Published:Updated:

திருவண்ணாமலை தீபம்: பிரம்மனும் விஷ்ணுவும் காண எழுந்த பேரொளி; எளியவனும் காண எழுந்ததே! - ஓர் அனுபவம்

திருவண்ணாமலை மகாதீபம்

உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை 6-12-2022 அன்று காலை பரணி தீபமும் மாலை மகாதீபமும் ஏற்றப்பட உள்ளன

திருவண்ணாமலை தீபம்: பிரம்மனும் விஷ்ணுவும் காண எழுந்த பேரொளி; எளியவனும் காண எழுந்ததே! - ஓர் அனுபவம்

உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை 6-12-2022 அன்று காலை பரணி தீபமும் மாலை மகாதீபமும் ஏற்றப்பட உள்ளன

Published:Updated:
திருவண்ணாமலை மகாதீபம்
உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை 6-12-2022 அன்று காலை பரணி தீபமும் மாலை மகாதீபமும் ஏற்றப்பட உள்ளன. கார்த்திகை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபத் திருவிழா தான். தமிழகத்தின் பிரமாண்டமான அதிக மக்கள் கூடும் விழா இதுவே.
திருவண்ணாமலை மகாதீபம்
திருவண்ணாமலை மகாதீபம்

தீபத்திருநாளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். எனக்கும் அப்படிதான். கார்த்திகை திங்களில் கிருத்திகை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்றுசேர வரும் நாளே கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படுகிறது. எங்கள் முன்னோர்கள் இந்த நாளை பெரிய கார்த்திகை என்றும் அன்று உபவாசம் இருந்து விளக்கிட்ட பிறகு விரதம் முடிப்பார்கள். நினைவு தெரிந்த நாளிலிருந்து முருக பக்தனான நானும் விரதம் இருந்து அண்ணாமலை தீபத்தைக் காண அருள் வேண்டினேன்.

திருவண்ணாமலை தரிசனம்
திருவண்ணாமலை தரிசனம்

1995-ம் ஆண்டு அண்ணா பல்கலையில் பொறியியல் முது இயல் படித்துக்கொண்டு இருந்தபோது, நண்பர்களுடனும் சேர்ந்து ஒரு அறக்கட்டளைக்காக திருவண்ணாமலைக்கு அருகில் ஒரு பள்ளிவளாகம் கட்டிக்கொண்டிருந்தோம். அந்த சமயம் கார்த்திகை தீபம் வந்ததும் அருணாச்சலேஸ்வரரின் கருணையை எண்ணி பரவசமடைந்தேன். தீபத் திருநாளுக்கு முந்தைய நாளன்று தங்குவதற்கு சிரமப்பட்டு பிறகு தங்கும் அறை கிடைத்தது. அந்த நாள்கள் இன்று போல் இல்லை. காரணம் பெரும்பாலோர் பேருந்தில் தான் பயணம் செய்தார்கள் அவை அனைத்தும் பேருந்து நிலையம் வரை வந்து சென்றன. இன்றோ ஒவ்வொரு மாத கிரிவல நாள்களில் எல்லா வாகனமும் ஊருக்கு வெளியே நிறுத்தி விடுகிறார்கள்.

காலையில் பரணி தீபம் ஏற்றப்படும் என்பது பற்றி தெரியாமல் சாதாரணமாக கோயிலுக்குப் போனேன். அங்கே உள்ளே செல்ல நீண்ட வரிசை காணப்பட்டது. ராஜகோபுரத்தின் முன் மிகப்பெரிய பக்த்தர்களின் கூட்டம் அலை மோதியது. கோயிலுக்குள் VIP-களின் களமாக இருந்தது. உள்ளூர் மக்கள் இலகுவாகக் கோயிலுக்குள் சென்றார்கள். அங்கேயே நின்று அம்மையப்பனையும், பிள்ளையார், முருகனையும் கும்பிட்டு விட்டு நகர்ந்தேன். எண்ணமெல்லாம் மாலையில் மகா தீபத்தை எப்படி தரிசனம் செய்வது என்று யோசித்து கொண்டிருந்தது.

திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் - புகைப்படத் தொகுப்பு
திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் - புகைப்படத் தொகுப்பு

எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் தான் தெரிந்தது. நிரந்தர கடைகளுக்குப் போட்டியாக நிறைய தற்காலிக கடைகள் தோன்றி இருந்தன. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள். ஏன் என்று ஆராய்ந்த போது தெரிந்தது. அவர்களது பார்வை அண்ணாமலையை நோக்கி இருந்தது. சரி நாமும் இது போல் ஒரு இடத்தை பிடிக்க வேண்டியது தான் என்று எண்ணும்போதே காவலர்கள் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தத் துவங்கினர். இப்பொழுது நன்றாக புரிந்தது. சிறிதும் தாமதிக்காமல் ஒரு இடத்தை தேடினேன். சற்று குறைந்த கூட்டமும் நிழல்விழும் இடத்திலும் நின்று பக்தர்களோடு பக்தனாக சேர்ந்துகொண்டேன். அங்கிருந்த பக்தர்கள் இதுவரை அறிமுகமில்லாத என்னையும் அவர்களுடன் சேர்த்துக்கொண்டார்கள்.

அந்த கூட்டத்தில் தெய்வீகக் கதைகள் பல பகிர்ந்தோம். இங்கே இருப்பவர்கள், நடந்து செல்பவர்கள் எல்லோருமே சிவனடியார்கள் தான் சந்தேகமில்லை. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், ரமணமகரிஷி, சேஷாத்திரிஸ்வாமிகள், யோகி ராம்சுரத்குமார் ஸ்வாமிகள், வள்ளலார் ஸ்வாமிகள், பல நூறு சித்தர்களும் இந்த தீபத்திருநாளை காண வந்திருப்பதாக எனக்குள் தோன்றியது. நேரமாகியும் வெயில் சுரீர் என அடித்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் பக்தர் கூட்டம் கூடிக்கொண்டே போனது.

கபாலீஸ்வரர் ஆறுமுகம் - தமிழரசி
கபாலீஸ்வரர் ஆறுமுகம் - தமிழரசி

மகர தீபத்திற்கு முன்பாக இந்த கார்த்திகை தீபம் காண ஐயப்ப பக்தர்கள் பாடியவாறே போனார்கள். சிவபுராணமும் கந்த சஷ்டி கவசமும் நிறைய பேர் பாராயணம் செய்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். இன்னும் சற்று நேரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் என தெரிந்து பார்வை அண்ணாமலை நோக்கிச் செல்கிறது. ஒரு மெல்லிய வெளிச்சத்தில் மலை உச்சியில் தீபமேற்ற ஆயுத்தமானது தெரிகிறது. மலை மேல அங்கங்கே மக்கள் நடமாட்டம் தெரிகிறது. அனைவரது முகத்திலும் அண்ணாமலை தீபத்தைக் காண போகிறோம் என்ற பக்தி பரவசத்துடன் இன்ப உணர்வு பொங்கி வழிகிறது.

என்னைப் போல இது எத்தனை பேருக்கு முதல் முறையோ? சூரியன் விடைபெறும் நேரம் வந்து விட்டது, ஆரவாரமும் கூச்சலுமாக இருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஒரு அமைதி ஏற்பட மனமும் பார்வையும் மலையுச்சிக்கு செல்கிறது. கோயிலுக்குள் இருந்து தீபம் காண்பிக்கப்பட, அதைக் கண்டதும் மலை மீது அந்த மகாதீபம் ஏற்றப்பட்டது. 'அண்ணாமலையானுக்கு அரோகரா!' என்ற கோஷம் விண்ணைப்பிளக்க அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது. மனம் குழைந்து தாயைக் கண்ட கன்றாய் கதறி அழுதபடியே மெய்சிலிர்க்க கரம் குவித்துத் தொழுதேன். அத்தனை மக்கள் கூட்டத்துக்கு இடையே எந்த கூச்சமும் இன்றி தேம்பியபடியே அந்த பேரொளியை வணங்கினேன்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!

'அண்ணாமலையானே போற்றி, அருணாச்சலமே போற்றி, தென் நாடுடைய சிவனே, போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று ஜபித்தபடியே இருந்தேன். விண்ணக ஒளியாம் சூரியன் விடைபெற்றுக் கொள்ள மண்ணகப் பேரொளியாம் தீபச்சுடர் பிரகாசமாக எழுந்தது. பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் எழுந்த பேரொளி இந்த எளியவனும் காண எழுந்ததே என்று வியந்து அழுதேன்.

அருணாச்சலேஸ்வரரின் கருணைக்கு நன்றி சொல்லி கண்ணீர் மல்க நின்றேன். இன்று நினைத்தாலும் உடல் கூச்செரியும் அந்த அனுபவம் மறக்கவியலாதது. 27 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மறக்க முடியாத கார்த்திகை தீப அனுபவம் மீண்டும் வராதா என்று ஏங்குகிறேன்.

- கபாலீஸ்வரன் ஆறுமுகம் - தமிழரசி, சென்னை