ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

வாரணமும் தோரணமும்

வாரணமும் தோரணமும்
பிரீமியம் ஸ்டோரி
News
வாரணமும் தோரணமும்

வாரணமும் தோரணமும்

ஞானம் பெறுவதன் தொடக்கம் ஆனைமுகனிடம் தொடங்கும். அவரே ஞான முதல்வன். அதனால்தானே வேழ முகத்தானை `ஞானக்கொழுந்து’ எனப் பாடி வைத்தார் ஒளவை பிராட்டி.

தோரணமலை
தோரணமலை

அதேநேரம், ஞானம் முற்றும் நிலைக்கு முருகப்பெருமானின் திருவருள் தேவை. ஞானப் பழமாகி நிற்பவன் அல்லவா அவன்! இப்படியான முதலும் நிறைவும்... கணபதியும் வேலவனும் சங்கமித்திருக்கும் அற்புத க்ஷேத்திரமே தோரணமலை.

தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு, ஒரு யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் என்பதால்தான் இந்த மலைக்கு வாரண மலை என்றும் பெயர் உண்டு என்று பார்த்தோம். `வாரணம்’ என்றால் `யானை’ என்று பொருள். ஆன்மிகப் பெரியவர்கள் இந்த மலையைச் சிறப்பிக்கும்போது, `அண்ணனே வாகனமாகி தம்பியைச் சுமந்து திகழ்கிறான்’ என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

ஆக, ஞானம் தொடங்க அருள்செய்து முற்றிய ஞானத்தை வரமாகத் தரும் தோரணமலையைத் தனக்கான இடமாகத் தேரையர் தேர்வுசெய்ததில் வியப்பில்லைதான். தேரையர் குறித்து அவருடைய காலத்தில் பொதிகை தீரத்தில் நிகழ்ந்ததாக ஒரு திருக் கதையைச் செவிவழித் தகவலாகச் சொல்வார்கள்.

அழகும் வனப்பும் மிகுந்த பொதிகை தீரத்தில், அகத்தியர் ஆசிரமம் அமைத்திருந்த சிகரத்துக்கு எதிரில் ஒரு சிகரம் இருந்தது. பொதிகைச் சூழலுக்கு சற்றும் விலக்கின்றி குளிர் பொருந்தி திகழ்ந்த அந்தச் சிகரத்தின் தாவரஜன்மங்கள் எல்லாம் ஒருநாள் வெம்மையால் தவிக்கத் தொடங்கின. அங்கு வசித்த விலங்குகள் யாவும் விலகி நகரத் தொடங்கின. ஆகாயப் பரப்பில் குறிப்பிட்ட அந்தச் சிகரத்தின் மேலே எவ்வித பறவையும் பறக்கவில்லை.

அதுமட்டுமா? அங்கே தவமியற்றிக் கொண் டிருந்த சீலர்களும், ஆசிரமம் அமைத்திருந்த ஞானிகளும் அங்கு பரவிய வெம்மை தாங்காது அவரவர் இடத்திலிருந்து வெளியேறினர். இப்படியே விட்டால்... தகிக்கும் வெம்மையால் இந்தச் சிகரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொதிகை தீரமும் பாதிப்புறும் என்று அந்த தவச் செல்வர்களுக்குப் புரிந்தது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் இடம் எது என்பதுவும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

ஓடோடி வந்தார்கள். அகத்திய மாமுனி வரின் பாதாரவிந்தங்களில் சரண் புகுந்தார்கள். `பெருமானே அபயம்’ என்று வணங்கி நின்றார்கள். விளைந்த ஆபத்தை எடுத்துச் சொன்னார்கள்.

குறிப்பிட்ட சிகரத்தில் அமர்ந்து தேரையர் புரியும் கடும் தவமே இதற்குக் காரணம் என்றும் எடுத்துரைத்தார்கள். அகத்தியர் விழிகளை மூடினார்; அவரின் திவ்ய திருஷ்டி விழித்துக்கொண்டது. `ஏன் இந்த கடுந்தவம்?’ என்று காரணம் தேட விளைந்தது.

`உயர்ந்த லட்சியம்தான். தேரையன் காலத்தைக் கடந்து பிரபஞ்சத்தின் மூலத்தைத் தழுவ விளைகிறான்; பூரணம் அடைய விரும்புகிறான்’ என்பதை அறிந்துகொண்டார் அகத்திய பெருமான்.

சித்தர் மரபில் படிநிலைகள் உண்டு. மூச்சுப் பயிற்சி, தாரணம், தியானம், சித்திநிலை, சமாதி என்று தொடரும் நிலைகளில் உச்சம் பூரணம். அந்தப் பரிபூரணத்தை அடையவே இப்படியான கடும் தவமோ? தேரையனின் நோக்கம் உயர்ந்ததுதான் எனினும், தனியொருவரின் விருப்பைக் காட்டிலும் உலகின் மேன்மையும் மற்ற உயிர்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் அல்லவா?

ஆகவே, அகத்தியர் ஒரு முடிவுக்கு வந்தார். தேரையனின் தவத்தைக் கலைப்பது என்று தீர்மானித்தார். தனது சக்தியைத் திரட்டி தேரையரின் தவத்தைக் கலைக்க முற்பட்டார். ஆனால் எந்த ஆற்றலுக்கும் கட்டுப்படாத நிலையில் இருந்தது தேரையரின் தவ உக்கிரம். வேறு வழியின்றி தேரையரின் ஸ்தூல தேகத்தையே பிய்த்தெறிவது என்று முடிவு செய்தார் அகத்தியர்.

அதன் பொருட்டு தன் ஆற்றலைப் பிரயோகித் தார். சில கணங்களில் அணுஅணுவாய் தேரையரின் தேகம் சிதறிவிடும் நிலை. சட்டென்று விழித்துக்கொண்டார் தேரையர். சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார்.

தன் தேகத்தையே சிதறடிக்கும்படியான தெய்வ ஆற்றல் தன்னைத் தீண்டுகிறது என்றால், அது குருநாதர் அகத்தியரால் விளைந்ததுதான் என்பதை அறிந்தார். அவர் கணநேரமும் தாமதிக்கவில்லை கரம்கூப்பி குருதேவரைத் தொழுதார். தனது நோக்கத்தை எடுத்து ரைத்துப் பொறுத்தருள வேண்டினார்.

அகத்தியர் மனம் கனிந்தார். தனிப் பட்ட விருப்பு வெறுப்பைக் காட்டிலும் உலக நன்மையே பிரதானம் என்பதைச் சீடனுக்கு நினைவுறுத்தினார். அதன் படியே தேரையரும் மக்களுக்கான தமது மருத்துவப் பணியைத் தொடங்கி தொடர்ந்தார். அந்தப் பணி தோரணமலையில் பூரணத்துவம் பெற்றது என்பார்கள்.

`ஆம், தேரையரின் மகிமையை விவரிக்கும் செவிவழித் தகவல்களில் இதுவும் ஒன்று’ என்கிறார்கள், சித்தக் கலைகள் குறித்த ஆய்வாளர்களும் ஆர்வலர்களும். உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் நிறுவனர் மு.அரி, தேரையர் குறித்து வேறொரு கதை யைப் பகிர்ந்துகொண்டார். அது, தேரையர் தம்மையே தியாகம் செய்ய துணிந்த திருக்கதை!

அந்தக் கதையை அறியுமுன், மூன்று பிரார்த்தனைகளோடு தோரணமலையின் அடிவாரத்தில் பிள்ளையாரை வழிபட்டுக் கொண்டிருந்தாள் அல்லவா ஒரு கன்னிப்பெண். அவளின் வேண்டுதல்கள் நிறைவேறினவா, பிள்ளையாரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்ததா என்பதைப் பார்த்துவிடுவோம்.

பதினாறு முறை வலம் வர வேண்டும் என்பது அவளின் பிரார்த்தனை. இன்னமும் மூன்று சுற்றுகள் பாக்கியிருந்த நிலையில் அந்தப் பெரியவர், பிள்ளையார் சந்நிதியை அணுகினார். அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில், அவளின் பக்தியும் சிரத்தையும் அவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. தன் வீட்டுக்கு வரப்போகும் மருமகள் எப்படியிருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தாரோ, அவ்வண்ணமே அவள் திகழ்வதாகத் தோன்றியது. ஆகவே, அவளைப் பற்றி அவளின் குடும்பத்தைப் பற்றி அறியும் ஆவல் அந்தப் பெரியவருக்கு.

சந்நிதியை நெருங்கி பிள்ளையாரை வணங்கியவர், வலம் வந்து கொண்டிருந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார். அவளோ பதிலேதும் பேசவில்லை. தனது வழிபாடு... அதாவது 16 வலமும் நிறைவடைந்து, பிள்ளை யாரை வணங்கி முடித்தபிறகே பெரியவரிடம் பேசத் தொடங்கினாள். அந்தப் பெண்ணின் குடும்பத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டவர், விரைவில் அவளின் வீட்டுக்குப் பெண் கேட்டுப் போனார்.

ஆம்! பிள்ளையார் மற்றும் தோரண மலையானின் அருளால் அந்தப் பெண்ணின் மூன்று வேண்டுதல்களும் பரிபூரணமாக நிறைவேறின. தடை நீங்கி கல்யாணம் கைகூடியது. அவள் எதிர்பார்த்தது போன்றே பெரியவரின் மகன் நன்கு படித்தவர். மட்டுமன்றி, அவளுக்கு மூன்றாவதாக ஒரு பிரார்த்தனை இருந்தது அல்லவா... கல்யாணத்துக்குப் பிறகும் தன் பெயர் இன்ஷியலில் மாற்றம் கூடாது என்று... அதுவும் நிறைவேறியது.

ஆம், அவளின் தந்தையின் பெயர் சண்முகம். வாய்த்த கணவரின் பெயரோ செண்பக ராமன்! இந்த அற்புதத்தை என்னவென்பது. பக்தையின் வேண்டுதலை ஏற்று, தங்களையே எப்போதும் வழிபட்டும் தொண்டாற்றியும் வரும் குடும்பத்துக்கே அவளை மருமகளாக்கி அருள்பாலித்துவிட்டனர் கணபதியும் தோரணமலையானும்!

அவளின் கணவர் செண்பகராமனும் தோரணமலையானின் தீவிரபக்தர். அவர் வாழ்விலும் அற்புதங்கள் நிகழ்ந்தது உண்டு. ஒருமுறை, இரவு வேளையில் மலையேறி, குகைக்கோயில் அழகன் சந்நிதியில் அமர்ந்து 36 முறை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய முற்பட்டார். அப்போது என்ன நடந்தது தெரியுமா?

- தரிசிப்போம்...