திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

‘ஆரூரா... தியாகேசா!’

திருவாரூர் தேர் விழா!
பிரீமியம் ஸ்டோரி
News
திருவாரூர் தேர் விழா!

திருவாரூர் ஆழித் தேரோட்டம்; தொகுப்பு: எஸ்.கண்ணன்

திருவாரூர்- பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்கு உரிய தலம். சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது இது. சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டவை திருவாரூர் நகரமும் ஆலயமும் என்கின்றன புராணங்கள்.

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் கோயில் குறித்து, `அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டார்’ என்று அப்பர் பெருமான் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆரூரா... தியாகேசா!’

இதையே, ‘கோயில் ஐந்து வேலியாம். தீர்த்தக் குளம் ஐந்து வேலியாம். செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்து வேலியாம்’ என்பார்கள். திருவாரூர் கோவை என்ற நூலில் ‘குளம் வாவி மதில் ஐவேலியாம். திருவாரூர் தியாகர்’ என்ற குறிப்பு இருக்கிறது. திருக்கோயிலின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர். கமலாலயத் தெப்பக்குளம் - சுமார் 25 ஏக்கர். செங்கற் தளியாக இருந்த திருவாரூர் ஆலயம் பிறகு சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால் கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டது. முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், நாயக்க மன்னர்கள், விஜய நகர அரசர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்டிருக்கிறது!

வரும் ஆழித் தேரோட்டம் விழாவை முன்னிட்டு, பூலோக அற்புதமான திருவாரூர் குறித்த சிலிர்ப்பூட்டும் தகவல்கள் உங்களுக்காக...

தியாகேசர்
தியாகேசர்

பாகற்காய் பொரியல்!

யோக நெறியில் நிற்கும் சாதகர்கள், பாகற்காய் பொரியலும், தூதுவளைக் கீரை மசியலும் உண்பது வழக்கம். ஆகையால் தியாகேசப் பெருமானுக்கு தூதுவளையும், பாகற்காயையும் உச்சிகால வேளையில் நிவேதிக்கும் வழக்கம் இருந்தது. முன்னாளில் பெருந் திரு விழாவில் ஒரு நாள் ‘பாகற்காய் மண்டபப் பிரவேசம்’ என்ற வைபவம் நடந்ததாம்.

மேலும், ஸ்ரீ தியாகராஜருக்கு நைவேத்தியமாக நெய் தேன்குழல், பெரிய உளுந்து வடை படைக்கப்படுகின்றன. தியாகேசருக்கு செங்கழுநீர்ப்பூ சாத்துவது சிறப்பு.எத்தனை பெயர்கள்?

ஆரூர்ப் பெருமானை ‘பவனி விடங்கர்’, ‘விடங்கராய் வீதி போந்தார்’ என்றெல்லாம் சிறப்பிக்கிறது தேவாரம். ‘தக்கார்க்குத் தக்கான்’ எனும் பெயரும் உண்டு.

மேலும் சில திருப் பெயர்கள்: அசைந்தாடும் பெருமாள், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், ரத்தின சிம்மாசனாதிபதி, கருணாகரத் தொண்டை மான், கனகமணித் தியாகர், தியாக விநோதர், மணித் தண்டில் அசைந்தாடும் பெரு மான், செவ்வந்தித் தோடழகர், செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், கம்பிக் காதழகர், வசந்த வைபோகத் தியாகர், தேவசிந்தாமணி, தியாக சிந்தாமணி, அந்திக் காப்பழகர், தியாகப் பெருமான், செம்பொன் தியாகர், கிண்கிணிக்காலழகர், தேவரகண்டன்.பூ அம்பலம்!

தில்லை பொன் அம்பலம் எனில், ஆரூர் ஶ்ரீதியாகராஜ சபைக்கு ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர். எல்லா கோயில்களிலும் பாடும் முன் திருச்சிற்றம்பலம் என்பர். இங்கு ‘ஆரூரா தியாகேசா’ என இரு முறை கூறுவர்.

அஜபா தாண்டவம்!

நித்திய பூஜை, திரு மஞ்சனம் ஆகியவை மூலவரின் அருகிலிருக்கும் மரகத லிங்கத்துக்கே நடைபெறுகிறது. பஞ்ச தாண்டவங்களில் இங்கு அஜபா தாண்டவம் நடை பெறுகிறது. வாயால் சொல்லாமல் சூட்சுமமாக ஒலிப்பதால், இதற்கு அஜபா (ஜபிக்கப்படாதது) என்று பெயர். இந்த வித்தையை விளக்குவதே திருவாரூர் தியாகராஜரின் அஜபா - ஹம்ஸ நடனத் தத்துவம்.

தியாகபதி தரிசனம்!

ருட ஆரம்பமான வசந்த காலத்தில் பௌர்ணமி அன்று, குரு சந்திரயோகம் சேர்ந்த கடக லக்கினத்தில், புண்ணியபுரம் எனும் திருவாரூரின் நடுவில் தியாகபதியாகத் தோன்றினார் சிவபெருமான். அப்போது திருக்கோயிலின் நடுவே லிங்கமாகவும், தியாகராஜ வடிவமாகவும் தோன்றினாராம்.

இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பெற்றார். பின்னர் இந்த தியாகராஜ மூர்த்தம், திருமாலால் இந்திரனுக்கும் இந்திரனால் முசுகுந்த சக்ரவர்த்திக்கும் அளிக்கப்பட்டது.

சோமகுல ரகசியம்!

மூலவரான வன்மீகநாதர் சுயம்புத் திருமேனி. தியாகராஜர் சோமாஸ்கந்தராகக் காட்சி தருகிறார். தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதை `சோமகுல ரகசியம்' என்பர். ஶ்ரீசக்ரம் இறைவனின் மார்பை அலங்கரிப்பதால், இவர் மேனி காணக் கிடைக்காதது என்பர்.கடன் பிரச்னை தீர்க்கும் ருண விமோசனர்!

ஆலயத்தினுள் தெற்கு நோக்கி காட்சி தருகிறது ருண விமோசனர் சந்நிதி. அமாவாசை அன்று இவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். கடன் மற்றும் தோல் வியாதி இருப்பவர்கள், இவரை வேண்டி பலனடைந்ததும் உப்பு வாங்கிக் கொட்டுகிறார்கள்.

திருவாரூர் கோயிலில் விஸ்வகர்ம லிங்கமும் உண்டு. இந்த லிங்கத்துக்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் செங்கல் வைத்து அபிஷேகித்து வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும். அதேபோல், இரண்டாம் பிராகாரத்தில் ‘ஜுரஹரேஸ்வரர்’ சந்நிதி உள்ளது. நோயாளிகள் இவரை வேண்டி, ரசம் நிவேதித்தால், நோய்களிலிருந்து விடுபடலாம்.


எண்ணியவை ஈடேற தாமரை வழிபாடு!

திருவாரூரில் அமைந்த விசேஷ சந்நிதிகளில் ஒன்று ஆனந்தீஸ்வரர் சந்நிதி. இந்த ஈஸ்வரரைப் பௌர்ணமி மற்றும் விசாகம்... குறிப்பாக வைகாசி விசாகத்தில் அபிஷேக- ஆராதனை செய்து தாமரை மலரால் வழிபட்டால் எண்ணியவை ஈடேறும்.

ஆனந்தீஸ்வரம் நுழைவாயிலில் வலப்புறம் ஜேஷ்டாதேவி அமைந்துள்ளாள். வனதுர்கை, வாராகி, அஸ்வாரூடாவும் புடைசூழ அமர்ந்துள்ளனர். இவளை வியாழக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளும், உடல் உபாதைகளும் குணமாகும் என்பது ஐதிகம்.

ஶ்ரீகமலாம்பிகை
ஶ்ரீகமலாம்பிகை

கமலாம்பிகை தரிசனம்!

மூன்றாவது பிராகாரத்தில், வடமேற்குத் திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த அம்பிகை மூன்று தேவியரின் சங்கமம். க- கலைமகள், ம- மலைமகள், ல- அலைமகள். சர்வேஸ்வரனைப் போன்று தன் சிரசில் கங்கையையும், பிறையையும் சூடி, யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள்.

அம்பிகைக் கோயிலின் மேற்கு மூலையில் 51 அட்சரங்கள் எழுதப்பெற்ற அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. கமலாம்பிகை கருவறையின் அணுக்க வாயிலின் இரு புறமும் சங்க-பதும நிதிகள் உள்ளன.

தியாகராஜரின் அருகில் வீற்றிருக்கும் தேவிக்குப் பெயர் ‘கொண்டி’. இறைவனின் அருளை பக்தன் அடைந்து இன்புறச் செய்பவள் என்பதால் இப்பெயர். கொண்டி என்பதற்கு ‘இணைப்பது’ என்று பொருள்.

இத்தலத்தின் ஆதி சக்தியான நீலோத்பலாம்பிகைக்கும் (அல்லியங் கோதை) தனிச் சந்நிதி உள்ளது. நான்கு கரங்கள் கொண்ட இவளின் அருகே இடுப்பில் முருகப் பெருமானைத் தாங்கியபடி தோழி ஒருத்தி உள்ளாள். அம்பிகை, தன் இடக் கரங்களில் ஒன்றால் முருகனின் தலையைத் தொட்டபடி காட்சியளிக்கிறாள். இது அபூர்வ தரிசனம்!

ஒட்டு தியாகேசர்!

டக்குக் கோபுரத்தின் எதிரில் வெளிப்புறச் சுவரை ஒட்டி சிவன் சந்நிதி ஒன்று உள்ளது. இவர் ஒட்டுத் தியாகேசர். விறன்மிண்ட நாயனார், ஆலயத்துக்குள் போக விடாமல் தடுத்ததால் மனம் வருந்தினார் சுந்தரர். அவரது வருத்தத்தைப் போக்க தியாகராஜ பெருமான் இங்கு சுந்தரருக்குக் காட்சியளித்தாராம்.

ஆழித்தேர்!
ஆழித்தேர்!

ஆழித் தேர்!

திருவாரூர் என்றதுமே நம் நினைவுக்கு வருவது ஆழித்தேர் அல்லவா! `ஆரூரா தியாகேசா' எனும் பக்தர்களின் முழக்கத்துடன் ஆடி அசைந்து வரும் தேரைக் காண்போருக்கு, ஓர் பேராலயமே நகர்ந்து வருவது போல் பிரமிப்பு தோன்றும்.

ஆழித் தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க... இரண்டு புல்டோசர்களும் தங்களின் பங்குக்கு, தேர் நகருவதற்குத் துணைபுரிகின்றன.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் நைலான் கயிறு கொண்டு வடம் பிடிக்கப்படுகிறது. சுமார் 60 மீட்டர் நீளத்தில், மொத்தம் நான்கு வடம் வைத்திருப்பார்கள். ஒரே நேரத்தில், 6,000 பக்தர்களுக்கும் அதிகமாக வடம் பிடிக்கலாம்!

இந்த வருடம், பிப்ரவரி 28 தொடங்கி நடைபெற்று வருகிறது ஆரூர்ப் பெருவிழா.

மார்ச் 25-ம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெறுகிறது.மார்ச் 27 அன்று தீர்த்தவாரி மற்றும் மகா அபிஷேகம் நடைபெற உள்ளன.மாசி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்று விழாவுடன் துவங்குகிறது திருவிழா.

27-ஆம் நாள், தேரோட்டம்! அந்த நாளில், மொத்தம் ஐந்து தேர்கள் வீதியுலா வரும். பெரிய தேரில் ஶ்ரீதியாகேசர் பவனி வருவார். மற்ற தேர்களில் ஶ்ரீகமலாம்பிகை, ஶ்ரீவிநாயகர், ஶ்ரீமுருகப்பெருமான், ஶ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் பின்னே வருவார்கள்.

இந்தத் தேர்கள் ஒவ்வொன்றும் சுமார் 50 டன் எடை கொண்டதாம்!சுமார் 99 அடி உயரமும், 36 அடி அகலமும் கொண்டது ஆழித் தேர். தேரின் மொத்த எடை, அலங்காரங்கள் இன்றி 200 டன்; அலங்காரத்துடன் 350 டன். தேரின் அனைத்துப் பகுதிகளிலும், ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அழகுச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.

தேர்ச் சக்கரம் ஒவ்வொன்றும் சுமார் 9 அடி உயரத்தில், 4 டன் எடையுடன் அமைந்துள்ளது. ஒவ்வொரு சக்கரத்துக்கும் இடையே சுமார் 24 அடி இடைவெளி உள்ளதாம்! சக்கரங்கள், திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் இரும்பினால் செய்யப்பட்டவை. அப்படி இரும்புச் சக்கரங்களால் அமைக்கப்பட்ட முதல் தேர் என்கிற பெருமையும் ஆழித் தேருக்கு உண்டு.

கமலாலயக் குளம்
கமலாலயக் குளம்

கமலாலய திருக்குளம்!

மலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம், ‘செங்கழுநீர் ஓடை’ ஆகிய தீர்த்தங்கள் திருவாரூரில் உள்ளன. கமலாலயக் குளத்தில் ஒருமுறை நீராடினால் மகாமக திருக்குளத்தில் 12 முறை நீராடிய புண்ணியம் கிடைக்குமாம். இதில், 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. இதன் நடுவில் யோகாம்பிகை சமேத நடுவணநாதர் (நாகநாதர்) கோயில் கொண்டுள்ளார். இங்கு செல்ல படகு வசதி உண்டு.

இந்தக் குளக் கரையில் மாற்றுரைத்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். விருத்தாசலத்தில் இறைவனிடம் பொன் பெற்ற சுந்தரர், அதை அங்குள்ள மணிமுத்தா நதியில் இட்டு, திருவாரூர் வந்து கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டார். அந்தப் பொன் தரமானதா என்று மாற்றுரைத்துப் பார்த்ததால், பிள்ளையாருக்கு இந்தப் பெயர். இங்கு தெப்பத் திருவிழா 3 நாள்கள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு மூன்று சுற்று வீதம் நடைபெறும் தெப்பத்தில் ஸ்ரீகல்யாண சுந்தரர் பவனி வருவார்.

துர்வாச முனிவருக்காகக் கமலாலயத் தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார் சிவனார். அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ‘கங்காஹ் ரதம்’ என்றும், துர்வாசரின் தாபத்தைத் தீர்த்ததால், ‘தாபஹாரணீ’ என்றும் திருப்பெயர்கள் வந்தன. இதில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்தத் தீர்த்தத்தின் தென்கரையில் துர்வாச மகரிஷி மடம் இருக்கிறது. இங்கு கமலாம்பிகையை துர்வாசர் மந்திர விதிப்படி பூஜித்திருக்கிறார்.

தீர்த்தக் கரையில் பர்ணசாலை அமைத்து, கமலநாயகி எனும் பெயரில் தவம் செய்தாள் அம்பிகை. பல்குண மாதம் - பௌர்ணமி, சுவாதி நட்சத்திரத்தில் தியாகராஜர் - கமலநாயகி திருமணம் நடந்தது என்கின்றன புராணங்கள்.