Published:Updated:

'வேங்கடவன் தந்த தரிசனம்!'

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

வாசகர் ஆன்மிகம் - சுகுண ரோஷினி

'வேங்கடவன் தந்த தரிசனம்!'

வாசகர் ஆன்மிகம் - சுகுண ரோஷினி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதிக்குப் போறதுனாலே மனசுக்குள்ள எப்பவும் ஒரு சந்தோஷம் வந்து உட்கார்ந்துக்கும். `எப்ப திருப்பதிக்குப் போகப் போறோம்... எப்படி போகப் போறோம்... யார் யாரையெல்லாம் அழைச்சிக்கிட்டுப் போகப் போறோம்’னு யோசிச்சு யோசிச்சு மனசு கற்பனை செய்ய ஆரம்பிச்சிடும்.

வேங்கடவன்
வேங்கடவன்


இப்படித்தான் 15 வருஷமா நடந்துக்கிட்டிருக்கு என்னோட பக்திபூர்வமான திருப்பதி பயணம். அது எனக்கும் பெருமாளுக்கும் உள்ள அதீத பிணைப்பா, ஈர்ப்பா, காதலா... எப்படிச் சொல்றது… இப்படியான பந்தம் ஆன்மிகத்துல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுவது இயற்கை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தெய்வம். தங்களுக்கு இஷ்டமான அந்தத் தெய்வத்தை விதவிதமா விருப்பப்படி வணங்குவாங்க. அந்தத் தெய்வத்தோட பேசுறது, உரிமையா சண்டை பிடிக்கிறதுன்னு பக்தி அவரவர்க்கு தகுந்தபடி பல விதமாக நிகழும்.

என்னோட இஷ்டதெய்வம் வேங்கடேசப் பெருமாள். நம்ம வேளுக்குடி கிருஷ்ணன் ஐயா சொல்ற மாதிரி, பெருமாள்கிட்ட ‘அது வேணும் இது வேணும்’னு கேட்கிறவங்க ஒரு ரகம்; பெரு மாளே வேணும்னு கேட்கிறது ஒரு ரகம். நான் இரண்டாவது ரகம். பெருமாள்கிட்ட எப்பவுமே அவரே வேணும்னுதான் கேட்பேன்.

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 17 முறைக்கு மேல திருமலை திருப்பதிக்குப் போய் வந்திருக்கேன். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒருவகையில் வித்தியாசமான விசேஷமான அனுபவம் கிடைக்கும்!

ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிந்து புது மாநிலமான தருணம் அது. 42 நாள் பஸ் ஸ்ட்ரைக். சென்னையிலிருந்து நான்கு அல்லது ஐந்து பஸ்கள் மட்டுமே இரவில் திருமலாவுக்குப் பயணித்தன. பெரும்பாலும் வழியிலே கேன்ஸல் ஆவதும் உண்டு. அப்படியான நேரத்திலும் நாங்க குடும்பத்தோட ரிசர்வ பண்ணி, திருப்பதிக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணிட்டு வந்தோம்.

அப்ப திருமலையில் கூட்டம் மிகவும் குறைவு. மொத்த மலையிலுமே சுமார் 2000 பேர்தான் இருந்தாங்க. அந்த அனுபவத்தை லைஃப்ல என்னைக்குமே மறக்க முடியாது. அதேநேரம், பஸ்ல போயிட்டுத் திரும்பி வர்ற வரைக்கும் ஒரு பயம் மனசுக்குள்ளே இருந்துக்கிட்டிருந்தது. எந்த நேரத்திலும் பஸ்ஸை நிறுத்தி பாதியிலேயே இறக்கிவிடலாம்... அப்படி நேர்ந்தால் குடும்பத்தோட பரிதவிக்க வேண்டியதுதான்.

ஆனால் பெருமாள் எங்களை அந்த நிலைக்கு ஆளாக்கவில்லை. நல்லபடியா போய்ட்டு வந்தோம் எல்லாம் அந்த வேங்கடவனின் அனுக்கிரகம்தான். கொரொனா பெருந்தொற்று காரணமா கடந்த மூன்று வருடங்கள் போக முடியாம ரொம்ப தவிச்சு போயிருந்தோம்.

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா, சர்டிபிகேட் இருக்கான்னு பல கேள்விகள்... அதேபோல் திடீர்னு தர்ஷன் ஒப்பன் ஆயிடுச்சுன்னு அறிவிப்பாங்க... திடீர்னு கேன்சல் ஆயிடுச்சுன்னு சொல்வாங்க. இப்படியே மூணு வருஷமா பெரும் தவிப்பு!

இந்த வருஷம் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமா சகஜ நிலை திரும்பியது. எப்படியும் மே மாதம் போய்ட்டு வந்துடலாம்னு நம்பிக்கை பிறந்தது. ஆன்-லைன்ல பார்த்தோம். ஆனா, அப்பவே ஆகஸ்ட் மாதத்திற்குரிய புக்கிங்தான் இருந்துச்சு. புக் பண்ணி வெச்சோம்.

வழக்கமா பகல் நேரத்துல தள்ளுமுள்ளுடன் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, அவசர அவசரமா பெருமாள தரிசிச்சுட்டு வர்றோமே... இந்தத் தடவை கூட்ட நெரிசல் இல்லாம தரிசிக்கலாமேன்னு இரவு 10 மணி தர்ஷனை புக் பண்ணினோம். அதேபோல் ரூம் புக்கிங்கும் நல்லபடியா முடிஞ்சது.

சென்னையிலிருந்து ட்ரெயினில் சென்றோம். எங்கள் நல்ல நேரம்... கீழ்திருப்பதியில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கிற விஷ்ணு நிவாசத்திலிருந்து நேரா திருமலைக்கே ஒரு பஸ் தயாரா இருந்துச்சு. ஏறிக்கொண்டோம். அந்த பஸ் ராம்பகீஜா பஸ் ஸ்டாண்டு அருகில் கொண்டுபோய் விட்டது. அங்கிருந்து எங்களுடைய அறை இருந்த கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் தங்கினோம்.

பகலில் நான்கு மாட வீதிகள் உட்பட பல இடங்களில் உலா, வராகர் தரிசனம், உணவு, தேநீர் என்று பொழுது கழிந்தது. ராத்திரி பத்து மணிக்கு தர்ஷன் டைம். நாங்கள் ஒன்பது மணிக்கெல்லாம் போய்விட்டோம். மிகச் சரியாக பத்தரை மணிக்கு சுவாமியை தரிசித்து வெளியே வந்தோம்.

அன்றைக்கு சர்வ தரிசனம் கிட்டத்தட்ட 40 மணி நேரம் ஆச்சுனு சொன்னாங்க. ஆனால் எங்களுக்கோ ஒன்றரை மணி நேரத்திலேயே தரிசனம் கிடைத்தது. வழக்கமா... நாம எவ்வளவு பிளான் பண்ணி போயிருந்தாலும், அங்க வேறு வேறு மாதிரியான சம்பவங்களை வேங்கடேஸ்வர பெருமாள் நிகழ்த்துவது வழக்கம்.

இந்த முறை க்யூல நின்னுட்டு இருந்தோம். திடுதிப்புன்னு அங்கு இருந்த செக்யூரிட்டிங்க ‘ஒரு பத்து பேர் வாங்க’னு கூப்பிட்டாங்க. மிகச்சரியா அந்த இடத்திலிருந்த 10 பேர்ல நாங்களும் இருந்தோம். எங்களை மட்டும் கூட்டிட்டுப் போய், நேரா தர்ஷனுக்கு உள்ளே அனுப்பிவிட்டாங்க. ஆச்சரியமா இருந்துச்சு. வழக்கமா பெருமாளை ரொம்ப தூரத்தில் இருந்து தரிசிப்பதுபோல் இருக்கும்.

இந்தத் தடவை ஏதோ ரொம்ப பக்கத்துல இருந்து தரிசித்த திருப்தி. திருவடி முதல் கிரீடம் வரைக்கும் அப்படி ஒரு தரிசனம். நாங்கள் பலமுறை திருப்பதி போயிருக்கோம். ஆனால், இதுவரைக்கும் பெருமாளை இந்த அளவுக்கு நெருக்கமா நின்று நாங்க தரிசிச்சது இல்லை; கொள்ளை அழகோடு இருந்தார் என் பெருமாள். மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது.

அந்தக் கணம் முதல் பலமணி நேரம் வரைக்கும் அற்புதமான அந்த தரிசனமே மனசில் நிறைஞ்சிருந்தது. வழக்கமா தரிசனம் முடிஞ்சதும் அங்க இங்கேன்னு நின்னு போட்டோல்லாம் எடுப்போம். இந்த முறை அப்படி எதுவும் தோணலை.

பெருமாள் பார்த்த அந்த நேரத்தின் சந்தோசமும் பிரமிப்பும்தான் மனசுல தங்கியிருந்துச்சு. மூணு வருஷமா காத்திருந்ததற்கு பெருமாள் கொடுத்த திவ்ய தரிசனம் அது! எவ்வளவோ பேர் அடுத்தடுத்து காத்திருக்க, எங்களை மிக அருகில் அழைத்து பெருமாள் கொடுத்த அந்த தரிசனம், எங்களுக்கான வரம் என்றே சொல்லலாம்!

ஓம் நமோ வெங்கடேசாய!