Published:Updated:

திருத்தொண்டர்! - 10 - சுவாமியின் அருள்தான் சம்பளம்!

ஸ்ரீநிவாச ஐயங்கார்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீநிவாச ஐயங்கார்

பூஜைகள் முறையாக நடைபெற வேண்டும். என்னால் ஆன திருப்பணியைச் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்’’

திருத்தொண்டர்! - 10 - சுவாமியின் அருள்தான் சம்பளம்!

பூஜைகள் முறையாக நடைபெற வேண்டும். என்னால் ஆன திருப்பணியைச் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்’’

Published:Updated:
ஸ்ரீநிவாச ஐயங்கார்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீநிவாச ஐயங்கார்

``கா லை 2.30 மணிக்கு வந்தால் அவரை இங்கே பார்க்கலாம்” என்றபோது, ‘என்னது காலை 2.30 மணிக்கா’ என்று ஒருமுறை சந்தேகத்தோடு கேட்டோம். “ஆம்! காலை 2.30 மணிக்குதான்!” என்று சொல்லிச் சிரித்தார் ஊர்க்காரர் கபீர்.

கீழ்ப்பசார் சக்திவிகடன் வாசகர்களுக்குப் புதிய ஊர் அல்ல. அந்த ஊரின் பழைமை வாய்ந்த சந்திரமௌலீஸ்வரர் கோயில் குறித்து ஆலயம் தேடுவோம் பகுதியில் ஏற்கெனவே எழுதிக் கடந்த மாதம் அங்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதை நம் வாசகர்கள் அறிவார்கள். அந்தக் கிராமத்தில் மண்டல பூஜைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை விசாரித்து அறிந்துகொள்ள சென்றபோது ‘ஸ்ரீநிவாச ஐயங்கார்’ என்பவர் அவற்றைக் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார்கள்.

மதங்களில் பேதமில்லை. ‘ஹரியும் ஹரனும் ஒன்று’ என்பதுதானே நம் மண்ணின் தத்துவம். அப்படியிருக்கையில் வைணவர் ஒருவர் சிவாலயத்தில் பூஜை செய்வது ஒன்றும் அதிசயமான செய்தி இல்லை என்றாலும் சமகாலச் சூழலில் ஆச்சர்யமான செய்தியாகவே அது இருந்தது.

“காலை 2.30 மணிக்கு ஆலயத்துக்கு வந்துவிடுவார். இங்கிருக்கும் 20 சந்நிதிகளுக்கும் தனி ஆளாக அபிஷேக அலங்காரங்கள் செய்து பூஜை செய்வார். இதுவரை என்ன சம்பளம் கொடுப்போம் என்பது குறித்தும் கூடநாங்கள் பேசவில்லை. அவரும் அதுகுறித்துக் கவலைப்படவில்லை. ‘பூஜைகள் முறையாக நடைபெற வேண்டும். என்னால் ஆன திருப்பணியைச் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்’’ என்றார் ஊர்க்கார்களில் ஒருவரான வேங்கடபதி.

திருத்தொண்டர்! - 10 - சுவாமியின் அருள்தான் சம்பளம்!

நமக்கு இது இன்னும் கூடுதல் ஆச்சர்யத்தைத் தந்தது. “அவரின் ஆர்வத்தைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், அதற்கு ஏன் அதிகாலையில் வரவேண்டும்?” என்று கேட்டோம்.

“அதை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். அப்போ புரியும்” என்று சிரித்தபடி சொன்னார் அன்பர் கபீர்.

ஸ்ரீநிவாசன் அப்போது சிவன் சந்நிதியில் பூஜை செய்துகொண்டிருந்தார். அவர் ஓர் இளைஞர். நெற்றியில் வடகலை திருமண் ஜொலித்தது. வேத மந்திரங்களை அவர் உச்சரிக்கும் பாங்கிலேயே அவரின் வடமொழிப் பயிற்சி தெரிந்தது. தீபாராதனை காட்டிவிட்டு வெளியே வந்தவர் நமக்குத் திருநீற்றுப் பிரசாதம் வழங்கினார். நெற்றியில் இட்டுக்கொண்டு நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். முதலில் நம் கேள்விகளுக்குச் சரியாக பதில் தராமல் மழுப்பலாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

“இதுல என்ன இருக்கு... என்னால் ஆன திருப்பணியைச் செய்கிறேன் அவ்வளவுதான்.” என்று நழுவப் பார்த்தபோது, கோயிலைச் சேர்ந்த வேங்கடபதி... “அவர் சொல்லமாட்டார் ஐயா. நான் சொல்றேன். அவர் இந்தக் கோயிலோட சேர்த்து பத்து கோயில்களுக்குத் தினமும் போய் பூஜை பண்றார். நீங்க கேட்டீங்களே ஏன் 2.30 மணிக்கு வரணும்னு... அதுக்கு பதில் அதுதான். இங்கே 2.30-க்கு வந்தார்னா காலை 5.30 மணி வரைக்கும் வேலை இருக்கும். அப்புறம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒன்றிரண்டு பேருக்கு பிரசாதம் கொடுத்துட்டு, 7 மணிக்கு மேல இங்கே இருந்து கிளம்பிவிடுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருத்தொண்டர்! - 10 - சுவாமியின் அருள்தான் சம்பளம்!

மற்ற கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கிறது. அவற்றில் ஏழு கோயில்கள் பழைமை வாய்ந்தவை. பத்தில் இரண்டு கோயில்களில்தான் சம்பளம். ‘மற்ற கோயில்களில் சாமி அருள்தான் சம்பளம்’னு சொல்லுவார். என்ன ஐயா... நான் சொல்றது சரிதானே” என்று சொல்லி ஸ்ரீநிவாசனைப் பார்த்து சிரித்தார்.

கேட்கும்போதே மலைப்பாக இருந்தது. ஸ்ரீநிவாசன் கொஞ்ச நேரத்தில் நம்மோடு இயல்பாகிப் பேச ஆரம்பித்தார்.

“என் ஊர் ஸ்ரீரங்கம். அப்பா பேர் வேங்கடேச ஐயங்கார். பேங்க்ல மேனேஜரா இருந்தார். ரொம்ப வருஷம் குழந்தை இல்லாம இருந்து ரங்கநாதரை வேண்டிக்கொண்டு நான் பிறந்தேன்னு அம்மா சொல்லுவா. அம்மா நாள் தவறாம ரங்கநாதரை தரிசிக்கப் போவாங்களாம். நிறைமாதம். ஒருநாள் சுவாமி தரிசனம் முடிச்சி சந்நிதியைவிட்டு வெளியே வந்தப்போ, அம்மாவுக்கு வலி வந்து நான் பிறந்துட்டேன்னு சொல்லுவா அம்மா.

என் ஜாதகத்தை அப்பா கணித்தபோது ஜோதிடர்கள் ‘பையன் லௌகீகமா இருக்க மாட்டான். ஆன்மிகத்தில் போகிற ஜாதகம் இது’ன்னு சொல்லிட்டாங்களாம். அப்பாவுக்கு பயம். எங்கே நான் சாமி, கோயில் குளம்னு மாறிடுவேனோன்னு. ஆக எனக்கு 13 வயது ஆகும் வரை என்னைக் கோயிலுக்கே அழைத்துக்கொண்டு போகமாட்டார் அப்பா. அப்புறம்தான் நானே கோயிலுக்குப் போக ஆரம்பிச்சேன்.

திருத்தொண்டர்! - 10 - சுவாமியின் அருள்தான் சம்பளம்!

வேதங்கள் கத்துக்க அனுப்பினாங்க. மூன்று வேதம் முடிச்சேன். இடையில் பள்ளிப் படிப்பும் ஆச்சு. இந்த சூழ்நிலையில்தான் என் 17 வயதில் அப்பா தவறிட்டார். அவர் பயந்தபடி அப்படி என்ன என் ஜாதகத்தில் இருக்கிறதுன்னு ஆர்வ த்தில் ஜோதிடம் படிக்க ஆரம்பிச்சேன். 6 ஆண்டுகள் ஜோதிடமும் முடித்தேன். ஜோதிடத்தில் B.A.

அதன்பின் வாழ்க்கை குறித்த தெளிவு வந்தது. இனி ஆன்மிகம்தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன். வேதங்கள் படித்ததால் ‘மூர்த்திகளில் பேதம் இல்லை’ என்பதும் புரிந்தது. கோயில்களில் என்னால் ஆன பூஜைகளை செய்ய ஆரம்பிச்சேன். பூஜை இல்லாமல் இருக்கிற கோயில்களில் விளக்கேற்றி ஒரு அர்ச்சனை செய்வதைப் போல மனநிம்மதி தரும் செயல் வேறு எதுலையும் கிடையாதுன்னு தெரிஞ்சிகிட்டேன். அதைத்தான் தொடர்ந்து செய்யறேன்” என்றார் ஸ்ரீநிவாசன்.

“சரி ஐயா... கீழ்ப்பசார் தவிர வேறு எந்தக் கோயில்களில் எல்லாம் பூஜை செய்கிறீர்கள்...” என்று கேட்டோம்.

“இங்கே ஏழுமணிக்கு முடித்துக்கொண்டு ஆண்டியார் பாளையம் போவேன். வண்டியில் போனால் அரைமணி நேரமாகும். அங்கே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில். அங்கே நித்திய அபிஷேகம் கிடையாது. வெறும் அலங்காரம் அர்ச்சனை மட்டும்தான். ஆனா, தளிகை பண்ணனும். நானே தளிகை செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். அதை முடிக்கும்போது 10.30 ஆயிடும்.

அங்கேயிருந்து திண்டிவனம் சதனபுரீஸ்வரர் கோயில். அங்கே ஒரு மணிநேர பூஜை நடக்கும். அங்கேயிருந்து 15 நிமிடம். ஜீயர் நகரில் இருகிற விநாயகர் கோயில். அங்கே ஒரு மணி நேரம் ஆயிடும். அதன்பிறகு வைரபுரம் சிவாலயம். ரொம்ப பழைமை வாய்ந்தது. அந்த சுவாமியை கும்பிடவே நிறைய புண்ணியம் செய்திருக்கணும். எனக்கோ பூஜையே செய்ற பாக்கியம்.

திருத்தொண்டர்! - 10 - சுவாமியின் அருள்தான் சம்பளம்!

அங்கே பூஜையை முடித்துக்கொண்டு அடுத்து அனந்தமங்கலம் அகத்தீஸ்வரர் கோயில். அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்த லிங்கம்ங்கிறதாலே ரொம்ப விசேஷம். அங்கே சுவாமிக்குப் பூஜை செய்துட்டு, அடுத்து அங்கிருந்து 20 கி.மி போனால் வந்தவாசி ரூட்ல கொடியம்ங்கிற ஊர்வரும். அங்கே ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் இருக்கு. அங்கே மூணு மணி நேரம் ஆகும். அதுக்கு அடுத்து சாரம் என்கிற இடத்தில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி கோயில். அங்கே ஒருமணிநேரம் குறையாமல் ஆகிவிடும்.

இதுக்கு நடுவில் ஒரு துர்கை அம்மன் கோயிலும் ஐயனார் கோயிலும் இருக்கு. அவற்றுக்கும் தினமும் ஓர் அபிஷேகத்தைச் செய்து அர்ச்சனை செய்து விடுவேன். இப்போ சொல்லுங்க, காலையில் 2 மணிக்கு எழுந்துக்கலைன்னா எப்படி இவ்வளவு வேலையும் நடக்கும்” என்று கேட்டுச் சிரித்தார் ஸ்ரீநிவாசன். பிறகு அவரே தொடர்ந்தார்.

“ஐயா சொன்னதுபோல இரண்டு கோயில்களில்தான் சம்பளம் தர்றாங்க. ஆனா எனக்கு அது போதும். இதுக்கு முன்னாடி புரோகிதம் செய்யப் போவேன். நிறைய பணம் கிடைக்கும். ஆனா, மன அமைதி குறைவா இருக்கும். எப்போ தெய்வத்தோட சந்நிதியே நிம்மதின்னு வந்துட்டேனோ, அப்பவே மன அமைதியும், போதும்ங்கிற எண்ணமும், நம்பிக்கையும் வந்துவிட்டது. இதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. தேனைச் சுவைத்தவர்களுக்குத்தானே அதன் சுவை என்னன்னு தெரியும்... அதுபோல சுவாமி கைங்கர்யத்தில் கிடைக்கும் ருசியையும் திருப்தியையும் அதில் லயிப்பவரே அனுபவிக்கமுடியும்.

ஜோதிடம் தெரியும் என்பதால் சில ஊரில் என்னிடம் நல்ல நாள் குறிக்க, ஜாதகப் பொருத்தம் பார்க்க சிலர் கேட்பாங்க. மறுக்கமாட்டேன். தெரிந்ததைச் சொல்லுவேன். அதுகூட பூஜைகள் எல்லாம் முடித்த பிறகுதான்” என்று சொல்லி நிறுத்தியவரிடம்

”சரி, எப்போ தூங்குவீங்க...” என்று கேட்டோம். அதற்கு சிரித்தபடியே...

“இரவு 11 மணி ஆயிடும். எத்தனை மணிக்குத் தூங்கினாலும் காலையில் 2 மணிக்கு முழிப்பு வந்துவிடும். சில வருடங்களாக நான் சித்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுறேன். இன்னைக்கும் சித்தர்கள் இருந்து நமக்கு அருள் செய்றாங்கங்கிறது என் நம்பிக்கை. அது எனக்கு மன அளவில் அதிகமான தெம்பைக் கொடுக்குது. நாள் முழுவதும் வேலை பார்த்தாலும் களைப்பே ஏற்படாது. அது அந்த சித்தர்கள் தந்த அருளாசின்னுதான் நினைக்கிறேன்.

இந்த ஜன்மம் என்பது கோயில் பணிகளுக்குத்தான்னு முடிவு பண்ணியாச்சு. அதை என் சக்தியால மட்டும் செய்ய முடியாது. அதற்கு அந்த சித்த புருஷர்களின் ஆசீர்வாதம் வேண்டும். அவர்கள்தான் நடத்திக் கொடுக்கணும். நான் அவர்களிடம்தான் சரணாகதி அடைந்திருக்கிறேன். வாழும் காலம் முழுவதும் இதே தெம்போடு உழைக்க அவர்கள் அருள் செய்யணும்” என்று அவர் முடிக்கும்போது நம் மனம் உண்மையிலேயே உருகியிருந்தது.

நம் தேசத்தின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது. ஆனால் இன்றைய தலைமுறை கிராமங்களை விட்டு வெளியேறி, நகரங்களில் குடியேறவே விரும்புகிறது. கிராமங்களில் இருக்கும் நம் கலை கலாசார பண்பாட்டு அடையாளங்கள் அப்படியே கைவிடப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுப் பழைமையும் மகிமையும் வாய்ந்த கோயில்கள் மெள்ள மெள்ள தம் பொலிவை இழந்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்ரீநிவாசன் போன்ற இளைஞர்கள் பெரும் நம்பிக்கை தருகிறார்கள். இளைஞராக இருந்தாலும் ஸ்ரீநிவாசன் செய்யும் திருத்தொண்டு போற்றத்தக்கது. அதை அவர் காலம் முழுவதும் செய்து மகிழ்ந்திருக்க, நாமும் சித்த புருஷர்களை பிரார்த்தித்து விடைபெற்றோம்.

- தொண்டர்கள் வருவார்கள்...

திருத்தொண்டர்! - 10 - சுவாமியின் அருள்தான் சம்பளம்!

பூட்டுப் பிரார்த்தனை

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில். வேப்ப மரமும் அரச மரமும் பின்னிப் பிணைந்திருக்கிற ஆலயம் இது. இங்கே, பூட்டுப் பிரார்த்தனை விசேஷம். அதாவது, பக்தர்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை நேர்ந்தாலும், அம்மனின் காலடியில் பூட்டு வைத்து பூஜித்துவிட்டு, பிறகு இந்த வேலியில் பூட்டிவிட்டு, சாவியை அம்மனின் திருவடியில் வைத்துவிட்டால் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism