Published:Updated:

தியாகராஜ பவனி! - யானை ஏறுவார் திருக்கல்யாணம்

தியாகராஜ பவனி!
பிரீமியம் ஸ்டோரி
தியாகராஜ பவனி!

ஆன்மிகம் - ஓவியம்: ஜீவா

தியாகராஜ பவனி! - யானை ஏறுவார் திருக்கல்யாணம்

ஆன்மிகம் - ஓவியம்: ஜீவா

Published:Updated:
தியாகராஜ பவனி!
பிரீமியம் ஸ்டோரி
தியாகராஜ பவனி!

``நீங்கள் எனக்கு செய்த உபகாரத்துக்கு என்ன செய்தாலும் தகும். இருப்பினும் என் பதவி, வாகனமான ஐராவதம் இவற்றைத் தவிர வேறு எது கேட்டாலும் தரச் சித்தமாக இருக்கிறேன்” என்றான் இந்திரன். இந்திரன் சிக்கிக்கொண்டதை எண்ணி சிரித்துக்கொண்டார் முசுகுந்த சக்கரவர்த்தி.

நடக்கப்போகும் விபரீதத்தை எண்ணி திடுக்கிட்டார் வைகுந்த பெருமான். பிரம்மனோ இந்திரனை எண்ணி, தலைகுனிந்துகொண்டார். `இதுவும் சுவாமியின் லீலைதான்; அவர் மண்ணுலகம் புறப்படப்போகிறார்' என்பதை அறிந்த அன்னை சக்தி பரபரப்பானாள்!

நடந்தது இதுதான்...

தேவ - அசுரர் போரில் தேவர்கள் தோற்று, அமரர் உலகம் அசுரர் வசமானது. தப்பினால் போதும் என்று ஓடிய இந்திரன், மண்ணுலகில் திருவாரூரை ஆண்டுவந்த முசுகுந்தரைச் சரணடைந்தான். அவரும் படைதிரட்டிச் சென்று அசுரரை வீழ்த்தி, இந்திரனுக்கு மீண்டும்

தேவலோகப் பதவியை மீட்டுக் கொடுத்தார். அதற்கு நன்றிக்கடனாகவே அவருக்கு இந்திரன் எதுவும் கொடுக்க சித்தமானான். அதில்தான் ஒரு வம்பும் வந்தது.

ஆம், முசுகுந்தர் இந்திரனிடம் கேட்டது, இந்திரன் பூஜித்துவரும் அதியற்புதமான விடங்க மூர்த்தங்களை. `இவற்றைத் தவிர...' என்று இந்திரன் ஒரு பட்டியலிட்டான் அல்லவா, அதில் பிரதானமாக விடங்க மூர்த்தம் அல்லவா இருந்திருக்க வேண்டும்... அவன் இந்திர பதவியைக் குறிப்பிட்டான், ஐராவதத்தைக் குறிப்பிட்டான்... `அவற்றைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேளுங்கள்... தருகிறேன்' என்று அவன் சொல்ல, முசுகுந்தர் `விடங்க மூர்த்தங்கள் வேண்டும்' என்றார்.

தியாகராஜ பவனி! - யானை ஏறுவார் திருக்கல்யாணம்

வாக்கு கொடுத்த இந்திரன் திகைத்து நின்ற வேளையில் பேரொளி தோன்றிட, கூடவே ஓர் அசரீரி ஒலித்தது: ‘`மூடனே! என்னால் முதன்முதலில் உருவான என் அர்ச்சாவதார மான விடங்க மூர்த்தத்தைவிடவும் ஐராவதம் உனக்குப் பெரிதோ... தியாக விடங்க மூர்த்தத்தை திருமால் தம் திருமார்பில் வைத்து பூசித்தார். அவரின் மூச்சுக் காற்றுக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்துடன் நான் ஆடியதே அஜபா நடனம். சொல்லப்படாத அஜப மந்திரமாகப் போற்றப்பட்டது அது. பின்னர் அதை யாசித்துப் பெற்று நீ பூசித்து வருகிறாய். ஆனால். இப்போது அது உனக்குத் தேவையில்லாமல் போய்விட்டது!

நல்லது! என்னை விரும்பிக் கேட்கும் முசுகுந்தனுடன் யாம் செல்கிறோம். மண்ணுலகில் திருவாரூரில் எழுந்தருளி தியாகராஜனாக ஆளவிருக்கிறோம். என்னை மதிக்கத் தவறிய நீ, இனி வழிபடவும் தகுதி அற்றவன் ஆகிறாய். நீ மண்ணுலகில் அதே திருவாரூரில் மானிடனாகப் பிறப்பாய். அப்போதும் என் தரிசனம் கிடைக்காமல் அவதிப்படுவாய். இது என் சாபம்” என்றது அசரீரியாக ஒலித்த சிவவாக்கு.

`இதுவும் ஒரு கருணையே' என்று புரிந்து கொள்ளாத மாயையில் சிக்கியிருந்த இந்திரன் அழுதான், ஈசனைத் தொழுதான்.

‘அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்தெம்

பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ்

விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன்

தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே...’

என்று இந்திரன் கதறி அழ, ஆழித்தேரில் அமர்ந்து மலர்ச்சிலம்படியான் முசுகுந்தரோடு ஆரூரில் எழுந்தருளிவிட்டான். தியாகவிடங்கரை இழந்த இந்திரன், ஈசனின் சாபப்படி திருவாரூரில் பிறந்தான்.

சைவர்களுக்கு இரண்டு ராஜாக்கள். ஒருவர் நின்றாடும் தில்லை நடராஜர். மற்றொருவர் அமர்ந்தாடும் தியாகராஜர். முன்னவர் ஆனந்த வடிவானவர், பின்னவர் யோகமே வடிவானவர்.

பனித்த சடை தொடங்கி, இனித்த பொற்பாதம் வரை நடராஜரை தரிசிக்க முடியும். ஆரூரானை திருமுக தரிசனம் மட்டுமே செய்ய முடியும். தேவலோக உலோகத்தால் உருவான திருமேனி என்பதால், அவர் திருவுருவத்தை மனிதர்கள் தரிசிக்க சக்தி இல்லை என்று கூறப்படுகிறது. பங்குனி உத்திர நாள், திருவாதிரை ஆகிய இரண்டு நாள்களில் மட்டுமே தியாகராஜரின் பாதங்களை தரிசிக்க முடியும் என்பது இன்றுவரை உள்ள ஒரு நடைமுறை.

மண்ணுலகமே தியாகராஜாவின் ஆட்சிப் பகுதி என்றால், ஆரூரே அவருக்கு அரண்மனை. அங்கு அமர்ந்து இந்தப் பூவுலகை பரிபாலிக்கிறார் தியாகேசர் என்பது ஐதிகம். அதனால்தான் வேறெங் கும் இல்லாத வகையில் ஈசன் இங்கு சக்கரவர்த்தியாக வணங்கப்படுகிறார்.

மணித்தண்டு, தியாகக்கொடி, ரத்தின சிம்மாசனம், செங்கழுநீர் மாலை, வீர கட்கம் - ஞான கட்கம் எனும் வாள், அஜபா நடனம், ஐராவணம் எனும் பட்டத்து யானை, அர்தன சிருங்கம் எனும் ராஜ்ஜிய மலை, பஞ்சமுக வாத்தியம் எனும் அரச முரசு, சுத்த மத்தளம்; பாரி எனும் அரச வாத்தியம், வேதம் எனும் பட்டத்துக் குதிரை, காவிரி எனும் தீர்த்தம், பதினெண் வகைப் பண்கள், பதினெண் வகை கணங்கள் என பூலோகச் சக்கரவர்த்தியாக தியாகர் ஆட்சி செய்துவருகிறார்.

ஆரூர் பெருமான் ராஜாதி ராஜர் என்பதால், விழாக்களில் அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை. அருளிப் பாடியார், உரிமையில் தொழுவார், ருத்திரப் பல்கணத்தார், விரிசடை மாவிரதிகள், அந்தணர்கள், சைவர்கள், பாசுபதர்கள், கபாலியர்கள் என எண்வகை கணத் தாருடன் எழுந்தருள்வார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இவரை தேவர்களும், ரிஷிகளும், மனிதர்களும்... ஏன் வாயில்லாத ஜீவ ராசிகளும்கூட தரிசித்து உவகை கொண்டன. ஆனால் அதே ஊரில் பிறந்த இந்திரன், அந்தக் கால வழக்கப்படி குலத்தின் காரணமாக வழிபட அனுமதிக்கப்படவில்லை.

`ஆன்மா எதையும் அறிந்து கொள்ளாதது; ஆனால் தெரிவித்தால் அறிந்துகொள்ளக்கூடியது' என்கிறது சைவ சித்தாந்தம். அதன்படி சிறு வயதிலேயே ஆரூர் பெருமானை அறிந்துகொண்டான், பறை அறிவிப்ப வனாகப் பிறந்த இந்திரன். அன்றாடம் ஆலயத்துக்கு வெகுதூரத்தில் நின்று ஆரூர் பெருமானை வழிபடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தான்.

தினமும் இருவேளை குளித்து, மது, மாமிசம் தவிர்த்து வாழ்ந்துவந்தான் இந்திரன். இவனைப்போல இவன் வாழ்ந்த பகுதியில் பலரும் சைவ நெறிக்கு மாறி, நீறும் ருத்திராட்சமும் துலங்க ஈசனுக்குச் சேவை செய்து வந்தார்கள். ஆலயம் சார்பாக பறை அறிவிக்கும் தொழிலை இந்திரன் செய்துவந்தாலும் அவன் வாழ்ந்த பகுதியையே சிவலோகம்போல மாற்றி வைத்திருந்தான்.

`பராவு சிவம்' என்று போற்றப் படும் அடியார்களுக்குச் சேவை செய்வதையே தன் பிறவியின் பெரும்பயன் எனக் கருதி தொண் டாற்றிவந்தான். ‘ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்’ என்பதற்கேற்ப, சிவ பூஜைகளுக்குத் தேவையான பால், தயிர், நெய், கோமயம், கோசலம் போன்றவற்றை அடியார்களுக்குச் சேகரித்துக் கொடுப் பது, சிவபூஜையில் வாத்தியங்கள் இசைப்பது என சதாசர்வ காலமும் சிவப்பணியே முதல் பணி என்று வாழ்ந்து வந்தான். பணிக்கான கூலியாக திருக்கோயில் தரும் உணவையும் நெல்லையும்கூட அடியார்கள் சேவைக்கென்றே அளித்துவிடுவான்.

காலம் சுழன்றது. இந்திரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையே, மனிதர்களுக்கு ஒரு பாடம் நடத்தத்தான். இதுவே சிவச்சித்தமாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தியாகராஜ பவனி! - யானை ஏறுவார் திருக்கல்யாணம்

‘பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானுக்கு ஏது பேதம், பிறப்பில்லாதவனுக்கு ஏது சாதி, ஆணும் பெண்ணுமாக நிற்பவனுக்கு ஏது பாலின பேதம். அண்டசராசரங்களையும் படைத்தவனுக்கு ஏது சொந்த மொழி. மனிதர்கள் உண்டாக்கியவையே கோயில் விதிகள்... நிச்சயம் ஒருநாள் நான் ஆரூர் பெருமானை தரிசிப்பேன். அதற்காக எந்த விளைவையும் சந்திப்பேன். இது அமர்ந்தாடும் ஆரூரான் மீது ஆணை!’ என்று சபதம் செய்திருந்தான் இந்திரன்.

`கோயிலுக்குள் செல்வது மிகப்பெரிய குற்றம். ஆகவே, அது குறித்து மனதிலும் நினைக்க வேண்டாம்' என்று அவன் உறவும் சுற்றமும் அவனைக் கண்டித்தன. மற்றவர் சொல்ல சொல்லத்தான் இந்திரனுக்குள் கோயிலுக்குள் சென்றே ஆக வேண்டும் என்ற துடிப்பும் வேகமும் அதிகம் உண்டாகின.

‘ஆரூர் பெருமானை இங்கே கொண்டு வருவேன்; அவரை நானே ஆராதித்து பூஜைகள் செய்வேன்’ என்றும் உறுதிகொண்டான் இந்திரன். அவனுக்குத் துணையாக யாரும் வரவில்லை. ஆனால், சிவம் துணை நிற்க முடிவு செய்தது.

இந்தநிலையில்தான் தியாகராஜ சுவாமியின் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திரனின் பக்தியை, தியாகத்தை உலகறியச் செய்ய எண்ணியது சிவம்.

தைப்பூச நாளில், உழவர்கள் புதிதாக விளைந்த தானியங்களை தங்களின் வண்டிகளில் மலைபோல் குவித்து எடுத்துச் சென்று, ஆரூர் பெருமானிடம் ஒப்படைப்பது வழக்கம். அந்த ஆண்டும் விளைச்சல் அபாரம் என்பதால், ஆரூர் எங்கும் நெல்லும், துவரையும், இன்னும் பல தானியங்களும் தெருவெங்கும் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

கோயில் பண்டாரங்களில் சேமித்தது போக, வேண்டுவோர் அள்ளிக்கொண்டு போகலாம் என்ற எண்ணத்தில் அவை வீதிகளில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன.

அப்படியும் எடுத்துப் போக ஆள் இல்லை. அவ்வளவு செழிப்பு அந்நாளில். ஊரெங்கும் குதூகலம், வீதியெங்கும் களியாட்டங்கள் என்று திகழ்ந்தது திருவாரூர். ஆலயமும் கமலாலயத் திருக் குளமும் வெகுஜோராக அலங்கரிக்கப் பட்டிருந்தன.

மாலையில் சுவாமி ஊர்வலம். எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண் டிருந்தன. கிழக்கு ராஜ கோபுரம் வழியே சுவாமி வெளியே எழுந்தருள இருக்கும் வேளையில்தான் அந்தப் பேரோசை கேட்டது.

கோயில் யானை பூங்கோதைக்கு மதம் பிடித்திருந்தது. கட்டுகளை அவிழ்த்துவிட்டு யானை ஆவேசமாகக் கோயிலில் அலைந்து கொண்டிருந்தது. அர்ச்சகர்களும் கோயில் பணியாளர்களும் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

என்றுமே ஒரு குழந்தைபோல ஓடியாடி விளையாடும் பூங்கோதைக்கு இன்று என்ன ஆனது என்று வியந்தனர் மக்கள்; அதன் ஆவேசத்தைக் கண்டு பயந்தனர். சுவாமிக்கான அலங்காரத் தோரணங்களைப் பூங்கோதை அழித்துவிட்டாள். தனித்துவிடப்பட்ட உற்சவ மூர்த்தத்தை யாரும் அணுகாதவாறு பூங்கோதை பிளிறியவாறு காவல் காத்தாள். திருவுலாவுக்கான நேரம் நெருங்கியது. என்ன செய்வதென்று யாருக்கும் விளங்கவில்லை.

இந்த விவரங்களை அறிந்த இந்திரன், ஆலய வாசலிலேயே கண்ணீரோடு நின்றிருந்தான். `சுவாமியின் விக்கிரகத் திருமேனியை யானை ஏதும் செய்துவிடுமோ, உற்சவம் நின்று போகுமோ, இவ்வளவு பேர் இருந்தும் எவராலும் இந்த யானையை அடக்கி, சுவாமியை வெளியே கொண்டு வர முடியவில்லையே... நாமும் உள்ளே போக முடியாதே... என்னை அனுமதித்தால் உயிரைக் கொடுத்தேனும் என் சுவாமியின் மூர்த்தத்தை பாதுகாப்பாகக் கொண்டுவந்துவிடுவேனே...' என்று புலம்பினான், இது சுவாமியின் லீலையே என்று புரியாமல்.

பூங்கோதை சுவாமியை நெருங்கியது. என்னவோ புரிந்தது. ஆக்ரோஷமாக வெளியேறியது. உயிருக்கு பயந்த கூட்டம் ஓடியது. இந்திரனை நெருங்கிய யானை அவனைத் தூக்க தும்பிக்கையை உயர்த்தியது. எந்த பயமும் இல்லாமல் யானையை மனதுக்குள் நமஸ்கரித்தான் இந்திரன்.

‘என் சுவாமியின் வாகனமே உன்னை வணங்குகிறேன்; அமைதியாய் இரு. இந்த விழாவை அமைதியாக நடத்த துணை இரு. இது என் சுவாமி மீது ஆணை!’ என்று வணங்கினான். யானை இந்திரனைத் தூக்கிக்கொண்டது. ஊர் அலறியது. மதம்கொண்ட யானை அவனை நசுக்கிக் கொல்லப்போகிறது என்று பயந்தது.

ஆனால், இந்திரனின் முகத்திலே எவ்விதப் பதற்றமும் பயமும் இல்லை. கண்மூடி அமைதியாக இருந்தான். யானை அவனைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தது. நந்தியைக் கடந்து, வன்மீக நாதர் சந்நிதிக்கு முன்பாகக் கொண்டு சென்று அவனைக் கிடத்தியது.

தலை நிமிர்ந்து பார்த்தவனுக்கு ஆனந்த அதிர்ச்சி. எதிரே வன்மீகநாதர் அலங்கார சொரூபனாகக் காட்சி தந்தார். அழுதான், தொழுதான்.

‘வன்தொண்டனாக மாறி, உன்னை வம்படியாக நுழைந்து தரிசிக்க எண்ணினேனே... பாவி எனக்கு அருள் செய்ய நீயே தூக்கி வர உத்தரவிட்டாயோ? என்னே உன் கருணை. வன்மீக நாதா, வானவர் தலைவா. சரணம் சரணம்... என் பிழைகளைப் பொறுத்து என்னை ஏற்றுக்கொள்!’ என்று அழுதான்.

தியாகராஜ பவனி! - யானை ஏறுவார் திருக்கல்யாணம்

சிவம் அமைதியாக இருந்தது.

அப்படியே தியாகேசரையும் அங்கிருந்த மற்ற மூர்த்தங் களையும் கண்குளிர, மனம்குளிர தரிசித்தான். ஊர் அமைதியாக இருந்தது. நடந்தவை எதையும் நம்ப முடியாமல் வெறும் சாட்சியாக நின்றது. இந்திரன் கோயிலைவிட்டு வெளியேறினான். இப்போது அவனுக்குள் எந்தச் சந்தேகமும் இல்லை. எங்கும் சிவம், எதிலும் சிவம் என்று உணர்ந்தான்.

எல்லாக் கேள்விகளும் மறைந்தன. ஆரூரில் பிறந்தோர் எல்லாரும் சிவகணங்கள் என்றே அவனுக்குள்ளும் தோன் றியது. இன்னும் ஏதோ நடைபெறப்போகிறது என்பதை சிவனருளால் அவன் மனம் உணர்ந்தது; ஆகவே அமைதியானான்.

அந்த நாளும் வந்தது. ஒரு மாசிப் பௌர்ணமி நன்னாள், இந்திரன், ஆரூரானை மனத்தால் தியானித்து கோபுரத்தைக் கண்டு விழுந்து வணங்கினான். வானில் முழு நிலவு தகதகவென்று மின்னிக்கொண்டிருந்தது. இந்திரன் பார்க்கும்போதே அது விரிவடைந்து வானெங்கும் பரவியது. பளீரென்று வியாபித்த பேரொளி, ஆரூரை தேவலோகம்போல மாற்றியது. நிலவின் மத்தியில் தியாகராஜர் அரசனைப்போல முழு உருவம் காட்டி இந்திரனை ஆட்கொண்டார்.

பறை அறிவிக்கும் அவன், `தான் தேவலோக இந்திரன்' என அறிந்துகொண்டான். தான் வந்த காரணத்தையும் புரிந்து கொண்டான்.

‘தேடிக் கண்டுகொண்டேன், திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்’ என்று உள்ளம் உருக, மேனி எங்கும் சிலிர்க்க, நா தழுதழுக்க அந்தப் பேரொளியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

‘இந்திரா! எக்காலத்திலும் நான் எல்லோருக்கும் பொதுவானவன் என்பதை உணர்த்தவே உன்னைப் பிறக்கவைத்தேன். ஆகமங்கள் என்னால் உபதேசிக்கப்பட்டு, நந்தியால் ரிஷிகள் வழியே ஆலய வழிபாடுகளுக்குப் பயன்பட்டன. ஆலய வழிபாடு, பூஜை முறைகள் என ஆகமங்கள் வழிகாட்டுகின்றனவே தவிர, இன்னார் ஆலயத்தில் நுழையக் கூடாது; இன்னாருக்கு முதல் மரியாதை என்றெல்லாம் எந்த ஆகமத்திலும் சொல்லப்படவே இல்லை. இதை உன் வழியே சகலருக்கும் உணர்த்தவும் உள்ளேன். வரும் பங்குனி உத்திர விழாவில் இது நடந்தேறும். இனி நீ இந்திரனாக தேவலோகம் செல்லலாம். நீ பிறந்த குலம் `இந்திர குலம்’ என்றே போற்றப்படும். எல்லாம் என் படைப்பு எனும்போது, எதிலும் உயர்வு தாழ்வு இல்லை என்ற உன் எண்ணம் உயர்வானது” என்று ஆசி புரிந்தார் ஈசன்.

சந்திர ஒளி மீண்டும் இயல்பானது. தன் குலத்தாரிடம் தான் யார் என்பதைத் தெரிவித்த இந்திரன், பங்குனி உத்திர நாளுக்காகக் காத்திருந்தான். ஆரூர் மறையோர்கள், ஆன்றோர்கள் என அனைவரின் கனவிலும் தோன்றிய ஈசன், இந்திரனைப் பற்றிய விவரங் களைத் தெரிவித்தார்.

அதன்படி ஒரு பங்குனி நாளில் ஐராவத யானை மீது அமர்ந்து வந்த இந்திரனை அனைவரும் வரவேற்று கோயிலில் மரியாதை செய்தனர். அப்போது ஈசன் திருக்காட்சி அளித்து, அவன் மானிடனாக வளர்ந்தபோது விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தார்.

‘ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி முழு நிலவு நாளில் சாயரட்சை பூஜை வேளையில் செங்கழுநீர்ப் பூக்களோடு தென் வாசல் வழியாக வந்து என்னை நீ தரிசிக்கலாம்.

உனக்கும் உன் திருக்கூட்டத்தாருக்கும் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேறும் முதல் நாளில், என் கணங்களின் தலைவரான சண்டிகேஸ்வரனின் தலைமையில் திருமணம் நடத்திவைப்பேன். பங்குனி உத்திர விழாவில் வெள்ளைக் குடைபிடித்து நீ முன் செல்ல, உனக்குப் பின்னால் நான் உலா வருவேன். இந்த நடைமுறை சந்திர சூரியர் உள்ளவரை நடைபெறும்’ என்று ஆசி கூறினார்.

இந்திரன், தான் மணந்த மணமகளோடு இந்திரலோகம் சென்றுவிட, அவனது குலத்தார் ஆலயப்பணிகளில் எந்தத் தடையும் இல்லாமல் ஈடுபட்டுவந்தார்கள். அரசனுக்கு தம்முடைய குடிகளில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதை தியாகராஜா நிரூபித்துவிட்டார்.

அதன்படி இப்போதும் ஆண்டுதோறும் திருக்குலச் சமூகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘யானை ஏறுவோர் பெருவிழா’ நடைபெறுகிறது. அதன்படி இந்திர குலத்தவர் திருக்கோயிலின் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டு, அவர்களின் தலைவருக்குப் பரிவட்டம் கட்டி, ருத்ராட்ச மாலைகள் அணிவித்து, வெண்கொற்றக் குடையின் கீழ் அமரச் செய்வார்கள். தொடர்ந்து, சுவாமிக்குத் திருக் கல்யாணம் நடைபெற, அவர்களுக்கு முதல் மரியாதை தரப்படுகிறது.

பக்தர்கள் அனைவரும் யானையோடு அவருக்குப் பின்னே செல்ல, தியாகராஜர் வீதி களில் பவனிவரும் காட்சியும் நடைபெறுகிறது.இந்திரன் யானை ஏறி வந்து வணங்கியதால், இந்திரகுலத்தவர், ‘யானை ஏறுவோர் பரம்பரை’ என்று அழைக்கப்படுகிறார்கள்

பங்குனி உத்திர விழாவின் கொடியேறும் நாளன்று இரவில் கிழக்கு கோபுர வாசல் அருகே - நான்கு கால் மண்டபத்தில் சண்டி கேஸ்வரர் எழுந்தருளுவார். அப்போது இந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதிகளாகக் கூடியிருக்க, அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும்.

ஏற்கெனவே திருமணம் ஆனாலும் ஆண்டுதோறும் இவர்கள் திருமணம் செய்துகொள்ளும் வைபவம் இப்போதும் நடைபெறுகிறது. அப்போது திருக்கோயில் சார்பில் மணமக்களுக்கு புடவை, வேட்டி வழங்கப்படும் ‘யானை ஏறுவார் திருக்கல்யாண விழா’ என்று போற்றப்படும் இந்த விழா இந்த ஆண்டு 02.03.2021 அன்று நடைபெற்றது.

ஆயிரம் ஆயிரம் திருக்கதைகளைக் கொண்டது திருவாரூர் திருத்தலம். அடியார்கள் இரண்டு நாள்களாவது தங்கி உணர்ந்து அனுபவிக்கவேண்டிய மாபெரும் அரண்மனை திருவாரூர் ஆலயம்.

வாழ்வில் ஒருமுறையேனும் திருவாரூர் சென்று, ஆரூர் அரசனை தரிசித்து அவரிடம் வேண்டுதலை விண்ணப்பித்து வாருங்கள். அவரால் முடியாத காரியமே இல்லை.

‘சித்தம் தெளிவீர்காள்,

அத்தன் ஆரூரைப் பத்தி மலர்தூவ,

முத்தி யாகுமே. பிறவி யறுப்பீர்காள்,

அறவன் ஆரூரை மறவா தேத்துமின்.