Published:Updated:

வாரணமும் தோரணமும்!

தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை

தோரணமலை

வாரணமும் தோரணமும்!

தோரணமலை

Published:Updated:
தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை

முக்கண்ணன் பரமனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய திருமகன் முருகப்பெருமான். தெய்வத் தன்மை, இளமை, இனிமை, மணம், மகிழ்ச்சி, அழகு என்னும் ஆறு தன்மைகளையுடைய பரம்பொருள் குமரன். மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலம் அவனுக்கு மிகவும் பிடித்தமானது.

வாரணமும் தோரணமும்!
வாரணமும் தோரணமும்!


தமிழர் நாகரீகம் தொடங்கியது குறிஞ்சியாகிய மலையிடத்தில் எனச் சிறப்பித்துக் கூறுவர். ஓயாது ஓடும் மேகங்கள்; நிறை மழை பொழியும் கரு முகில்கள்; காலையில் எழும் கதிரவனின் பல வண்ணக் காட்சிகள்; மாலையில் நிலாக் காட்சி; இரவில் மிளிரும் விண்மீன்கள் என இயற்கையில் சகல அழகு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருந்ததால்தான் மலைப்புறங்களும் அதன் சிகரங்களும் குமரன் கோயில் கொள்ளும்படி பெரும்பேறு பெற்று விட்டன.

அதனால்தான் முருகனை ‘மலைக்கு நாயகன்’ ‘மலை கிழவோன்’ என்றெல்லாம் போற்றுகிறார் அருணகிரியார்.

குமரன் மட்டுமா? அவனைக் குருவாகவும் தெய்வமாகவும் கொண்டாடிய அடியார்கள் பலரும் விரும்பி உறைந்ததும் மலை தீரங்களில் தான். அதனால்தான் பொதிகையை நாடி வந்த அகத்தியரும் தோரணமலைக்கும் தேடி வந்து தங்கினார் போலும்.

தேரையரின் குருதேவரும் மாமுனியுமான அகத்தியர் குறித்து எண்ணற்ற தகவல்கள் புராணங்களிலும் ஞானநூல்களில் உண்டு.

பிரம்மதேவனின் வேள்வியில் கும்பத்தில் இருந்து ஓர் அம்சம், ஒளி வடிவாக இறங் கியது. யாகத்தின் முடிவில் அது ஒரு முனிவராக உருப்பெற்றது. அட்சமாலை, கமண்டலம், யோக தண்டம், ஞான முத்திரை ஆகியவற்றைத் தாங்கியவராய் வெளிப்பட்ட அவரை ‘கும்ப முநி’ என்று தேவர்கள் போற்றித் துதித்தனர் என்கின்றன புராணங்கள். அகத்தியருக்குக் கலசமுநி, குடமுநி, கும்பசம்பவன் ஆகிய பெயர்களும் உண்டு. அகத்தில் தூய்மையும் புனிதமும் நிறைந்தவர் என்பதால் `அகத்தியர்' எனும் திருப்பெயர் பொருத்தமாய் அமைந்தது!

ஒரு முறை காசிக்குச் சென்ற அகத்தியர், தமக்குச் செந்தமிழும் சிவஞானமும் போதிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினார்.

தென்னகம் சென்று திருத்தணி முருகனைப் பூசித்தால் விருப்பம் நிறைவேறும் என்று அருள்பாலித்தார் பரமேஸ்வரர். அதன்படியே தணிகைக்கு வந்து தணிகாசலனை வழிபட்டு அஷ்டமா ஸித்திகள் கைவரப் பெற்றார் அகத்திய முனிவர்.

தோரணமலையான்
தோரணமலையான்


மட்டுமன்றி, முருகப்பெருமானையே குருவாகக்கொண்டு தவம் இயற்றி முத்தமிழ் தத்துவத்தையும் உபதேசிக்கப்பெற்றார். ‘சிவனை நிகர் பொதிய முனிவரை மகிழ இருசெவி குளிர இனிய தமிழ் பகர்வோன்’ எனச் சிறப்பிக்கிறது திருப்புகழ்.

முத்தமிழ் இலக்கணங்களையும் உள்ளடக்கி அகத்தியர் அருளிய இலக்கண நூல் - அகத்தியம். அது மட்டுமா? பொதிகை மலையில் அகத்தியர் ஸ்தாபித்த தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்ததாகவும் வரலாறு உண்டு.

அவ்வண்ணமே பொதிகை தீரத்தில் அமைந்த தோரண மலையில் சீடர் தேரையர் மூலம் மருத்துவப் பணி தொடரவும் அருள் செய்தார் குறுமுனிவர்.

இங்ஙனம் குருவருளும் திருவருளும் இணைந்து அளித்த சாந்நித்தியத்தால், உடற்பிணிகளோடு உள்ளப் பிணிகளையும் நீக்கும் புண்ணிய க்ஷேத்திரமாகத் திகழ்கிறது தோரணமலை. ஆகவே, இந்த மலையையும் மலைமேல் அருளும் முருகனையும் தேடி வரும் பக்தர் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

தோரணமலை முருகப்பெருமானும் அவர்களின் வேண்டுதல்கள் விரைவில் பலிக்க அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படித்தான்... அந்த ஆலங்குளம் பக்தரும் தோரணமலையானை தரிசிக்க வந்தார். மலையேறி, சுனையில் நீராடி, முருகனின் சந்நிதிக்கு வந்து தரிசித்த கணத்திலேயே, உள்ளுக்குள் ஏதோ புதுவித உணர்வில் திளைப்பதாய் உணர்ந்தார் அந்த பக்தர்.

ஏதேதோ வேண்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவருக்கு, தீபாராதனையில் ஜொலித்த முருகனை வணங்கி நின்றபோதோ எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அதனால் என்ன... அவர் கேட்காமலேயே அவருக்கு நன்மை எதுவோ அதைச் செய்ய திருவுளம் கொண்டுவிட்டார் தோரணமலையான்.

மலை இறங்கி அடிவாரத்துக்கு வந்த பக்தருக்கு, மனதில் இருந்த ஒட்டுமொத்த பாரமும் இறங்கியதாய் தோன்றியது. படிப் படியாய் அவரின் வாழ்வில் மாற்றம், புது மலர்ச்சி உண்டானது. கடன்கள் அடைபட்டன; சேமிப்பும் அதிகரித்தது.

பிரச்னைகளாலும் மன அழுத்தத்தாலும் எப்போதும் முன்கோபத்துக்கு ஆட்பட்டிருந்த அந்த அன்பர், தோரணமலை தரிசனத்துக்குப் பிறகு, தன் இயல்பிலிருந்து முற்றிலும் மாறிப்போனார்.

இங்ஙனம் தன் வாழ்வை மாற்றிய தெய்வத்துக்கு நன்றிக்கடனாக வழிபாடு நடத்த ஆசைப்பட்டார். மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளன்று, தோரணமலையானுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்தார். அன்று தோரணமலை முருகனை வழிபட வரும் பக்தர்களுக்குப் பிரசாத மாக புளியோதரை விநியோகித்தார்.

நாள்கள் நகர்ந்தன. ஒருமுறை, கார்த்திகை நட்சத்திர நாளுக்கு ஒருநாள் முன்னதாகவே தோரணமலைக்குச் சென்று பூஜை செய்து விட்டார்.

பிறகுதான் தெரிந்தது... மறுநாள்தான் கார்த்திகை என்று. ஆகவே, அன்றைய தினம் இலஞ்சி மற்றும் பண்பொழில் திருமலைக்குமார சுவாமியை வழிபடச் சென்றார். அந்தத் தலங் களில் ஒன்றில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் முருகனின் தரிசனம் கிடைத்ததாம்.

அப்போது அவருக்குள் ஓர் எண்ணம்... `நாம் ஏன் தோரண மலையானுக்கும் இப்படிச் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யக் கூடாது’ என்று. விரைவில் எண்ணத்தைச் செயல்படுத்தினார். இப்போதும் தோரணமலையானுக்குச் சந்தனக்காப்பு அலங்காரத் துடன் அவரின் வழிபாடு தொடர்கிறது.

அவ்வப்போது... `தோரண மலையான் அந்த ஒருநாள் கார்த்திகை நட்சத்திர விவரத்தை மறக்கடித்ததற்குக் காரணம், இப்படி சந்தனக் காப்பு அலங்காரம் பெறுவதற்குத்தான் போலும்’ என்று ஆலங்குளம் அன்பர் சொல்லும்போது, தோரணமலையான் மீது அவருக்கு இருக்கும் பக்தியும் உரிமையும் பூரணமாய் வெளிப்படும்!

- தரிசிப்போம்...

தேரையர்
தேரையர்

தேரையர் சொல்லும் மருந்து!

உணவையே மருந்தாக்கலாம் என்பது முன்னோர் கண்டுசொன்ன வழி. அவ்வகையில் சித்தர் பிரான் தேரையரும் தாம் அருளிய ஞான நூல்களில் சில எளிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.

அவரைப் பருப்பும் துவரைப் பருப்பும் வறுத்துக்கொள்ளவேண்டும். அவற்றுடன் மிளகு, உப்பு, காயம் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை சோற்றில் பிசைந்து சாப்பிட, பலம் உண்டாகும்.

வெள்ளை உள்ளிப் பூண்டு உரித்து, நெய்விட்டு வதக்கி உண்ண, உடம்பினுள் ஏற்பட்ட வலி நீங்கும்.

கொப்பரைத் தேங்காயை நெய்விட்டு, வறுத்துப் பொடிசெய்தும் பெருங்காயத்தையும் நெய்விட்டுப் பொடி செய்தும் இரண்டையும் உணவோடு பிசைந்து சாப்பிட்டால் வெப்பு நோய் நீங்கும்.

பனை வெல்லத்தை நீர்விட்டுக் காய்ச்சிப்ப் அருகினால் உடல் வெப்பம் நீங்கும். கொள்ளு எனும் காணப் பயறு ரசம் வைத்து உணவில் சேர்த்து உண்ண, உடலில் நீரேற்றம் நீங்கும்.

நல்ல தினை மாவைத் தேன்விட்டுப் பிசைந்து நாள்தோறும் உண்டுவந்தால், உடல் பருக்கும்.