
ரமண மகரிஷி
அது 1896-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம். விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் கிளைப் பாதையில் அமைந்திருந்த மாம்பழப்பட்டு நிலையத்தில் இறங்கினான் ஓர் இளைஞன்.
அங்கிருந்து தான் செல்ல ஆசைப்பட்ட திருத்தலத்துக்கு நடந்தே செல்ல தீர்மானித்தான். ரயில் பாதை ஓரமாகவே நடந்தான்.
நீண்ட பயணத்துக்குப் பிறகு, வழியில் பாறை ஒன்றையும் அதன் மீது ஒரு கோயில் இருப்பதையும் கண்டான். ஏற்கெனவே களைத்திருந்த அந்த இளைஞன் பாறை மீதிருந்த அந்தக் கோயிலுக்குள் நுழைந்தான். கோயிலைச் சுற்றிலும் இருட்டு; உள்ளேயும் பெரும்பாலும் இருட்டாகவே இருந்தது. மண்டபத்தில் ஓரிடத்தில் மங்கிய விளக்கொளி. அந்த இடத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டான்; தியானத்தில் மூழ்கினான். மெள்ள மெள்ள இறைவனுடன் இணைந்து கொண்டிருந்தவனுக்கு கண்ணைக் கூசும் ஒளி ஒன்று தென்பட்டது.

அந்த ஒளிப் பெரிதாகிப் பிரகாசித்தது. இளைஞன் எழுந்தான். பேரொளி ஆலயத்தின் கருவறையிலிருந்து வருவதாக எண்ணி, அங்கே சென்றான். ஜோதி மறைந்துபோனது. ஆனாலும் அதன் பிரகாசம் அவன் உள்ளத்தில் ஒளிர்ந்துகொண்டே இருந்தது எனலாம். ஆகவேதான் அவனால், தீபத் திருத்தலமாம் திருவண்ணாமலையில் ரமண மகரிஷி எனும் ஞானச் சுடராக ஒளிர முடிந்தது!
ஆம்! பாறை மீது அமைந்திருந்த அந்தக் கோயிலில் இறையை ஜோதியாய் தரிசித்த அந்த இளைஞன் திருச்சுழியல் வேங்கடராமன் - பிற்காலத்தில் உலகம்போற்றிய ஞானியாய் மிளிர்ந்த ரமண மகரிஷி! அந்தத் தலத்தின் பெயர் அறையணிநல்லூர். இங்கே ரமணரின் திருவுருவையும் தரிசிக்கலாம்.
அறையணிநல்லூர் என்பது தேவாரத் திருநாமம்; இன்று வழக்கில் அரகண்டநல்லூர் ஆகிவிட்டது. திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவலூரை அடையும் பாதையில், பெண்ணையாற்றுப் பாலத்துக்கு முன்னதாகவே பிரியும் விழுப்புரம் சாலையில் திரும்பி, சுமார் 1 கி.மீ சென்றால், அரகண்டநல்லூர் ஆலயத்தை அடையலாம்.
7-ஆம் நூற்றாண்டில், திருக்கோவலூர் வீரட்டத் திருத்தலத்தில் வழிபட்டுவிட்டு, இங்கே வந்த ஞானசம்பந்தப் பெருமான், பாறை மீது வலம் வந்து நின்றார். தொலைவில் தெரிந்த அண்ணாமலையைக் காட்டிய அடியார்கள், அருணாசலப் பெருமையையும் உரைத்தனர். அங்கேயே, ஞானசம்பந்தருக்கு, அண்ணாமலையார் அருள் ஜோதி தரிசனத்தைக் காட்டினாராம். இன்றும் ஞானசம்பந்தரின் பாத பீடத்தை தரிசிக்கலாம்.
இத்தலத்து இறைவனின் திருநாமம் அதுல்யநாதேஸ்வரர் எனும் ஒப்பிலா மணி ஈஸ்வரர். மேற்கு முகமாகக் காட்சி தரும் இந்தச் சிவலிங்க நாதர், உண்மையில் சுயம்பு என்கிறார்கள். வரப்பிரசாதியானவர். அம்பிகை - அழகிய பொன்னம்மை; சௌந்தர்ய கனகாம்பிகை. பாண்டவரை நினைவுகூரும் 5 குடைவரைகள் மற்றும் பீமன் குளம் ஆகியவையும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள். திருவண்ணாமலை செல்லும் அன்பர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம் இது.
- கே.சரவணன், விழுப்புரம்