Published:Updated:

பிணிகள் தீர மூலிகை அபிஷேகம்!

சுகமான வாழ்வைத் தரும் ஸ்ரீசுயம்புநாதர்

பிரீமியம் ஸ்டோரி

காவிரியின் கிளை நதியான வீரச்சோழன் ஆற்றின் வடகரையில், பண்டைத் தமிழரின் வீரப் புகழைப்பாடி பெருமைச் சேர்க்கும் ஊராகத் திகழ்கிறது, திருவிளையாட்டம் என்னும் ஊர்.

நாகை மாவட்டம் அமைந்துள்ள திருவிளையாட்டத்தில், திருக்குளத்துடன் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் சிவாலயத்தில், அருள்மிகு முல்லைவன நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சுயம்புநாதர். கோச்செங்கட் சோழன் யானைகள் ஏறமுடியாதபடி கட்டிய 70 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் ஈசன் எழுந்தருளிய திருக்கதையே மெய்சிலிர்க்க வைக்கிறது.

முற்காலத்தில் பெருங்காடுகள் நிறைந்த இந்தப் பகுதி, வீரர்களின் வேட்டையாடும் களமாகத் திகழ்ந்துள்ளது. ஒருமுறை இங்கு வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவன், வீரர்களைப் பிரிந்து தனிமைப்பட்டான். ஓரிடத்தில் அவனுடைய குதிரையின் குளம்படி பட்டு ரத்தம் பீறிட்டது. திகைத்துப்போன மன்னன் குதிரையைவிட்டு இறங்கிப்பார்க்க, அங்கே ரத்தம் வழிந்துகொண்டிருந்த நிலையில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டான்.

பதறிப்போனவன், சில மூலிகைகளைப் பறித்து வந்து, லிங்கத்தில் ரத்தம் பீறிடும் இடத்தில் வைத்துக்கட்டி, ரத்தம் வழிவதை நிறுத்தினான். அதற்குள் அவனுடைய வீரர்கள் அவனைத் தேடிக்கொண்டு அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அரசன் அபூர்வமாய்க் கிடைத்த லிங்கத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்று தலைநகரில் கோயில் அமைக்க முடிவு செய்தான். வீரர்கள் உதவியுடன் லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயற்சி செய்தான். ஆனால், பூமியைத் தோண்ட தோண்ட லிங்கத்தின் அடிப்பீடம் வளர்ந்துகொண்டே இருந்தது. ஈசன் அதே இடத்திலேயே வாசம் செய்ய விரும்புகிறார் என்ற திருவுள்ளத்தை அறிந்த மன்னன், அந்த இடத்திலேயே கோயில் அமைத்தான்.

பிணிகள் தீர மூலிகை அபிஷேகம்!

இறைவன் தானாக முளைத்தெழுந்தவர், பெருமுளையாகத் தோன்றியவர் ஆதலால் `பெருமுளை’ என்றே இவ்வூர் அழைக்கப்பட்டது. பழைய பதிவேடுகளிலும் பெருமுளை என்ற பெயரே காணப்படுகிறது. வேட்டையாடும் இடத்தில் ஈசன் திருவிளையாடல் புரிந்ததால், தற்போது இவ்வூர் திருவிளையாட்டம் என்றழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலுக்கு மேற்கே ஸ்ரீகஸ்தூரிரங்கப் பெருமாள் கோயிலும், அதனருகே ஐயனார் கோயில் ஒன்றும் உள்ளன. இதன் பின்னணியிலும் ஒரு சிலிர்ப்பான வரலாறு சொல்லப்படுகிறது.

அருள்மிகு முல்லைவன நாயகி
அருள்மிகு முல்லைவன நாயகி

முற்காலத்தில் பூம்புகாரில் ஆண்டுதோறும் இந்திர விழா நடக்கும். அந்த விழாவைச் சிறப்பிக்க, தஞ்சையிலிருந்து யானைகளை அனுப்பிவைப்பது சோழ மன்னனின் வழக்கம். அவ்வாறு ஒருமுறை 14 யானைகளோடு வந்த பாகர்கள், அன்றிரவு இந்தப் பகுதியில் தங்கினர். நள்ளிரவில் யானைகள் அருகிலிருந்த பெருமாள் கோயிலுக்குரிய தாமரைக் குளத்தில் இறங்கி, அதை நாசம் செய்துவிட்டன. அதைக் கண்டு கோபம்கொண்ட பெருமாள், யானைகளுக்குப் பார்வை தெரியக் கூடாது என்று சபித்து விட்டார். விடிந்ததும் யானைகள் பார்வை தெரியாமல் தடுமாறுவதைக் கண்டு திடுக்கிட்டனர், பாகர்கள்.

பிணிகள் தீர மூலிகை அபிஷேகம்!

இந்த விவரம் மன்னனுக்குத் தெரிந்தால் அரச தண்டனைக்கு ஆளாக வேண்டுமே என்று அஞ்சினர். அப்போது அவர்கள் பார்வையில் ஐயனார் கோயில் தென்படவே, அங்கு சென்று யானைகளுக்குப் பார்வை தர வேண்டும் என மனமுருக வேண்டினர். அந்த ஐயனாரின் அருளால் யானைகள் மீண்டும் பார்வை பெற்று, அருகிலிருந்த இன்னொரு குளத்தின் வழியாகக் கரையேறினவாம்.

ஸ்ரீபாலவிநாயகர்
ஸ்ரீபாலவிநாயகர்

இந்தச் சம்பவத்தின் அடிப்படையில், இங்குள்ள ஸ்ரீகஸ்தூரிரங்கப் பெருமாள், ஆனைகுத்திப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். யானைகள் நாசம் செய்த குளம் `யானை படுத்தான் குளம்’ என்றும், அவை கரையேறிய குளம் `ஆனையேறிய குளம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. யானைப் பாகர்கள் ஐயனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக 14 கல் யானைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் களாம். அவற்றை ஐயனார் கோயிலில் இன்றும் காணலாம்.

ஸ்ரீசுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன்
ஸ்ரீசுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன்

கோயிலில் நுழைந்தவுடனே சிறிய சிற்றாலயத்தில் அருள்கிறார் பால விநாயகர். மாடக்கோயிலின் மேல் சென்றால், எதிரில் சோமாஸ்கந்தர் சந்நதி உள்ளது. ஈசனின் விமானம் கஜப் பிருஷ்ட விமானம் (யானையின் பின்பகுதியைப் போன்ற அமைப்பு). அந்த விமானத்தின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தியின் சுதைச் சிற்பமும், மேற்குப் பகுதியில் அனந்தசயனக் கோலத்தில் பெருமாளின் சுதைச் சிற்பமும் அழகுற அமைந்துள்ளன. சிவன் கோயிலின் மூல விமானத்தில் பெருமாள் இருப்பது தனிச்சிறப்பு.

ஸ்ரீதுர்கை
ஸ்ரீதுர்கை

மாடக்கோயிலின் மைய மண்டப வாயிலில் மங்கல விநாயகர் அமர்ந்துள்ளார். அவரைக் கடந்து உள்ளே நுழைந்தால், அழகிய பெரிய லிங்கமூர்த்தியாக இறைவன் ஸ்ரீசுயம்புநாதர் வீற்றிருக்கிறார். கருவறையைச் சுற்றிவர சிறிய பிராகாரம் உள்ளது. இறைவன்மீது காலைக் கதிரவனின் ஒளிக் கிரணங்கள் விழுமாறு கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகஸ்தூரிரங்கப் பெருமாள் கோயில்
ஸ்ரீகஸ்தூரிரங்கப் பெருமாள் கோயில்

கருவறையின் கோஷ்ட மாடங்களில் தென்முகன், லிங்கோத்பவர், நான்முகன், துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தரைத்தள பிராகாரத்தில் ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். ஜேஷ்டா தேவியின் சிலை ஒன்றும் உள்ளது.

தெப்பக்குளம்
தெப்பக்குளம்

மாடக் கோயிலில் இறைவனின் இடப் புறத்தில் அம்பிகை கிழக்கு நோக்கி தனிக் கோயில் கொண்டுள்ளாள். முல்லைவனத்தில் முல்லைப்பூ வடிவில் இறைவனை வழிபட்டதால் அம்பாளுக்கு, முல்லைவன நாயகி என்ரு திருநாமம். அதற்கேற்ப, இந்த இடம் ஆதியில் முல்லையூர், திருமுல்லையூர் என்றும் அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஸ்ரீதட்சிணாமூர்த்தி

இந்திரன் தன் மனைவியோடு இங்கு வந்து இறையருள் பெற்றுள்ளார். இக்கோயில் பூஜைகளை செய்துவரும் கோபாலன் பட்டாசார்யரிடம் பேசினோம்.

14 கல் யானைகள்
14 கல் யானைகள்

“ஸ்ரீசுயம்புநாதருக்கு நெல்லி, முள்ளிப்பொடி மற்றும் வில்வ இலைகளை இட்ட தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தால் நாள்பட்ட வியாதிகள் எதுவாயினும் நீங்கிவிடும். இங்கு ஈசனும், அம்பாளும் திருமணக் கோலத்தில் அருள்வதால், இது திருமணத்தடை நீக்கும் தலமாகத் திகழ்கிறது. அதேபோல், இங்கு நடைபெறும் பிரதோஷ வழிபாடு பெண்களுக்கு வேண்டிய வரம் தரும் வரப்பிரசாத வைபவமாகும். வாழ்வில் எல்லாவித சுகங்களையும் பெற்று மகிழ, வழிபடவேண்டிய தலம் இது’’ என்றார்.நீங்களும் ஒருமுரை திருவிளையாட்டம் ஈசனை தரிசித்து வழிபட்டு வாருங்கள், அந்தச் சுயம்புநாதர் சுகமான வாழ்வை வரமாகத் தந்தருள்வார்.

பக்தர்கள் கவனத்துக்கு..

தலம் : திருவிளையாட்டம்

ஸ்வாமி : அருள்மிகு சுயம்புநாதர்

அம்பாள்: அருள்மிகு முல்லைவன நாயகி

ஸ்தல சிறப்புகள்: சுயம்புவாய் தோன்றிய ஈசன். இவருக்கு நெல்லி, முள்ளிப்பொடி மற்றும் வில்வம் கலந்த தீர்த்தத்தால் அபிஷேகித்து வழிபட்டால், நாள்பட்ட வியாதிகளைத் தீர்த்து சுகமாய் வாழ அனுக்கிரகம் செய்வார். அம்பாள் திருமணத்தடை நீக்கி,பெண்களுக்கு வேண்டிய வரங்களை அருள்வாள்.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை - தரங்கம்பாடி - காரைக்கால் பேருந்து மார்க்கத்தில், செம்பனார்கோயிலிலிருந்து தெற்கில் சுமார் 7 கி.மீ தொலைவில், திருவிளையாட்டம் திருத்தலம் அமைந்துள்ளது. ஆட்டோ, கார் வசதிகள் உண்டு (ஆலய விவரங்களுக்கு: செந்தில்குமார் - 96009 30359).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு