Published:Updated:

`பிப்ரவரி 5-ம் தேதி மருந்தீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்..!'- களைகட்டும் திருவான்மியூர்

மருந்தீஸ்வரர் கோயில்
மருந்தீஸ்வரர் கோயில்

பிப்ரவரி 2-ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜை நடைபெறும். அடுத்தடுத்து மூன்று நாள்களும் ஆறுகால யாகசாலை பூஜைகளும் முடிவுற்று பிப்ரவரி 5-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.

பாடல்பெற்ற தலமான திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருத்தலத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா, 12 ஆண்டுகள் கழித்து, வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான சகல பணிகளும் தொடங்கின.

வான்மீகி முனிவருக்கு இறைவன் காட்சி தந்ததால் திருவான்மியூர் என்று அழைக்கப்படும் இந்தத் தலத்தில் இறைவன் மருந்தீஸ்வரராக எழுந்தருளியிருக்கிறார். இங்குதான் இறைவன் நோய்களின் வகைகளையும், அதைப்போக்கும் மூலிகைகளின் தன்மைகளையும் அகத்தியருக்கு எடுத்துரைத்ததால் இத்தலத்து இறைவன் மருந்தீஸ்வரர் எனப்பெயர் பெற்றார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற பெருமையுடையது இந்தத் திருத்தலம்.

Vikatan
மருந்தீஸ்வரர் கோயில்
மருந்தீஸ்வரர் கோயில்

இந்தத் தலத்தில் தற்போது கும்பாபிஷேக வைபவம் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக இன்று காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணி வரையிலும் மஹாகணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவகிரகஹோமம், வாஸ்து சாந்தி பிரவேசபலி, ரக்சோக்னஹோமம் ஆகியவை நடைபெற்றன. மீண்டும் மாலை 6 மணியளவில் ஹோமங்கள் நடைபெறவிருக்கின்றன. தொடர்ந்து நாளை காலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் முடிந்து பிப்ரவரி 2-ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜை நடைபெறும். அடுத்தடுத்து மூன்று நாள்களும் ஆறுகால யாகசாலை பூஜைகளும் முடிவுற்று பிப்ரவரி 5-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.

` `குடமுழுக்கு' நன்கொடை பணத்தில் முறைகேடா?'-  தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள்ளாக ராஜகோபுரங்கள் மற்றும் விமான கோபுரங்கள் ஆகியவற்றில் உள்ள கலசங்களில் புனிதநீர் அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்படும். இதற்காக 15 ஸ்பிரிங்லர்ஸ் வைக்கப்படவுள்ளது. விழாவைக் காண 2 எல்.இ.டி திரைகளும் வைக்கப்படவுள்ளன.

மூலவர்களுக்கும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்ட பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் தியாகராஜசுவாமி திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அருட்செல்வன், ஹரிபிரியா
அருட்செல்வன், ஹரிபிரியா

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காவல் துணை ஆணையர் பி.கே.ரவி, ``குற்றப்பிரிவு நிபுணர்கள் அடங்கிய 10 சிறப்புக் குழுக்கள், 700 ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். 32 சிசிடிவி கேமராக்கள் மூலம் கோயிலைச் சுற்றிய எல்லாப் பக்கங்களும் கண்காணிக்கப்படுகின்றன. கூட்டநெரிசலைத் தவிர்க்க, வரிசையாக பக்தர்களை தரிசனம் செய்ய வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிழக்குக் கோபுர வாயில் வழியாகப் பொது பக்தர்களும், மேற்கு கோபுரம் வழியாக வி.ஐ.பி-களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்" என்றார்.

பிப்ரவரி 4-ல் தெப்ப உலா.. திருப்பரங்குன்றம் தெப்போற்சவம் கோலாகலாத் தொடக்கம்!

செயல் அலுவலர் க.அருட்செல்வன் பேசுகையில், ``திருக்கோயிலின் வணிக வளாகத்தில் பக்தர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். கோயிலுக்கு வெளியே 6 இடங்களில் குடிநீர் வசதியும் மாநகராட்சி சார்பில் கூடுதல் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்ததும் கிழக்கு மாடவீதியில் உபயதாரர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது" என்றார். இணை ஆணையர் ஹரிபிரியா, ``ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் இந்தத் திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. 25,000 பக்தர்கள் விழாவுக்கு வருவார்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. பக்தர்கள் திரளாக வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் நிர்வாகத்தோடும் காவல்துறையோடும் தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழ்முறை... வேதமுறை... தஞ்சைக் கோயில் குடமுழுக்கு குறித்து ஆன்மிக அன்பர்கள் விளக்கம்!
அருட்செல்வன், ஹரிபிரியா, ரவி
அருட்செல்வன், ஹரிபிரியா, ரவி
`குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்பாரா முதல்வர்?!'- பெரியகோயில் விழா குழுவைக் கலங்கடிக்கும் சென்டிமெண்ட்

வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு...

ஈசிஆர், கலாஷேத்ரா சாலை என முக்கியமான சாலைகளின் சந்திப்பில் திருக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் வருகையின்போது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பதால் பிப்ரவரி 5-ம் தேதி காலை 7 மணி முதல் கும்பாபிஷேகம் முடியும் வரையிலும் கலாஷேத்ரா சாலை உட்பட கோயில் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டு வாகனங்கள் திருப்பிவிடப்படும். எனவே, அதற்கேற்றாற்போல பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

மருந்தீஸ்வரரை தரிசித்தால் எவ்வித நோய்களும் அகலும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு