
திருமலை திருப்பதி
அவர் பெயர் நிவாசர். அந்தக் காலத்தில் பிரபல சாஸ்திர பண்டிதர். அவர் வாழ்ந்த காலத்தில் அந்த ஊரில் ஒரு ஹரிதாசர் இருந்தார். சதா சர்வ காலமும் ஹரிநாம பஜனை செய்வது, உஞ்சவிருத்தி என வாழ்ந்துவந்தார்.

அவரைக் கண்டாலே நிவாச பண்டி தருக்கு ஆகாது. ‘ஹரிதாசன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு, உழைக்காமல் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சோம்பேறி’ என்று அவரை இகழ்ந்தார். ஆனால் அந்த ஹரிதாசரோ அவற்றைப் பொருட்படுத்தவே மாட்டார். காரணம் அவர் மனம் எப்போதும் அந்தப் பாண்டுரங்கனையே தியானத்துக் கொண்டிருந்தது.
பெருமாள் தன்னை அவதூறாகப் பேசினால் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன் அடியார்களை அவமானப்படுத்தினால் பொறுக்கவே மாட்டார். அப்படி ஒரு நாள் நிவாசரின் வாழ்விலும் வந்தது. ஆரோக்கியமாக இருந்த நிவாசருக்கு வயிற்றில் ஏதோ உபாதை ஏற்பட்டது. ஆகாரம் வயிற்றில் நிற்காமல் போயிற்று. வலி பொறுக்க முடியாமல் தவித்தார். புகழ்பெற்ற வைத்தியர்கள் வந்து பார்த்தனர். அவர்களின் மருந்தும் மந்திரமும் பலிக்கவில்லை. வலி அதிகமானதே தவிர குணமடையவில்லை.
இந்நிலையில், வயது முதிர்ந்த வைத்தியர் ஒருவர் நிவாசரைச் சோதித்தார். `வயிற்றில் ஏதோ விஷம் இருக்கிறது. அதை மனிதர்களால் தீர்க்க முடியாது. இந்த உலகில் தீராத நோய் களைத் தீர்த்துவைக்கும் வைத்தியன் திருமலை அப்பன்தான். எனவே அவரைச் சென்று சேவி’ என்று சொல்ல, நிவாச பண்டிதர் திருமலைக்குச் சென்று சுவாமி புஷ்கரணியில் நீராடிப் பெருமாளை தரிசனம் செய்தார்.
மனம் ஆறுதல் அடைந்ததே தவிர, பிணி குணமாகவில்லை. அங்கேயே தங்கி தினமும் பெருமாளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித் தார். அவரின் பிரார்த்தனை ஒருநாள் பெருமாளின் இரக்கத்தைப் பெற்றது. பெருமாள் தன் திருவாய் மலர்ந்து அவருக்கு அருளினார்.
சத்தியம் சத்தியம் புனர் சத்தியம்
சத்யமே வஹி பண்டிதா
பக்தா அபராதம் சோதமே
நாகும் நஹி சக்தி த்விஜோத்தமா
- என்று தொடங்கும் ஸ்லோகத்தைச் சொல்லி, நோய் தீர வழிகாட்டினார். அந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து பின்வருமாறு.
‘மாற்ற இயலாத சத்தியம் ஒன்றைச் சொல்கிறேன் கேள் பண்டிதா. நான் எதையும் பொறுத்துக்கொள்வேன். ஆனால் உண்மை யான என் பக்தர்களுக்குச் செய்யும் அபராதத் தைப் பொறுக்கமாட்டேன். என் தாசனை நீ அவமானப் படுத்தினாய். அதனால் உண்டான உன் ரோகம் நீங்கிட அவனே மருந்து. நீ அவன் பாதங்களைப் பணிந்து அவனுடைய பாத தீர்த்தத்தை அருந்து. உன் சரீர வேதனை தீரும்’ என்று வழிகாட்டினார்.
இதைக் கேட்ட நிவாச பண்டிதர் கண்ணீர் மல்கினார். பெருமாளிடம் தான் செய்த பாவங்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டு, உடனே தன் ஊருக்குத் திரும்பினார். அப்போது வீதியில் நாமசங்கீர்த்தனம் செய்த படி உஞ்சவிருத்தி செய்துகொண்டு அந்த ஹரிதாசர் எதிரில் வந்தார். நிவாச பண்டிதர் ஓடிப்போய் அவர் காலடியில் வீழ்ந்து வணங் கினார். அவருக்குப் பாதபூஜை செய்து பாத தீர்த்தத்தை அருந்தினார்.
என்ன ஆச்சர்யம் அடுத்த கணம் அவர் வயிற்றில் இருந்த உபாதை மாறியது. அதுமட்டு மல்ல பாகவதோத்தமரின் பிரசாதம் அருந்திய கணத்தில் இருந்து அவரும் பாகவதரானார். அற்புதமான கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தார். அவருக்கு ஜகந்நாத தாசர் என்ற திருநாமம் உண்டாயிற்று. அவ்வாறு நிவாச பண்டிதருக்கு அருள் செய்த அந்த தாசர் விஜயதாசர் ஆவார்.
விஜயதாசரின் இயற்பெயர் தாசப்பர். புரந்தரதாசரின் சீடர். ஒருமுறை அவர் காசிக்குச் சென்றிருந்தபோது, புரந்தரதாசர் ரூபத்தில் பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்து கங்கையின் மறுகரைக்கு அழைத்துச் சென்றார். அங்கே தாசப்பருக்கு வியாசரின் தரிசனம் கிடைத்தது. வியாசர் அவர் நாவில், ‘விஜய’ என்று எழுத, தாசப்பர் ஹரிதாசர் ஆனார். அதன்பின் அவர் பாடிய கீர்த்தனைகள் பல லட்சம் என்பார்கள். அவருக்கும் ‘விஜயதாசர்’ என்ற திருநாமம் ஏற்பட்டுவிட்டது.
அப்படிப்பட்ட விஜயதாசர் திருமலை வாசன் மீது தீராத பக்தி கொண்டவர். பல காலம் திருமலையில் தங்கிப் பல அற்புதங்கள் நிகழ்த்தியவர். ஒருமுறை பிரம்மோற்சவம் நடைபெற்ற காலத்தில் விஜயதாசர் தன் சீடர் களோடு திருப்பதிக்கு எழுந்தருளினார்.
அப்போது பெரும் கூட்டம். பெருமாளை தரிசிக்கக் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது ரதோற்சவத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். சீடர்கள் உற்சவரை சேவித்து விட்டுப் பாரனை மேற்கொள்ளலாம் என்றனர்.
விஜயதாசர் தன் சீடர்களை அழைத்து ஓர் ஓலையைக் கொடுத்தார். அதில், ‘மாபெரும் ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியான நீ, இந்தப் பரபரப்பான சூழலில் என்னை மறந்து விட்டாய். ஆனால் நீதான் சத்தியமான தெய்வம் என்று கூற நான்தான் வர வேண்டும்’ என்று பொருள்படுமாறு அதில் எழுதியிருந்தார்.
அதைப் பெருமாள் ரத யாத்திரை வழியில் வைக்கச் சொன்னார். அதன்படி சீடர்களும் ரதத்தின் பாதையில் அந்த ஓலையைவைத்தனர்.
அதன்பின் பெருமாளின் ரதம் நகரவே யில்லை. எத்தனையோபேர் முயன்றும் ரதம் நகரவில்லை. அப்போது ஒரு சிறுவனுக்குள் பெருமாள் ஆவிர்பவித்து, “விஜய தாசர் வந்தால் மட்டுமே ரதம் நகரும்” என்று கூற அனைவரும் விஜயதாசரைத் தேடி ஓடிவந்து அவரைப் பணிந்து வரவேற்று அழைத்துச் சென்றனர். அவர் சென்று பெருமாளை தரிசனம் செய்து, பின் ரதத்தினைத் தொட ரதம் நகர ஆரம்பித்தது.
இந்த நிகழ்வுக்குப் பின் விஜயதாசர் திருவேங்கடமுடையான் மீது பெரும் காதல் கொண்டார். பிரம்மோற்சவ விழாவில் புறப்பாடு நடக்கும்போதெல்லாம் அவர் முன் நடந்தபடி நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே செல்வார். பக்தியில் கண்ணீர் பெருக்குவார். தாவிக்குதிப்பார். நடனமாடிக்கொண்டேயிருப்பார்.
ஒருமுறை விஜயதசமி ரதோற்சவத் திருநாள் திருமலையில் களைகட்டியது. விஜயதாசர் தன்னை மறந்து பஜனை செய்துகொண்டு முன் சென்றார். பெருமாளும் பேரானந்தமாக ரதத்தில் பவனி வந்தார். திடீரென்று ஒருவீட்டின் முன்பாக அந்த ரதம் நின்றுவிட்டது. எவ்வளவோ முயன்றும் ரதம் நகரவில்லை.
பெருமாளின் ஒவ்வோர் அசைவுக்கும் ஒரு பொருள் இருக்கும் என்று எண்ணினார் விஜய தாசர். கண்களை மூடி தியானம் செய்தார். அடுத்த கணம் ரதம் நின்ற இடத்துக்கு அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்தார். உள்ளே தொட்டிலில் ஒரு குழந்தை படுத்திருந்தது. அதை அள்ளி எடுத்தார். அப்போது அந்தக் குழந்தையின் தாய் பதறியபடி ஓடி வந்தாள்.
“ஐயா! என் குழந்தையை எங்கே கொண்டு போகிறீர்கள்?'' என்று கேட்டு அவரைத் தடுத்தாள்.
விஜயதாசர், “அம்மா! ஏன் பதறுகின்றாய்? இந்தக் குழந்தை உன்னுடையது என்று எவ்வளவு உரிமையோடு சொல்கிறாய்... ஆனால் இந்தக் குழந்தையைப் பெற நீ அந்தப் பெருமாளிடம் என்ன வேண்டினாய் என்பது நினைவிருக்கிறதா... சொல்” என்று சொல்ல இதை எதிர்பாராத அந்தத் தாய் அப்படியே அதிர்ந்து நின்றாள். அவளுக்குப் பெருமாளிடம் தான் வேண்டிக்கொண்ட அந்த நாள் நினைவுக்கு வந்தது.
திருமணமாகியும் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தாள் அவள். ஊரே அவளை, ‘மகப்பேறு இல்லாதவள்’ என்று ஏளனம் செய்தது. அதைப் பொறுக்க முடியாமல் அவள் திருமலையப்பனின் சந்நிதிக்குச் சென்று முறையிட்டாள்.
“சுவாமி, எனக்குக் குழந்தை வேண்டும் என்பதைவிட என்மீது உள்ள இந்தப் பழிச் சொல் நீங்கவேண்டும். அவ்வாறு நீங்கி எனக்குக் குழந்தை பிறந்தால், அதை உன் ரதத் தின் சக்கரத்திலேயே விட்டுவிடுகிறேன்” என்று சொல்லிக் கதறியழுதாள்.
வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தருபவன் அல்லவா அந்த வேங்கடவன். அவள் கேட்ட வரத்தை அருளினான். அவள் தாயானாள். அடுத்த ஆண்டே அழகான குழந்தை பிறந்தது. வேண்டிக்கொள்ளும்போது உணர்ச்சி வசப்பட்டு வேண்டிக்கொண்டாளே தவிர, யாருக்குத்தான் குழந்தையைத் தேரில் காலில் விட மனது வரும்.
ஆனால் வேங்கடவனோ திருவிளையாடல் புரிவதில் வல்லவனாயிற்றே... கொடுத்த கடனை வசூலிக்கும் கராரான வட்டிக்காரன் போல, அவள் வீட்டு வாசலில் தன் ரதத்தை நிறுத்திவிட்டார். இதைத் தன் ஞான திருஷ்டி மூலம் அறிந்துகொண்டுதான் விஜயதாசர் அந்த வீட்டுக்குள் நுழைந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். மலரைப்போலக் களங்கம் இன்றிச் சிரிக்கும் அந்த மழலையைத் தேர்காலில் வைத்தார்.
தாயோ பேச்சற்று நின்றாள். சுற்றியிருந்த பக்தர் கூட்டம் விக்கித்துப் போயிற்று. அதுவரை ரதத்தின் வடத்தைப் பற்றியிருந்தவர்கள் அதை உதறி விலகினர். விஜயதாசரோ ரதத்தின் முன் வந்தார்.
‘நடதுபாரைய்யா... பவ கடலிகே கும்ப சம்பவைய்யா’ என்று கீர்த்தனம் பாட ஆரம்பித் தார். ‘நடந்து வா ஐயா... இந்தத் துன்பம் மிகுந்த கடல் போன்ற இந்த வாழ்க்கையைக் கடக்க எங்களுக்கு அருளுமாறு நடந்து வா ஐயா’ என்று பொருள் படும்படிப் பாடினார்.
அனைவரும் நடுக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர ஒருவரும் விஜய தாசரைத் தடுக்கவில்லை. காரணம் அவர் மீது இருந்த நம்பிக்கை. அவர் கீர்த்தனம் பாடி முடிக்கவும் ரதம் அசையத் தொடங்கியது.
குழந்தையின் கதியை நினைத்து எல்லோரும் கலங்கி நின்றார்கள்!
- தரிசனம் தொடரும்...