Published:Updated:

தாயாரின் கருணை நாடி விண்ணப்பம் செய்கிறாள் கோதை... திருப்பாவை 19!

திருப்பாவை
திருப்பாவை

பாகவதர்கள் எப்போதும் தன்னை வந்து சந்திக்கலாம் என்று சனகாதி முனிவர்களுக்கு வாக்குத் தந்த அந்த நாரணர்தான் இப்போது ஆண்டாளும் அவள் தோழிகளும் காத்திருப்பதை அறியாதவர்போல அறிதுயில் கொண்டிருக்கிறார். அவர் உள்ளத்தின் சிந்தனை என்ன என்பதை ஆண்டாள் யூகிக்கிறாள்.

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

திருப்பாவை
திருப்பாவை

அறிந்த அல்லது அறியாத ஒருவரின் வீட்டுக்குச் செல்கிறோம். யாரும் கண்ணில் படவில்லை. அந்த வீட்டின் கதவுகள் திறந்தேயிருந்தாலும் வாசலில் இருந்து குரல் எழுப்புவதுதான் நாகரிகம். உள்ளே இருப்பவர்களுக்குத் தங்களின் வருகையைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு அவர்களை அழைக்க வேண்டும். அழைப்பு தருணத்துக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அவசரகாலத்தில் உதவி வேண்டி அழைக்கும்போது நல் வார்த்தைகள் எதுவும் தோன்றாது. அப்போது தேவையைச் சொல்லிக் கூக்குரலிடலாம். அவசரமில்லை அதே வேளையில் அவசியம் என்னும்போது அது உள்ளிருப்பவர்களின் கருணையை நாடிப் பெற வேண்டிய சூழல் என்றால் அதற்கேற்ப அழைப்பில் அன்பு தொனிக்க வேண்டும். அந்த வீட்டில் தன் தேவையைத் தீர்த்துவைக்க உகந்தவர் யார் என்பதை அறிந்து அழைத்திட வேண்டும். பொருளை யாசிக்கவே இத்தனை நாகரிகங்களும் உத்திகளும் வேண்டுமென்றால் அருளை யாசிக்க எவ்வளவு மெனக்கிட வேண்டும்...

பகவான் பிராட்டியோடு ஏகாந்தமாய் எழுந்தருளியிருக்கிறார். அனந்த சயனன் ஆனந்த சயனம் கொண்டிருக்க அதிகாலையில் அவரைத் திருப்பள்ளி எழுச்சி பாடி அடியவர்கள் துயில் எழுப்புவது மரபு. ஆண்டாள் தன் தோழியரை எழுப்பிக்கொண்டு கண்ணன் இருக்கும் கோயிலின் வாசலுக்கு வந்துவிட்டாள். இன்னும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறவில்லை.

திருப்பாவை
திருப்பாவை
`உலகளந்த உம்பர் கோமானே..!' கோவிந்தனை எழுப்பும் கோதை - திருப்பாவை - 17

ஆண்டாள் வைகுண்டத்தில் பெருமாளின் பள்ளியறையின் வாசலில் நிற்பதாகவே எண்ணுகிறாள். உள்ளே பெரிய பிராட்டி உடனிருக்க நாராயணன் அறிதுயில் கொண்டிருக்கிறார். அந்த அறையின் நாற்புறங்களிலும் குத்துவிளக்குகள் எரிகின்றன. அந்த ஒளி அந்த அறையை மிகவும் எழிலுடையதாக ஆக்கிவிட்டன. பெருமாள் சயனித்திருக்கும் கட்டில் யானையின் தந்தத்தினால் அழகிய வேலைப்பாடுகள் கொண்டு செய்யப்பட்டது. அதில் விரிக்கப்பட்டிருக்கும் படுக்கையோ மிகவும் மென்மையும் குளுமையும் உடையதாக இருக்கிறது. பெரிய பிராட்டியோ தன் கூந்தலில் கொத்தாக மலர்ந்த பூக்களை அணிந்திருக்கிறாள். நாராயணனோ பிராட்டியைப் பிரிய மனமின்றி சயனித்திருக்கிறார். வெளியே ஆண்டாளும் அவள் தோழிகளும் நின்று கோவிந்த நாமம் இசைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பாகவதர்கள் எப்போதும் தன்னை வந்து சந்திக்கலாம் என்று சனகாதி முனிவர்களுக்கு வாக்குத் தந்த அந்த நாரணர்தான் இப்போது ஆண்டாளும் அவள் தோழிகளும் காத்திருப்பதை அறியாதவர்போல அறிதுயில் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் உள்ளத்தின் சிந்தனை என்ன என்பதை ஆண்டாள் யூகிக்கிறாள். தம்பதியில் ஒருவரைப் போற்றித் துதித்து வேண்டுவது முறையல்ல. பொதுவெளியில் தம்பதிகள் நிற்கும்போதே அவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது என்பது மரபு. அப்படியிருக்க பள்ளியறையில் இருக்கும் தம்பதியை ஒருவரின் அனுமதியின்றி மற்றவரை அழைக்கலாமா...

கோதை ஆண்டாள்
கோதை ஆண்டாள்

ஆனால், உள்ளே ஶ்ரீமன் நாராயணனோடு இருப்பவள் நப்பின்னையாக அவதரித்த நீளாதேவி. அவள் கருணையின் ரூபம். அப்படிப்பட்டவளை வேண்டி விண்ணப்பித்துக் கொள்வதைவிட பரந்தாமனின் கருணைக்குப் பாத்திரமாவதற்கு எளிய வழி வேறு என்ன இருக்கிறது... ஆண்டாள் அதை அறிவாள். அதனால் இந்தப் பாசுரத்தில் அந்தக் கோபாலனின் புகழைவிட நப்பின்னைப் பிராட்டியின் புகழை உயர்த்திப் பிடித்தாள்.

``அம்மா பிராட்டியே, மை தீட்டிய கண்களை உடையவள் நீ. உன் எழிலில் மயங்கிய அந்தக் கண்ணன் உன் மார்பிலேயே வாசம் செய்கிறார். உன் அன்பில் கட்டுப்பட்டவன் உன்னை ஒரு கணமேனும் பிரிய மனமில்லாதவனாய் இருக்கிறார். நீயும் அதை ஆதரித்து அரவணைக்கிறாய். ஆனால், வாசலில் நாங்கள் அவன் கருணைக்காய்க் காத்துக்கிடக்கிறோம். அதை நீ அறியமாட்டாயா... அவனோடு எப்போது இணைந்திருக்கும் தகுதி உனக்குத்தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் அத்தகைய உயரிய தகுதிகள் படைத்தவர்கள் இல்லை.

விஷ்ணு
விஷ்ணு
`நந்தகோபாலன் மருமகளே!' - நப்பின்னையை நோன்புக்கு அழைக்கும் கோதை! : திருப்பாவை - 18

அப்படிப்பட்ட எங்களுக்குத் தாயான உன் கருணை வேண்டும். நீ மனமிரங்கி எங்களுக்கு அருள்பாலிக்க அந்தக் கண்ணனை அனுப்பிவைப்பத்து அல்லவா எங்களை காத்தருளும் வழி. அப்படிச் செய்யாமல் நீ இருப்பது உனக்கு அழகல்ல என்பதையும் நீ அறிவாய். எனவே, எங்களுக்காக அவரைத் துயில் எழுப்பி அருள்வாயாக" என்று விண்ணப்பம் செய்தாள் கோதை.

கோதையின் விண்ணப்பம் அவளுக்கானது மட்டுமல்ல. நம் அனைவருக்குமானது.

அடுத்த கட்டுரைக்கு