Published:Updated:

'ஈசனைக் கண்டதும் கதறி அழுதேன்!'

திருத்தொண்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருத்தொண்டர்

திருத்தொண்டர்

சிவத் தொண்டு செய்வது என்பது முன்வினைப்பயனால் கிடைக்கும் பேறு. நினைக்கும் எல்லோரும் அதைப் பெற்றுவிடுவதில்லை. சிவமே தன் அடியார்களைத் தேர்ந்தெடுத்து ஆட்கொள்கிறது. அவர்களும் அந்த சிவத்துக்குக் காலம் முழுவதும் தொண்டு செய்து வாழ்கிறார்கள். அப்படி ஒருவர்தான் மகாலிங்கம்.

திருக்கோழம்பியம்
திருக்கோழம்பியம்

திருவாவடுதுறை அருகே இருக்கிறது திருக்கோழம்பியம். அன்னை பார்வதி பசுவாக வந்து ஈசனை வழிபட்ட தலம். இதற்குச் சான்றாக லிங்கத்தின் ஆவுடையில் பசுவின் குளம்படிகள் காணப்படுகின்றன. இங்கு சுவாமியின் திருப்பெயர் கோழம்பநாதர். அம்பிகைக்கு சௌந்தர்ய நாயகி என்று திருநாமம்.

பிரம்மன், இந்திரன், சந்தன் ஆகியோர் வழிபட்ட க்ஷேத்திரம் இது. காவிரித் தென்கரைத் தலங்களில் 35-வது தலம். சம்பந்தரும், அப்பரும் போற்றிப் பாடியுள்ளனர். வியதீபாத யோகம் கூடிவரும் நாளில் இங்கு வந்து வழிபட்டால், முன்னோர் சாபம் தீர்வதோடு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

இவ்வளவு சிறப்புகள் மிகுந்த தலம், எவ்வளவு சிறப்போடு திகழவேண்டும்? ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்புவரை இந்த ஆலயம் சிதிலமடைந்து கிடந்ததாம். கருவறையில் இறைத் திருமேனிகள் மீது பாம்புகள் ஊர்ந்தவண்ணம் இருக்குமாம். வெளியிலிருந்தபடியே ஆராதனை செய்ய வேண்டிய நிலை இருந்ததாம். ஆலயத்தைச் சுத்தம் செய்யவோ புனரமைக்கவோ யாரும் முன்வர வில்லை. சுற்றியிருக்கும் ஊர்களில் பல குடும்பங்கள் அந்நிய மதங்களுக்கு மாறிவிட்ட காரணத்தால், வழிபாட்டுக்கும் யாரும் வருவதில்லை. ஆனாலும் அர்ச்சகர் ஒருவர் தன் தள்ளாத வயதிலும் தவறாமல் வந்து பூஜையைச் செய்து வந்தார். அவருக்குப் பின் அந்தக் கைங்கர்யங்களும் அடியோடு நின்றுவிட்டன. அப்போதுதான் மகாலிங்கம் இந்த ஊருக்கு வருகிறார்.

கோழம்பநாதர்
கோழம்பநாதர்


“சின்ன வயசுலேர்ந்தே எனக்கு சிவம்னா பிடிக்கும். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். போஸ்டல்ல வேலை பார்த்த காலத்திலும் லீவு நாள்னா என் பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு பழைய சிவன் கோயில்களுக்குப் போய்டுவேன். அங்கே உழவாரப் பணி செய்வேன். அங்க பிராகாரங்களைச் சுத்தம் செய்வது முதல் என்னால் ஆன கைங்கர்யங்களைச் செய்துவந்தேன். இந்த பக்திக்குக் காரணம், மகாபெரியவா. அவா சொல்தான் எனக்கு வேத வாக்கு. இந்த நிலை யில் திருவாவடுதுறை மடத்துக்குப் போகும் பழக்கம் ஏற்பட்டது. திருவாவடுதுறை குருமகாசந்நிதானம் எனக்கு வழிகாட்டினார்.

2010-ல் ரிட்டயர்டு ஆனேன். அப்போதான் இந்தக் கோயிலுக்கு வந்தேன். கோயிலைப் பார்த்ததும் என் கண்கள் எல்லாம் குளமாயிடுச்சி. எப்பேர்ப்பட்ட ஆலயம்... பல்லவர் காலத் திலேர்ந்து இருக்கும் கோயில். சோழர்கள் எல்லோரும் திருப்பணி பண்ணியிருக்காங்க. பிரமாண்டமான இந்தக் கோயில் பாழடைந்து கிடக்கவும் மனசே கேக்கலை.

கோயில்ல அப்போ பூஜைகள் எதுவும் நடக்கலை. கருவறையில் சுவாமியையும் அம்பாளையும் பார்த்தப்போ என்னால் தாங்க முடியாமல் கதறி அழுதேன். அவ்வளவு அழகு... சௌந்தர்யம்... கம்பீரம்... காருண்யம். இப்படிப்பட்ட சுவாமிகள் இப்படிப் பூஜை இல்லாம இருக்காரேன்னு வருத்தமா இருந்தது.

சௌந்தர்ய நாயகி
சௌந்தர்ய நாயகி

தெரிந்த அன்பர்களை அழைத்துக் கொஞ்சம் கோயிலைச் சுத்தம் செஞ்சோம். நிறைய பாம்புகள். ஆனா எதையும் அடிக்கலை. நாங்க வந்ததும் அதுவா வெளியே போக சுத்தம் பண்ற பணி கொஞ்சம் கொஞ்சமா நடந்தது. அப்போ மகா சிவராத்திரி வந்தது. எல்லாருமா சேர்ந்து சிவராத்திரி கொண்டாடலாம்னு சொன்னாங்க. அதைச் செய்தோம். சரி, இனி வழக்கம் போல பூஜைகளை நடத்தலாம்னு பூஜை பண்ண ஆள்கள் தேடினோம். யாருமே வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. காரணம் பாம்பு பயம். இரண்டாவது யாருமே வராத கோயிலில் யாருக் காகக் காத்திருப்பது... ஜீவனத்துக்குக் கொஞ்சம் வருமான மும் வேணுமே! நாங்க கொஞ்சம் காசு திரட்டிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி னோம். ஆனாலும் யாரும் முன்வரலை.

திருத்தொண்டர்
திருத்தொண்டர்

கோயிலுக்குப் போய் சுவாமி முன்னாடி நின்னு, ‘நல்ல பூஜை பண்றவரை அனுப்பமாட்டியா’ என்று வேண்டிக்கிட்டு, நேரா திருவாவடுதுறை 24 வது மகா சந்நிதானத்தைப் பார்க்கப்போனேன். அவரிடம் விஷயத்தைக் கூறி, `குருமகா சந்நிதானம் தான் ஏதாவது வழி சொல்லணும்’னு வேண்டினேன்.

சந்நிதானம் என்னை தீர்க்கமா பார்த்து சிரிச்சார். பின்னே, ‘ஏன் வேற யாரோ வந்து பண்ணனும்னு நினைக்கிற... நீயே ஏன் பூஜை பண்ணக்கூடாது? பூசனை செய்வோருக்குப் பூவுண்டு நீருண்டுன்னு படிக்கலியா’ன்னு கேட்டார். அது அப்படியே என் மனசைத் தொட்டது. இனி ஆயுசுக்கும் இந்த சுவாமிதான்னு முடிவு பண்ணிட்டேன்.

நித்திய பூஜைகளை ஆரம்பிச்சேன். ஒரே ஒரு மெய்க்காப்பாளர் மட்டும் இருந்தார். அவரை வச்சிக்கிட்டு எல்லா வேலைகளையும் பார்ப்பேன். என் பொண்ணு சுஜாதாதான் நைவேத்தியம் பண்ணிக் கொடுப்பா. அதை எடுத்துக்கிட்டுப் போய் பூஜை பண்ணுவேன். தரிசனத்துக்கு ஆள் வந்தாலும் வராவிட்டாலும் தினமும் பூஜை நடக்கும். கோயில் திருப் பணிகளை ஒவ்வொண்ணா செய்ய ஆரம்பிச்சேன். அடுத்த வருஷமே கோயில் கொஞ்சம் வெளியில் தெரியற மாதிரி ஆயிடுச்சி.

அப்போத்தான் அறநிலையத்துறைல இருந்து வந்து பார்த்தாங்க. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். `நீங்களே சிறப்பா செய்ங்க'ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. ஒருமுறை சென்னைல இருந்து தன்னார்வத் தொண்டு செய்யும் சிவபக்தர்கள் சிலர் வந்து பார்த்தாங்க. கோயிலோட மகத்துவத்தையும் புராதனத்தையும் தெரிஞ்சிகிட்டு... இணையத்துல எழுதுனாங்க. மட்டுமன்றி, மாதம் ஆனா ஏதாவது ஒரு சின்னதொகையை அனுப்புறோம்னாங்க. அப்படி அவங்க அனுப்பின பணத்தில் பூஜையும் செய்து ஒரு காசு மிச்சம் வைக்காம திருப்பணியையும் செய்தோம். சமீபத்துல கோயிலுக்குக் கொடி மரம் ஸ்தாபிதம் பண்ணினோம். இப்போ ஒரு அர்ச்சகரையும் கூட வச்சிருக்கோம்.

பாருங்க... இப்போ இந்தக் கோயில்தான் பாழடைஞ்சு கிடந்ததுன்னு சொல்றதுக்கு ஏதாவது தடையம் இருக்கா? இதை எல்லாம் செய்தது யாரு... நானா? நான் வெறும் கருவி மட்டுமே. என்னைப் பொறுத்த அளவில் குருமகா சந்நிதானத்தின் திருவுள்ளம்தான் இன்னைக்கு இந்தக் கோயில் மறுபடி சிறக்கக் காரணமாச்சு. இன்னைக்கு வரைக்கும் இந்தக் கோயிலில் எந்தக் கட்டணமும் கிடையாது. வர்றவங்க கொடுத்தா ரசீதோட வாங்கிப்போம். அதை முறையா செலவு பண்ணுவோம். நமக்குத் தேவையானதை சுவாமி கொடுப்பார். சுவாமியோட அனுகிரகத்திலும் மகாபெரியவா ஆசியாலும் நான் சௌகர்யமா இருக்கேன். என் பையன் பொண்ணு ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க. என் பொண்ணோட பசங்க இரண்டுபேரும் வேதம் படிக்கிறாங்க.

இவ்வளவு கால வாழ்க்கையில் அர்த்தம் உள்ள ஒரு வாழ்க்கையை இந்த பன்னிரண்டு வருஷமா வாழ்ந்திருக்கேன்னு நினைக்கும்போது மனசு நிறைஞ்சு இருக்கு. வாழ்க்கைல இதைவிட வேற என்ன சார் வேணும்.”

ஏதேதோ காரணங்களாலும் மக்களின் அலட்சியத்தாலும் கைவிடப்பட்ட கோயில்கள் அநேகம். ஆனால் அவற்றைச் சிரத்தை எடுத்துப் பாதுக்காக்க யாரோ ஒருவரை அந்த சிவம் தேர்வு செய்கிறது. திருக்கோழம்பம் ஆலயமும் மகாலிங்கமும் ஓர் உதாரணம்தான். இவரைப் போன்ற திருத்தொண்டர்கள்தான் பல பழைய கோயில்களை மீண்டும் ஒளிர வைக்கிறார்கள். அவர்கள் ஏற்றிவைத்திருக்கும் அந்த தீபத்தில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நம் ஆன்மிகமும் தர்மமும் செழித்து நிற்கும்.

- தொண்டர்கள் வருவார்கள்...