திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

கல்யாண கதிர்வேலன்!

கதிர்வேலன்
பிரீமியம் ஸ்டோரி
News
கதிர்வேலன்

வேல் பூஜை செய்து வணங்கினால், திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயில் கருவறையில், முருகன் வேலாயுதமே மூலவராக அருளும் கோயில்கள் அபூர்வம். கோவில்பட்டி அருகில் மலைக்குமேல் உள்ள ஆலயத்தில் வேலாயுதம் வழிபடப்படுகிறது. வேலின் பெயர்கொண்டு திகழும் தலங்களும் பல உண்டு.

அவ்வகையில், தூத்துக்குடியில் கதிரேசன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஓர் ஆலயத்தில் வேலாயுதமே மூலவராக வணங்கப்படுகிறது. இக்கோயில் இருப்பதாலேயே, இந்தத் தெருவுக்கு கதிரேசன் கோயில் தெரு என்று பெயர் வந்ததாம். இங்குள்ள வேலாயுதத்தை `கல்யாண வரம் தரும் கதிர்வேல்' என்று போற்றுகின்றனர்.

பலவித பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, கதிர்வேல் வடிவில் அருளும் முருகனை மனமுருகி வேண்டி வரம் பெற்றுச் செல்கிறார்கள். குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் கூட்டம் அதிகம்!

இங்கே வந்து, வேல் பூஜை செய்து வணங்கினால், திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் ராகு கால வேளையில், வேலுக்குச் சிவப்பு வஸ்திரமும் செவ்வரளியும் சார்த்தி வழிபட, 41 தினங்களுக்குள் கல்யாண யோகம் கைகூடி வருமாம்!

பிரார்த்தனை நிறைவேறியதும், ஆலயத்துக்கு வந்து தேங்காய் - பழத்துடன் மஞ்சள் சரடும் குங்குமமும் வைத்து சுமங்கலிக்குக் கொடுத்துவிட்டு, கதிர்வேலை வணங்கிச் செல்கின்றனர். வேலை வாய்ப்பு வேண்டுவோர், தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கல்யாண கதிர்வேலன்!

வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாள்களில் புட்டு மற்றும் முந்திரிப் பருப்பு வைத்து கதிர்வேலை வழிபட்டால் காரியம் யாவும் நிறைவேறும்.

`அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும்' என்பதற் கேற்ப, துன்பம் வரும் வேளையில் வேலாயுதத்தைத் தியானித்து வணங்கி, துயர்நீங்கப் பெறுவோம்.

- கே.ராஜு, தாழையுத்து