தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

திருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்!

தாமிரபரணி கரைச் சித்தர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தாமிரபரணி கரைச் சித்தர்கள்!

படங்கள்: பே.சுடலை மணி செல்வன்

தாமிரபரணி வற்றாத ஜீவநதி. இந்த நதிக்கரையில்தான் எத்தனை எத்தனை அற்புதங்கள், நவதிருப்பதிகள், நவகயிலாயம், நவலிங்கபுரம், நடராஜரின் பஞ்ச தலங்கள், பஞ்சலிங்க தலங்கள் எனப் பல்வேறு தலங்கள் உள்ளன.
திருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்!

தாமிரபரணியைத் தோற்றுவித்த அகத்தியப்பெருமானே, தென்றல் தோன்றும் பொதிகை மலையில் தமிழ் இலக்கண முதல் நூலான அகத்தியத்தினையும் வெளியிட்டார் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை. பொதிகை மலையில்தான் தாமிரபரணி தோன்றுகிறது. தாமிரபரணி கரைகள்தோறும் எத்தனை திருத்தலங்கள். அவை அனைத்துமே சிறப்பானவையே. பொதிகை மலையில் அகத்தியர், தேரையர், இடைகாடர், அத்ரிமகரிஷி, கோரக்கர் உட்பட பல சித்தர்களின் சுவடுகள் காணப்படுகின்றன. அவர்கள் இவ்வுலகில் வாழும் மானுடன் நற்கதி அடைய பல்வேறு மருத்துவம் மற்றும் நூல்களை நமக்கு அருளியுள்ளனர். அதுபோலவே நமது பூவுலகில் வாழ்ந்து பல அரிய பெரிய காரியங்களையெல்லாம் செய்துவிட்டு தாமிரபரணி கரையில் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் எண்ணற்றவர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்புகூட அவர்களின் சுவாசம் தாமிரபரணி கரையில் வீசிக்கொண்டிருந்தது. அவர்களைப் பற்றி அறிவது மிகச் சிறப்பானதாகும். எனவேதான் தாமிரபரணி கரைச் சித்தர்களில் இந்த மகான்களைப் பற்றி அறிய போகிறோம்.

திருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்!

தீராத நோயையும் தீர்க்க வல்ல வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்

தலம்: வல்லநாடு (பாறைக்காடு) சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பீடம்

சித்தர்: வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்

வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்
வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்

திருத்தல சிறப்புகள்: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாது - உலகம்மை தம்பதியினருக்கு ஐப்பசி மாதம் அமாவாசையன்று சித்திரை நட்சத்திரத்தில் (1929) வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பிறந்தார். சிறுவயது முதலே விஷத்தை இறக்கும் சக்தி பெற்றார். ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இருக்கும் வல்லமை படைத்தவர். இவர் ஏற்றிவைத்த தீபம் சுமார் 50 வருடங்களாக அணையாமல் எரிகிறது. இவர் மிருகங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்பவர். சதுரகிரியில் மதம் பிடித்த ஒற்றை கொம்பன் யானையைத் தன்வசப் படுத்தியவர். வெண்குஷ்டம் உட்பட பல நோய்களைத் தனது மருத்துவ வலிமையால் விரட்டியவர். அன்னதானமே சிறந்த தானம் என அன்னதானத்தை நடத்தி காட்டியவர். தற்போதும் இவர் பீடத்தில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.

வழிப்பாடு சிறப்புகள்: வியாழக்கிழமைதோறும் இங்கு வந்த வழிபடுவது சிறப்பாகும். பௌர்ணமி, அமாவாசை நாள்களிலும், பூச நட்சத்திர நாள்களிலும் இங்கு சிறப்பாக பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வணங்கி உள்ளே சுவாமி, அவர் துணைவியார், தாய் தந்தையர், சின்ன தாயார் சின்ன தந்தையார், மணிகண்டன் அடக்க ஸ்தலங்களை வணங்கி, நமக்கு என்ன வேண்டுமோ அதை வேண்டி அன்னதானம் செய்து சாப்பிட்டுக் கிளம்பினால் கேட்ட வரம் கிடைக்கிறது.

அமைவிடம்: வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பீடத்துக்குச் செல்ல திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாட்டில் இறங்கி கலியாவூர் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாறைக்காடு என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும். வல்லநாட்டிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கோயில் தினமும் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சுவாமியை தரிசித்துவிட்டு, அவர் தியானம் செய்த இடத்தில் நாமும் தியானம் செய்து மன நிம்மதியுடன் வரலாம்.

கண்நோய் தீர்க்கும் பாலாமடை நீலகண்ட தீட்சிதர்

தலம்: பாலாமடை நீலகண்ட தீட்சிதர் பீடம்

சித்தர்: நீலகண்ட தீட்சிதர்

நீலகண்ட தீட்சிதர்
நீலகண்ட தீட்சிதர்

திருத்தலச் சிறப்புகள் : மதுரையை ஆண்ட மன்னர் திருமலைநாயக்கரிடம் மந்திரியாக வேலை பார்த்தவர் நீலகண்ட தீட்சிதர். முக்காலும் உணர்ந்தவர். ஆனால், அவரை பற்றி முழுமையாக மன்னர் அறியாமல் இருந்தார். மன்னர் ராணியின் சிலை செய்யும்போது தொடையில் மச்சம் உள்ளதுபோல சிற்பி வடிக்கிறார். இதுகுறித்து மந்திரி நீலகண்டர், `உண்மையிலே ராணிக்கு மச்சம் உள்ளது, அதை அப்படியே விட்டுவிடுங்கள்' என கூற, மன்னர் திருமலை நாயக்கருக்கு இந்த தகவல் செல்கிறது. `ராணியின் தொடையில் மச்சம் உள்ளது மந்திரிக்கு எப்படி தெரியும்? எனவே அவர் தவறானவர்' என கருதி, நீலகண்டரின் கண்களை எடுக்க படை வீரர்களை அனுப்புகிறார். அதற்கு முன்பே கற்பூரத்தினால் கண்ணை எரித்துக்கொண்டார் தீட்சிதர். `நான் கண்ணை எடுத்துவிட்டேன் என உன் மன்னனிடம் போய் சொல்லுங்கள்' என அனுப்பி வைத்தார். `தீட்சிதர் பெரிய ஞானி. அவருக்கு அனைத்தும் தெரிகிறது' என மன்னிப்பு கோரினார் மன்னர். அதன்பின் அவரிடம் தன் பணியைத் தொடர ஆசைப்படாத தீட்சிதர் தாமிரபரணி கரையில் கோழி கூவாத, உலக்கை சத்தம் கேட்காத ஓரிடம் எனக்கு வேண்டும் எனக் கேட்டு பாலாமடையில் வந்து அமர்ந்தார். 1664-ல் மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமியன்று சமாதிநிலை அடைந்தார். இவர் அடங்கிய இடத்தில் காசி விசுவநாதரையும் அருகில் தெற்குநோக்கி விசாலாட்சி அம்மனையும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறார்கள்.

வழிபாட்டு சிறப்புகள்: இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆராதனை ஜயந்தி உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. தற்போதும் இங்கு தீட்சிதர் தவமேற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, அமைதியுடனே இங்கு வந்து அவர் அருள்பெற்று செல்கின்றனர். இவரை வழிபட்டால் கண்நோய், மனநோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அமைவிடம்: திருநெல்வேலி சந்திப்பிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பாலாடை அக்ரஹாரம் உள்ளது. ஆட்டோ வசதி, பஸ் வசதி உண்டு. நடை தினமும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.

மரண பயத்தைப் போக்கும் அடையகருங்குளம் உண்ணாசுவாமி சித்தர்

தலம் : அடையகருங்குளம் உண்ணாசுவாமி சித்தர் பீடம்

சித்தர்: உண்ணாசுவாமி சித்தர்

உண்ணாசுவாமி சித்தர்
உண்ணாசுவாமி சித்தர்

திருத்தலச் சிறப்புகள் : உண்ணாசுவாமி உணவு எதுவும் உண்ண மாட்டார். பொதிகை மலைக்குத் தினமும் நடந்தே சென்று வாண தீர்த்தத்தில் நீராடி வருபவர். ஊர்காடு ஜமீன்தாரிடமிருந்து அடையகருங்குளம் உள்ள பகுதியை விலைக்கு வாங்கி மக்களைக் குடியிருக்க வைத்துள்ளார். ஆகவே, இவ்வூர் சாமியார்பட்டி என்றழைக்கப்பட்டு, தற்போது அடையகருங்குளம் என அழைக்கப்படுகிறது. இவர்கூறியது பல அப்படியே நடந்துள்ளது. பொதிகை மலைக்கு சிங்கம்பட்டி ஜமீன்தார் வேட்டைக்குச் சென்றபோது, `இன்று உனக்கு புலி கிடைக்கும்' என்று கூறினாராம். அது அப்படியே நடந்துள்ளது. ஆகவே, சிங்கம்பட்டி ஜமீன்தார் இவருக்கு வேண்டிய உதவி செய்துள்ளார். அடிக்கடி இவரை நாடிவந்து ஆசி வேண்டியுள்ளார். இயற்கை வைத்தியம் பார்த்த இவர், `பொட்டல் கிராமத்தில் பொங்கும் விவசாயம் செழிக்கும்' என்று கூறினார். அதுபோலவே அவ்வூரில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டு, பொட்டல் கிராமம் விவசாயம் செழிக்கும் கிராமமாக மாறியது. பங்குனி அவிட்ட நட்சத்திரத்தில் இவருக்கு வருடந்தோறும் விழா நடைபெறுகிறது.

வழிபாட்டு சிறப்புகள் : இந்த ஆலயத்தில் தினமும் உண்ணாசுவாமி சித்தரை வணங்கி தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை முகத்தில் தெளித்தால் நாட்பட்ட நோய் தீருகிறது. தினமும் அழும் குழந்தையின் பயம் நீங்கி, அழுகை நிற்கிறது. மரண பயம் நீங்குகிறது. இரவில் வரும் மோசமான கனவு வராமல் போகிறது. இக்கோயிலில் பூஜைவைத்து வணங்கி நின்றால் வியாபார விருத்தி நடைபெறுகிறது. விவசாயத்தில் பிரச்னை என்றாலும் தீருகிறது.

அமைவிடம் : நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் நான்காவது கிலோமீட்டரில் அடையகருங்குளம் உள்ளது. அங்குள்ள வைகுண்ட சுவாமி கோயில் வளாகத்துக்கு உண்ணாசுவாமி பீடம் உள்ளது. இப்பகுதிக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. நடை தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

விஷத்தை இறக்கும் சேர்மன் சுவாமி

தலம்: ஏரல் சேர்மன் சித்தர் பீடம்

சித்தர்: ஏரல் சேர்மன் சுவாமிகள்

ஏரல் சேர்மன் சுவாமிகள்
ஏரல் சேர்மன் சுவாமிகள்

திருத்தலச் சிறப்புகள்: ஏரல் பேரூராட்சியில் சேர்மனாக இருந்த அருணாசல சுவாமிகள் 27.07.1908 அன்று சமாதி நிலை அடைந்தார். அவருடன் விலையுயர்ந்த பொருள்கள் புதைக்கப்பட்டது. அதைத் தோண்டி எடுக்க வந்த திருடர்களை பாம்பு விரட்டியது. அவர் தந்தை அங்கு ஒரு சமாதியைக் கட்டினார். இந்த சமாதியில் லிங்க வடிவில் புற்று வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆலயத்தைப் பற்றி ஆங்கிலேயர் பேட் என்பவர் 1916 அரசு ஆவணத்தில், `இந்தக் கோயில் முன்பு அனைத்து சாதி மதத்தினர் கூடுகிறார்கள். நோயை குணமாக்கிச் செல்கிறார்கள். பில்லி சூன்யம் தீருகிறது. இங்குள்ள புற்று மண்ணை கையால் எடுத்து மருந்தாக உண்ணுகிறார்கள். உடம்பில் பூசி நோய் குணமடைகிறார்கள்' என எழுதி வைத்துள்ளார். ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்குக் காட்சியளித்தவர் ஏரல் சேர்மன் சுவாமிகள்.

வழிபாட்டு சிறப்புகள்: லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் பல நோய்கள் தீருகிறது. மருத்துவர்கள் கைவிடப்பட்ட வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி எனப் பல நோய்கள் தீர்கின்றன. நோயாளிகள் தாமிரபரணியில் காலையிலும் மாலையிலும் நீராடி லிங்க அபிஷேக தீர்த்தத்தில் நிலக்காப்பையும் கரைத்து உடம்பில் பூசியும், குடித்தும் விரதங்கள் மேற்கொண்டு வந்தால் 21 நாள்களில் நோய் தீர்ந்து விடுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தீர்த்தம், நிலக்காப்பு ஆகிய இரண்டையும் பூசியும் குடித்தும் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள்

அமைவிடம்: நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் தென்திருப்பேரையில் இருந்து இடப்புறம் திரும்பிச் சென்று ஏரல் தாமிரபரணிக் கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் அருளைப் பெறலாம். குரும்பூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஏரல் உள்ளது.

நடை தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பில்லி சூனியத்தைப் போக்கும் கருப்பந்துறை அமாவாசை சித்தர்

தலம்: கருப்பந்துறை அமாவாசை சித்தர் பீடம்

சித்தர்: அமாவாசை சித்தர்

அமாவாசை சித்தர்
அமாவாசை சித்தர்

திருத்தலச் சிறப்புகள்: குளத்தூர் ஜமீன்தார் தில்லை தாண்டவராயர், அமாவாசை சித்தரை காசியில் இருந்து கூட்டி வந்தார். இவர் கடை வெளியில் சுற்றி வருவார். வியாபாரிகள் தரும் உணவைச் சாப்பிடுவாராம். அமாவாசையில் மட்டுமே இவர் குளிப்பார். எனவே அமாவாசை சாமியார் எனப் பெயர் பெற்றார்.

நெல்லையப்பர் கோயில் உள்ளே ஆறுமுக நயினார் சந்நிதி நம்பூரிதிகள் மந்திரம் செய்து சாமியைக்கட்டி, கோயிலையும் பூட்டிவிட்டார். அவரது சக்தியை முறியடித்தால்தான் ஆறுமுக நயினாரை மக்கள் தரிசனம் செய்ய முடியும்.

கருப்பந்துறை போகர் மாயாசித்தர் ஆசிரமத்தில் வைத்து ஶ்ரீசக்கரத்தை உருவாக்கினார். இது இருக்கும் இடத்தில் எந்தவித தீய சக்தியும் ஒழிந்து போகும். குறிப்பிட்ட நாளில் ஶ்ரீசக்கரத்தினை ஆறுமுகநயினார் சந்நிதியில் பிரதிஷ்டை செய்தார் அமாவாசை சித்தர். நம்பூரிதிகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் உடைக்கப்பட்டது. கோயில் திறக்கப் பட்டது. அதன்பின் ஆறுமுக நயினாருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பயமின்றி பக்தர்கள் வர ஆரம்பித்தனர்.

வழிபாட்டு சிறப்புகள்: அமாவாசை சித்தர் அடங்கிய பின்பு, ஆறுமுகநயினார் சந்நிதியைத் திறக்க பயன்படுத்திய ஶ்ரீசக்கரத்தை சித்தர் சமாதியின் மேலேயே பிரதிஷ்டை செய்து விட்டனர். தாமிரபரணி கரையில் கருப்பந்துறையில் உள்ள நந்தவனத்தில் அமாவாசை சாமியை தரிசனம் செய்யலாம். இங்கு வசிக்கும் ஶ்ரீசிவானந்தா மாயா சுவாமிகளால் புற்றுநோய் உட்பட தீராத நோய்கள் தீர்க்கப்படுகிறது.

அமைவிடம்: நெல்லை மாவட்டம், டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் வழியில் கருப்பந்துறை என்னும் ஊரில் சாலை ஓரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. இங்கு செல்ல மேலப்பாளையம் மற்றும் நெல்லை டவுன் மற்றும் நெல்லை சந்திப்பிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.

நடை தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.