கங்கா அனுக்கிரக மேதா தட்சிணாமூர்த்தி!

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்துள்ளது ‘வள்ளலார் கோயில்’ எனப்படும் ஸ்ரீவதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்; அம்பாளின் திருப்பெயர் ஸ்ரீஞானாம்பிகை.

‘வதான்யம்’ என்ற சொல்லுக்கு ‘எதிர்பார்ப்பில்லாமல் கொடையளிப்பவர்’ என்று பொருள். மூலவர் வரம் தரும் வள்ளல். இங்கு அருளும் மேதா தட்சிணாமூர்த்தியோ ஞானவள்ளல். ஆக, இந்த தலத்தை வள்ளலார் கோயில் என்றழைப்பது மிகப்பொருத்தமே!

ஒருமுறை, சிவனாரையே சுமக்கும் புண்ணியமும் வலிமையும் தமக்கே உள்ளது என்று ஆணவம் கொண்டாராம் நந்திதேவர். அவரின் அந்த எண்ணத்தை அகற்ற விரும்பிய சிவனார், தன் சடையிலிருந்து ஒரு முடியை எடுத்து ரிஷபத்தின் மீது போட்டார். அதையே தாங்க முடியாமல் தவித்த நந்தி, தனது பிழையைப் பொறுத்தருளி ஞான உபதேசம் அருளும்படி இறைவனிடம் வேண்டிக்கொண்டார். அப்போது சிவனார் காட்டிய வழிகாட்டுதல்படி, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நீராடி, வதான்யேஸ்வரரை வணங்கி தவம் செய்து பூஜித்து அருள்பெற்றாராம் நந்திதேவர். துலாக்கட்ட காவிரி நடுவில் ரிஷபதேவர் தவம் செய்யும் காட்சியை சிலா ரூபமாக இன்றும் தரிசிக்கலாம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தத்தம் பாவங்களைப் போக்க நீராடுவது வழக்கம். அவர்களின் பாவங்கள் சேர்ந்ததால் புனிதமும் பொலிவும் இழந்து போனதாக வருந்திய மூன்று நதிப்பெண்களும், தங்கள் நிலையைக்கூறி காசி விஸ்வநாதரிடம் முறையிட்டார்களாம். அவர், ``மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி, என்னை வழிப்பட்டால் மீண்டும் பொலிவு பெறுவீர்கள்’’ என்று அருள்பாலித்தார். அதன்படியே துர்வாசர் வழிகாட்ட காவிரி துலாக்கட்டத்தை அடைந்த மூன்று நதிப்பெண்களும், அங்கே நீராடி சிவ வழிபாடு செய்தார்கள். ஐப்பசி அமாவாசை திருநாளில் ஈசன் அவர்களுக்கு ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து புனிதம் அளித்து அருள்பாலித்தாராம். கங்கையை மீண்டும் தன் திருமுடியில் சூடிக்கொண்டார். ஆகவே, இவரை ‘கங்கா அனுக்கிரக ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி’ என்று போற்றுகின்றன புராணங்கள். ஐப்பசி மாத அமாவாசை நாளில், இந்த புனித நிகழ்ச்சி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

வேறொரு திருக்கதையும் உண்டு. ஒருமுறை தனக்கு ஏற்பட்ட தோஷத்தின் காரணமாக தேவ குருவாக விளங்கும் தகுதியை இழந்தாராம் பிரகஸ்பதி. பின்னர் சிவானுக்கிரகப்படி, இத்தலத்தின் தட்சிணாமூர்த்தியை ஒரு மண்டல காலம் வழிபட்டு, தோஷம் நீங்கி மீண்டும் தேவகுருவாக உயர்ந்தாராம். ஆகவே, இது குரு பரிகார தலமாகவும் திகழ்கிறது. இத்தலத்தின் மகிமைகள் குறித்து, சிவபுரம் வேத சிவகாம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாசார்யரிடம் பேசினோம். “இத்தலத்தின் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியிடம் முதல் மாணவனாக கல்விஞானம் பெற்றவர் நந்தி. ஆகவே. பகவான் இங்கே ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார். தீராத நோய்கள் தீரவும், திருமணத் தடைகள் அகலவும், புத்திர பாக்கியம் பெறவும், வியாபாரம் அபிவிருத்தி ஆகவும், கல்வி, செல்வம் பெருகவும் இவரை வழிபட்டு வளம் பெறலாம்’’ என்றார்.

எப்படிச் செல்வது? மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலும், மயிலாடு துறை பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவிலும் உள்ளது வள்ளலார் கோயில்.

உமையொரு பாகன்!

தமிழகத்தில், ‘உங்கள் வீடு மதுரையா... சிதம்பரமா?’ என்று விளையாட்டாகக் கேட்பார்கள். மதுரையில் மீனாட்சி ஆட்சி; சிதம்பரத்தில் சிவன் ஆட்சி. எனவே, பெண்ணின் கரம் ஓங்கியதா, ஆணின் கரம் வலுத்ததா என்று தெரிந்துகொள்வதற்காக இப்படிக் கேட்பதுண்டு. இந்த மரபை வைத்து, மூதறிஞர் ராஜாஜி ஒருமுறை சொன்னார்: ‘எல்லா வீடும் திருச்செங்கோடாக இருந்தால் நன்றாக இருக்கும்!’

ஆணொரு பாதியும், பெண்ணொரு பாதியுமாக அகிலத்தின் ஆதார உண்மையை வெளிபடுத்தும் அர்த்தநாரீஸ்வர வடிவம்கொண்டு ஆண்டவன் இருக்குமிடம் திருச்செங்கோடு. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரமுள்ள மலை. மலையடிவாரத்தில் ஊருக்குப் பிரதானமாக ஒரு கோயில் உள்ளது. அருள்மிகு பரிமளவல்லி உடனாய அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில். கீழே உள்ள ஸ்ரீகயிலாச நாதருக்கு ‘நிலத் தம்பிரான்’ என்றும், மலைமீதுள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரருக்கு ‘மலைத் தம்பிரான்’ என்றும் திருநாமங்கள் உண்டு.

திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் - வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவுருவம். சுமார் ஐந்தடி உயரம். சுயம்பு என்று சொல்கிறார்கள்; சித்தர்கள் உருவாக்கியது என்றும் சிலர் சொல்வர். ஒருபக்கம் வேஷ்டியும் இன்னொருபக்கம் புடவையுமாகத்தான் சுவாமிக்கு அலங்காரம். இடப்பாகத்தில் அம்மை. வலப்பாகத்தில் அப்பன். அம்மையின் பக்கம் பின்னல்; லேசான ஒயில்; அப்பனின் பக்கம் ஜடாமுடி; கையில் தண்டாயுதம். அம்மையின் திருவடியில் சிலம்பு; அப்பன் திருவடியில் கழல். இடப்பாதியில் பெண்மையின் நளினமும், வலப்பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடும். கண்களில்கூட, வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் துல்லியமான வித்தியாசம் தெரிகிறது. மூலவர் திருமேனிக்குக் கீழே நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இதையே தீர்த்த பிரசாதமாக எல்லோருக்கும் தருகிறார்கள்.

தீபாவளியை ஒட்டி வரக்கூடிய கேதார கௌரி விரதத்துக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆச்வயுச பகுள (அதாவது, ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் - தேய்பிறை) சதுர்த்தசியில், பார்வதிதேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும், திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும் குறையற்ற இல்லறத்தையும் செல்வங்களையும் பெறலாம் என்பதற்காகத் தொடங்கியதே கேதார கௌரி விரதமாகும். முதன்முதலாக இந்த விரதத்தைத் தொடங்கியது யார் தெரியுமா? சாட்சாத் பார்வதி தேவிதான்.

பிருங்கி முனிவர் சிவனைத் தவிர வேறு எவரையும் வழிபடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்தவர். ஒருமுறை கயிலையில் அம்மையும் அப்பனும் அருகருகே வீற்றிருந்தார்கள். ஸ்வாமியை வலம்வர வேண்டுமானால் அம்மையையும் சேர்த்தே வலம் வந்தாக வேண்டும். பார்த்தார் பிருங்கி... சட்டென வண்டின் வடிவம் கொண்டு அம்மைக்கும் ஐயனுக்கும் நடுவில் புகுந்து புறப்பட்டு, சிவனை மட்டும் வலம் வந்தார்.

மனம் வருந்திய அம்மை, இறைவனிடம் இறைஞ்சினார். சிவனையும் பார்வதியையும் பிரிக்க முடியாது என்பதை உலகுக்கும் பிருங்கிக்கும் உணர்த்த விரும்பிய அம்மையும் புரட்டாசி மாத வளர்பிறை தசமியில் தொடங்கி ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாள் வரை மரகத லிங்கத்தைக் கேதார கௌரி என்னும் திருநாமத்துடன் வழிபட்டாள். அதன் பலனாக ஐயனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில், அவரின் வாம பாகத்தைப் பெற்று பாகம்பிரியாள் என்று பெயர்பெற்றாள். ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம் உள்ளது; தவசீலரான பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது. தீபாவளியையொட்டி கேதார கெளரி நோன்பிருக்கும் பெண்மணிகள் அவசியம் திருச்செங்கோடு சென்று ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்களின் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.

எப்படிச் செல்வது? ஈரோடு நகரிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவிலும் நாமக்கல்லிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் உள்ளது திருச்செங்கோடு. இரண்டு ஊர்களிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.

- மு. ரமேஷ், சென்னை-44

குபேர நிதீஸ்வரர்!

திண்டிவனத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது அன்னம்புத்தூர் அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில். சோழப்பேரரசன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், காலப்போக்கில் சிதிலமுற்று மண்மூடிப்போக, கடந்த சில வருடங்களுக்குமுன் உள்ளூர் அன்பர்கள் மற்றும் சிவபக்தர்களின் முயற்சியாலும் பங்களிப்பாலும் மீண்டும் கற்கோயிலாகவே மிகப் பொலிவுடன் எழும்பியுள்ளது.

1008-ம் வருடம், தன்னுடைய 23-வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ராஜராஜ சோழன் திருப்பணிகள் செய்ததையும், நிவந்தங்கள் அளித்ததையும் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன என்கின்றனர். ஸ்ரீராஜராஜப் பெருவுடையாரின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இந்தக் கல்வெட்டின்படி பார்த்தால், இதுசுமார் 1000 ஆண்டுகளைக் கடந்த ஆலயம் என்பது தெளிவாகிறது. பல்லவர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். இங்கேயுள்ள ஸ்ரீவிநாயகரின் விக்கிரகம், பல்லவ காலச் சிற்பத்தை உணர்த்துவதாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பொய் சொன்னதால் சாபத்துக்கு ஆளான பிரம்மதேவன், இந்த தலத்து இறைவனை வணங்கி பலன் பெற்றாராம். ஞானநூல்கள் பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி ஆகிய எட்டு வகை நிதிகளைப் பற்றி விவரிக்கின்றன. இந்த அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தனது கடும் தவத்தால் ஈசனிடமிருந்து பெற்றவர், குபேரன். நிதிகளையெல்லாம் ஒருங்கே பெற்ற குபேரன் வழிபட்ட தலங்களுள், அன்னம் புத்தூர் திருத்தலமும் ஒன்று. எனவே, இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்குத் திருநிதீஸ்வரர் எனத் திருநாமம் அமைந்ததாகத் தெரிவிக்கிறது, கல்வெட்டு ஒன்று. தீபாவளித் திருநாளில் வணங்கவேண்டிய தெய்வம் குபேரன். அன்று லட்சுமிகுபேர பூஜை செய்து வழிபடுவார்கள். அப்படி அவரை பூஜிப்பதுடன், தீபாவளி விடுமுறையில் இந்த அன்னம்புத்தூருக்கும் சென்று குபேரன் வழிபட்ட நிதீஸ்வரரையும் வழிபட்டு வாருங்கள். அவரருளால் உங்கள் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பொங்கிப் பெருகும்.

எப்படிச் செல்வது?: திண்டிவனம்- புதுச்சேரி செல்லும் வழியில், வரகுப்பட்டி எனும் ஊருக்கு அடுத்துள்ள சாலையில் சுமார் 4 கி.மீ பயணித்தால், அன்னம்புத்தூரை அடையலாம். பஸ் வசதி குறைவுதான்; வரகுப்பட்டில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

- எழில்வண்ணன், சென்னை-15

தீபாவளி சீர் வாங்கும் திருமகள்

காவிரி தென்கரையில் உள்ள 127 சிவ தலங்களில் 65-வது தலம் திருநறையூர் சித்தநாதீஸ்வரர் ஆலயம். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் - திருவாரூர் பாதையில் சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில். நர - நாராயணர் பட்சி ரூபமாக எழுந்தருளியதால் இந்த ஊருக்கு திருநறையூர் என்றும் பெயர் உண்டு. காலப்போக்கில் ஊர் வளர... திருநறையூர் மற்றும் நாச்சியார்கோவில் என இரண்டு ஊர்களாக அறியப்படுகின்றன!

தேவர்களது சாபத்தால் அவதிபட்ட கோரக்கச் சித்தர், இந்த தலத்துக்கு வந்து தவமிருந்து விமோசனம் பெற்றாராம். எனவே, திருநறையூர் இறைவனுக்கு சித்தநாதன் என்று பெயர்; கோயிலையும் சித்தீச்சரம் என்றே புராணங்கள் கூறுகின்றன. மேதாவி மகரிஷி கடும்தவம் இருந்து சிவபெருமானிடம், ``மகாலட்சுமியே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும்’’ என்று வரம் கேட்டுப் பெற்றாராம். அதன்படி மகாலட்சுமி இத்தலத்தில் அவதரித்து, குபேரனுக்கு அருள்புரிந்ததாக தலபுராணம் சொல்கிறது. ஒரு கட்டத்தில்... தன் மகளுக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனிடம் மேதாவி மகரிஷி வேண்டினார். இதை ஏற்று ஸ்ரீபார்வதி தேவி சமேதராகக் காட்சி தந்து, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு மகாலட்சுமியை கன்னிகாதானம் செய்து வைத்தாராம் சிவபெருமான்.

இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்... மகாலட்சுமிக்கு வழங்கப்படும் தீபாவளி சீர் வைபவம். தீபாவளிக்கு முதல் நாள் ஸ்ரீசித்தநாதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து, பட்டுப் புடவை, வேஷ்டி துண்டு, பூமாலை, பழங்கள் மற்றும் தாமரை மலர்கள் ஆகியவற்றை, மேளதாளத்துடன் ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலுக்கு எடுத்துச்சென்று, தீபாவளி சீராக வழங்குவது வழக்கம். மேதாவி மகரிஷியின் வேண்டுகோளின்படி, நாச்சியார்கோவில் ஆலயத்தில், மகாலட்சுமிக்கே முதல் மரியாதை. வீதி உலாவின் போதும், மகாலட்சுமியே முதலில் வருகிறாள். அவளைத் தொடர்ந்து பெருமாள் பவனி வருவார்.

எப்படிச் செல்வது? தஞ்சை மாவட்டம், கும்பகோணம் - திருவாரூர் பாதையில் சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில். கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து பஸ் வசதிகள் உண்டு.

- இ.ராமு, சென்னை-53

`செந்தூர் கந்தய்யா..!'

தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்துவரும் ஒப்பற்ற வைபவம் கந்தசஷ்டி. இந்த வைபவத்துக்குப் பெயர்பெற்ற தலம் திருச்செந்தூர். இவ்வூரின் பெயரைச் சொன்னதுமே இத்தலத்தின் சிறப்புகளான நாழிக்கிணறு, வள்ளிக்குகை, பிரணவ அமைப்பாய் திகழும் ஆலயம், பன்னீர் இலை விபூதிப் பிரசாதம், பஞ்ச லிங்க தரிசனம் ஆகியவையும் நம் நினைவுக்கு வரும். இவை தவிர வேறு பல சிறப்புகளும் உண்டு திருச்செந்தூருக்கு!

திருப்பெயர் சிறப்பு

`வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை’ என்று புறநானூறும், `சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்’ என்று சிலப்பதிகாரமும் திருச்செந்தூரைப் போற்றுகின்றன.

கடல் அலைகள் வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், முருகப் பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கபாடபுரம், அலைவாய், கந்தமாதன மலை, திருச்செந்தில் என்ற வேறு பெயர்களும் உண்டு. வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் இது வியாழக்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது. இத்தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.

அஷ்டலிங்க தரிசனச் சிறப்பு!

கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற் காகவே. முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங் களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போது தான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும். அஷ்ட லிங்கங்கங்களில் பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதிகம்.

நைவேத்தியச் சிறப்பு

மூலவருக்கான நைவேத்தியத் தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினை மாவு ஆகியவை இடம்பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம்பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.

பூஜை சிறப்பு

செந்திலாண்டவர் ஒருமுகம், நான்கு திருக் கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதிகம்.

தினமும் காலை சுமார் 5:30 மணிக்கு கொடி மரத்தின் முன்பு திருவனந்தல் எனப்படும் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அப்போது குமாரோபனிஷத்தில் உள்ள துவாதச நமஸ்காரம் செய்யப்படுகிறது. விராட் புருஷனின் பாத ஸ்தானத்தில் செந்தூர் அமைந்திருப்பதால், இது தினமும் நடைபெறுகிறது. உச்சிக் காலம் முடிந்ததும், மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்கு சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. இரவு சுமார் 9.45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள்.

சஷ்டி விரதச் சிறப்பு

‘சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூரசம்ஹாரம்’ என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மனுடன் போரிட்டு அழித்தபின் தன் படைகளுடன் செந்தூரில் வந்து தங்கினார். அங்கு ஈசனை வழிபடுவதற்கு தேவதச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். இங்கே சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.

கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதை ‘சாயாபிஷேகம்’ (சாயா- நிழல்) என்பர்.

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

- தி.சுப்ரமணியம், திருநெல்வேலி-2