ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

திருமலை திருப்பதி-20

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

காலம்தான் மகான்களும் ஞானிகளும் அவதாரம் செய்யக் காரணமாக இருக்கிறது. ஞானத்தையும் ஆன்மிகத்தையும் இந்த உலகுக்கே வாரிவழங்கி வந்த நம் பாரத தேசம் சில காலம் பிற மத ஆட்சியாளர்களின் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால் வேதங்கள், புராணங்கள், தர்மங்கள் ஆகியன தம் சிறப்பினை இழந்தன. மாயாவாதம் பேசும் மதங்கள் செல்வாக்குப் பெற்றன.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி


மீண்டும் நம் பழைமையையும் பெருமையையும் மீட்டெடுத் துப் புத்துயிர்ப்பு தர விஷ்ணுவின் கண்டாவதாரத்தின் அம்சமாக அவதரித்தார் ஒரு மகான். அவரே வேதாந்த தேசிகர். மேலே குறிப்பிடப்பட்ட ஸ்லோகம் சொல்லும் உட்கருத்து இது.

தேசிகர் சுவாமிகள் காஞ்சிபுரம் அருகே உள்ள தூப்புல் கிராமத்தில் அவதரித்தவர் என்றாலும், அவர் அவதரிக்கக் காரணம் அந்த வேங்கடவனின் திருவருளே என்கிறது ஆசார்ய பரம்பரை சரிதம்.

அனந்தசூரியார் - தோத்தாரம்பாள் எனும் தம்பதி திருமலைக்குத் தரிசனம் செய்ய வந்தனர். திருமணம் ஆகிக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அவர்கள், நல்ல புத்திரப்பேறு வேண்டும் என்று அந்த வேங்கடவனை வேண்டி திருமலையிலேயே தங்கியிருந்தனர்.

ஒருநாள் தோத்தாரம்பாள் உறக்கத்தில் ஒரு சொப்பனம் வந்தது. திருமலையப்பனின் சந்நிதியில் நிற்கிறார்கள். வழக்கத்தைவிட சூரிய கோடி பிரகாசமாக நிவாசன் ஜொலித்தார். தோத்தாரம்பாளின் உடல் சிலிர்த்தது. கண்ணிமைக்காமல் தரிசனம் செய்தார். அப்போது பட்டாசார்யர் தீர்த்தம் கொடுக்க, அனைவரும் வாங்கி ஆசாரத்துடன் அருந்தினர். தோத்தாத்ரி அம்மாள் தனது முறையை எதிர்பார்த்து பயபக்தியோடு காத்திருந்தார்.

அருகே வந்தார் பட்டாசார்யர். தோத்தாரம்பாள் கைகளில் தந்தார். அது தீர்த்தம் என்று நினைத்து வாங்கிய அம்மா ளுக்கு ஆச்சர்யம். அது தீர்த்தமல்ல... வேங்கட வன் சந்நிதி மணி. ஒரு கணம் வியப்போடு பட்டாசார்யரைப் பார்த்தார் அம்மாள்.

பட்டாசார்யர் முகம் தேஜஸில் ஜொலிக் கிறது. ‘ம்’ என்று சொல்லி அருந்து என்பது போல பாவனை செய்கிறார். அம்மாளும் அருந்திவிடுகிறார். அடுத்த கணம் அவருக்கு விழிப்பு உண்டாகிவிட்டது. ஏன் தனக்கு இப்படி ஒரு வித்தியாசமான கனவு வந்தது என்ற சிந்தனையும் சிலிர்ப்புமாக அமர்ந் திருந்தார். விடிந்ததும் கணவரிடமும் கனவு பற்றி விவரித்தார்.

சாஸ்திர நிபுணராக இருந்தபோதும் இந்தக் கனவின் உட்பொருளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை எனினும் திருமலை யப்பனின் சந்நிதியில் நிகழ்ந்த சம்பவம் எனும் குறிப்பைக் கொண்டு, ‘நமக்கு ஆகச் சிறந்த பிரசாதம் ஒன்றை பெருமாள் அருளப் போகிறார். அதற்கான குறிப்புதான் இது. எனவே கவலை கொள்ளாதே. வா... அந்த வேங்கடவன் சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்து வருவோம்’ என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

வேதாந்த தேசிகர்
வேதாந்த தேசிகர்

வழக்கமாக பக்தியோடு பாசுரங்களும் வேதங்களும் ஒலிக்கும் அந்தச் சந்நிதியில் அன்று சிறு குழப்பம் நிலவியதைப் பார்த் தார்கள். என்ன என்று அங்கிருந்தவர்களிடம் கேட்க, ‘பெருமாளின் திருவாராதனத்துக்குரிய கண்டாமணியைக் காணவில்லை’ என்று சொன்னார்கள். தம்பதிக்கு மிகுந்த அதிர்ச்சி யும் ஆச்சர்யமும் ஏற்பட்டன.

கண்டவர் விண்டிலர் என்பதுபோலத் தனக்கு நேர்ந்த கனவை எப்படிச் சொல்வது... கனவில் மணியைக் கொடுத்தார்கள் விழுங்கி விட்டேன் என்று சொன்னால் என்ன நினைப்பார்கள் என்ற குழப்பத்தோடு இருவரும் நிற்க, ஓர் அசரீரி கேட்டது.

“என் திருவாராதன மணி எங்கும் போக வில்லை. அனந்த சூரி - தோத்தாரம்பாள் தம்பதிக்கு அந்த மணியே குழந்தையாகப் பிறக்க இருக்கிறது. எனவே இனி என் திருவாராதனத்தில் மணி தேவையில்லை” என்றது அசரீரி வாக்கு.

அங்கே கூடியிருந்த ஜீயர் சுவாமிகள் உள்ளிட ஆசார்யர்களும் பக்தர்களும் வியந்துபோயினர். எவ்வளவு பாக்கியம் பெற்ற தம்பதி என்று போற்றினர். அன்று முதல் இன்றுவரை பெருமாளின் ஆணைக்கிணங்கத் திருமலையில் ஆராதனத்தில் மணி ஒலிப்பதில்லை என்கிறார்கள் பெரியோர்கள்.

அந்த வியப்பும் போற்றுதலும் வீண்போகவில்லை. புரட்டாசி மாதத்தில், பெருமாளின் திருநட்சத்திரமான ஸ்ரவண நட்சத்திரத்தில் இருவருக்கும் அழகான ஆண் மகவு பிறந்தது. அதற்கு வேங்கடநாதன் என்றே பெயரிட்டனர்.

பொதுவாக பூஜைகள் தொடங்கும் போது பூர்வாங்க பூஜையில் கண்டா பூஜை செய்வதுண்டு. பூஜையில் ஒலிக்க இருக்கும் மணிக்குச் சந்தன - குங்குமம் இட்டு, `இந்த மணியின் ஒலியைக் கேட்டு அசுர சக்தி மிரண்டோட தேவர்கள் இறங்கி வந்து அருள்பாலிக்கட்டும்' எனும் பொருள் படும் துதியைச் சொல்லி, அந்த மணியை ஒலிக்கச் செய்வது வழக்கம். சாதாரண மணியின் ஒலிக்கே இந்த அற்புத சக்தி உண்டென்றால் வேங்கடவன் சந்நிதியின் மணிக்கு எவ்வளவு சக்தியிருக்கும்?!

வேதாந்த தேசிகர் தன் வாழ்நாளில் 124 நூல்களை எழுதியுள்ளார். இவர் செய்த ஸ்தோத்திரங்கள் மக்களுக்குப் பெரும் துணையாக நின்றன. அந்நிய சக்திகளும் சநாதன எதிரிகளும் விலகி ஓடினர். இப்படித் தன் மொழியால் பெரும் குரல் எழுப்பிப் பாடி சகல சாதனைகளும் செய்த வேதாந்த தேசிகர் இதற்கெல்லாம் காரணம் வேங்கட வனின் கருணையே என்பார்.

பிரபத்யே தம் கிரிம் ப்ராய

நிவாச அனுகம்பயா

இஷூ சார ஸ்ரவந்த்யா

இவ யன்மூர்த்யா சர்க்கராயிதம்

- தயா சதகம்

திருமலையப்பன் கருணையின் வடிவான வர். அந்தக் கருணை கருப்பஞ்சாறப்போல இனிப்பது. அந்தச் சாறு ஓர் ஆற்றைப் போல ஓடிவந்து வெல்லக் கட்டியாகத் திரண்டு நின்றால் எப்படி இருக்கும். அப்படிக் கருணையே மலையாக உருவெடுத்ததுபோல் நிற்கிறது வேங்கடமலை. அந்தக் கருணை மலையையும் அந்தக் கருணையின் வடிவான வேங்கடவனையும் பணிந்துகொள்வோம் என்கிறது மேற்சொன்ன ஸ்லோகம்.

இது தயா சதகம் என்னும் நூலின் முதல் ஸ்லோகம். இதுபோன்று வேங்கடவனின் கருணையை விவரிக்கும் நூறு ஸ்லோகங்களின் தொகுப்பே தயா சதகம். இதைப் பாராயணம் செய்தால் வேங்கடவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்; நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இப்படித் திருமலை என்ற உடன் நினைவுக்கு வரும் ஆசார்யர்களில் வேதாந்த தேசிகர் பிரதானமாக இருக்கிறார் என்றார் மிகையாகாது.

`தீர்த்தம் தித்திப்பது ஏனோ'

திருமலையோடு தொடர்புடைய ஆசார்யர்கள் அநேகர். அவர்களில் ஒருவர் எறும்பியப்பா. எறும்பி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் தேவராஜன். மணவாள மாமுனிகளின் சீடர் இவர்.

மணவாள மாமுனிகள் வைணவத்துக்குச் செய்த தொண்டு அளப்பறியது. அஷ்ட திக் கஜங் களைப்போல எட்டுத் திக்கிலும் ஆசார்யர்களை நியமித்து வைணவம் தழைக்கச் செய்தவர். அப்படி அஷ்டதிக் கஜங்கள் என்று அவரால் போற்றப்பட்டவர்களில் ஒருவர் எறும்பியப்பா.

சிலகாலம் திருமலையில் தங்கியிருந்து தீர்த்தக் கைங்கர்யம் செய்யுமாறு மணவாள மாமுனிகள் இவரைப் பணித்திருந்தார்.

அந்தக் காலத்தில் அபிஷேகத்துக்கு நீண்ட தூரம் சென்று தீர்த்தம் எடுத்துவர வேண்டும். பொதுவாக கடினமான வேலைகளைச் செய்யும் போது மனித மனம் சலித்துக்கொள்வது வழக்கம். ஆனால் இவரோ அதைத் தன் பாக்கியமாகக் கருதுவாராம்.

ஒருநாள் தீர்த்தம் சுமந்து வரும்போது, ‘ஆஹா... இந்த பாக்கியம் நம் ஆசாரியர் மணவாள மாமுனி களால் அல்லவா எனக்கு வாய்த்தது’ என்று எண்ணியபடி ஆசார்யரைப் போற்றிக்கொண்டே வந்தாராம். திருமலையப்பன்தான் பேசும் தெய்வம் ஆயிற்றே... அன்று அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையான் எறும்பியப்பாவிடம் `‘இது தீர்த்தமா... இல்லை பானகமா... இப்படித் தித்திக் கிறதே’' என்று கேட்டாராம்.

எறும்பியப்பா, ‘`சுவாமி! எனக்கு ஒன்றும் விளங்கவில்லை’ என்றார்.

உடனே பெருமாளும் `‘நீர் உம் ஆசார்யனை நினைத்துக்கொண்டே வந்தீரோ’ என்று கேட்டார். எறும்பியப்பா, `‘ஆம்’' என்று சொல்ல `‘அதனால் தான் தீர்த்தம் தித்திக்கிறது’ என்றாராம் பெருமாள்!

பெருமாளை ஆசார்யர்கள் கொண்டாடுவது நூறு மடங்கு என்றால், அவர்களைப் பெருமாள் கொண்டாடும்விதம் பல ஆயிரம் மடங்கு என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் வேறு என்ன வேண்டும்?

- தரிசனம் தொடரும்...

ராமனுக்கு வழிகாட்டிய விநாயகர்!

சீதாவைத் தேடி வந்த ராமனுக்கு வழிகாட்டியவர் பிள்ளையார். இவரைப் பின்தொடர்ந்து வந்த ராமன், இலங்கைக்குச் செல்லும் முன்பாக...கோடியக்கரை ஊரில் பிள்ளையார் காட்டிய ஒரு மேட்டின் மீது ஏறி நின்று இலங்கையை நோக்கினாராம்.

இந்த வழியில் சென்றால் ராவணனின் அரண்மனைக் கொல்லைப்புறத்தை எளிதில் அடையலாம் என்பதை உணர்ந்தார் ராமன். ஆனால் அது தன் வீரத்துக்கு இழுக்கு என்று கருதியவர், ராமேஸ்வரம் அடைந்து கடலில் பாலம் அமைத்து இலங்கையை அடைந்தாராம்.

கோடியக்கரையில், மணல்மேட்டில் ராமன் ஏறி நின்ற இடத்தில் இன்றும் அவரின் பாதச் சுவடுகளைக் காணலாம். இதை, `ராமர் பாதம்' என்று தரிசித்துச் செல்கிறார்கள். தவிர, வேதாரண்யம்- தெற்கு வீதி முனையில், கோடியக் காடு செல்லும் பாதையில், ராமனுக்கு உதவிய கணபதிக்குக் கோயில் அமைத்து, 'ராமருக்கு இலக்கு அறிவித்த விநாயகர்' என்ற பெயரில் வழிபட்டு வருகிறார்கள்!

- ஆரூர். ஆர். சுப்பிரமணியன்