Published:Updated:

சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்கு விழா எப்படி இருந்தது தெரியுமா?

போர்வெல்லில் ஆடிப்பெருக்கு
போர்வெல்லில் ஆடிப்பெருக்கு

கால் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும்கூட எல்லோரும் புத்தாடை உடுத்தி, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விழாவைக் கொண்டாடினார்கள். அப்படியென்றால் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும்.

தற்போது ஆடிப்பெருக்கு விழா என்பது பெரும்பாலும் மிக எளிய பூஜையோடு முடிந்துவிடுகிறது. வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஆனால், நம்முடைய முந்தைய தலைமுறையினர், இதைச் சீரும் சிறப்புமாக வெகு விமரிசையாகக் கொண்டாடினர். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதற்கு நிகராக ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தின்போது ஊரே களைகட்டியிருக்கும். கால் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும்கூட எல்லோரும் புத்தாடை உடுத்தி, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விழாவைக் கொண்டாடினார்கள். அப்படியென்றால் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும்? பொன்னியின் செல்வன் நாவலில் ஆடிப்பெருக்கு குறித்த கல்கியின் விவரிப்புகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. மாமன்னன் ராஜராஜ சோழனின் நண்பர் வந்தியதேவனின் வருகையோடு வீராணம் ஏரிக்கரையில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்ட காட்சிகள் விரிகின்றன.

களையிழந்த காவிரி ஆறு
களையிழந்த காவிரி ஆறு
படம்: ம.அரவிந்த்

"ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம், வெள்ளம் இருகரையையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலைமோதிக்கொண்டிருப்பது வழக்கம். அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்துகொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும்கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருந்தார்கள்.

பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக்கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்றுகொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக்கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கண்வாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கண்வாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள்.

ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு
படங்கள்: ம.அரவிந்த்

ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கண்வாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் வந்தியதேவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்” என ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை விவரிக்கிறார் கல்கி. அப்படியெல்லாம் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாதான், தற்போது களை இழந்து காணப்படுகிறது. இது காலத்தின் கோலம் எனச் சொல்வதா?

அடுத்த கட்டுரைக்கு