வைத்தால் அதையே நம் மனம் பற்றிக்கொண்டுவிடும். அதன்பின் நாம் அவரைக் காணும்போதெல்லாம் அதுவே நம் மனக்கண்ணில் தோன்றும். ஆனால், நாம் கோவிந்தனைத் துதித்து அவன் சந்நிதி அடையும்போது அவன் அவற்றை அறிந்துகொண்டவன்போன்ற பாவனை இன்றி எல்லோருக்குமான சாந்த சௌஜன்யமான புன்னகையை வெளிப்படுத்துகிறவனாகவே இருக்கிறான். நாடி வருபவன் பாவியாக இருந்தாலும் மகாகோபியாக இருந்தாலும் அவன் சந்நிதானத்தில் வந்து நிற்கும்போது அவன் குறைகள் ஒன்றையும் பொருட்படுத்தாது அவனுக்கு அருள்கிறவன். இந்த மட்டில் வந்து சரணாகதி பண்ணுகிறவனாக இந்த ஜீவாத்மா இருக்கிறானே என்று வாத்சல்யத்தோடு அவன் நம்மைக் காண்கிறவனாக இருக்கிறான். அதனால் அவன் நம் குறைகள் எதையும் மனதில் கொண்டிராத கோவிந்தன் என்பது எத்தனை பொருத்தம்...

பகைவர்களுக்கு நெருப்பாக விளங்கும் விமலனைத் துயில் எழுப்பும் ஆண்டாள்... திருப்பாவை - 20

ஒவ்வொருவருக்கும் ஒரு பெருமை. ஆயர்குலத்தவருக்கோ அந்தப் பரந்தாமனே தன் குடியில் வந்து தோன்றினான் என்று பெருமை. முன்னோர் எத்தனை புண்ணியம் செய்திருந்தால் ஒரு குலம் அப்படி ஒரு பாக்கியத்தைப் பெறும்... அதுகுறித்த பெருமிதம் அவர்களுக்குள் இருக்கிறது. இந்த உலகில் எதுவும் அவர்களை ஒன்றும் செய்ய இயலாது. அதனால் அவர்கள் எதையும் பொருட்படுத்தாது, கவலைகொள்ளாது, தங்களின் மாடுகளை மேய்த்துக்கொண்டு காடுகளுக்குள் சென்று அவற்றை மேயவிட்டு தங்கள் தொழிலைச் செய்துகொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.

ஆண்டாள்
ஆண்டாள்

இது ஒருவிதத்தில் கவலையற்ற, சகலத்தையும் அவன் பாதங்களில் சமர்ப்பித்துவிடும் வாழ்க்கை. வேறு தவங்களும் தானங்களும் வேண்டாத வாழ்க்கை. கோதைக்கு இந்த ஆயர்குல வாழ்வில் பெருமிதம். ஆனாலும், இந்தப் பெருமிதம் எங்கே மற்றவர்களுக்குள் ஓர் அகங்காரத்தைத் தோற்றுவித்துவிடுமோ என்ற ஐயம். அதனால் தன்னை முற்றிலும் சமர்ப்பணம் செய்து அபராதம் செய்துகொள்பவள்போல இந்தப் பாசுரம் பாடுகிறாள்.

``கண்ணா, நாங்கள் மிகவும் எளிய ஆயர்கள். மாடுகளைக் காடுகளுக்குள் ஓட்டிச்சென்று மேய்த்துப் பிழைப்பு நடத்துபவர்கள். அப்படிப்பட்ட நாங்கள் எங்கள் முன்னோர்களின் புண்ணியத்தால் உன்னை எங்கள் குலத்தில் பெற்றோம். அதனால் உனக்கும் எங்களுக்குமான உறவானது மாற்ற முடியாதது. நீ எங்கள் வீட்டுப் பிள்ளை.

விஷ்ணு
விஷ்ணு

அதோ பார் ஒருத்தி உன் தரிசனம் கண்ட கணத்திலிருந்து `அட மாயக்கண்ணா’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறாள். இன்னொருத்தியோ நீ அவள் சடையைப் பிடித்து விளையாடுவதுபோன்ற கனவை நினைவில் கண்டு, `அட படு துஷ்டனாக இருக்கிறாயே’ என்கிறாள். ராசலீலையின்போது நீ கோகுலத்தில் அத்தனை கோபியர்களோடு நீ நடனமாடியதுபோல எம் ஆய்ச்சியர் மனதோடும் நீ விளையாடுகிறாய். இதனால் அவர்கள் உன்னை மரியாதை குறையுமாறு அழைத்துவிட்டாலும் நீ கோபித்துக்கொள்ளாதே. உன் கோபம்கூட பகைவர்களுக்கு அருளலாகவே முடிந்திருக்கிறது என்பதை உன் முந்தைய அவதாரங்கள் எடுத்துரைத்திருக்கின்றன என்றாலும் அத்தகைய கடுமையான விளைவுகளுக்கெல்லாம் தகுதியற்ற எளியவர்கள் நாங்கள். எனவே நீ எங்களுக்கு அருள் செய்து பறை தந்தால் அதை இசைத்து உன்னைப் பாடிப் போற்றுவோம்” என்று பாடி கண்ணனை வேண்டுகிறாள் கோதை.

கோவிந்தனுக்கும் குறையில்லை, அவனைத் தொழுதுகொள்ளும் அடியார்களுக்கும் ஒரு குறையுமில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு