திருக்கதைகள்
Published:Updated:

திருமலை திருப்பதி-21

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

பக்தி மார்க்கத்தில் ஆசார்யர்களின் இடம் எத்தகைய முக்கியத் துவம் வாய்ந்ததோ, அதே அளவுக்கு இசை மூலம் பக்தி வளர்த்த தாசர்களின் இடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. கலியுகத்தின் மோட்ச சாதனம் நாம சங்கீர்த்தனம். தவமும் தியானமும் பூஜையும் செய்ய இயலாத சாமானியர்களுக்காக சங்கீர்த்தனைகளையும், பஜனைகளையும், அபங்கங்களையும் உருவாக்கினர் தாசர்கள்.

அன்னமய்யா
அன்னமய்யா


மராட்டிய மாநிலத்தில், பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கனைப் போற்றும் தாசர்கள் பலர் 13- ம் நூற்றாண்டு முதல் உருவாயினர். அவர்களின் பெருமையைச் சொல்லும் நூல் பக்த விஜயம். அதேபோன்று திருமலையில் கோயில் கொண்டுள்ள ஶ்ரீநிவாசனின் பெருமையைப் பாடிப் பரவிய பெரியவர்கள் பலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் அன்னமய்யா.

திருமலைக் கோயில் மணியின் அம்சமாக ஶ்ரீவேதாந்த தேசிகர் தோன்றி வைணவம் வளர்த்ததுபோல, வேங்கடவனின் இடை வாளின் அம்சமாக அவதரித்தவர் அன்னமய்யா. அதனால்தானோ என்னவோ அவர் பாடல்கள் கேட்ட கணத்திலேயே நம் நெஞ்சில் ஆழமாய்ப் பாய்ந்து பதிந்துகொள்பவையாகத் திகழ்கின்றன!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, வேங்கடவனை தரிசனம் செய்துவிட்டு ஆனந்த விமானத்தை வலம் வரும் வழியில், எதிரே குதிர்போல் ஒரு கட்டுமானம் இருந்ததாம். அது என்ன என்று யாருக்குமே தெரியாமல் இருந்த காலம் அது. ஒருவேளை பொன்னும் பொருளும் இருக்கலாம் என்று சிலர் கூறினர். அதைத் திறந்தால் பாதிப்பு ஏற்படலாம் என்றனர் சிலர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அந்தக் கட்டுமானத்துக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க முடிவு செய்து துணிந்து அதை இடித்தார்கள். அதில் பொன்னும் பொருளும் இல்லை. மாறாக அவற்றைவிட மதிப்பிற்குரிய ஏராளமான செப்புத் தகடுகள் கிடைத்தன. காரணம், அவற்றில் அன்னமய்யாவின் இனிமையான சாகித்யங்கள் இருந்தன.

அன்னமய்யா, தான் வாழ்ந்த காலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கீர்த்தனங்கள் எழுதினார் என்கிறார்கள். ஆனால் இன்று நம்மிடையே இருப்பவை வெறும் 12 ஆயிரம் மட்டுமே. ஆனால் அவையே தெலுங்கு பக்தி மார்க்கத்தில் பெரும் மாற்றத்தைச் செய்யப் போதுமானதாகிவிட்டன. தென் இந்தியா முழுவதும் பஜனை செய்யும் ஹரி பக்தர்கள், அன்னமய்யாவின் கீர்த்தனங்களை இசைக்காமல் பஜனையைத் தொடங்கவோ நிறைவு செய்யவோ இயலாது.

அன்னமய்யா அவதரித்த காலம் மிகவும் முக்கியமானது. ஆந்திர மாநிலம் தாள்ளப் பாக்கம் எனும் கிராமத்தில் நிகழ்ந்தது அவரது அவதாரம். 1424 - ம் ஆண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில், பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நாராயண சூரி- இலக்குமி அம்மாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் அன்னமய்யா. நாராயண சூரி அந்தண குலத்தைச் சார்ந்தவர் என்றபோதும் வேளாண் தொழிலிலேயே ஈடுபட்டு வந்தார்.

அன்னமய்யா
அன்னமய்யா
process

அன்னமய்யாவுக்கு 7 வயதில் உபநயனம் நிகழ்ந்து கல்வி தொடங்கப்பட்டது. `கருவில் திருவுடையார்’ என்பார்களே அதேபோன்று அன்னமய்யாவுக்கு பக்தியும் கல்வியும் சொல்லித்தர வேண்டியிருக்கவில்லை. அவருள் அனைத்துக் கலைகளும் நிரம்பி வழிந்தன. நாளாக நாளாக அவருக்குள் வேங்கடவன் மீதான பக்தி பெருகத் தொடங்கியது. அவர் கனவுகளைத் திருமலை ஆட்கொண்டது. அவற்றைக் காணும் ஆவலும் பெருகியது. அதில் உடல் மெலிந்தார் அன்னமய்யா.

எப்போதும் தனக்குள் ஹரி நாம ஜபம் செய்ய ஆரம்பித்தார். ஓடியாடி விளையாட வேண்டிய சிறுவன் எதையோ பறி கொடுத்தவன் போல் சோர்ந்துபோய் இருப்பதைக் கண்ட பெற்றோர் கவலை கொண்டனர். அவன் கவனத்தைத் திசை திருப்ப விவசாய வேலைகளில் அவரை ஈடுபடுத்தினர். கரங்களும் உடலும் மற்றவர்கள் சொன்ன வேலையைச் செய்தனவே தவிர, அவர் மனமோ திருமலையின் மீதே இருந்தது.

ஒருநாள் அன்னமய்யாவைப் பசுக் களுக்கு வைக்கோல் அறுத்து வரச் சொல்லி அனுப்பினார் நாராயண சூரி. அன்னமய்யா வைக்கோலை வெட்டிக் கொண்டிருக்கும்போதே, ‘நான் யார்... இதுவா என் வேலை... இதற்காகவா என்னை அந்த ஆண்டவன் படைத்தான்... இப்படியே போனால் திருமலைக்குச் செல்வது எப்போது... அந்த வேங்கடவனின் தரிசனம் கிடைப்பது எப்போது...’ என்று தனக்குள்ளேயே குமுறத் தொடங்கினார். அப்போது அவர் காதுகளில், ‘கோவிந்தோ கோவிந்தா’ என்னும் முழக்கம் கேட்டது.

அன்னமய்யா தலைநிமிர்ந்து பார்த்தார். யாரோ சில அடியவர்கள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் திருமலைக்குச் செல்கிறார்கள் என்பதை அவர்களின் மஞ்சள் உடையும் நெற்றியில் பதிந்த திருமண்ணும் சொல்லிற்று. அவர்களின் நடை `எப்போது சென்று திருமலை சேர்வோம்... அந்த வேங்கடவனை தரிசிப் போம்’ என்னும் ஆவலில் வேகமாக நடப்பது போல இருந்தது.

இதைக் கண்டதும் அன்னமய்யாவுக்குச் சகலமும் மறந்துபோயிற்று. வீட்டையும், பெற்றோரையும், உற்றோரையும் மறந்தார். கோவிந்தா நாமம் மட்டுமே அவர் காதுகளில் ஒலித்தது. அந்த பக்தர்களின் ஊர்வலத்தில் கடைசியாகச் சேர்ந்துகொண்டு அவர்களோடு நடந்தார். தன் பலத்தையும் மீறிய குரலில் கோவிந்தா கோஷமிட்டார்.

யாத்திரைக் குழு கீழ்த்திருப்பதியை அடைந்தது. பொழுது சாயத் தொடங்கியதும் அங்கேயே தங்க முடிவு செய்தனர் பக்தர்கள். அதுவரைத் தன்னைப் பிணைத்து வைத்திருந்த ஏதோ ஓர் மாயக்கட்டு அறுத்துக்கொண்டதுபோன்று உணர்ந்தார் அன்னமய்யா. இரவெல்லாம் `அந்தத் திருமலை வாசனை தரிசனம் செய்வது எப்போது’ என்று தவித்திருந்தார்.

பொழுது புலர்ந்தது. அடிப்படி நரசிம்மரைத் தொழுது பக்தர்கள் கூட்டத்தோடு மலை யேறத் தொடங்கினார். தலையேறு குண்டு, கற்பூரக்கால்வாய் ஆகியவற்றைத் தாண்டி ‘முழங்கால் முறிச்சான்’ என்னும் செங்குத்தான பாதையை அடைந்தார்.

முழங்கால் முறிச்சான் சாளக்கிராமக் கல் என்பது நம்பிக்கை. பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் அந்த மலைப் பகுதியில் கால் வைத்து நடத்தல் தகாது என்று பல பக்தர்கள் மண்டியிட்டு முழங்காலால் நடந்தே ஏறுவர். அன்னமய்யாவும் அவ்வாறே மலையேறினார்.

பால்யம் முற்றிலும் மாறாத குழந்தையான அவருக்கு அது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஊரிலிருந்து கிளம்பியதிலிருந்து உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் இருந்ததால், பசி அவரை வாட்டியது. மலையின் உச்சி யில் நின்று தலைகுனிந்து தன்னைப் பார்ப்பது போல சூரியன் சுடர்விடுவதைக் கண்டதும் அன்னமய்யாவுக்குக் கண்கள் கூசின.

சில அடிகள் கூட எடுத்துவைக்க முடியவில்லை. முன் சென்ற அடியவர் கூட்டம் வேகவேகமாக மலையேறிப் போய்விட்டது. அன்னமய்யா தனித்துவிடப்பட்டார். உடல் சோர்ந்தது. அப்படியே சரிந்தார். மலையப்பனைத் தேடி வந்த அவர் வாயில் ‘அம்மா... அம்மா’ என்னும் முனகல் மட்டுமே எஞ்சியிருந்தது.

அன்று சீர்காழியில் சிவகங்கைக் குளப் படிக்கட்டில் தனித்துக் கிடந்து, அம்மையை அழைத்த சம்பந்தனைப் போல அன்னமய்யாவும் முழங்கால் முறிச்சானில் இருந்து மயங்கி விழுந்து சுய நினைவின்றி ‘அம்மா அம்மா’ என்று புலம்பினார்.

சகல லோகங்களையும் காக்கும் அந்த அலர்மேல்மங்கைத் தாயாரின் காதுகளில் அந்தக் குரல் ஒலிக்காமல் இருக்குமா என்ன? ‘வேங்கடவனை விட்டு இனி ஒரு கணமேனும் பிரியேன்’ என்று அவன் மார்போடு இருந்து அருளும் அந்த மங்கை, தன் குழந்தை அன்னமய்யாவை அள்ளி எடுக்க ஒரு கணம் பிரிந்து வந்தார்.

அங்கு ஓடிக்கொண்டிருந்த ஓடையின் நீர் எடுத்து அவர் மயக்கம் தெளிவித்தார். அன்னமய்யாவுக்குத் தன்னை எழுப்புவது யார் என்று புலப்படவில்லை. ஆனால் தாய்மையின் வசீகரம் தவழும் அந்த முகம் அவரைத் தேற்றியது. தாயார் தன் கைகளில் ஏழுமலையானுக்கு நிவேதனமான பிரசாதத்தை ஏந்தியிருந்தார். அதை அன்னமய்யாவுக்கு ஊட்டிவிட்டார். பிறகு, ‘வேங்கடவனை தரிசிக்கும் வழி இதுதான்’ என்று சொல்லி உரிய பாதையைக் காட்டினார்.

அன்னமய்யா, ‘தாயே உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்’ என்று சொல்லி அவர் கால்களில் வீழ்ந்துப் பணிந்து நிமிர்ந்த கணம் தாயார் அங்கிருந்து மறைந்தார்.

அன்னமய்யா திடுக்கிட்டார். அம்மா... அம்மா என்று மலைக் காடுகளில் ஓடித் தேடினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்த அந்தத் தாய் யாராயிருக்க முடியும் என்று சிந்தித்தார். அடுத்த கணம் அது அலர்மேல் மங்கைத் தாயாரே என்று தெரிந்துகொண்டார்.

வேங்கடவனை தரிசிப்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த அன்னமய்யா அந்தக் கணத்தில் தாயாரின் கருணையால் பெரிதும் கவரப்பட்டார். அந்த இடத்திலேயே அமர்ந்து அலமேலுமங்கா தாயார் குறித்து நூறு பாடல்கள் பாடினார். அந்தப் பாடல் ஒவ்வொன்றின் முடிப்பும் வேங்கடேஸ்வரா என்றே முடிந்தது.

மனமெங்கும் அன்னையின் அருள் கிடைத்த உற்சாகம் ததும்ப மலையேறிச் செல்லத் தொடங்கினார். திருமலை அவரின் வருகைக் காகவும் அவர் பாடல்களைக் கேட்பதற்காகவும் ஆவலோடு காத்திருந்தது.

- தரிசிப்போம்...