கட்டுரைகள்
Published:Updated:

திருமணத் தடையா, திருவலஞ்சுழிக்குச் செல்லுங்கள்!

திருவலஞ்சுழி
பிரீமியம் ஸ்டோரி
News
திருவலஞ்சுழி

ஈசனை தரிசிக்க இங்கு பிலத்துவாரத்தில் இருந்து ஆதிசேஷன் தோன்றினார். அந்தப் பிலத்துவாரத்தில் காவிரி ஆறு பாய்ந்து பாதாளத்துக்குள் மறைந்தது.

சித்தீசநாதர், செஞ்சடைநாதர், பொன்மலை, கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர், கபர்த்தீசர் என்றெல்லாம் போற்றப்படுகிறார் திருவலஞ்சுழி ஈசன். அவருக்கு இணையாகக் கற்பக தேவி, வலஞ்சுழிநாயகி, பெரியநாயகி, பிருகந்நாயகி என்றெல்லாம் போற்றப்படுகிறாள் அன்னை சக்தி.

இங்குள்ள சுவேத (வெள்ளை) விநாயகர் பிரசித்தி பெற்றவர். அமுதம் பெற தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது, வெற்றி கிட்ட அங்கு இருந்த நுரைகளைக் கொண்டு விநாயகரை உருவாக்கி வழிபட்டனர். அந்தத் திருவுருவத்தையே இந்திரன் இங்கு கொண்டு வந்து வழிபட்டான் என்கிறது தலவரலாறு.

10 அங்குல உயரமே கொண்ட தீண்டாத் திருமேனியாக உள்ள சுவேத விநாயகரின் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இவ்வூர் பெயர் பெற்றது என்பர். இவருக்குப் பச்சைக்கற்பூரம் மட்டும் சார்த்தி அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருவலஞ்சுழி பலகணி உலகப் புகழ் கொண்டது. சிற்பக்கலைக்குச் சிறந்த உதாரணம் இந்தக் கல்லால் வடிக்கப்பட்ட ஜன்னல். திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை மூலவராகக் கொண்டு, அவருக்கு உரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். சப்தஸ்தான விழாவில் இவ்வூரும் பங்கு கொள்ளும்.

இங்குள்ள அம்பாள் பெரியநாயகி, ஈசனுக்கு வலப்பக்கம் திருமணக் கோலக் காட்சி தந்து அருள்கிறாள். இதனால் இவளை வந்து வழிபட்டுச் சேலையும் குங்குமார்ச்சனையும் செய்வதாக வேண்டிக்கொண்டால் திருமண வரம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.

திருமணத் தடையா, 
திருவலஞ்சுழிக்குச் செல்லுங்கள்!

திருமணத்துக்குத் தடையாக இருக்கும் எல்லாவித தோஷங்கள், ஜாதகக் கோளாறுகள், பாவங்கள் அனைத்தையும் நீக்குபவர் கபர்தீஸ்வரர். ஏரண்ட ரிஷி, ஆதிசேஷன், உமை, இந்திரன், திருமால், பிரமன், பைரவர் வழிபட்ட தலமிது.

ஈசனை தரிசிக்க இங்கு பிலத்துவாரத்தில் இருந்து ஆதிசேஷன் தோன்றினார். அந்தப் பிலத்துவாரத்தில் காவிரி ஆறு பாய்ந்து பாதாளத்துக்குள் மறைந்தது. சோழ மன்னனின் வேண்டுகோளுக்காக ஏரண்ட மகரிஷி அந்தப் பிளவத்தில் இறங்கி மறைய, காவிரி வலமாகச் சுழித்து வெளிப்பட்டது. அதனால் இத்தலம் வலஞ்சுழி என்றானது.

தலவிருட்சம் வில்வம், தலதீர்த்தம் காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம். திருஞான சம்பந்தர், அப்பர் பெருமானால் பாடல் பெற்ற தலம் இது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலமும் இது. வில்வாரண்யம், சக்திவனம், தக்ஷிணாவர்த்தம் என்பன திருவலஞ்சுழிக்கு உள்ள வேறு சிறப்புப் பெயர்கள்.

திருவலஞ்சுழியில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்கிறது வரலாறு. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திர பாலர் கோயில் உள்ளது. க்ஷேத்திர பாலர் என்றால் பைரவரே என்கிறது வரலாறு. ராஜராஜ சோழனின் பட்டத்து ராணியான உலகமாதேவி எனும் தந்திசக்தி இந்த க்ஷேத்திர பாலர் கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டு கூறுகிறது.

இங்குள்ள அஷ்டபுஜ காளியை ‘ஏகவீரி’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மன்னன் ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற கல்வெட்டு இங்குள்ளது. சோழர்கள் இந்த சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படுவார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.

திருமணத் தடையா, 
திருவலஞ்சுழிக்குச் செல்லுங்கள்!

உத்குடி ஆசனத்தில் வீரமும் அழகும் நிறைந்த திருக்கோலத்தில் துடியாகக் காட்சி தருகிறாள் ஏகவீரி. விஷ்பூர முத்திரையுடன் அருள்கிறாள் காளி. முன்பு எல்லைத் தெய்வமாகத் தனிக்கோயிலில் அருள்பாலித்தவள் இவள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மகிஷாசுரனை வதம் செய்த காளிதேவி இங்கு வந்து சிவபூஜை செய்தாள் எனக் கோயில் புராணம் கூறுகின்றது.

ஒரு மகாசிவராத்திரி நாளில் இங்கு ஆதிசேஷன் வெளிப்பட்டு வலஞ்சுழி, நாகேச்சுரம், பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் நான்கு தலங்களிலும் நான்கு கால பூஜைகள் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இன்றும் மகாசிவராத்திரி நாளில் வழிபடுவதாகச் செய்தி உண்டு.

எண்ணற்ற சந்நிதிகளுடன் இந்த ஆலயம் பிரமாண்டமாக எழுந்துள்ளது. விஸ்வகர்மா எழுப்பிய இந்த ஆலயம் சோழர்கள் காலத்தில் விஸ்தரிக்கப்பட்டது. நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், பிச்சாடனர், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், துர்கை, சனீஸ்வரர் என கோஷ்ட தெய்வங்களும், லட்சுமி, சரஸ்வதி, 32 சிவலிங்கங்கள், நான்கு விநாயகர்கள், பாலமுருகன், மகாவிஷ்ணு, துர்கை, சப்த மாதர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி எனத் தனிச் சந்நிதி தெய்வங்களும் இங்கே அருள் செய்கின்றனர்.

கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில், சுவாமிமலையிலிருந்து வடக்கே 1 கி. மீ. தூரத்தில், கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் திருவலஞ்சுழி உள்ளது.

திருமணத் தடையா, 
திருவலஞ்சுழிக்குச் செல்லுங்கள்!

‘மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி

வலங் கொள்வார் அடி என் தலைமேலவே!’ என்கிறார் அப்பர் பெருமான். இதைப் படித்தே ராஜராஜ சோழன் தன்னை சிவபாதசேகரன் என்றும் சிவசரண சேகர தேவர் என்றும் அறிவித்துக்கொண்டார் என்கிறது வரலாறு.

வலஞ்சுழி சென்று வணங்க, வளமான வாழ்வு கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. திருமணத் தடை இருப்பவர்கள், வரன் அமைய திருவலஞ்சுழிக்குச் செல்வது அவசியம் என்றும் கூறலாம்.