தொடர்கள்
Published:Updated:

ஆசைக்கு ஏது அளவு!

ரமண மகரிஷி
பிரீமியம் ஸ்டோரி
News
ரமண மகரிஷி

ரமண மகரிஷி

ஆரம்ப காலத்தில் விருபாக்ஷ குகையில் ரமண மகரிஷி தங்கி இருந்தபோது பிக்ஷைக்காக அடியார் ஒருவர் ஊருக்குள் சென்று, அனைவருக்கும் உணவு கொண்டு வருவார். பகவானுடன் நிறையபேர் இருந்ததால், கொண்டு வரும் உணவு அனை வருக்கும் போதுமானதாக இருக்காது.

ஆசைக்கு ஏது அளவு!


எனவே, பிக்ஷையாக வந்த உணவை ஒன்றாகக் கலந்து பிசைந்து, வெந்நீர் சேர்த்துக் கஞ்சியாக்கி, எல்லாருக்கும் தருவார். இந்தக் கஞ்சியில் உப்பு சேர்த்தால் சுவையாக இருக்கும். அவர்களிடம் காசு இருக்காது. அதனால் அருகிலுள்ள குகை களில் உள்ளவர்களிடம் போய் உப்பு வாங்க வேண்டும்.

``உப்பு வாங்கினால், பின் ஒரு நாள் பருப்பு கேட்கத் தோன்றும். கேட்பதை எல்லாம் மக்கள் கொடுப்பார்கள் என்பது தெரியும். அதன் பின்னர் எது கேட்டாலும் கிடைக்கும் என்பதால், பாயசம் குடிக்கத் தோன்றும். இப்படி இந்த ஆசைக்கு ஒரு முடிவே இல்லாமல் போய்விடும். ஆகையால், எவரிடமும் எதுவும் கேட்காமல் இந்தக் கஞ்சியைக் குடித்துத் திருப்தி அடைவோம்!’’ என்று கூறிவிட்டாராம் பகவான் ரமணர்.

பிறிதொரு நாளில் அடியார்கள் சிலரிடம் இதுபற்றி மேலும் பகிர்ந்துகொண்டார் பகவான் ரமணர்: ‘‘விருபாக்ஷ குகையில் இருந்தபோது பிக்ஷை எடுப்பதற்கு எங்களிடம் ஒரே ஒரு மண் பாண்டம்தான் இருந்தது. சில நாள்களுக்குப் பிறகு அலுமினியப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். பிறகு அதற்குப் பதில் பித்தளைப் பாத்திரம். அதோடு நிற்கவில்லை. அடுத்து ஒரு டிபன் கேரியரும் வந்து விட்டது. இப்படி பாத்திரங்கள் சேரச் சேர துறவிகள் விருபாக்ஷ குகையில் தாங்களே சமைக்கத் தொடங் கினர். இதெல்லாம் கூடாது என நான் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை.

நம்முடைய தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் முடிவு என்பதே இல்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது ஏற்படும் ஆசைகளுக்கு உடனுக்குடன் முடிவு கட்டிவிட வேண்டும். அவற்றை நிறைவேற்ற முயலக் கூடாது. அப்போதுதான் மனச்சாந்தி கிடைக்கும்!’’

- ராணி, கிருஷ்ணகிரி