திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

மஹானின் திருவருள்

ஶ்ரீசேஷாத்திரி சுவாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசேஷாத்திரி சுவாமிகள்

சேஷாத்திரி சுவாமிகள்

மஹான் சேஷாத்திரி சுவாமிகள், காஞ்சிபுரத் தில் 22.1.1870 அன்று அஸ்த நட்சத்திரத்தில் வரதராஜன் - மரகதம் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே இறை பக்தியில் ஆழ்ந்து கிடந்த இவர், காவேரிப்பாக்கம், திண்டிவனம் எனப் பல ஊர்க் கோயில்களில் தங்கி, நிறைவில் திருவண்ணாமலைக்கு வந்தார். அதன்பிறகு இவர் செய்த அற்புதங்கள் அநேகம் என்று இன்றும் வியக்கிறார்கள் இவர் பக்தர்கள். அதில் ஒன்று...

மஹானின் திருவருள்

திருவண்ணாமலையில் அக்காலத்தில் இருந்த நாவிதர்களுக்கு சேஷாத்ரி சுவாமிகளை மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம் சேஷாத்திரி சுவாமிகள் நிகழ்த்தும் அற்புதம்தான். திடீரென்று ஒரு நாவிதர்முன் போய் அமர்ந்து ``எனக்கு மொட்டை போட்டுவிடு!'' என்று கேட்பார். அந்த நாவிதருக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படும்.

சுவாமிகளின் தலைமுடியை மழிப்பார். முடி எடுத்ததும் சுவாமிகள் சிரித்துக் கொண்டு குளிக்கச் சென்றுவிடுவார். அவ்வளவுதான். அன்று அந்த நாவிதருக்குக் கை வலிக்கும் அளவு தொழில் நடக்கும். ஒரு மாதத்தில் நடக்காத தொழிலை ஒரே நாளில் நடத்திச் சம்பாதித்து விடுவார் அவர்.

இந்த அனுபவத்தால் சில நாவிதர்கள் சுவாமிகளைப் பார்த்தால், சந்தோசம் கொள் வார்கள்.

அப்படி ஒருநாள் ஒரு நாவிதரிடம் போய் அமர்ந்தார் சேஷாத்திரி சுவாமிகள். பிரியமாக அவரது தலைமுடியை மழித்தார் நாவிதர். சுவாமிகள் சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.

அன்று ஏராளமான பேர் தன்னிடம் முடி மழிக்க வருவார்கள் என்று ஆவலோடு காத்திருந்தார் நாவிதர். என்ன வினோதம்! அன்று ஒரே ஓர் ஆள்கூடத் தேடி வரவில்லை. `இன்று ஏன் தொழிலே நடக்கவில்லை?' என சிந்தித்தவாறே வீட்டுக்குப் புறப்பட்டார் நாவிதர். அப்போது ஓர் அற்புதம் நடந்தது. காற்று ஒரு பெரிய தொகையைப் புரட்டிக் கொண்டு வந்து அவர் காலடியில் சேர்த்தது. காலின் கீழ் ஏதோ பொட்டலம் தட்டுப்படுகிறதே என்று எடுத்துப் பார்த்த நாவிதர், ஒரு பெருந்தொகை தனக்கு அருளப்பட்டிருப்பதை எண்ணிப் பூரித்தார்.

சேஷாத்திரி சுவாமிகளை மனதார வணங்கி அந்தப் பணத்தை கண்களில் ஒற்றி எடுத்துக் கொண்டார்.

-சி. பழனியப்பன், விழுப்புரம்