Published:Updated:

குழந்தைகளின் தோஷம் தீர்க்கும் தீர்த்தம்! குறையில்லா வாழ்வு தரும் திருவாசி!

திருவாசி
பிரீமியம் ஸ்டோரி
திருவாசி

எஸ்.ஜெகதீஸ்வரி

குழந்தைகளின் தோஷம் தீர்க்கும் தீர்த்தம்! குறையில்லா வாழ்வு தரும் திருவாசி!

எஸ்.ஜெகதீஸ்வரி

Published:Updated:
திருவாசி
பிரீமியம் ஸ்டோரி
திருவாசி

திருக்கோயில் திருவுலா

திருப்பாச்சிலாச்சிராமம் என்று ஞானநூல்கள் போற்றும் தேவாரத் திருத்தலம் திருவாசி. `வாசி’ என்றால் குற்றம். குற்றமில்லாத பெருவாழ்வு பெற, திருவாசியில் எழுந்தருளி இருக்கும் பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வர் ஒருவரே துணை என்று திருமுறைகள் புகழ்கின்றன.

திருவாசி
திருவாசி


தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் 62-வது காவிரி வடகரைத் தலம் இது. திருஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல்பெற்ற புண்ணிய க்ஷேத்திரம். சிவனடியார்கள் மகிழ்ந்து பாடிப் பரவும் `துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற பதிகம் பிறந்தது இந்தத் தலத்தில்தான்.

திருவாசி ஆலயம் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. ஹொய்சாள சோழ நாயக்கர்களால் பெரும் கற்றளியாக கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டடக் கலை சிறப்புகள் கொண்டது. நான்கு தூண் களுக்கு நடுவில், வெளியே எடுக்க முடியாதபடி திகழும் உருளைக் கல் சிற்ப வேலைப்பாடு, அதற்குச் சான்று.

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லி மழவன் என்ற மன்னனின் மகளுக்கு முயலக நோய் (வலிப்பு நோய்) பீடித்திருந்தது. மன்னன் எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் அவளின் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் திருஞானசம்பந்தர், மழவ நாட்டைச் சார்ந்த இந்தத் தலத்துக்கு எழுந்தருளினார். மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்று, தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினார்.

அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர், சிவனை வேண்டி ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க...’ எனும் பதிகத்தைப் பாடி வணங்க, மன்னன் மகள் குணமடைந்து எழுந்தாள்.

சகஸ்ரலிங்கம்
சகஸ்ரலிங்கம்
DIXITH
நடராஜர்
நடராஜர்
DIXITH
சண்முகப் பெருமான்
சண்முகப் பெருமான்
DIXITH


சிவபெருமான் அவளது முயலக நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன்மீது நின்று ஆடினாராம். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜரின் காலுக்குக் கீழே மற்ற கோயில்களில் இருப்பதுபோல் முயலகன் உருவம் இருக்காது; இறைவன் திருவடியின்கீழ் சர்ப்பம் திகழ, அதன் மீது நடனமாடும் திருக்கோலத்தில் திகழ்கிறார்.

இந்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர வேண்டும். இதனால் நரம்பு சம்பந்த மான பிரச்னைகள் நீங்கும்; வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன விலகும் என்கிறார்கள் பக்தர்கள்.

நடராஜ பெருமானுக்கு வருடத்தில் 6 அபிஷேகங்கள் நடைபெறுவது சிறப்பு. சித்திரை மாதம் திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய நாள்களில் காலை வேளையிலும், புரட்டாசி - சுக்லபட்ச சதுர்த்தசி, ஆவனி - சுக்லபட்ச சதுர்த்தசி, மாசி-சுக்லபட்ச சதுர்த்தசி ஆகிய தினங்களில் மாலையிலும் அபிஷேகம் நிகழும்.

திருஞானசம்பந்தரின் பதிகம் பாடி, அதன் பலனால் மன்னன் மகளின் பிணி தீர்ந்த அற்புதம் நிகழ்ந்த இடத்தைத் தனியே அடையாளப்படுத்தி வைத்துள்ளார்கள். அதேபோல், இவ்வாலயத்தின் ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், அக்னி மூலையில் மேற்கு நோக்கி (ஒருவரையொருவர் பார்ப்பதுபோல) அமைந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். கர்ப்பக்கிரகத்தில் ருத்திராட்சப் பந்தலின் கீழே சுயம்புநாதராகக் காட்சி தருகிறார் மூலவர்.

கிழக்கு நோக்கி அருளும் மூலவர் மாற்றுரைவரதீஸ்வர் மிகவும் விசேஷமானவர். இந்தத் தலத்துக்கு வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரைச் சோதிக்க நினைத்த சிவபெருமான், பொன் எதுவும் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், `சிவன் இருக்கிறாரா, இல்லையா’ என்ற பொருள்பட ஒரு பதிகம் பாடினாராம்.

பதிகத்தின் கடைசிப் பாடலில், தான் இறைவனை இகழ்ந்து பாடியதைப் பொறுக்குமாறு வேண்டி, ‘அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை’ என்று குறிப்பிட்டுப் பாடுகிறார். அடுத்த சில கணங்களில் அவருக்குக் காட்சியளித்த ஈசன், சுந்தரர் வேண்டிய பொன் முடிப்பைத் தந்தார்.

சிவனார் அளித்தது, உண்மையிலேயே பொன்தானா, தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்குவந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தைச் சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக்கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, ‘பொன் தரமானதுதான்’ என்றார். உடன்வந்தவரும் அதை ஆமோதித்தார். மறு நிமிடம் இருவருமே மறைந்து விட்டனர்.

சுந்தரர் திகைத்து நின்றபோது, சிவபெருமானே காட்சியளித்துத் தாமே வணிகர் வடிவில் வந்து பொன்னை உரைத்துக் காட்டியதைச் சுந்தரருக்கு விளக்கினார். உடன்வந்தவர் மகாவிஷ்ணு என்பதையும் அவருக்கு உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு ‘மாற்று உரை வரதர்’ அல்லது ‘மாற்று உரைத்த ஈஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

சோம வாரமாகிய திங்கட்கிழமையில் மாற்றுரைவரதீஸ்வரருக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட்டால் நிரந்தர வேலை, வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி, பூர்வீகச் சொத்து பிரச்னை நீங்குதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவாசி ஆலயத்தில், கிரக மூர்த்தியர் சூரியனை நோக்கியே அமைந்துள்ளனர். சூரியதேஷம் உள்ளவர்கள் இத்தல நவகிரகங்களை வழிபடுவது சிறப்பு.

சண்டிகேஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்துள்ள திருத்தலம் இது. தம்பதி ஒற்றுமை வேண்டவும், படித்துக்கொண்டிருக்கும் பெண்கள் மனம் தடுமாறாமல் படிப்பில் கவனம் செலுத்தவும் வேண்டி, இந்த அம்மனை வழிபடுகிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இந்தச் சண்டிகேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. கஜலட்சுமித் தாயாருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு; செல்வகடாட்சம் அருளும் அன்னை இவர்.

இத்தலத்தில் உள்ள தலவிருட்சமான வன்னிமரம் ஆயிரம் வருடங்கள் பழைமையானது. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் முன்மண்டபத்தில் அதிகார நந்தி தன் மனைவியுடன் அருள் பாலிப்பது சிறப்பு

இத்தலத்தில் அருளும் சண்முகப் பெருமான் சிறந்த வரப்பிரசாதி. இவரின் மயில் வாகனம் வழக்கத்துக்கு மாறாக இடம் மாறித் திகழ்கிறது. இவரை வழிபடுவதால் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்

அன்னமாம் பொய்கை
அன்னமாம் பொய்கை
DIXITH
திருவாசி சிவாலயம்
திருவாசி சிவாலயம்
DIXITH
சிற்பக் காட்சி
சிற்பக் காட்சி
DIXITH


கோயிலின் கமல மண்டபம் அருகில், ஞானசம்பந்தப் பெருமான் மன்னன் மகளின்நோய் தீர்த்த அற்புதம், சுந்தரர்க்கு இறைவன் பொற்கிளி கொடுத்த அற்புதத்தை விவரிக்கும் சிற்பக் காட்சிகளும், அர்த்தமண்டபத்தின் அருகில் கிளி கொடுத்தருளிய திருவாசலும் அவசியம் தரிசிக்கவேண்டியவை.

அம்பாள் சந்நிதியின் கோஷ்டத்தில் இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, கெளரி சக்தி, உமா சக்தி ஆகிய 5 அம்பிகைகள் அருள் வது, இக்கோயிலின் சிறப்பம்சம்.

இங்கே அருள்புரியும் பாலாம்பிகை மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள். தாமரை மலர் மீது நின்ற திருக்கோலத்தில், கடக ஹஸ்தத்துடன் மேற்கு பார்த்தபடி இருக்கும் அம்பிகையின் அழகு, வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.

திருவாசியில் வசித்த வணிகர் ஒருவரின் மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி வன்னிமரத்தின் கீழ்த் தவமிருந்து, அவரை மணந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது, அம்பாளுக்கே முதலில் வழிபாடு செய்யப்படுகிறது.

பாலாம்பிகை சந்நிதிக்கு நேர் எதிரே செல்வ விநாயகர் அருள்கிறார். இவர் கன்னிமூல கணபதி என அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால் திருமண தோஷம், குழந்தையின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அம்பாள் சந்நிதியின் முகப்பில் இரண்டு துவாரபாலகிகளைக் காண முடிகிறது. இவர்கள் குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்காக அம்பாளிடம் பரிந்துரைப்பதாக ஐதீகம்.

திருமணமாகாத பெண்கள் இந்த துவார பாலகியருக்கு மஞ்சள் கயிறு கட்டியும் பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்கள் இவர்களின் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக, இவர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

பால் குடிக்காமல் அழும் குழந்தைகள், உடலில் ஏதும் பிரச்னை இருக்கும் குழந்தைகள் மற்றும் பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளை இங்கேயுள்ள அம்பாள் சந்நிதிக்கு அழைத்து வந்து, காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள் அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளிக்கச் செய்தால், பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை. அம்பாள் சந்நிதியில் தரப்படும் தீர்த்தம் ஏவல், பில்லி-சூனியம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்கும் அருமருந்தாகவும் விளங்குகிறது.

அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள அன்னமாம் பொய்கை என்ற தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு... இவற்றுள் ஏதேனும் ஒரு கிழமையில் காலை 7 மணிக்கு அன்னமாம் பொய்கையின் நீரைத் தலையில் தெளித்துக்கொண்டு, அம்பாளுக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். இது போல ஐந்து வாரங்கள் தொடர்ந்து செய்து வழிபட்டால், நல்ல வரன் அமைந்து திருமணம் வெகு சீக்கிரம் நடைபெறும். அம்பாளை 9 முறை வலம் வந்து வழிபட்டால், குழந்தைப் பேறு வாய்க்கும்.

அருள்மிகு பாலாம்பிகைக்கு ஆடிமாதம் முதல் நாளன்று நிகழும் மஞ்சள் காப்பு அலங்காரம்; ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு நடைபெறும் சகரஸ்ர நாம அர்ச்சனை வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

திருவாசி சிவாலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் சகஸ்ரலிங்க தரிசனம். பூவுலகின் முதல் சகஸ்ர லிங்கம் இது என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால் 1000 லிங்கங்களை வணங்கிய பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

சகஸ்ரலிங்கத்திற்கு செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாள்களில் செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. இதனால், சகலவிதமான பிணிகளிலிருந்தும் பிரச்னைகளிலிருந்தும் விடுபடலாம்.

சகஸ்ரலிங்க சந்நிதி ஈசான கோண சக்தியுடையது. எனவே வாஸ்து நாட்களில் வாஸ்து நேரத்தில் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், வாஸ்து தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை!

திருச்சியிலிருந்து முசிறி, நாமக்கல், சேலம் செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது திருவாசி. பிரதான சாலையில் இறங்கி, கிளைச் சாலையில் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். கோயில் காலை 7 முதல் பகல் 12 மணி வரை; மாலை 5 முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும்.

துவார பாலகர்!

ஆலயங்களில் உள்ள கருவறைக்கு முன்னால் இரண்டு பக்கமும் துவார பாலகர்கள் இருப்பதைக் காணலாம். இவர்களில் ஒருவர், ஆட்காட்டி விரலை காட்டிக்கொண்டு நிற்பது, 'உள்ளே வழிபட செல்பவர்களே, கடவுள் ஒன்று என்று உணருங்கள்' என்பதைச் சொல்வதற்காக என்பார்கள்.

மற்றொரு துவார பாலகர், ஒரு கையை விரித்துக் காட்டுவது, 'கடவுளைத்தவிர வேறொன்றும் இல்லை, என்று உணருங்கள்!' என்பதாகத்தான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- கே. வடிவுக்கரசி, சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism