புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

திருமலை திருப்பதி - 24

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

கைவல்யம் அருளிடும் வேங்கடம் அதுவே

வேங்கடபதியின் பெருஞ்செல்வமே

பார்க்கும் சகல சௌபாக்கியமும் அதுவே

பாவங்கள் தீர்த்திடும் பாவனம் அதுவே


- அன்னமய்யா

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

அவன் பெயர் கணிக்கண்ணன். திருமழிசை ஆழ்வாரின் சீடன். அந்தப் பரந்தாமனைத் தன் பாடல்களால் பூஜிப்பவன். அவன் பாடி னால் அற்புதங்கள் நிகழுமாம். இந்தச் செய்தி அந்த நாட்டை ஆண்ட பல்லவ மன்னனின் காதுகளுக்குப் போனது.

கணிக்கண்ணனை அழைத்துத் தன்னையும் குறித்துப் பாடுமாறு ஆணையிட்டான். `அந்த ஆதிமூலத்தைக் குறித்து மட்டுமே பாடு வேனே அன்றி, அழியும் உடல் கொண்ட மானுடர்களைப் பாட மாட்டேன்’ என்று கம்பீரமாய்க் கூறினான் கணிக்கண்ணன்.

மன்னனுக்குக் கோபம் வந்தது. தண்டித்தால் சாபம் பற்றுமோ என்னும் பயம். அதனால் நாட்டை விட்டு வெளியேறு மாறு கட்டளையிட்டான்.

கணிக்கண்ணன் தன் குருவான திருமழிசை ஆழ்வாரிடம் வந்து விஷயத்தைச் சொன்னான். உடனே, “நீ இல்லாத ஊரில் எனக்கென்ன வேலை. நாம் இல்லா ஊரில் இந்தப் பெருமாளுக்கு தான் என்ன வேலை” என்று சொல்லி அத்தலப் பெருமாளிடம் சென்றார்.

‘கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய

செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்’ என்று பாடினார்.

உடனே, பெருமாள் தன் நாகப்பாயைச் சுருட்டிக் கொண்டு அவர் பின்னாலேயே கிளம்பிவிட்டாராம். அதன் பின் விஷயம் அறிந்து பதறிப்போய் ஓடிவந்த மன்னன், கணிக் கண்ணனையும் ஆழ்வாரையும் தொழுது மன்னிப்புக் கேட்டான் என்கிறது ஆழ்வார் வரலாறு.

அன்னமய்யா
அன்னமய்யா

அப்படித்தான் அன்னமய்யாவின் வாழ்விலும் நிகழ்ந்தது. நரசிம்மராயர் தன்னைக் குறித்து ஒரே ஒரு பாடல் பாடும்படி அன்னமய்யாவைக் கேட்டுக்கொண்டபோது, “நரஹரியைப் பாடும் வாயால் நரனைப் பாட மாட்டேன்” என்று மறுத்தார் அன்னமய்யா. உடனே நரசிம்மராயர் கோபம் கொண்டு அன்னமய்யாவைச் சிறையில் அடைத்தார். சிறையில் அவருக்குக் கைவிலங்கு போட முயன்றனர் காவலர்கள். ஆனால் என்ன அதிசயம்... பூட்டிய விலங்கு மறுகணமே கழன்று விழுந்தது. மற்றொரு விலங்கு கொண்டு மீண்டும் பூட்டினர். ஆனால் அதுவும் கழன்று விழுந்தது. காவலர்கள் அஞ்சினர். இது இறைவனின் லீலை என்று அறிந்தனர். அரசனுக்குச் சொல்லி அனுப்பினர்.

“மூடர்களே... அந்த அன்னமய்யா ஏதோ மாயம் செய்து ஏமாற்றுகிறான். நானே நேரில் வருகிறேன். என் கையால் விலங்கு பூட்டுகிறேன்” என்று சொல்லித் தானே சிறைக்கூடத்துக்குச் சென்றார் அரசர்.

அன்னமய்யா தன் நிலை மறந்து வேங்கட வனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே யோகத்தில் இருந்தார். மன்னர் கைவிலங்கை வாங்கித் தானே பூட்டினார். அடுத்த கணம் அது கழன்று விழுந்தது. மன்னர் மீண்டும் மீண்டும் முயன்றார். ஆனால் பலன் இல்லை.

மன்னருக்கு விளங்கிவிட்டது. வேங்கடவன் குறித்து ஆயிரமாயிடம் பாடல்கள் எழுதிய அன்னமய்யாவின் அதிஅற்புதமான கரங் களை அற்பத்தனமாகக் கட்டுவிக்க நினைத் தது எவ்வளவு மடமை என்பதைப் புரிந்து கொண்டார். அன்னமய்யாவின் கால்களில் விழுந்து வணங்கினார்.

அப்போதுதான் அன்னமய்யாவுக்கு சுய நினைவு வந்தது. மன்னனை ஆசீர்வதித்து எழுப்பினார். மன்னர் அன்னமய்யாவைப் பல்லக்கில் ஏற்றிச் சுமந்துகொண்டு அரண் மனைக்குச் சென்றார். தன் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டினார்.

“மன்னா, இதற்கு முன்பு நிகழ்ந்த மூன்று யுகங்களிலும் இறைவனை அடையவும் அவன் அருளைப் பெறவும் கடுமையாகத் தவம் இயற்ற வேண்டும். யாகங்கள் செய்ய வேண்டும். இடைவிடாது பூஜிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்குக் கிடைக்கும் பலனைக் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் செய்பவர்களுக்குக் கிடைக்கும்படி அருள்கிறான் அந்தக் கலியுகவரதன். இதை மனதில் கொண்டு ஹரிநாம ஜபம் செய்து வந்தால் உனக்கு அந்த அச்சுதனின் ஆசி கிட்டும்.

எப்போது அந்த ஹரியோடு சம்பந்தம் ஏற்பட்டுவிட்டதோ, அதன்பின்பும் நான் அரண்மனையில் தங்கியிருந்தது பிழை. அதற்கான பலனாக சிறைவாசம் அனுபவித்துவிட்டேன். இனி திருவேங்கடம் செல்வேன். அங்கே அவனைப் பாடியே என் வாழ்வைக் கழிப்பேன். என்னை வழியனுப்பி வை” என்று அன்னமய்யா சொல்ல, மன்னர் கண்ணீர் பெருகினார். அன்னமய்யாவின் பாதங்களை நமஸ்கரித்து அவரைத் திருமலைக்கு அனுப்பிவைத்தார்.

அதன்பின் அன்னமய்யா பல காலம் திருமலையிலேயே வாழ்ந்தார். அப்போது அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

ஒருமுறை திருமலையில் இருந்த ஒரு மாமரத்தின் கனி ஒன்றைப் பறித்து இறை வனுக்கு நிவேதனம் செய்தார். பிறகு அதையே பிரசாதமாக எடுத்துக் கொண்டார். அப்போது அந்த மாம்பழம் மிகவும் புளித்தது. அன்னமய்யா ஒரு கணம் மனம் வருந்தினார். இவ்வளவு புளிப்பான மாம்பழத்தை அந்த வேங்கடவனுக்கு நிவேதித்தோமே என்று வருந்தினார். இதைக் கண்டு மரமும் வருந்தியதாம். திருவேங்கடவனிடம், ‘இனி இப்படிப் புளிப்பான பழங்கள் தோன்றாது இருக்க வரம் தாருங்கள்' என வேண்டிக் கொண்டதாம்!

திருமலையில் அந்த மாதவன் மட்டுமல்ல, மரம்கூட அடியவர் மனம் வாட அனுமதிக் காது என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பிய வேங்கடவன், இனி அந்த மரத்தில் தோன்றும் பழங்கள் அனைத்தும் இனிப்புச் சுவையு டனேயே விளங்கும் என்று வரம் அளித்தாராம்.

இந்த விஷயம் குறித்து... மற்றோர் அடியவர் மீது இறை சாந்நித்யம் இறங்கிட அவர் அருள் வாக்காகச் சொன்னபோது, அன்னமய்யாவும் திருமலை வாழ் மக்களும் வியந்துபோயினர்.

ஒரு நாள் புஷ்கரணியின் கரையில் அன்னமய்யாவைச் சந்தித்த அந்தணர் ஒருவர் அவரை வணங்கி, “சுவாமி! வீட்டில் வறுமை தாண்டவ மாடுகிறது. அது நீங்கவும் திருமணம் முதலிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் செல்வம் தேவையாக இருக்கிறது. தாங்களே அதை எனக்கு அருள வேண்டும்” என்று கேட்டார்.

அன்னமய்யா சிரித்துக்கொண்டார். “அப்பா! வேங்கடவனின் அருளைத் தவிர, என்னிடம் வேறு என்ன இருக்கிறது?”என்று கேட்டார்.

“அதைக் கொடுங்கள் போதும். நீங்கள் வாய் மலர்ந்து ஆசீர்வதித்தால், அது அந்த வேங்கடவனே ஆசி வழங்கியதுபோல. நீங்கள் கட்டளையிட்டால் அன்னை அலர்மேல்மங்கை என் மேல் இரக்கம் கொள்வாள்” என்று மன்றாடினார்.

“அப்படி நீ நம்பினால், நான் உன்னை மனமாற ஆசீர்வதிக்கிறேன்” என்று சொல்லி, அவருக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

குசேலர் கண்ணனைச் சந்தித்துவிட்டு வீடு போய்ச் சேர்வதற்குள், அவர் குடிசை வீடு மாளி கையாக மாறியிருந்தது அல்லவா? அதுபோன்று இந்த அந்தணரின் வாழ்விலும் அதிசயம் நிகழ்ந்தது.

சிற்றரசர் ஒருவர் பெரும் செல்வத்தைக் கொண்டு வந்து அவர் வீட்டில் கொடுத்து `கனவில் வந்து பெருமாள் ஆணையிட்டார். அவரின் ஆணைப்படி இந்தச் செல்வத்தை அளிக்கிறேன்' என்று கூறிச் சென்றிருந்தார். இதையறிந்த அந்தணர், அன்ன மய்யாவின் மகிமையை எண்ணி நெகிழ்ந்தார்.

இப்படித் திருமலையில் பல்வேறு அற்புதங்களைச் செய்த அன்னமய்யா, தன் வாழ்வில் தினமும் அந்த வேங்கடவன் குறித்துப் பாடல்கள் பாடுவதையே கடமையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவர் இயற்றிய அருட்கவிகள், இன்றும் நமக்கு அந்த வேங்கடவனைத் தொழ எளிய மந்திரங்களாகத் திகழ்கின்றன.

அன்னமய்யாவின் பரம்பரையில் அவரின் பேரன் சின்னய்யா சுவாமிகள் குறிப்பிடத் தக்கவர். எட்டு மொழிகளில் புலமை உடைய சின்னய்யா, அழகிய தெலுங்குக் கீர்த்தனைகளை இயற்றினார்.

பஜனை சம்பிரதாயத்தில் இவரின் கீர்த்தனைகள் முக்கியமானவை. பல காலம் திருமலையில் வாழ்ந்து வேங்கடவனுக்கு சேவை செய்தவர். அலமேலு மங்காபுரத்தில் இருக்கும் கல்யாண வேங்கடேச சுவாமி கோயிலைப் புதுப்பித்தவரும் இவர்தான்.

இவரை பக்தர்கள், `சின்னத் திருமலை ஐயங்கார்,’ ‘சிறு திருமலை தீட்சிதர்’ என்று பல்வேறு விதமாகப் புகழ்ந்து அழைத்தனர்.

அன்னமய்யாவின் காலத்தைச் சேர்ந்தவர் புரந்தர தாசர். நிவாச நாயக் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், அன்னமய்யா வாழும் காலத்தில் திருப்பதிக்கு வந்தார். அவருக்கு அந்த வேங்கடவன் அருளிய விதம் ஆச்சர்யமானது.

- தரிசனம் தொடரும்...

அனுமன் கூத்தாடிய ஊர்!


கும்பகோணம்- பூந்தோட்டம் சாலையில், மருதுவஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஊர் மானந்தகுடி. இங்குள்ள மங்கள ஆஞ்சநேயர் வரப்ரசாதியானவர்!

ஒருமுறை, கார்த்தவீரியன் என்பனது சிவ பூஜைக்கு ஆஞ்சநேயரால் இடையூறு ஏற்பட்டதாம். இதனால் சாபம் பெற்றார் ஆஞ்சநேயர். தனது சாபம் தீர, காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டார் ஆஞ்சநேயர். இதன் பலனாக அவருக்கு சாப விமோசனம் கிடைத்தது. இதனால் மகிழ்ந்த ஆஞ்சநேயர் ஆனந்தக் கூத்தாடினார். எனவே இந்தத் தலம் 'அனுமானந்தகுடி' எனப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பெயரே 'மானந்தகுடி' ஆனதாம்.

இந்தத் தலத்தில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதரராக உள்ளனர். திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை ஆகிய குறைகள் நீங்க, இந்த ஆஞ்சநேயர் சந்நிதியில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபடுகின்றனர்!

- எஸ். நிரஞ்சனி, சென்னை-116