Published:Updated:

திருமலை திருப்பதி - 8

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி - 8

திருமலை திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலையில் மகிமை நிறைந்த தீர்த்தங்களுக்குப் பஞ்சமே இல்லை. இந்த உலகத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் பாய்ந்து பெருகும் தலம் அது. அத்தனை தீர்த்தங்களுக்கும் ஒரு தலைவன் உண்டு என்றால் அது `சுவாமி புஷ்கரணி'தான்.

திருமலை
திருமலை

அதைக் `கோணேரித் தீர்த்தம்' என்றும் சொல் வார்கள். `கோன்' என்றால் 'அரசன்.' தீர்த்தங் களுக்கெல்லாம் அரசன் என்பது அதன் பொருள். சுவாமி புஷ்கரணியில் நீராடினால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதற்கு உதாரணமாகப் புராணங்களில் பல சம்பவங்கள் உண்டு. சங்கணன் என்னும் மன்னன் ஒருவன் சூதாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். ஒருமுறை எதிரி நாட்டு மன்னன் ஒருவன் அவனைச் சூதாட அழைத்து அவனின் உடைமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டான். தன் நாடு நகரம் அனைத்தையும் இழந்தான் சங்கணன். பின்பு தன் தேசத்தில் வாழப்பிடிக்காமல் தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.

ஒவ்வொரு தலமாகச் சென்று தரிசனம் செய்துவந்தவன் திருமலைக்கு வந்தபோது பெருமாளின் பேரழகைக் கண்டு மயங்கி அங்கேயே வாசம் செய்ய ஆரம்பித்தான். தினமும் காலையில் புஷ்கரணியில் நீராடிப் பெருமாளை தரிசனம் செய்வதும் அவருக்கு வேண்டிய கைங்கர்யங்கள் செய்வதுமாக வாழ்வைச் செலவழித்து வந்தான்.

பெருமாளும் அவன் மீது இரக்கம் கொண் டார். ஒரு நாள் அவன் கனவில் தோன்றி, "நீ தினமும் புஷ்கரணியில் நீராடி என்னை தரிசனம் செய்த பலன் விரைவில் கிடைக்கப் போகிறது. உன் நாடும் சொத்துகளும் திரும்பக் கிடைக்கும்'' என்று சொல்லி மறைந்தார். சங்கணன் பெருமாள் தன்னைக் கனவில் தோன்றி சமாதானப் படுத்தினாரே என்று நினைத்து சந்தோஷப்பட்டான்.

சங்கணனின் நாட்டைக் கைப்பற்றியவன் கொடுங்கோலனாக இருந்தான். மக்களைப் பலவிதமாகத் துன்புறுத்தினான். எனவே அந்த ராஜ்ஜியத்தைச் சேர்ந்த மந்திரிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். அண்டை நாட்டு மன்னன் ஒருவனை நாடினர். கொடுங்கோலனிடம் இருந்து தங்களைக் காக்க வேண்டும் என்று வேண்டினர். அந்த மன்னனும் படையோடு வந்து அந்தக் கொடுங்கோல் மன்னனை வீழ்த்தினான்.

மந்திரிகள், `சங்கணன் எங்கே இருக்கிறார்' என்பதை விசாரித்துக் கொண்டு திருமலை வந்து, நடந்தவற்றைச் சொல்லி ராஜ்ஜிய பரிபாலனம் செய்ய வருமாறு வேண்டிக் கொண்டனர். அவனும் பெருமாளின் அனுக்கிரகமே இது என்பதை அறிந்து அவரை சேவித்துத் தன் நாட்டுக்குப் புறப்பட்டான். இப்படிப் பரம தரித்திரனாக இருந்தாலும் அவனுக்கு ராஜ சம்பத்தை அருளும் தீர்த்தம் சுவாமி புஷ்கரணி. வைகுண்டத்திலே பாயும் நதிக்கு விரஜா நதி என்று பெயர். சுவாமி புஷ்கரணி அதற்கு இணையான ஒன்றாகவே ஆசார்யர்களால் போற்றப்படுகிறது.

சுவாமி புஷ்கரணி
சுவாமி புஷ்கரணி

திருமலையில் வேங்கடவனுக்குச் சேவை செய்த அடியவர்களில் ஒருவர் அனந்தாழ்வார். பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய ராமாநுஜரால் அனுப்பப் பட்டவர். பெரிய நந்தவனம் அமைத்து அதைப் பராமரித்து பூஜைக்குத் தேவையான மலர்களை விளைவித்தவர். ஒரு நாள் அந்த மகானைப் பாம்பு ஒன்று தீண்டிவிட்டது. சீடர்கள் கலங்கினார்கள். அப்போது அவர்களை சமாதானம் செய்த அனந்தாழ்வான், ``கடித்த பாம்புக்குப் பலம் உண்டாகியிருந் தால் நான் நாளைக் காலை விரஜா நதியில் நீராடி வைகுண்ட வாசனுக்கு சேவகம் செய்வேன். கடிபட்ட பாம்பு பலம் உள்ளதாக இருந்தால் சுவாமி புஷ்கரணியில் நீராடி வேங்கடமுடை யானுக்கு கைங்கர்யம் செய்வேன்'' என்றார்.

அனந்தன் என்னும் திருநாமம் ஆதிசேஷனைக் குறிப்பது. தன்னையே ஒரு பாம்பாக இங்கே அவர் குறிப்பிடுவதோடு வைகுண்டத்தையும் திருவேங்கடத்தையும் ஒப்பிடுகிறார். கூடவே சுவாமி புஷ்கரணியையும் விரஜா நதியையும் ஒப்பிடுகிறார். வேங்கடமும் வைகுண்டமும் வேறு வேறல்ல. இரண்டு இடங்களிலும் நிறைந்திருப்பவன் மன் நாராயணனே என்பதுவே ஆசார்யனின் விளக்கம். இப்படித் திருமலை சென்று ஏதேனும் ஒரு தீர்த்தத்தில் நீராடி நம் புண்ணிய பலனை அடையவேண்டும் என்பதுவே பக்தர்களின் விருப்பம்.

பெருமாள் கோயில் என்றாலே அங்கே தாயாருக்குச் சந்நிதி உண்டு. சில கோயில்களில் தாயார் பெருமாளோடே சந்நிதியில் எழுந்தருளி யிருப்பார். உதாரணமாக உப்பிலியப்பன் கோயிலில் பூதேவித் தாயார் பெருமாளோடு சந்நிதியில் எழுந்தருளியிருப்பார்.

சில பெருமாள் கோயில்களில் சுகர், பிருகு போன்ற மகரிஷிகளும் கருவறையில் இருப்பார்கள். ஆனால் திருமலை திருப்பதியில் இவர்கள் யாருமே உடன் இல்லாமல் பெருமாள் ஏகாந்தமாக எழுந்தருளி யிருக்கிறார். திருமலையில் தாயாருக்கு என்று தனிச்சந்நிதி இல்லை. தாயார் அலர்மேல் மங்கையாக திருச்சானூரில் கோயில் கொண்டிருக்கிறாள்.

சிலர் தாயார் கோபித்துக்கொண்டு திருச்சானூர் சென்று கோயில் கொண்டாள் என்று சொல்வார்கள். ஆனால் பெருமாளைக் கோபித்துக்கொள்பவரா தாயார்?!

`அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்றல்லவா ஆழ்வார் போற்றுகிறார். ஒருகணமும் பெருமாளை விட்டு அகலாதவர் தாயார். பெருமாளும் தாயாரை ஒரு கணமும் பிரிய விரும்பாதவர்.

பெருமாளுக்குப் பெயரே நிவாசன் அல்லவா... அவர் கோயிலில் தாயாருக்குச் சந்நிதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரே தாயார் எழுந்தருளத் தன்னையே கோயிலாக ஆக்கிக் கொண்டவர்.

தாயார் ஏன் பெருமாளின் திருமார்பில் குடிபுகுந்தாள் என்பதற்கு சுவாரஸ்யமான வியாக்யானம் சொல்வார்கள் ஆசார்யர்கள்.

ராமாவதாரத்தில் ராமன் சீதாப் பிராட்டியை விட்டுப் பிரிந்து மாயமானைத் துரத்திச் சென்றபோதுதான் ராவணன், தாயாரை சிறைப் பிடித்தான். அதேபோன்று தாயார் அருகில் இருக்கும்போதுதான் ஒரு யானை `ஆதிமூலமே' என்று கதறியது. அதைக் கேட்டதும் தாயாரையும் அழைத்துக் கொண்டு போகவேண்டுமே என்ற சிந்தனை இல்லாமல் பெருமாள் பக்தனைக் காக்கும் வேகத்தில் தனியே விரைந்து சென்றாராம். இதனால் கோபித்துக்கொண்ட தாயார் இனி எக்காலமும் எக்கணமும் அகலாது இருக்க வேண்டும் என்று பெருமாளிடம் வரம் கேட்டுப் பெருமாளின் திருமார்பில் சரண் புகுந்தாள் என்று சொல்வார்கள்.

திருமலையில் தாயார் பெருமாளின் மார்பில் இருந்து அங்கே வரும் பக்தர்களைக் காண்கிறாள். அவளின் கருணையே பக்தர்களை நிறைக்கிறது. அவர்கள் வாழ்வில் பெரும் திருப்பம் தருகிறது. அப்பேர்பட்ட தாயாரின் வைபவத்தைத் தொடர்ந்து தரிசிப்போம்.

- தரிசிப்போம்...

அற்புதம் நிகழ்ந்தது!

திருப்பதி அற்புதம்
திருப்பதி அற்புதம்


இன்றைக்கும் திருப்பதி செல்வது பலருக்கும் கனவாக இருக்கிறது. ஒருமுறையேனும், திருமலை வேங்கடவனின் திருமுகத்தை தரிசித்து விடமாட்டோமா? என ஏங்கிக் கிடப்போர் பலர். அவரை தரிசனம் செய்யச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய எங்களுக்கு மீண்டும் ஒரு திவ்ய தரிசனத்தை காட்டியருளினார் அந்த ஏழுமலையான். அந்த அற்புதத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கடந்த நவம்பர் 18 அன்று நண்பர்களோடு திருப்பதி சென்றோம். வழியெங்கும் கடும்மழை. திருப்பதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மலைச்சாலை மூடப்பட்டது. மிகுந்த ஏமாற்றத்துடன் அடிவாரத்திலேயே தங்கிவிட்டோம்.

அந்த இரவில் திருப்பதியை விட்டு எங்கும் வெளியேற முடியாத சூழ்நிலை. மலையைப் பார்த்து, `வேங்கடவா.! இந்த மலையே நீதான். ஆனாலும், உன் அர்ச்சாவதார திருமேனியை தரிசிக்கும் பாக்கியத்தைக் கொடு!' என நெக்குருகி வேண்டித் திரும்பி விட்டோம். அது பெரும் மனக்குறையாகவே இருந்தது. இச்சம்பவம் நிகழ்ந்து 4 மாதங் களுக்கு பின், திருப்பதி சென்றிருந்த நண்பர் ஒருவர், அங்கிருந்து அழைத்தார்.

ஆச்சர்யமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஆண்டுக்கொரு முறை அகோபில மடத்திற்கு கொடுக்கும் சிறப்பு தரிசனம் செய்ய வரும்படி அழைத்தார். அந்த தரிசனம் மிக விசேஷம். அகோபில மட ஜீயர் மங்களாசாசனம் செய்ய, திருமலை ஏழுமலையானை கர்ப்பகிரகம் அருகில் நின்று தரிசிக்கும் பெரும் பாக்கியம் அது. இதனை `குலசேகரப்படி தரிசனம்' என்பர்.

கடந்தமுறை ஏமாற்றத்துடன் திரும்பிய எங்களுக்கு, இம்முறை மனம் பூரிக்கப் பூரிக்க... தன் திவ்ய தரிசனத்தை காட்டி அருளினார் எம்பெருமான்.

அவரைக் காண வேண்டும் என நாம் ஆத்மார்த்தமாக நினைத்தால், மிக அருகி லேயே வரவழைத்து தன் திவ்ய ரூபத்தை காட்டி அருள்வார் பெருமாள் என்பதை உணர்ந்து நெக்குருகி போனோம்.

- கே. ஆனந்தன், காஞ்சிபுரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism