Election bannerElection banner
Published:Updated:

திருவாரூரில் நடைபெறவிருக்கும் யானை ஏறுவார் திருக்கல்யாணம்! சிறப்புகள் என்னென்ன?

திருவாரூர்
திருவாரூர்

திருவாரூர்: யானை ஏறுவார் திருக்கல்யாணம் - நாளை (02.03.2021) நடைபெறுகிறது.

திருவாரூர் தியாகராஜப்பெருமான் திருக்கோயிலில் யானை ஏறுவார் திருக்கல்யாண விழா பாரம்பர்ய மரபுப்படி நாளை (2.3.2021) கொண்டாடப்படுகிறது.

இந்திரன் பூஜித்த தியாகப் பெருமான் திருமேனியை திருவாரூரை ஆண்ட முசுகுந்த மன்னன் பெற்று வந்து திருவாரூரில் ஸ்தாபித்து பூஜித்து வந்தான். இந்தக் கட்டத்தில் சிவபெருமானை வழிபடுவதை இந்திரன் மறந்துவிட்டான். அதனால் அவன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். சிவபெருமானின் சாபத்தால் இந்திரன் பூலோகத்திற்கு அனுப்பப்பட்டு, பறை அறைபவனாகப் பிறக்கிறான். தன் மானுடப் பிறவி நீங்க திருவாரூர் தியாகேசப் பெருமானை வணங்க இந்திரன் முயல்கிறான். ஆனால் இந்திரனைக் கோயிலுக்குள் விட மறுக்கிறார்கள். அதனால் அவன் ஒரு கண்ணாடியை வைத்துக் கண்ணாடியில் தெரியும் தியாகராஜரின் பிம்பத்தை வழிபடுகிறான். இதனால் சாபம் நீங்கி மீண்டும் தேவர்களின் தலைவனாகிறான்.

இந்தப் புராண நிகழ்வையொட்டி ஆண்டுதோறும் பறை அறையும் திருக்குலச் சமூகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக 'யானை ஏறுவோர் பெருவிழா' நடைபெறுகிறது. பறை அறையும் சமூகத்தவர் இந்திர குலத்தவர் என்று பெருமை படுத்தப்படுகின்றனர்.

திருவாரூர்
திருவாரூர்

இவ்விழாவின்போது இந்திர குலத்தோர் திருக்கோயிலின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு  இந்திர குல மரபின் தலைவர் ஒருவருக்கு திருக்கோயிலின் உயரிய மரியாதையான பரிவட்டம் கட்டி, ருத்ராட்ச மாலைகள் அணிவிக்கப்பட்டு வெண் கொற்றக்குடையின் கீழ் அமரச்செய்து சுவாமிக்குத் திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டு முதல் மரியாதை தரப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் யானையோடு அவருக்குப் பின்னே செல்ல தியாகராஜர் வீதிகளில் பவனி வரும் காட்சி  நடைபெறும்.

பெயரளவுக்கு நடந்த வந்த இவ்விழாவை பெரிய விழாவாக நடத்த வேண்டும் என்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இந்தாண்டு இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு