Published:Updated:

திருமலை திருப்பதி - 6

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி - 6

திருமலை திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

பெருமாளின் அடையாளங்களாக பக்தர்கள் காண்பதும் போற்றுவதும் கொண்டாடுவதும் அவனின் சங்கு சக்கரம் உள்ளிட பஞ்ச ஆயுதங்களைத்தான். அதிலும் சக்கரம் பிரதான ஆயுதமாகத் திகழ்வது. அதனால்தான் அதனை `சக்கரத்தாழ்வார்' என்று போற்றுகிறார்கள்.

திருப்பதி திருமலை
திருப்பதி திருமலை


திருப்பதி திருமலையில் சிலகாலம் இந்தச் சங்கு-சக்கரம் இல்லாமல் வேங்கடவன் எழுந்தருளியிருந்தார். ஏன் அப்படி? ஏழுமலையானின் அருளாடல் என்றே சொல்லவேண்டும். இந்த அருளாடல் நடைபெறவும் தொண்டைமான் சக்கரவர்த்தியே காரணம்.

தொண்டைமான் சக்கரவர்த்தி, புற்றிலிருந்து அர்ச்சாவதார மூர்த்தியைப் பாலால் அபிஷேகம் செய்து வெளிக் கொண்டு வந்து, திணை மாவால் செய்யப்பட்ட உணவைச் சமர்ப்பித்து வணங்கினான். பெருமாள் அவன் பக்தியால் மகிழ்ந்து அவனிடம் உரிமையோடு பேச ஆரம்பித்தார். இருவரும் நண்பர்களைப் போல உரையாடுவார்கள் என்று சிலாகிக்கின்றன புராணங்கள்! நட்பு அதையும் தாண்டி தொண்டைமானின் பக்தி, தொண்டைமான் மீதான பெருமாளின் நல் அபிமானத்தை அதிகரித்தது. ஒருநாள் தொண்டைமானின் சபைக்குச் சில அந்தணர்கள் வந்தனர். காண்பதற்கு ரிஷிகளைப் போல இருந்தனர்.

தொண்டைமான் அவர்களை வரவேற்று உபசரித்தான். ``தங்களுக்கு அடியேன் என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்...'' என்று வேண்டிக்கொண்டான். அவர்கள், ``நாங்கள் பக்கத்தில் இருக்கும் மலையில் தவம் செய்யும் முனிவர்கள். அங்கு சிம்மாதன் எனும் அசுரனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. தவம், யாகம், வழிபாடுகள் எதையும் செய்ய முடியவில்லை. நீங்கள் தயவுகூர்ந்து அவனை சம்ஹாரம் செய்து எங்களைக் காக்க வேண்டும்'' என்றனர்.

தொண்டைமான் யோசித்தான். ``மன்னர்களில் யாரோடு வேன்டுமானாலும் யுத்தம் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் அசுரனை வதம் செய்வது மனித சக்திக்கு அவ்வளவு எளிதல்லவே'' என்றான். அதற்கு அந்த அந்தணர்களோ, ``நீங்கள் அந்த வேங்கடவனோடு சகாவைப்போல உரையாடுபவர் என்பதை அறிவோம். அவரிடம் நீங்கள் உத்தரவு வாங்கிக்கொண்டு யுத்தம் செய்தால் அவனைக் கட்டாயம் வெல்லலாம்'' என்றனர்.

தொண்டைமான் மகிழ்ந்தான். ``தவ சிரேஷ்டர்களே, தாங்கள் சொல்வது நிஜம். பெருமாளிடம் விண்ணப்பிக்கிறேன். அவர் என்னை யுத்தம் செய்யச் சொல்லி உத்தரவிட்டால், கட்டாயம் யுத்தம் புரிகிறேன்'' என்றான். அந்தணர்கள் தொண்டைமானை வாழ்த்தினார்கள். தலைவணங்கி அவர்களின் வாழ்த்தை ஏற்ற தொண்டைமான், தலைநிமிர்ந்து பார்த்த போது அந்தணர்கள் இந்திராதி தேவர்களாக உருமாறியிருந்தனர். தொண்டைமான் வியந்தான். அவனுடைய மகிழ்ச்சியும் அதிகமானது. தேவர்களே தேடி வந்து தன்னிடம் முறையிட்டது குறித்துப் பேச, பெருமாளின் சந்நிதிக்குச் சென்றான். பெருமாளும் அவனை வரவேற்றார்.

அவரைப் பணிந்து வணங்கித் தொழுத தொண்டைமான் விஷயத்தைக் கூறி, ``யாது செய்வது?'' என்று விண்ணப்பித்தான்.

``சிம்மாதனோடு யுத்தம் செய். உனக்கே வெற்றி கிட்டும். அதற்காக எமது சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்ச ஆயுதங்களையும் தருகிறேன். என் சாந்நித்தியமும் உன்னோடு இருக்கும்!'' என்று வாழ்த்தி அனுப்பினார்.

யுத்தம் தொடங்கியது. நிறைவில் தொண்டைமான் ஏவிய சக்ராயுதம் சிம்மாதனை வதம் செய்தது. தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர். தொண்டைமான் மீண்டும் பெருமாளிடம் வந்து அவரைப் பணிந்து, பஞ்ச ஆயுதங்களையும் சமர்ப்பணம் செய்தான்.

ஆனால் பெருமாளோ, ``மன்னா! நான் ஒருவருக்கு ஒரு பொருளை அனுக்கிரகம் செய்தால், அதைத் திரும்பப் பெறும் நோக்கத்தோடு செய்வதில்லை. எனவே நீ இவற்றை உன்னிடமே வைத்துக் கொள். நீயும் நானும் வேறல்ல...'' என்றாராம்.

தொண்டைமானுக்கு அதை ஏற்கவில்லை. காரணம் சங்கும் சக்கரமும் பெருமாளுக்கே உரியன. அவற்றைத் தான் நிரந்தரமாக வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தனக்குத் தகுதியில்லை என்று நினைத்தான். மேலும், ``சங்கு சக்கரமும் உங்களின் அடையாளம் அல்லவா... அவைதானே நீங்கள் பெருமாள் என்பதை பக்தர்களுக்குச் சொல்லும்'' என்று கேட்டான்.

பெருமாளின் அர்ச்சாவதாரத் திருமேனியில் சங்கும் சக்கரமும் பிரதான அடையாளம். அதற்காக சங்கு, சக்கரம் வைத்திருக்கிற திருமேனி எல்லாம் பெருமாள் திருமேனி ஆகிவிடாது. ஆலயங்களில் இருக்கும் துவாரபாலகர்கள் கூட சங்கு சக்கரம் வைத்திருப்பார்கள். அதற்காக அவர்கள் பெருமாள் ஆகிவிட மாட்டார்கள்!

பெருமாள் என்பதை இந்தப் பிரபஞ்சத்துக்கு உணர்த்தும் நிரந்தரமான அடையாளம் ஒன்று உண்டு. அதுதான் வத்ஸம். இதையொட்டியே என்று ஆழ்வார் பெருமக்களும் `அலர்மேல் மங்கை உறை மார்பா' போற்றுவார்களே!

திருமகள் நிரந்தரமாக வாசம் செய்யும் இடம் அவனின் திருமார்பு அல்லவா? அது ஒன்று போதுமே அவர் பெருமாள் என்று அறிந்துகொள்ள. அதுவும் திருப்பதியில்... திருவேங்கடவன் திருமகளைத் தன் வக்ஷஸ்தலத்தில் தாங்கியிருப்பவர் அல்லவா. அதனால்தானே அவருக்கு நிவாசன் என்றே பெயர். அப்படிப்பட்ட நிவாசனுக்குச் சங்கும் சக்கரமும் மட்டுமே அடையாளம் என்றால் அது சரியாகுமா?!

அதேநேரம், தொண்டைமான் சக்கரவர்த்தியையும் பெருமாள் புரிந்துகொண்டார்.

அப்போது அவனிடம், ``உனக்குக் கொடுத்த பஞ்ச ஆயுதங்கள் உனக்கு வேண்டாம் என்றால், இந்தத் திருமலையில் ஏதேனும் ஓர் இடத்தில் போட்டுவிடு. பிற்காலத்தில் ஒரு பக்தன் வந்து எனக்குச் சங்கு சக்கரங்கள் சமர்ப்பிப்பான். அதுவரை நான் சங்கு சக்கரம் இன்றியே காட்சி கொடுப்பேன்'' என்று அருள்பாலித்தார்.

பெருமாளின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் தொண்டைமான் சக்கரவர்த்தி ஐந்து ஆயுதங்களையும் ஒவ்வோர் இடத்தில் போட்டாராம். அங்கெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள் உண்டாயின. இன்றும் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அற்புதத் தீர்த்தங்களாக பஞ்ச ஆயுதத் தீர்த்தங்கள் விளங்குகின்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, திருப்பதிப் பெருமாளுக்கு ராமாநுஜர் சங்கும் சக்கரமும் சமர்ப்பணம் செய்தார். அதுவே இன்றும் திருமலையில் இருந்து அருள்கின்றன. அந்த அற்புதமான நிகழ்வு குறித்து ராமாநுஜர் காலம் பற்றிப்பேசும்போது விரிவாக அறிந்துகொள்வோம்.

- தரிசிப்போம்...

பரகாமணி சேவை
பரகாமணி சேவை


பரகாமணி சேவை!

திருமலை - செல்வங்கள் வந்து குவியும் பூலோகக் குபேரபுரி. அங்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளைக் கணக்கிடுவதே கடுமையான பணி. அவ்வாறு திருமலையில் சேரும் செல்வத் தைக் கணக்கிட உதவும் சேவைக்குப் `பரகாமணி சேவை' என்று பெயர்.

இதற்கு மத்திய மற்றும் மாநில அரசில் பணியாற்றும் ஊழியர்களையே தேர்வு செய்கின்றனர் தேவஸ்தானத்தினர். இதற்கு, திருமலை திருப்பதி கோயிலின் அலுவல்பூர்வமான இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதார் கார்டு மற்றும் பணி செய்யும் அலுவலகத்தில் வழங்கும் அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். தற்போதைய கொரோனா சூழலில் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக்கொண்ட சான்றிதழையும் இணைக்கவேண்டும்.

கண்காணிப்புக் கேமரா முன்பாக உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் ஆகியன பிரிக்கப்படும். இங்கு பணியாற்றுபவர்களுக்கான உடைக் கட்டுப்பாடுகளும் உண்டு.

தேர்ந்தெடுக்கப்படுபவர், இந்தப் பணியில் 15 நாள்கள் ஈடுபடுத்தப்படுவார். தினமும் காலை 7 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தப் பணியில், இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். பணி செய்யும் நாள்களில் தங்குமிடம் உணவு ஆகியன வழங்கப்படும். சிறு தொகையும் சம்பளமாக வழங்கப்படும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் ஒருமுறை பெருமாளை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். பணி முடிந்து திரும்பும்போது, தேவஸ்தானம் வழங்கும் அடையாள அட்டையைக் காட்டி லட்டு பிரசாத மும் பெற்றுக் கொள்ளலாம். பெருமாளின் ஆசி இருந்தால் மட்டுமே இந்த சேவை செய்யும் பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

எம். பாலசுந்தரம், பெரியகுளம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism