Published:Updated:

"மண் பொம்மைகளை நியூஸ் பேப்பர்ல சுத்திவைக்காதீங்க...!" - ஓவியர் பரமசிவம் டிப்ஸ்

Golu Dolls
Golu Dolls

சினிமா நட்சத்திரங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் வீடுகளிலிருந்து கொலு பொம்மைகளைக் கொண்டுவந்து தருவார்கள்.

நவராத்திரிப் பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது. நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பது. கோயில், வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வண்ணமயமாக கண்களுக்கு விருந்து படைக்கும் கொலு பொம்மைகளை வைத்துப் பக்தர்கள் வழிபடுவார்கள். ஒவ்வொரு வருடமும் புதிய பொம்மைகள் விற்பனைக்கு வரும். அவை நிச்சயம் கொலுவிலும் இடம் பிடிக்கும். இந்த வருடம் அத்திவரதர் பொம்மைக்கு பக்தர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

Artist Paramasivam
Artist Paramasivam

பொதுவாக பண்டிகை முடிந்ததும் இந்த கொலு பொம்மைகளைச் சிலர் பாதுகாக்கத் தவறிவிடுவதுண்டு. இதனால் சில பொம்மைகள் உடைந்தும், நிறம் மங்கியும் போய்விடும். அப்படியான பொம்மைகளுக்கு மீண்டும் புதுப்பொலிவு கொடுக்கிறார் ஓவியர் பரமசிவம். எந்த வகையான பொம்மையாக இருந்தாலும் அவற்றைச் சீரமைத்து, வர்ணம் தீட்டி, புதுசு போலவே அளிக்கிறார். சென்னை மயிலாப்பூர் சித்திரக்குளம் அருகே உள்ளது பரமசிவத்தின் கடை. அவரிடம் பேசினோம்.

“திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மடத்தூர்தான் நான் பிறந்த ஊர். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என்னோட ஆசிரியர் யாரு வகுப்பறைக்கு முதலில் வர்றீங்களோ.. அவங்க தன் பெயரை இந்தப் பெயர்ப் பலகையில எழுதி வைக்கணும்னு சொல்லுவாங்க. என் வீடும் பள்ளியும் பக்கத்துல என்பதால முதலில் வகுப்புக்குப்போய் பரமசிவம்னு என்னோட பெயரை எழுதிட்டு வந்துதான் ஸ்கூலுக்கு கிளம்புவேன். பள்ளிக்குப்போனதும் ஆசிரியர்கிட்டே இருந்து பாராட்டு கிடைக்கும்.

Golu Dolls
Golu Dolls

அந்தப் பாராட்டை தொடர்ந்து வாங்கணும்னு ஆசை வந்துச்சு. தினமும் சீக்கிரமே படுக்கையிலிருந்து எழுந்து பள்ளிக்கு போய்டுவேன். அப்படியே என்னுடைய ஆர்வம் வரையறதுமேலேயும் தாவிச்சு. என்னோட நண்பர்கள் அறிவியல் பாடத்தில் இடம்பெறும் படங்களை என்னை வரையச்சொல்லி ஊக்கப்படுத்துவாங்க. இப்படித்தான் ஓவியத்துறைக்குள்ளே நான் வந்தேன்.

தபால்மூலம் ஓவியம் வரைவது பற்றிய கோர்ஸ் ஒன்றைப் படித்தேன். பின்னர், கோவில்பட்டி சென்று ஓவியர்கள் கொண்டையராஜ், ராமலிங்கம், சீனிவாசன் போன்றவர்களிடம் குருகுலக் கல்விபோல ஓவியத்தை முறைப்படி பயின்றேன். அதன்பிறகு சென்னை வந்து ஒரு அட்வர்டைசிங் கம்பெனியில் ஆர்ட்டிஸ்ட்டாக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போ எனக்கு பதினெட்டு வயசு. `ரவி பெயிண்ட்ஸ்’ என்பதுதான் நான் எழுதிய முதல் போர்டு. மாதம் எனக்கு 120 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அந்தக் கம்பெனிபோல மேலும் பல கம்பெனிகளில் சுமார் 18 வருடங்கள் வேலை பார்த்தேன். அந்த வேலைகள்ல சரியான அளவுக்கு வருமானம் வரலை.

Artist Paramasivam
Artist Paramasivam

இதற்கு இடையில் திருமணமாகி, குழந்தைகளும் பிறந்துட்டாங்க. எனக்கு நான்கு பெண் பிள்ளைகள். அவங்க எல்லோருக்கும் திருமணம் பண்ணிக்கொடுத்துட்டேன். நாலு பேத்தி, மூணு பேரன்கள் உண்டு. அதன்பிறகுதான் மயிலாப்பூர்ல சித்திரக்குளம் பக்கத்துல இந்தக் கடையை போட்டேன். கொலு பொம்மைகளை சரிசெய்துகொடுக்க ஆரம்பித்தேன். 14 வருஷமா இந்த வேலையை செஞ்சுக்கிட்டு வர்றேன். சினிமா நட்சத்திரங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் வீடுகளிலிருந்து கொலு பொம்மைகளைக் கொண்டுவந்து தருவார்கள். அவற்றைச் சரிசெய்து, வர்ணம் பூசித் தந்திருக்கிறேன். குறிப்பாக, மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் குடும்பத்தினர் என்னுடைய வாடிக்கையாளர்கள்தான்.

நூறு வருடங்களைத் தாண்டிய பொம்மைகளைத் தன்னுடைய குழந்தைகளைப்போல பாதுகாக்கும் வாடிக்கையாளர்கள் இப்போதும் உண்டு. பொம்மை சுக்கு நூறாக உடைந்திருந்தாலும் அவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்துவிடலாம். அப்படி வரும் பொம்மைகளைச் சரிசெய்து தரும்போது வாடிக்கையாளர்களின் கண்களில் தெரியும் சந்தோஷமே எனது உண்மையான சம்பாத்தியம்!” என்றவர் கொலு பொம்மைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்கிற டிப்ஸையும் தந்தார்.

நீங்களும் செய்யலாம்: சுற்றுச்சூழலுக்கு உகந்த கொலு பொம்மைகள்
Golu Dolls
Golu Dolls

“பேப்பர் மோல்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், மண் மற்றும் மார்பிள் பொம்மைகள் என்கிட்ட வரும். பெரும்பாலும் பேப்பர் மோல்ட், மண் பொம்மைகள்தான் அதிகமாக வரும். அவற்றில் பல நிறமிறந்து போயிருக்கும். சில பொம்மைகள் உடைந்து வரும். அவற்றை சரிசெய்து, வண்ணம் தீட்டி தருகிறேன்.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள் மலிவான விலையில் தரமானதாக கிடைக்கும். அந்தப் பொம்மைகளில் துவாரம் இருக்கும். இவற்றைப் பராமரிப்பது எளிது. தென்னை நார் உடன் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸை கலந்து பொம்மையிலுள்ள துவாரங்களை அடைப்போம். இது காய்வதற்கு ஒரு மாதம் ஆகும். இந்தப் பொம்மையை அதன் பின்னர் நீண்ட வருடத்துக்குப் பயன்படுத்த முடியும்.

Golu Dolls
Golu Dolls

பேப்பர் மோல்ட்

பேப்பர் மோல்ட் செய்யப்பட்ட கொலு பொம்மைகள் அழகாக இருக்கும் என்பதால் அதை பராமரிப்பது ரொம்ப சிரமம். இந்த வகை பொம்மைகளை, குளிர்ந்த காற்றோட்டமான இடங்களில் வைக்கக்கூடாது. ஈரமில்லாத இடங்களில் வைக்க வேண்டும். பட்டர் பேப்பரை கொண்டு சுற்றிய பின் அதன் மீது பப்பிள் ராப் (Bubble wrap) கொண்டு சுற்றவேண்டும். பின்னர் அதன்மீது காட்டன் துணி கொண்டு பொம்மைக்கு ஏற்றவாறு சுற்றி, பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்திவரதர், நரசிம்மர், சக்கரத்தாழ்வார்... களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!

பொலிவு பெறும் பழைய கொலு பொம்மைகள்... நிறமிழந்த, உடைந்த கொலு பொம்மைகளை மீண்டும் புதுப்பித்துத் தருகிறார் ஓவியர் பரமசிவம். #Navaratri வீடியோ : கிராபியென் ப்ளாக்

Posted by Vikatan EMagazine on Wednesday, October 2, 2019

மண் பொம்மை

கொலு பொம்மைகளிலேயே சிறந்தது மண் பொம்மைதான். அதன் மீதுள்ள நிறம்தான் மங்கிப்போகுமே தவிர, நீண்ட காலத்துக்கு இருக்கும். நூறு, நூற்றி இருபது ஆண்டுகளுக்கு கூட வைத்திருக்கலாம். அப்படியான பொம்மைகளில் சில வர்ணம் பூச என்னிடம் வந்திருக்கிறது. மண் பொம்மையை அட்டைப் பெட்டியில் வைத்து, பாதுகாப்பதே சிறந்தது. எக்காரணம்கொண்டும் செய்தித் தாள்களை சுற்றி வைக்கக்கூடாது.

Artist Paramasivam
Artist Paramasivam

மார்பிள் பொம்மை

மார்பிள் பொம்மைகள் எடை அதிகம். இது ஈரத்தை உறிஞ்சும். எளிதில் மாசடையும் என்பதால் ஈரப்பதமில்லாத இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். புது பொம்மையாக இருந்தால் கண்ணாடி பெட்டியில் வைத்து பாதுகாக்கலாம்” என்கிறார் பரமசிவம்.

அடுத்த கட்டுரைக்கு