திருக்கதைகள்
Published:Updated:

வாரணமும் தோரணமும்-18

வாரணமும் தோரணமும்
பிரீமியம் ஸ்டோரி
News
வாரணமும் தோரணமும்

வாரணமும் தோரணமும்

சிந்தையில் சிவம் நிறைந்தால் மனம் நம் வசப்படும். தாரணை கைகூடும். அதுவே பிறகு தியானமாகப் பரிணமிக்கும். தியானம் முற்றிய நிலையில் சமாதி நிலை வாய்க்கும். அந்நிலையில் அண்ட பகிரண்டத்தையும் கடந்து பயணிக்கலாம். ஆம்! தாரணை, தியானம், சமாதி நிலை இந்தப் படிநிலைகளைக் கடந்து காலத்தை வென்றவர்களே சித்தபுருஷர்கள்.

வாரணமும் தோரணமும்
வாரணமும் தோரணமும்


தன்னை அறிந்த அவர்களுக்கு முக்காலத்தையும் உணரும் ஆற்றல் கைவந்த கலையாகும். அப்படித்தான் சித்தர் ஒருவருக்கு உள்ளக் கண்ணாடியில் எதிர்காலம் புலப்பட்டது. `வானம் மழை பெய்ய மறக்கும்; பன்னிரண்டு ஆண்டு காலம் பஞ்சம் தலைவிரித்து ஆடும்’ என்ற பலனைக் கண்டுகொண்டார்.

அன்றிலிருந்து ஒரு வழக்கத்தை மேற்கொண்டார். தன்னிடம் இருக்கும் ஆடுகளை எருக்கச் செடிகளை தின்னும்படி பழக்கினார். மேலும் வரகரிசியை சேற்றுடன் கலந்துப் பிசைந்து ஆங்காங்கே சுவர் வளர்த்தார்.

விரைவில் பஞ்சம் வந்தது. எருக்கஞ்செடிகளை உண்ணப் பழகிய ஆடுகளுக்குக் கவலை இல்லை. பஞ்ச காலத்திலும் அந்தச் செடிகள் செழிப்பாக வளர்ந்து திகழ்ந்தன. ஆனால் அவற்றைத் தின்றதால் உண்டான அரிப்பைத் தணிக்க, ஆடுகள் ஆங்காங்கே சித்தர் வளர்த்திருந்த சுவரில் உடம்பைத் தேய்த்துக்கொண்டிருந்தன. சுவரின் மண்ணோடு வரகரிசியும் உதிர்ந்தது.

அவற்றைச் சேகரித்து, ஆட்டின் பாலைக் கறந்து சேர்த்துக் கஞ்சியாக்கி காலம் கழித்தார் அந்தச் சித்தர். ஆம், பஞ்ச காலத்தில் அவர் பரிதவிக்கவில்லை. மட்டுமன்றி அவர் சேகரித்திருந்த வரகரிசி மற்றவர்களுக்கும் பயன்பட்டது.

இந்த நிலையைக் கண்ட நவகிரகங்களும் வியந்து அந்தச் சித்தப் புருஷரைக் காண வந்ததாகவும், அவர்களை உபசரித்து உறங்க வைத்த சித்தர், மழை வருவதற்கு உகந்தவாறு அவர்களின் நிலையை மாற்றி அமைத்ததாகவும், அதனால் பெருமழை பொழிந்து பஞ்சம் நீங்கியதாகவும் திருக்கதை நீளும்.

அதுசரி, யார் அந்த சித்த புருஷர்? இடைக்காடர்!

`புற்றுபோல் வளர்ந்தோங்கி திகழ்வது நம் உடம்பு. அதனுள்ளும் ஒரு பாம்பு உண்டு. அதன் பெயர் கோபம். அதை அழித்து வெளியேற்றாவிட்டால் எவ்வித நல்லதையும் நம்மிடம் அண்ட விடாது. ஒருகட்டத்தில் நம்மையும் அழிக்கத் தயங்காது’ என்று உலகுக்கு உபதேசம் வழங்கியவர்.

இவர் மட்டுமா? ஆதிச் சித்தர்கள் பதினெண்மரும் இவ்வாறு தங்களின் வாழ்வாலும் வாக்காலும் நமக்குப் பாடம் சொன்னவர்களே. நம் தோரணமலை தேரையரும் தம்முடைய ஞானநூல்கள் மூலம் நமக்குப் பல பாடங்களைச் சொல்லித் தருகிறார். என்னென்ன தெரியுமா?

`ஓரடி நடவேல், ஈரடி கிடவேல், இருந்துண்ணேல், கிடந்து உறங்கேல்’ என்று உபதேசிக்கிறார். இதன் உட்பொருள் என்ன?

`உச்சி வெயிலில் நடக்கக் கூடாது. ஈரமான தரையில் இருக்கக் கூடாது. சாப்பிட்டது செரிக்குமுன் உண்ணக் கூடாது. தூக்கம் வருமுன் பாய் விரித்துப் படுக்கக் கூடாது’ என்பதுதான் உபதேசம். இப்படியான எளியவை மட்டுமல்ல; அரிய விஷயங்களும் அவரிடமிருந்து பாடங்களாகக் கிடைத்தன நமக்கு. அவையாவும் குரு அகத்தியர் மூலம் அவருக்குக் கிடைத்தவையே எனலாம்.

தமது கட்டளைக்கிணங்க தனியே சென்று மருத்துவப் பணி செய்து வருகிறார் தேரையர் என்பதை அறிந்த அகத்தியர், அவரைச் சோதிக்க எண்ணினார். ஏற்கெனவே இந்தத் தொடரில் அகத்தியருக்குக் கண்ணொளி பாதித்த சம்பவத்தைப் பார்த்தோம் அல்லவா? அந்த நிலையில்தான் இந்தப் பரீட்சையும் நிகழ்ந்தது.

தோரணமலை
தோரணமலை
தேரையர்
தேரையர்

தேரையரை இன்னாரென்று அறியாத மற்ற சீடர்கள், அவரின் மருத்துவத்தால் தங்கள் குருதேவரின் கண்ணொளியை மீட்க முடியும் என்று நம்பினார்கள். அகத்தியரிடன் அனுமதி வேண்டினார்கள். உள்ளூர சிரித்துக்கொண்ட அகத்தியரும் அவர் களுக்கு அனுமதி அளித்தார். அப்போதுதான், ``உரியவனைப் பார்க்கச் செல்லும்போது புளிய மரத்தடியில் தங்கிச் செல்லுங்கள்’’ என்று சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவர்களும் ஆங்காங்கே புளிய மரத்தடியில் தங்கியபடியே பயணத்தைத் தொடர்ந்து தேரையரைச் சந்தித்தார்கள். அவரிடம் குருநாதரின் கண் பாதிப்பைச் சொல்லி முடித்ததும், அப்படியே ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கினார்கள்.

தேரையர் கண்மூடி உள்ளே நோக்கினார். நடந்தவற்றை அறிந்தார். தன் திறனைச் சோதிக்கிறார் குரு என்பதை உணர்ந்தார். மனதில் இறையருளையும் குருவருளையும் பிரார்த்தித்தார். பிறகு அகத்தியர் சீடர்களிடம் ``திரும்பிச் செல்லும்போது வேப்ப மரங்களின் அடியில் தங்கியிருந்தபடி பயணிக்கலாம்’’ என்று அறிவுறுத்தினார்.

அவர்களும் அப்படியே செய்து மீண்டும் அகத்தியரிடம் வந்தனர். என்னே ஆச்சர்யம்... நலிவடைந்திருந்த அவர்களின் தேகம் மீண்டும் பொலிவு பெற்றிருந்தது. வாந்தியும் நின்று போயிருந் தது. அகத்தியர் மனதுக்குள் மகிழ்ந்தார். புளிய மரத்தடியில் தங்கியதால் உண்டான பாதிப்புக்குச் சரியான மருந்தைப் பரிந்துரைத்திருக்கிறான் சீடன் தேரையன் என்பதைப் புரிந்துகொண்டார்.

அப்போதும் அவர் தேரையரின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. ஆபத்தான கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்து வரும்படி கட்டளையிட்டு, அந்தச் சோதனையிலும் வென்ற பிறகே தேரையரை வாழ்த்தி மகிழ்ந்தார்.

இத்தகு சிறப்புகள் கொண்ட தேரையர் இன்றும் தோரணமலையில் சூட்சுமமாய் அருளோச்சுகிறார். அவரின் அருள்திறன் மனப் பிணிகளுக்கு மருந்தாக, ஒளஷதப் பாடங்கள் தேகப் பிணிகளுக்கு மருந்தாகித் திகழ்கின்றன. உதாரணத்துக்கு... உடல் வெம்மை நீக்கும் குடிநீர் தயாரிப்பு முறை குறித்து வழிகாட்டும் தேரையரின் செய்யுள் ஒன்றைக் காண்போம்.

வேதனைக்கு கந்துதணி... எனத் தொடங்கும் அந்தப் பாடல் இப்படி விவரிக்கிறது: மிளகு ஒரு பங்கு, வில்வ இலை ஒரு பங்கு, சுக்கு ஒரு பங்கு, அறுகு வேர் ஒரு பங்கு, வெற்றிலை ஒரு பங்கு ஆகியவற்றைச் சேர்த்து இடித்து, இரண்டு பங்கு நீர்விட்டுக் குடி நீராக்கிக் கொள்ளலாம். இந்த நீரை காலையும் மாலையும் சிறிதளவு பருகி வந்தால், உடல் வெப்பம் தணியும். தகுந்த குருமார்களின் வழிகாட்டலுடன் செய்துப் பழகுவது நலம்.

சித்த புருஷர்களும் அடியார்களும் இங்ஙனம் அருள்பாலிக் கிறார்கள் என்றால், தோரணமலையை ஆளும் முருகப்பெருமானோ, தன்னைத் தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களையெல்லாம் சடுதியில் நிறைவேற்றி அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறான்.

வடிவேலன் அசுர வதம் நிகழ்த்தி தேவர்களைக் காத்தருளி, அதற்குப் பரிசாக வேழமகளைக் கரம்பிடித்தத் திருக்கதையை நாம் அறிவோம். அதேபோல், அவன் வேடமகளை மணக்க பிள்ளையார் பெருமான் துணைபுரிந்த கதையையும் அறிவோம். தம்பி கந்தனுக்கு மட்டுமல்ல, கந்தனை வணங்க வரும் பக்தர்களுக்கும் கணபதியின் துணையும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்.

தோரணமலையில் அடிவாரத்தில் இருக்கும் பிள்ளையார் சந்நிதியை வலம் வந்துகொண்டிருந்தாள் அந்தப் பெண். அவளுக்கு மூன்று வேண்டுதல்கள் மனதில் இருந்தன. `கல்யாணத் தடைகள் நீங்க வேண்டும், நன்கு படித்தவர் கணவராக வாய்க்க வேண்டும், கல்யாணத்துக்குப் பிறகும் தன் பெயரில் - இன்ஷியலில் மாற்றம் கூடாது’ என்பதுதான் அது.

இந்தப் பிரார்த்தனையை மனதில் கொண்டபடி, உள்ளம் உருக துதிப்பாடல்களைப் பாடியவாறு வலம் வந்துகொண்டிருந்தாள் அந்தக் கன்னிகை. 16 சுற்றுகள் வலம் வரவேண்டும். இன்னும் மூன்று சுற்றுகள் பாக்கியிருந்தன... ஆனால் அதற்குள்ளாகவே அவளின் பிரார்த்தனையை நிறைவேற்ற சித்தம் கொண்டுவிட்டார் போலும் அந்தப் பிள்ளையார்.

அதற்கிணங்க, கோயிலில் இருந்த பெரியவர் ஒருவர் அவளை நோக்கி மெள்ள நடந்து வந்தார்!

- தரிசிப்போம்...

‘பிள்ளை பாதி, புராணம் பாதி’

பெரிய புராணம் ‘பன்னிரண்டாம் திருமுறை’யாக விளங்குகிறது. அளவில் பெரியதாக இருப்பது மட்டுமின்றி, பெருமைமிக்க அடியவர்களின் பெருமைகளைப் பேசுவதாலும் இது ‘பெரிய புராணம்’ என்று அழைக்கப்படுகிறது.

தில்லை நடராசப் பெருமான். ‘உலகெலாம்’ என்று அடியெடுத் துக் கொடுக்க, சேக்கிழார் ‘பெரிய புராணம்’ பாடி முடித்தார்.

இந்நூல், இரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்காண்டம், சுந்தரரின் வரலாற்றில் தொடங்கி, பல அடிய வர்களின் வரலாற்றை விவரித்து, திருநாவுக்கரசர் புராணத்துடன் நிறைவடைகிறது.

இரண்டாம் காண்டம், திருஞானசம்பந்தர் புராணத்துடன் தொடங்கி, பல அடியவர்களின் வரலாற்றை விவரித்துக் கூறி, சுந்தரர் கயிலைக்குச் செல்வதுடன் நிறைவு பெறுகிறது.

இந்நூலில் மொத்தமுள்ள பாடல்களில் பெரும்பங்காக (1,256 பாடல்கள்) திருஞான சம்பந்தர் சரிதமாகத் திகழ்கின்றன. இதையொட்டியே ‘பிள்ளை பாதி, புராணம் பாதி’ என்னும் பேச்சுவழக்கு உண்டாயிற்று.