Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரணமலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை முருகன்

தோரணமலை முருகன் கோயில் அற்புதங்கள்!

வாரணமும் தோரணமும்!

தோரணமலை முருகன் கோயில் அற்புதங்கள்!

Published:Updated:
தோரணமலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை முருகன்

அழகு மிளிர தென்பொதிகை தீரத்துக்குத் தோரணம் போன்றும் வடிவில் வாரணம் போன்றும் அமைந்திருக்கும் மாமலை, பிணிகள் தீர்க்கும் குளிர்ச் சுனைகள், மூலிகைகள், சித்தர் சாந்நித்தியம் பொங்கும் குகைகள் ஆகிய ஒவ்வோர் அம்சமும் வெவ்வேறனவை போல் தோன்றும். ஆனாலும் இவை அனைத்தின் மூலமும் ஒன்றேதான். அது தோரணமலையான் எனும் பேரருள்.

தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்

சித்தர் பாட்டு ஒன்று உண்டு `தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மை யானவாறுபோல்...’ என்று கூறும். வடிவில், அளவில், அழகில் வெவ்வேறு ஆயினும் அனைத்தும் ஆபரணங்கள் அனைத்தும் பொன்னில் உருவானவையே. அதுபோலவே அனைத்துக்கும் மூலம் பரம்பொருள் ஒன்றே என விளக்குகிறது இந்தப் பாடல் வரி.

`தோரணமலையானும் அப்படித்தான். சகலத்துக்கும் ஆதாரமாகி எங்கள் வாழ்வுக்கு வரமாகித் திகழ்கிறான்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் தோரணமலை பக்தர்கள். இந்த நம்பிக்கையும் சரணாகதியும்தான் இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரும்.

புண்ணிய தலமாம் காசியில் செருப்புத் தைக்கும் அன்பர் ஒருவர் இருந்தார். ஞானத்தில் சிறந்த சித்தபுருஷர் அவர். ஆனால் சாமானியர்களின் பார்வைக்கு அவர் வெறும் தொழிலாளியாகவே தெரிந்தார். விஷயம் அறிந்தவர்கள் மட்டும் அவரின் மகிமையைப் போற்றி வந்தனர். ஆனால் அவரோ வேறு ஒருவருக்காகக் காத்திருந்தார்.

இவரின் எதிர்பார்ப்புக்குரிய அந்த அன்பர் தமிழகத்தில் இருந் தார். அவருக்குக் காசிக்குச் செல்லவேண்டும் என்று வெகுநாள் ஆசை. ஒருநாள் புறப்பட்டுவிட்டார். காசியில் அந்த ஞானியைச் சந்திக்க நேர்ந்தது. இவரைப் பார்த்ததுமே ஞானிக்கு மகிழ்ச்சி. அன்பரை அழைத்து ஒரு பலகையில் அமரவைத்தார். அதில் அமர்ந்ததும் ஒருவித தெய்விக நிலையை உணர்ந்தார் அன்பர். `இந்த ஞானியே தன் குரு’ என்று தீர்மானித்தார்.

ஞானியோ அன்பரிடம் ஒரு பேய்ச் சுரைக்காய்க் குடுவையைக் கொடுத்தார். அத்துடன் செருப்பு தைத்ததில் சேர்ந்த காசுகளையும் கொடுத்தார். பின்னர், ``என் சகோதரி கங்கையிடம் காசுகளைக் கொடு. கசப்பாய் கசக்கும் இந்தச் சுரைக்காயைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு வா!’’ என்றார் ஞானி.

அன்பர் மறுப்பேதும் பேசவில்லை. நேராக கங்கைக் கரைக்குச் சென்றார். நதியில் அவர் இறங்கவும் நீர்ப்பரப்பில் இருந்து வளைக் கரம் ஒன்று நீண்டு காசுகளைப் பெற்றுக்கொண்டு மறைந்தது. அன்பர் வியக்கவில்லை. சுரைக்காயையும் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு வந்து ஞானியிடம் ஒப்படைத்தார்.

ஞானி மகிழ்ந்தார். மீண்டும் ஒரு கட்டளைத் தந்தார் அன்பருக்கு.

``அன்பனே நான் அவசரப்பட்டுவிட்டேன். மீண்டும் காசுகள் எமக்கு வேண்டும். இதோ இந்தத் தோல் பையில் நிறைந்திருக்கும் நீரிலும் என் சகோதரி இருப்பாள். அவளிடம் கேள் காசுகளைத் தருவாள்!’’ என்று அருகில் நீர் நிரம்பியிருந்த தோல் பையைக்காட்டினார். அப்போதும் அன்பர் மறுப்பு சொல்லவில்லை. ஞானி சொன் னது போலவே செய்தார். அதிலிருந்து காசுகளோடு வளைக் கரம் நீண்டது. காசுகளை எடுத்து, குருவாகிய ஞானியிடம் ஒப்படைத்தார். அந்த ஞானி அன்பரை அணைத்துக்கொண்டார்.

``அன்பனே சிவ வாக்கியா! உனக்குப் பக்குவம் வாய்த்துவிட்டது. எதையும் சந்தேகிக்காதவனே ஞானி. அவ்வகையில் நீ பூரணன். உனக்குச் சகல ஸித்திகளும் கைகூடும்!’’ எனக் கூறி அவருக்கு மந்திரோபதேசமும் செய்து வைத்தார்.

ஆம்! பாடல்கள் பலவற்றால் நமக்குப் பாடம் புகட்டும் சித்தப் புருஷர் சிவவாக்கியர், காசியில் ஞானச்சித்தரிடம் அருள்பெற்ற கதைதான் இது. குருவின் மீதும் இறையின் மீதும் எவ்வித ஐயப் பாடும் இல்லாத பக்தி கொள்வது அவசியம். அப்போதுதான் குரு வருளும் திருவருளும் பரிபூரணமாகக் கைகூடும்.

தோரணமலை பக்தர்களும் தோரணமலையான் மீது தூய பக்தி கொண்டவர்கள், அழகன் முருகனின் பரிபூரண அருளைப் பெற்று மகிழ்பவர்கள்.

தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்

நெல்லை மாவட்டம், தென்காசி அருகிலுள்ள சிற்றூரைச் சேர்ந் தவர் அந்த விவசாயி. அவரின் வாழ்வில் திடீரென பெரும் சோதனை ஏற்பட்டது. அவரின் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை. அவனுக்குப் பதினாறு வயது இருக்கும் போது இடுப்பில் வலி ஏற்பட்டது. அப்போதைக்குச் சிறு சிறு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டாலும் வலி குணமாகவில்லை. நாளடைவில் வலி கடுமையானது.

மருத்துவப் பரிசோதனையில், அறுவை சிகிச்சை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. நிலைகுலைந்து போனார் அவன் தந்தை. மட்டுமன்றி `அறுவை சிகிச்சை செய்தால் குணம்பெற்று விடுவார். ஆனாலும் 40 வயது வரையிலும் உங்கள் மகன் கடின வேலைகள் எதுவும் செய்யக்கூடாது. அவனுக்குத் திருமண வாழ்க்கையும் சாத்தியம் இல்லை’ என்றும் மருத்துவர்கள் கூறிவிட பெரும் கவலைக்கு ஆளானார் அவனின் தந்தை.

மகன் முருக பக்தன். `இனி, அந்த இறைவனே துணை’ என்று தீர்மானித்தான். தோரணமலை முருகனை வேண்டிக்கொண்டு, அடுத்து வந்த தைப்பூசத்துக்கு மாலை அணிந்து 41 நாள்கள் விரதம் இருந்தான். வலி சற்று மட்டுப்பட்டதுபோல் உணர்ந்தான். முருகனின் திருவருளால் நடந்தே சென்றான் தோரணமலைக்கு. 3-வது வருடம் செல்லும்போது, தோரணமலையானுக்குப் பிரார்த் தனையாக அலகு குத்திக்கொண்டான்.

`அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்’ என்று பெரிய வர்கள் சும்மாவா சொல்லிவைத்தார்கள். ஆறுமுகப் பெருமான் அவன் வாழ்வில் மாறுதலைத் தந்தார், அவன் மனதுக்குப் பெரும் ஆறுதலும் அளித்தார். ஆம்! கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிய இடுப்பு வலி, ஒரு நிலையில் முற்றிலும் குணமானது. அதன்பிறகு திருமணமும் முடிந்து குழந்தைகளும் பிறந்தனர்.

உடல்நிலையில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் பெரும் ஏற்றம் கிடைத்தது அந்தப் பக்தருக்கு. இப்போதும் தவறாமல் தைப்பூசத்துக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தோரணமலைக்குச் சென்று வழிபட்டு வருகிறார் அந்தப் பக்தர்.

இப்படி எத்தனையோ உதாரணங்கள் உண்டு தோரணமலையில். `நம்பினோர் கெடுவதில்லை’ என்பதற்கேற்ப, தன்னை நம்பி வரும் அடியார்களின் வாழ்வைச் செழிக்கவைக்கிறான் கந்தப்பெருமான்!

ஆம்! நம்பிக்கையோடு பக்தி செய்தால் குருவருள் நம்மை ஆசீர்வதிக்கும்; அதன் பலனால் திருவருள் நம்மைத் தேடிவரும்.

தேரையரும் அப்படித்தானே! குரு அகத்தியர் மீது அதீத பற்றும் பூரண நம்பிக்கையும் கொண்டு திகழ்ந்தவர் அல்லவா? `தேரையர்’ எனும் திருப்பெயரைப் பெற்றுத் தந்த அற்புதத்தை அவர் நிகழ்த்திய போதும், `அதற்குக் காரணம் குருவின் திருவருள்’ என்றல்லவா மொழிந்தார்!

ஆம்! ஒருமுறை, மன்னன் ஒருவனுக்கு சம்மோஹினி மற்றும் சந்தானகரணி மூலிகைகளைக் கொண்டு அகத்தியர் கபால சிகிச்சை செய்த தருணத்தில், அவருக்கு உதவியாய் தேரையர் செய்த பணி எல்லோரையும் வியக்கவைப்பது!

- தரிசிப்போம்...